under review

தூங்கலோரியார்

From Tamil Wiki

தூங்கலோரியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் மூன்று. இரு பாடல்கள் குறுந்தொகையிலும் ஒரு பாடல் நற்றிணையிலும் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

தூங்கலோரியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். ஓரியார் என்னும் இயற்பெயர் கொண்டவர். புலவரின் பெயருக்கு சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ள தூங்கல் என்னும் சொல் எப்பொருள் குறித்து வந்தது என அறிய முடியவில்லை.

சங்க காலப் புலவர்களில் முக்கியமானவராக கருதப்படும் நக்கீரர் தாம் பாடிய அகநானூறு 227-ம் பாடலில் ஊணூர்த்தழும்பன் என்னும் அரசனை போற்ற, "தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப் பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன்" என்று பாடி தூங்கலோரியாரால் வாழ்த்தப்பெற்றவன் என குறிப்பிடுகிறார். இதன் மூலம் தூங்கலோரியார் சங்க காலப் புலவர்களில் தனிச்சிறப்பு பெற்றிருந்ததை அறியமுடிகிறது.

இலக்கிய வாழ்க்கை

தூங்கலோரியார் பாடிய மூன்று பாடல்கள் குறுந்தொகையிலும் (151, 295) நற்றிணையிலும் (60) இடம்பெற்றுள்ளன. குறுந்தொகை 151- ம் பாடல் பொருள்வயின் பிரிந்து செல்லும் தலைவன், தலைவியைப் பிரிவதனால் உண்டாகும் துக்கத்தை ஆற்ற தனக்குத்தானே ஆறுதல் சொல்லி கொள்வதாக பாலைத் திணையில் அமைந்தும் 295-ம் பாடல் பரத்தையிடம் சென்று வந்த தலைவனைத் தோழி வினவுவதாக மருதத் திணையில் அமைந்தும் காணப்படுகிறது. நற்றிணை 60-ம் பாடல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவியை இரவில் ஊரறியா வண்ணம் சந்திக்க வரும் தலைவனிடத்து தோழி செய்தி உரைப்பதாக மருதத் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

குறுந்தொகை - 151, 295

குறுந்தொகை 151-ம் பாடலில் ஆடவர் பயணம் செய்யும் பாலை நிலத்தின் கடுமையான இயற்கை சித்திரம் காட்சிப்படுத்தப்படுகிறது.

  • ஆண் வங்கா பறவை பிரிந்து செல்லும் போது சிவந்த கால்களையுடைய பெண் வங்கா பறவை தனித்திருக்கும். புல்லூறு என்னும் பறவை தனித்திருக்கும் பெண் வங்கா பறவையை வேட்டையாடி உண்ணும். பெண் வங்கா பறவையின் குரல் குழல் ஒலியைப் போல் இருக்கும். அப்பறவைகள் வாழும் குறுகிய மலைப்பாதையின் வழியாக ஆடவர் பொருளீட்டச் செல்வர்.
  • பொருளீட்டப் பிரிந்து சென்ற ஆடவர் திரும்பி வருகையில் இல்லற இன்பத்திற்கு அடிப்படையான இளமை நலம் காலத்தால் அழிந்து போயிருக்கும்.

குறுந்தொகை 295-ம் பாடலில் பரத்தையிடம் செல்லும் ஆண்களின் உடையலங்காரம் காட்சிப்படுத்தப்படுகிறது.

  • பரத்தையர் தழையாடை அணிந்திருப்பர். மலர் மாலை சூடியும் காதில் குழையணிந்தும் அலங்காரத்துடன் இருப்பர். பரத்தையரை நாடிச் செல்லும் செல்வம் மிக்க ஆடவரும் தழையாடை அணிந்து மலர் மாலை சூடி காதில் குழையணிந்து அலங்காரத்துடன் செல்வர்.
  • ஏழ்மையில் உள்ள ஆடவரும் நல் மனைவியை அடைவதன் வழியாக செல்வச் சிறப்பை அடைய முடியும் என்ற அக்கால நம்பிக்கையை இப்பாடல் வழி அறிய முடிகிறது.
நற்றிணை - 60

மருத நிலத்தில் உழவர்களின் வாழ்க்கை முறை காட்சிப்படுத்தப்படுகிறது.

  • உழவு நிலத்து சேற்றில் ஏர்களில் எருமைகளை கட்டி உழுவர்.
  • விடிகாலையில் எழுந்து வரால் மீன் கறியை உண்பர். வரால் மீன் குழம்பை சிவப்பு அரிசி சோற்றில் விட்டு பிசைந்து தின்பர்.
  • பின்னர் நிலத்தில் வந்து உழுது முடித்து ஆண்களும் பெண்களுமாக செந்நெல் நாற்றுகளை வயலில் நடுவர். வரப்பு ஓரத்தில் காணப்படும் களைச்செடிகளான கோரை புற்களையும் நெய்தல் பூக்களையும் பிடுங்கி தூர வீசியெறிவர்.

பாடல் நடை

குறுந்தொகை - 151

  • திணை: பாலை
  • கூற்று: பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.

வங்காக் கடந்த செங் கால் பேடை
எழால் உற வீழ்ந்தென, கணவற் காணாது,
குழல் இசைக் குரல குறும் பல அகவும்
குன்று உறு சிறு நெறி அரிய என்னாது,
'மறப்பு அருங் காதலி ஒழிய
இறப்பல்' என்பது, ஈண்டு இளமைக்கு முடிவே.

நற்றிணை - 60

  • திணை: மருதம்
  • கூற்று: சிறைப்புறமாக உழவர்க்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பு அறிவுறீஇயது

மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின்
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு
கவர் படு கையை கழும மாந்தி,
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின்
நடுநரொடு சேறிஆயின், அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம்மில்
மா இருங் கூந்தல் மடந்தை
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே.

உசாத்துணை



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jun-2025, 14:06:18 IST