under review

சு. துரைசாமிப் பிள்ளை

From Tamil Wiki
ஔவை சு. துரைசாமிப் பிள்ளை

சு. துரைசாமிப் பிள்ளை (ஔவை சு. துரைசாமிப் பிள்ளை; செப்டம்பர் 5,1902-ஏப்ரல் 4,1981) தமிழறிஞர்; பேராசிரியர். ‘உரைவேந்தர்’ என்று போற்றப்பட்டவர். ஆய்வாளர், உரையாசிரியர், பேச்சாளர், எழுத்தாளர் என பல களங்களில் செயல்பட்டார். சங்க நூல்கள் பலவற்றிற்கு உரை எழுதியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வழங்கிய ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்' பட்டம் பெற்றவர். சைவ சித்தாந்த அறிஞர்.

பிறப்பு, கல்வி

ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, செப்டம்பர் 5, 1902-ல், திண்டிவனத்தை அடுத்துள்ள ஔவையார் குப்பத்தில், சுந்தரம் பிள்ளை-சந்திரமதி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை தமிழ்ப் புலவர். மயிலம் முருகன் மீது பல செய்யுள்கள் புனைந்தவர். சைவப் பற்றாளர். தந்தை வழியில் மகனும் தமிழ்ப் பற்றும் சைவப் பற்றும் கொண்டவராக வளர்ந்தார். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். இளம் வயதிலேயே சூளாமணி, ஐங்குறுநூறு ஆகிய இலக்கியங்களின் கையெழுத்துப் படியை ஆராயும் திறன்பெற்றிருந்தார். உயர்நிலைக் கல்வியை திண்டிவனத்தில் உள்ள அமெரிக்கன் ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். தொடர்ந்து வேலூர் ஊரீஸ் கல்லூரியில் இடைநிலை வகுப்பு (பி.யூ.சி.) பயின்றார். குடும்பச் சூழ்நிலைகளினால் கல்வி தடைப்பட்டது.

தனி வாழ்க்கை

குடும்பச் சூழல்களால் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் (சானிடரி இன்ஸ்பெக்டர்) பணியில் சேர்ந்தார். ஆனால் தனக்கிருந்த தமிழ்ப்பற்றின் காரணமாக ஆறே மாதங்களில் அப்பணியில் இருந்து விலகினார். கரந்தையில் இருந்த புலவர் கல்லூரியில் ’தமிழவேள்’ உமாமகேஸ்வரன் பிள்ளையால் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். கூடவே நூலக மேற்பார்வையாளராகவும் பணிபுரிந்தார். 1928 வரை கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றிய ஔவை, 1929 முதல் வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கம், போளூர், செய்யாறு, திருவத்திபுரம் போன்ற ஊர்களின் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பணியாற்றிக் கொண்டே பயின்று, 1930-ல், சென்னைப் பல்கலைக்கழகத்தின் ‘வித்வான்’ தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

உலோகாம்பாள் என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்குப் 11 பிள்ளைகள். அவர்களில் டாக்டர் ஔவை நடராசன், டாக்டர் ஔவை மெய்கண்டான் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

தமிழ், ஆங்கிலம், வடமொழி அறிந்திருந்த ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, திருவத்திபுரத்தில் ‘ஔவை தமிழ்க் கழகம்’ என்பதைத் தோற்றுவித்தார். அதன் மூலம் பல மாணவர்களுக்கு வித்வான் தேர்வெழுதி வெற்றி பெறப் பயிற்சி அளித்தார். 1942-ல் திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார். 1943-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து ஆராய்ச்சித் துறையின் விரிவுரையாளரானார். 1951-ல் மதுரை தியாகராஜர் கல்லூரியில் பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை- இந்திய இலக்கியச் சிற்பிகள்: சாகித்ய அகாதமி நிறுவன வெளியீடு

