under review

தழிஞ்சி(காஞ்சித் திணை)

From Tamil Wiki

தழிஞ்சி காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. வஞ்சிப்பூ சூடிவரும் எதிரிகள் எல்லையைக் கடந்து வராமல் காக்க விரும்பும் காஞ்சி மறவனின் படையின் வலிமையை அஞ்சி, வஞ்சியாரும் எல்லையைக் கடக்காமையைக் கூறுவது.

வஞ்சித் திணையிலும் தழிஞ்சி என்ற துறை உள்ளது.

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் எவ்விடத்தும் பரவி வருகின்ற வஞ்சியார் படை, தமது நாட்டின் எல்லையில் புகாதபடி, காஞ்சிப் பூச்சூடி வாயில்களைக் காப்பது தழிஞ்சி என இலக்கணம் வகுக்கிறது.

பரந்துஎழுதரு படைத்தானை
வரம்புஇகவாமைச் சுரங்காத்தன்று (4.2)

வெண்பா

குலாவுஞ்சிலையார் குறும்புகொள வெஃகி
உலாவு முழப்பொழிக வேந்தன் - கலாவும்
இனவேங்கை யன்ன விகல்வெய்யோர் காவல்
புனவேய் நரலும் புழை(62)

பொருள்: காஞ்சி மன்னன் காட்டரண் உடையவன். அவன் நாட்டினுள் புகுவதற்கரிய வாயில் வழியில் காட்டு மூங்கில் அசைந்து ஒலிக்கும். ஒன்றுக்கொன்று தம்முள் போரிடும் வேங்கை இனம் போன்ற மறவர்களால், அவ்வாயில் காக்கப்படும் காரணத்தால், வஞ்சி வேந்தன், காஞ்சியாரின் அரணைக் கைப்பற்ற விரும்பி வருகின்ற முயற்சியைக் கை விடுவானாக.

வேங்கை மறவரால் காக்கப் பெறுவதால் காஞ்சியாரின் அரணைக் கைப்பற்றும் நோக்கில் வீணே முயல வேண்டாம் என்பதில், வஞ்சி வேந்தனின் படை எல்லை கடக்காமல் சுரங்காப்பது தெரிகிறது. இதனால் துறைப்பொருள் பொருந்தி நிற்கிறது.

உசாத்துணை

காஞ்சித் திணை-தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Feb-2025, 09:16:10 IST