under review

குறமகள் குறிஎயினி

From Tamil Wiki

குறமகள் குறிஎயினி, சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒருபாடல் சங்கத் தொகை நூலான நற்றிணையில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

குறமகள் குறிஎயினி என்ற பெயரிலுள்ள குறமகள் குறிஞ்சி நிலப் பெண்ணை குறிப்பது. எயினி என்பது பாலை நிலத்துப் பெண்ணை குறிப்பது. குறி எயினி என்று குறிப்பிடப்படுவதால் இவர் குறி சொல்லும் பெண்ணாக இருந்திருக்கலாம். குறிஞ்சி நிலத்துப் பெண் குறத்தி. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கெள்ளுமாகையால் குறிஞ்சி நிலக் குறமகள் எயினியாகவும் திணைநிலத் திரிவால் பேசப்படுகிறாள் எனக் கொள்ளலாம். குறமகள் இளவெயினி என்ற புலவரின் பெயரும் இவ்வாறு அமைந்திருப்பதைக் காணலாம்.

இலக்கிய வாழ்க்கை

குறமகள் குறிஎயினி இயற்றிய ஒரு பாடல் சங்கப்பாடல் தொகுப்பான நற்றிணை நூலில் 357 எண் கொண்ட பாடலாக இடம்பெற்றுள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

  • தலைமகன் வரைவு நீடிய இடத்து, 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது; 'மனை மருண்டு வேறுபாடாயினாய்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதும் ஆம்
  • மயிலின் முடி நீலமணி பொறித்தது போலத் தோற்றமளிக்கிறது

பாடல் நடை

நற்றிணை 357

திணை: குறிஞ்சி

நின் குறிப்பு எவனோ?- தோழி!- என் குறிப்பு
என்னொடு நிலையாதுஆயினும், என்றும்
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே-
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்,
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப்
பீலி மஞ்ஞை ஆலும் சோலை,
அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி,
நீர் அலைக் கலைஇய கண்ணிச்
சாரல் நாடனொடு ஆடிய நாளே.

(உன் எண்ணம் எதுவோ எனக்குத் தெரியவில்லை. என் எண்ணம் என்னைப்பற்றி நினைக்கவில்லை என்றாலும், சாரல் நாடனொடு சுனையில் நீராடிய நாள் என் நெஞ்சில் காய வடுவாக மாறி அழியாமல் கிடக்கிறது. நெடுந்தொலைவு உயர்ந்து தோன்றும் மலைச்சாரலில் மழை பொழிந்திருக்கும் மகிழ்ச்சியில் மணி பொறித்திருப்பது போன்ற நெற்றியை உடைய மயில் தோகையை விரித்து ஆடும் சோலை. அந்தச் சோலையில், பாறையின் அகன்ற கண் போல விளங்கும் அகன்ற வாயைக் கொண்ட பசுமை நிறச் சுனை. அந்தச் சுனையில், மையுண்ட கண் போன்ற நீல மலரைச் சூடிக்கொண்டு, நீரலையால் கண் கலங்க, சாரல் நாடனோடு நீராடிய நாள் என் நெஞ்சில் அழியாமல் நிற்கிறது.)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Mar-2023, 20:53:30 IST