இலக்கிய வாழ்க்கை

இலக்கிய ஆர்வத்தின் காரணமாக பண்டைய இலக்கண, இலக்கிய நூல்களை ஆராய்ந்து ‘தமிழ்ப்பொழில்’, ’செந்தமிழ்ச்செல்வி’, ‘செந்தமிழ்’ போன்ற இதழ்களில் கட்டுரைகளை எழுதினார். ஔவையின் ஆய்வுத் திறனை அறிந்த திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவர் வ.சுப்பையா பிள்ளை, கழகத்திற்கு தமிழாய்வு நூல்கள் எழுதித் தருமாறு வேண்டினார். முதன் முதல் சீவக சிந்தாமணி சுருக்க நூல் வெளியானது. தொடர்ந்து ஔவை சு. துரைசாமிப் பிள்ளை எழுதிப் பல நூல்கள் கழக வெளியீடாக வரத் தொடங்கின.

தமிழ்ப் பணிகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியீடுகளாக சைவ சமய இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் போன்ற அரிய நூல்கள் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையால் உரை எழுதப்பட்டு வெளிவந்தன. ந.மு. வேங்கடசாமி நாட்டார், தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், க.வெள்ளைவாரணனார், ச.சச்சிதானந்தம் பிள்ளை போன்றோர் ஔவைக்கு வழிகாட்டிகளாக இருந்து அவரது தமிழ்ப் பணிகளை ஊக்குவித்தனர்.

தமிழின் பல துறைகளிலும் ஆராய்ந்து பல நூல்களைப் படைத்தார் ஔவை. கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகளை ஆராய்ந்து பல வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தினார். புறநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு எனப் பல இலக்கியங்களுக்கு உரை நூல்களைப் படைத்தார். ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியத்திற்கு முதன் முதல் உரை எழுதியது ஔவை சு. துரைசாமிப் பிள்ளைதான். தமிழ் நாவலர் சரிதை, சேர மன்னர் வரலாறு போன்ற அரிய நூல்களை எழுதியவரும் ஔவைதான்.

சமயப் பணிகள்

ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, சைவசித்தாந்தத்தின் மீது ஆர்வம் கொண்டு பல நூல்களைப் படைத்துள்ளார். சைவ இலக்கிய வரலாறு, திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை, திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை, சிவஞானபோதச் செம்பொருள், சிவஞான போத மூலமும் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரையும், திருவருட்பா மூலமும் உரையும் போன்ற நூல்கள் அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.

நாடெங்கும் பயணப்பட்டு இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார். பலரது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் பெற்றார்.

விருதுகள்

 • தூத்துக்குடி சைவ சித்தாந்தச் சபையார் வழங்கிய ‘சித்தாந்த கலாநிதி’ பட்டம்
 • மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வழங்கிய ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ பட்டம்
 • மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிய ‘உரைவேந்தர்’ பட்டம்
 • தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறப்புக் கேடயம்
 • சைவ சித்தாந்தச் செம்மல் பட்டம்
 • சித்தாந்த சிகாமணி பட்டம்

மறைவு

ஔவை சு. துரைசாமிப் பிள்ளை ஏப்ரல் 4, 1981-ல் காலமானார். தமிழக அரசு அவரது நூல்களை 2007-ல் நாட்டுடைமை ஆக்கியது.

உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு - நூல்

நினைவு நூல்கள்

 • ஒளவை சு. துரைசாமி பிள்ளையை நினைவு கூரும் வகையில், முனைவர் ச.சாம்பசிவனார், சாகித்திய அகாதெமி நிறுவனத்தின் இந்திய இலக்கியச் சிற்பிகள் நூல் வரிசையில் நூல் ஒன்றை எழுதியுள்ளார் (உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி பிள்ளை-முனைவர் ச.சாம்பசிவனார்)
 • பி.வி. கிரி, ‘உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு' என்ற தலைப்பில், ஔவை துரைசாமிப் பிள்ளை பற்றிய நூல் ஒன்றைத் தொகுத்துள்ளார்.
 • தி.நா. அறிவொளி, ஔவை துரைசாமிப் பிள்ளையின் வாழ்க்கைக் குறிப்பைச் சிறு நூலாக எழுதியுள்ளார்.
 • ஔவையின் மாணவர் ம.வி. இராகவன், ஔவை பற்றி, ‘ஆசிரியப் பெருந்தகை ஔவை துரைசாமிப் பிள்ளை’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

