under review

மாங்குடி கிழார்

From Tamil Wiki

மாங்குடி கிழார் (மாங்குடி மருதனார்) சங்க காலப் புலவர். சங்கப்பாடல் தொகுப்பில் இவரது பாடல்கள் 13 உள்ளன. மதுரைக் காஞ்சியை இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

மாங்குடி மருதனார் என்றும் இவரை அழைப்பர். சோழ நாட்டில், தஞ்சை திருத்தருப்பூண்டிக்கு அருகில் உள்ள மாங்குடியில் பிறந்தார். அவ்வூருக்கு அருகிலுள்ள மருதவனம் என்பது அவருடைய பெயரைக் கொண்டு உருவான ஊர் என்றும் அறிஞர்கள் கருதினர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனின் அவையில் புலவர்களுக்கு தலைவராய் இருந்தார்.

சிறப்பு

"இளையன் என்று எண்ணி என்னை எதிர்த்த பகைவர்களை அழிக்காது மீள்வேனாயின் மாங்குடி மருதன் முதலாம் புலவர்கள் என் நாட்டைப் பாடாது விடுவராக" என தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் பாடினார். மாங்குடி மருதனார் தன் அரசைப் பாடுவதை நெடுஞ்செழியன் உயர்வாகக் கருதினார் என்பதை அறியலாம்.

இலக்கிய வாழ்க்கை

இவர் பத்துப்பாட்டு எனும் பெயரில் தொகுக்கப்பட்ட பத்து செய்யுள் நூல்களுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றினார். மதுரைக் காஞ்சியில் புலவரும், போர்வல்லவருமான பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடினார். இவர் இயற்றிய பிற பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூற்றில் உள்ளன. புறநானூற்றில் வட்டாறு எனும் ஊரில் வாழ்ந்த தலைவனைப் பற்றி "வட்டாறி எழினியாதன் ஊக்கமின்றி உறங்கிக் கிடப்பவர்க்கு ஊக்கமூட்டும் உற்ற துணை" எனப் பாடினார். அகநானூற்றில் பாலைத்திணைப்பாடலைப் பாடினார். குறுந்தொகையில் காதற்பரத்தைக் கூற்றாக மருதத்திணைப் பாடலும்; தலைவனின் கூற்றாக மடலேறுதல் பற்றிய பாடலாக குறிஞ்சித்திணைப்பாடலும்; தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தலைவியின் ஆற்றாமையின் கூற்றாக குறிஞ்சித்திணைப்பாடலும் பாடினார். நற்றிணையில் இரண்டு பாடலும், புறநானூற்றில் ஆறு பாடலும் பாடினார்.

மதுரைக்காஞ்சி
  • பாண்டிய நாட்டையும், மதுரைத் தலை நகரையும் வாழ்த்திப்பாடினார். இது தமிழகத்தையும், தமிழகத்து பேரூர்களையும் பாராட்டும் அளவு சிறப்பு பெற்றது.
  • தமிழகத்தின் இயற்கை வளாங்கள், ஐந்நில அமைப்பு, அந்நாட்டின் பேரூர்களின் பண்புகள், அப்பேரூர்களின் அரண்கள், அரசர் தெரு முதலான தெருக்கள், கோயில்கள், அங்காடி வீதிகள், கடற்றுறைகள் பற்றிய செய்திகள் உள்ளன.
  • அரும் பொருட்கள், நகர் மக்கள், அவர்கள் மேற்கொண்டிருந்த தொழில்கள், தொழில் நுடபங்கள், அமைச்சர், அறங்கூற வையத்தார் இயல்புகள், ஆடவர், பெண்டிர் பண்புகள், ஊரில் எழும் ஒலிகள், ஓங்கிப் பறக்கும் கொடிகள் பற்றிய செய்திகள் உள்ளன.
பாடிய பாடல்கள்
  • அகநானூறு (89)
  • குறுந்தொகை (164, 173, 302)
  • நற்றிணை (120, 123)
  • புறநானூறு (24, 26, 313, 335, 372, 396)
  • மதுரைக்காஞ்சி

பாடல் நடை

  • மதுரைக்காஞ்சி: 19-23

பொய்யறியா வாய் மொழியால்
புகழ் நிறைந்த நன் மாந்தரொடு
நல்லூழி அடிப்படாரப்
பல் வெள்ளம் மீக் கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர்

  • அகநானூறு: 89

வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது,
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்,
இடு மணற் பந்தருள் இயலும்,
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே?

  • நற்றிணை: 120

தட மருப்பு எருமை மட நடைக் குழவி
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்,
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப,
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, 5
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப்
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து,
அட்டிலோளே அம் மா அரிவை-
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று,
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே.

உசாத்துணை


✅Finalised Page