கோவூர் கிழார்
கோவூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய பதினேழு பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
செங்கல்பட்டைச் சேர்ந்த கோவூரில் பிறந்தார். போரை விரும்பாதவர். மன்னர்கள் பகைமையின்றிக் கூடிவாழ இவர் செய்த முயற்சிகளை பாடல்கள் வழி அறியலாம்.
இலக்கிய வாழ்க்கை
கோவூர் கிழார், சோழ மன்னர்களைப் பற்றி பதினேழு பாடல்கள் பாடினார். இதில் பதினைந்து பாடல்கள் புறநானூற்றிலும், ஒரு பாடல் குறுந்தொகையிலும் மற்றொரு பாடல் நற்றிணையிலும் உள்ளன.
சோழன் நலங்கிள்ளியின் தம்பி "மாவளத்தான்" ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்திருந்த நெடுங்கிள்ளியைப் பாடியது; சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றியிருந்தானையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடியது; சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் கால்களால் இடறிக் கொல்ல இருக்கையில், கோவூர் கிழார் தடுத்துப் பாடி உய்யக்கொண்டது; சோழன் நலங்கிள்ளியுழைநின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் எனும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியின் ஒற்றன் என நினைத்து கொல்லப்புகும் நேரத்தில், கோவூர் கிழார், சோழன் நலங்கிள்ளியைப் பாடி, இளந்தத்தனை உய்யக்கொண்டது என இவர் பாடிய பாடல்களின் வழி வரலாற்றுச் செய்திகளை அறியலாம்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- சோழ நாட்டின் வளம்: "நன்செய்கள், நெற்பயிருக்கு வேலி போல் வளர்ந்திருக்கும் கரும்புகள் நின்ற பாத்திகளில் மலர்ந்த பல நிற மலர்களின் மணம், முல்லை நிலமான மேட்டு நிலம், புல் மேயும் பல்வகை ஆநிரை, அவற்றிற்குக் காவலாய் அமைந்த வில்வீரர் உறையும் அரண், நெய்தல் நிலப்பகுதிகள், காற்று இயக்க இயங்கிக் கரை சேர்ந்த கலங்களை எண்ணிக் கணக்கிடும் அழகு மகளிர், நிழற் கொண்டிருக்கும் கானற் சோலைகள், கழியிடை ஊர்கள், வெள்ளுப்பினை உள் நாடுகளில் சென்று விற்கும் உமணர்கள்" பற்றிய செய்திகள் பாடல்களில் உள்ளன.
- சோழ நாட்டை உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஒரு பிரிவினரும், புகாரைத் தலைநகராகக் கொண்டு இன்னொரு பிரிவினரும் என இரு பிரிவுகளாக ஆட்சி செய்தனர்.
- இவர் காலத்தில் அரசுகளுக்குள் அமைதியின்மை நிலவியிருந்ததை பாடல்கள் வழி அறியலாம்.
சமகால புலவர்கள்
- சோழன் மாவளத்தான் (புறம் 44)
- சோழன் நலங்கிள்ளி (புறம் 31, 32, 33, 47, 302 மற்றும் 400)
- சோழன் நெடுங்கிள்ளி (புறம் 46)
- சோழன் குளமுற்றத்துஞ்சிய கிள்ளிவளவன் (புறம் 41, 46, 68, 70 மற்றும் 386)
- சோழன் கிள்ளிவளவன் (குராப்பள்ளித் துஞ்சியவன்) (புறம் 46)
பாடல் நடை
புறநானூறு: 44
இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ,
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி,
நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து,
அலமரல் யானை உருமென முழங்கவும்,
பாலில் குழவி அலறவும், மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்,
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்;
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்!
அறவை யாயின்,நினது எனத் திறத்தல்!
மறவை யாயின், போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லை யாகத்,
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் 15
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே.
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் – திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]
- தமிழ்ச்சுரங்கம் புறநானூறு-44
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
03-Dec-2022, 08:35:10 IST