வரலாற்று இடம்

தமிழ்த் தொண்டு ஒன்றையே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை. இவரது மேதைமையை, “நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்” என்று பாராட்டுகிறார் பாவேந்தர் பாரதிதாசன். “சித்தாந்த சைவத்தை உரையாலும், கட்டுரையாலும் கட்டமைந்த சொற்பொழிவுகளாலும் பரப்பிய அருமை வாய்ந்த பெரியார்” என்று மதிப்பிடுகிறார் டாக்டர் வ.சுப. மாணிக்கம். “எங்கும் தயங்காமல் சென்று தமிழ் வளர்த்ததாலே தாங்கள் அவ் ஔவைதான், ஔவையேதான்” என்கிறார் ஔவையின் மாணவர்களுள் ஒருவரான கவிஞர் மீரா. “தமிழ்மொழியின் உயர்நிலையில் உள்ள குறையை நிறைவு செய்யவும், அதன்நூல்வளம் பெருக்கவும் நூலியற்றுவோர் ஒரு சிலரே! அவ்வொரு சிலருள் பிள்ளையவர்களும் ஒருவராவர்!” என்று புகழ்ந்துரைக்கிறார் ஔவையின் மாணவர் ம.வி. இராகவன்.

ஔவை துரைசாமி நூல்
ஞான உரை : ஔவை சு. துரைசாமிப் பிள்ளை நூல்

நூல்கள்

 • ஐங்குறுநூறு உரை
 • சீவகசிந்தாமணி சுருக்கம்
 • சிலப்பதிகாரச் சுருக்கம்
 • மணிமேகலை சுருக்கம்
 • சூளாமணி சுருக்கம்
 • சிலப்பதிகார ஆராய்ச்சி
 • மணிமேகலை ஆராய்ச்சி
 • சீவகசிந்தாமணி ஆராய்ச்சி
 • தெய்வப்புலவர் திருவள்ளுவர்
 • பரணர்
 • யசோதரகாவியம் - மூலமும் உரையும்
 • தமிழ் நாவலர் சரிதை - மூலமும் உரையும்
 • புறநானூறு உரை
 • பதிற்றுப் பத்து உரை
 • நற்றிணை உரை
 • சைவ இலக்கிய வரலாறு
 • திருவோத்தூர் தேவாரத் திருப்பதிக உரை
 • திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை
 • ஞானாமிர்தம் மூலமும் உரையும்
 • ஞானவுரை
 • திருவருட்பா உரை
 • சிவஞானபோதச் செம்பொருள்
 • சிவஞானபோத மூலமும் சிற்றுரையும்
 • சிவநெறிச் சிந்தனை
 • வரலாற்று வாயில்
 • சேரமன்னர் வரலாறு
 • தமிழ்ச் செல்வம்
 • நந்தா விளக்கு
 • மாவை யமக அந்தாதி உரை
 • ஔவைத் தமிழ்
 • செம்மொழிப் புதையல்
 • செந்தமிழ் வளம்
 • திருக்குறள் தெளிவு (கட்டுரைகள்)
 • தமிழ்த் தாமரை
 • ஆர்க்காடு
 • சட்டத் தகைமை
 • பெருந்தகைப் பெண்டிர்
 • மதுரைக் குமரனார்
 • வரலாற்றுக் காட்சிகள்
ஆங்கில நூல்
 • Introduction to the story of Thiruvalluvar
அச்சில் வராத நூல்கள்
 • ஊர்ப்பெயர்-வரலாற்று ஆராய்ச்சி
 • ஊழ்வினை
 • புதுநெறித் தமிழ் இலக்கணம்
 • மருள்நீக்கியார் நாடகம்
 • மத்த விலாசம் (மொழிபெயர்ப்பு)

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Mar-2023, 06:04:30 IST