under review

கழைதின் யானையார்

From Tamil Wiki

கழைதின் யானையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கழைதின் யானையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.இயற்பெயர் அறியக் கிடைக்கவில்லை. இவர் பாடிய பாடலில் உள்ள சிறப்பான உவமையான 'கழைதின் யானை' என்ற பெயராலேயே அறியப்படுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

கழைதின் யானையார் பாடிய பாடல் புறநானூறில் 204 -ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரியின் கொடைத்திறனை சிறப்பித்து பாடுவதாக பாடாண் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • இரத்தல் இழிவானது, அதனை காட்டிலும் இழிவானது இரந்து வருவோருக்கு இல்லையென்பது.
  • கேட்காமலேயே கொடுத்தல் உயர்வானது, அப்படி கொடுக்கப்பட்டதை ஏற்காமல் இருப்பது அதனை காட்டிலும் உயர்ந்தது.
  • மிகுதியான நீர் இருந்தாலும் கடலில் தாகத்திற்கு நீர் அருந்த இயலாது.
  • பசுக்களும் பிற விலங்குகளும் கலங்கிய நீருள்ள சேற்றுக்குட்டையையே நீருக்காக நாடும்.
  • வல்வில் ஓரியின் கொடைத்திறனாது வானத்து மழைக்கு ஒப்பானது. அதனால் அவனை நாடிவந்தோர் பொருளில்லாது செல்லும் போது தமது நேரத்தை எண்ணி மட்டுமே வருந்துவர். ஓரியைப் பழிக்கமாட்டார்.

பாடல் நடை

புறநானூறு - 204

ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனால்
புலவேன் வாழியர் ஓரி; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Aug-2025, 09:49:48 IST