under review

பெருங்காஞ்சி

From Tamil Wiki

பெருங்காஞ்சி உலகின் நிலையாமையைக் கூறும் துறை. புறத்துறையைச் சார்ந்தது.

இலக்கணம்

மலைஓங்கிய மாநிலத்து
நிலையாமை நெறிஉரைத்தன்று

விளக்கம்

'மலைகள் ஓங்கிய இம்மாநிலத்தின் நிலையாத தன்மையைச் சொல்லுதல்’ 'பெருங்காஞ்சி’. 'இவ்வுலகம் நிலையற்றது. இன்றோ நாளையோ எமன் நம்மைத் தேடி வரக்கூடும்; பாடுபட்டுப் பெரும்பொருளைச் சேர்த்து வைத்து, வறியோர்க்கு வழங்காது வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ள வேண்டாம்’ என வெண்பா நிலையாமை உணர்ந்து, நிலைத்ததைச் செய்ய வேண்டுகிறது. புறநானூற்றில் வரும் ஒன்பது பாடல்கள் (194, 357, 359, 360, 362, 363, 364, 365, 366) பெருங்காஞ்சி என்னும் துறையைச் சேர்ந்தவை.

பிற

தொல்காப்பியம்

'காஞ்சி தானே பெருந்திணைப் புறனே'

தொல்காப்பியர் இதனைத் தனியாகக் குறிப்பிடவில்லை. காஞ்சித் திணைக்கு விளக்கம் தருகையில் காஞ்சித் திணை என்பது நிலையில்லாத உலகைப்பற்றிப் பேசுவது என்றார்.

புறநானூறு

புறநானூற்றைத் தொகுத்தவர் இந்தத் துறையைப் பெயரிட்டு பொதுவியல் திணைக்குக் கீழே காட்டியுள்ளார். இதனைப் பின்பற்றி ஐயனாரிதனார் துறைப்பெயர் காட்டியுள்ளார். பன்னிரு படலம் என்னும் நூல் மறைந்துபோன தமிழ் நூல்களில் ஒன்று. இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு புறநானூற்றைத் தொகுத்தவர் புறநானூற்றின் ஒன்பது பாடல்களுக்குப் பெருங்காஞ்சி என்னும் பெயரைச் சூட்டினார்.

புறப்பொருள் வெண்பாமாலை

ஐயனாரிதனார் தாம் இயற்றிய ’புறப்பொருள் வெண்பாமாலை’ என்னும் நூலில் காஞ்சித்திணைக்கு என்று ஒரு படலம் அமைத்தார். அதில் வரும் இருபத்தியிரண்டு துறைகளில் 'பெருங்காஞ்சி' ஒன்று. மறவர் தம் தம் ஆற்றலைப் போர்ப்படைக்கு நடுவில் வெளிப்படுத்துவது பெருங்காஞ்சி என்று இந்நூல் கூறுகிறது. இதனை விளக்கும் வெண்பா மறவனின் ஆற்றலைக் கண்டு யானைப்படை கதிர் அறுத்த தினைத்தட்டை போல் நின்றன என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியக் கருத்தைத் தழுவிப் பொதுவியல் என்னும் பகுதியில் காஞ்சிப் பொதுவியல் பால் என்னும் விதியை வகுத்துக்கொண்டு ஆறு துறைகளைப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. இவற்றில் ஒன்றாக வரும் பெருங்காஞ்சி என்னும் துறையானது நில உலகில் நிலையாமையைக் கூறுவது என விளக்கம் கூறுகிறது. காஞ்சித் திணையில் வரும் பெருங்காஞ்சித் துறையில் அரசன் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுவியலில் வரும் இதே பெயர் கொண்ட துறையில் யாருடைய பெயரும் குறிப்பிடப்பட்டிருக்காது.

உசாத்துணை


✅Finalised Page