பூக்கோள் நிலை
பூக்கோள் நிலை காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. பூவினைக் கொடுக்கக் கொள்வது, பூக்கோள். வஞ்சியாரின் போரை எதிர்கொள்வதற்காகக் காஞ்சி மன்னன் பூவினைக் கொடுக்க, அவன் மறவர் அதனைப் பெற்றுக் கொள்ளும் நிலை, பூக்கோள் நிலை எனப் பெற்றது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கரிய மேகத்தைத் தாங்கிய கடலைப் போலுள்ள தன் பெரும்படை மறவர்கள், வஞ்சி வேந்தனால் வந்துற்ற போரை எதிர் கொள்ளும் பொருட்டுக் காஞ்சி மன்னன் பூவினை வழங்கினான். அவனுடைய மறவர்கள் அதனைப் பெற்றுக் கொண்டதைக் கூறுவது, பூக்கோள் நிலை என்னும் துறை என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
கார்எதிரிய கடல்தானை
போர்எதிரிய பூக்கொண்டன்று(4.10)
வெண்பா
பருதிசெல் வானம் பரந்துருகி அன்ன
குருதி ஆறாவதுகொல் குன்றூர் - கருதி
மறத்தின் மாறா மறவரும் கொண்டார்
புறத்திறுத்த வேந்து இரிய பூ (70)
பொருள்: காஞ்சி மன்னன் வழங்கிய பூவினைக் கொண்ட காஞ்சி மறவர்கள் குறையாத வீரம் உடையவர்கள். வஞ்சி வேந்தனின் வீரம்கெடப் போர் புரிவார்கள் ; மாலைக்குள் வஞ்சியாரை வென்று, மாலை நேரத்துச் சிவந்த வானம் போலக் குருதி வெள்ளம் மண்ணில் பாய விடுவர் எனக் கண்டோர் பேசிக் கொள்கின்றனர்.
வஞ்சி வேந்தனைத் தோற்கடிப்பதற்காக, காஞ்சி மன்னன் தனது மறவர்களுக்குக் காஞ்சிப்பூ வழங்கினான் என்பதில் 'போர் எதிரிய பூக்கொண்ட நிலை' அமைதலின், துறைக் கருத்துப் பொருந்துவதாயிற்று.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Mar-2025, 11:58:26 IST