வாயுறை வாழ்த்து(பாடாண் திணை)
வாயுறை வாழ்த்து பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. அரசனுக்கு இப்பொழுது வேண்டாவிடினும் பின்னர்ப் பயன்படும் வகையில் சான்றோர் கூறும் அறிவுரையோடான வாழ்த்துகள் வாயுறை வாழ்த்து எனப்படுகின்றன. வாயுறை வாழ்த்து சிற்றிலக்கிய வகையாகவும் உள்ளது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளு பின்னர்ப் பயன்படும் என் பேச்சு எனச் சொல்லிய சான்றோர்களின் சொல்லைச் சிறப்பித்தல்' என்று இலக்கணம் வகுக்கிறது.. இவை அரசனுக்கு நன்மை தரக் கூடிய சொற்கள்.
பின்பயக்கும் எம்சொல்என
முற்படர்ந்த மொழிமிகுந்தன்று (கொளு.32)
வெண்பா
எஞ்சொ லெதிர்கொண் டிகழான் வழிநிற்பிற்
குஞ்சர வெல்படையான் கொள்ளானோ - எஞ்சும்
இகலிட னின்றி யெறிமுந்நீர் சூழ்ந்த
அகலிட மங்கை யகத்து.
அரசன் எம் சொல்லைக் கேட்டு அதன் வழி நடப்பானாயின் கடல் சூழ்ந்த இந்த நிலவுலகத்தை அடையப் பெறுவான்' என்று சான்றோர் கூறுவதாக வெண்பா காட்டுகிறது.
தொல்காப்பியம்
கசப்பாக இருப்பினும் உடலுக்கு நன்மை பயக்கும் வேம்பைப் போன்ற அறிவுரைகளைக் கூறுவது வாயுறை வாழ்த்து என்று தொல்காப்பியம் வகுக்கிறது.
வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
வேம்பும் கடுவும் போல வெஞ் சொல்
தாங்குதல் இன்றி வழி நனி பயக்கும் என்று
ஓம்படைக் கிளவியின் வாயுறுத்தற்றே. - தொல்காப்பியம் செய்யுளியல் (108)
நச்சினார்க்கினியர் தாம் உதாரணமாக எடுத்துக்காட்டிய சில புறநானூற்றுப் பாடல்களுக்கு (புறநானூறு 5,184) அந்நூலின் உரைகாரர் கொடுத்துள்ள 'செவியறிவுறூஉ' என்னும் துறைக்கு மாறாக வாயுறை வாழ்த்து எனக் குறிப்பிட்டு, புறநானூற்றுக்கு உரையெழுதியவர் தொல்காப்பியத்தைப் பின்பற்றி உரைவகுத்திலர் எனக் கருதுகிறார்.
எடுத்துக்காட்டு
புறநானூறு 184
- திணை: பாடாண் துறை: செவியறூஉ (வாயுறை வாழ்த்தும் ஆம்)
- பாடியவர்: பிசிராந்தையார்
- பாடப்பட்டவர்: பாண்டியன் அறிவுடை நம்பி
இளம்பூரணர் இப்பாடலை வாயுரை வாழ்த்துக்கு எடுத்துக்காட்டாக தொல்காப்பிய உரையில் குறிப்பிடுகிறார்.
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
புறநானூறு 363
இப்பாடலை நச்சினார்க்கினியர், இளம்பூரணர், பேராசிரியர் என தொல்காப்பியத்தின் மூன்று உரையாசிரியர்களுமே வாயுறை வாழ்த்திற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டுள்ளனர்.
- திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி, செவியறூஉ, வாயுறை வாழ்த்தும் ஆம்
- பாடியவர்: ஐயாதி சிறுவெண்டேரையார்
இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம் 5
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை; வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு 10
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பிலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலங்கல னாக விலங்குபலி மிசையும் 15
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.
கரிய கடல் சூழ்ந்த பெரிய இடத்தையுடைய உலகின் நடுவே, உடைமரத்தின் இலை அளவுகூட இடத்தையும் பிறர்க்கு இல்லாமல் தாமே ஆண்டு பாதுகாத்தவர்களின் எண்ணிக்கை, கடலின் அலைகள் கொழித்தொதுக்கும் மணலின் எண்ணிக்கையைவிட அதிகம். அத்தகைய அரசர்கள் அனைவரும் தம் நாட்டைப் பிறர் கொள்ள, சுடுகாட்டைத் தங்கள் இடமாகக் கொண்டு இறந்தனர். அதனால், நான் சொல்வதை நீ கேட்பாயாக. அழியாத உடம்போடு என்றும் உயிரோடு இருந்தவர் யாரும் இல்லை. சாதல் என்பது உண்மை; அது பொய்யன்று. கள்ளி பரவிய முட்செடிகள் உள்ள சுடுகாட்டின் அகன்ற வெளியிடத்தில், உப்பில்லாமல் வேகவைத்த சோற்றை, பிணம் சுடும் புலையன் பிணத்தைத் திரும்பிப் பார்க்காமல், நிலத்தில் வைத்துப் படைத்த வேண்டாத உணவைப் பெற்றுக் கொண்டு, உண்ணும் கொடிய நாள் (இறக்கும் நாள்) வருவதற்கு முன்பே, கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைத் துறந்து நீ கருதியதைச் செய்க.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Apr-2025, 11:42:04 IST