under review

ச. சாம்பசிவம்

From Tamil Wiki
ச. சாம்பசிவம் (சாம்பசிவனார்)
ச. சாம்பசிவம் (சாம்பசிவனார்)

ச. சாம்பசிவம் (செப்டெம்பர் 29, 1929 - ) (ச. சாம்பசிவனார்) தமிழறிஞர், கல்வியாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். தொல்காப்பிய உரைகள், சைவ நூல்களுக்கான விளக்கவுரைகள் ஆகியவற்றுக்காக அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

ச.சாம்பசிவம் செப்டெம்பர் 29, 1929-ல் (பள்ளிச்சான்றுப்படி மே10, 1928) தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் வள்ளல்நதி என்ற கண்டமநாயக்கனூர் என்னும் ஊரில் பிறந்தார். பெற்றோர் க.ச.சங்கரலிங்கம், தில்லை என்ற மீனாட்சி.

மதுரைக் கல்லூரியில் இடைக்கலை வகுப்பு வரை படித்தார். தந்தையார் இறந்ததும் படிப்பு இடையில் நின்றது. 1954-ல் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பாலபண்டிதம் பட்டம் பெற்றார். 1955-ல் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதம் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1961-ல் வித்துவான் பட்டம் பெற்றார். 1966-ல் தமிழக அரசின் பண்டிதப் பயிற்சியைக் குமாரபாளையத்தில் முடித்தார்.

1966-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பு முடித்து, 1974-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். 'நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப் பணி' என்னும் தலைப்பில் பேராசிரியர் தா.ஏ.ஞானமூர்த்தி, பேராசிரியர் அனந்தகிருட்டிண பிள்ளை ஆகியோர் மேற்பார்வையில் ஆய்வு செய்து 1983-ல் முனைவர் பட்டம் பெற்றார்

தனிவாழ்க்கை

ச. சாம்பசிவம் நவம்பர் 26, 1950 ல் மனோன்மணியை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஆண்மக்கள் நால்வர் பெண்மக்கள் நால்வர். சாம்பசிவனாரின் திருமணம் கி.ஆ.பெ. விசுவநாதம் தலைமையில் நடந்தது.

மதுரை இராமநாதபுரம் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலையில் கணக்குப் பிரிவு எழுத்தராகப் பணியைத் தொடங்கி, பின்னர் தமிழாசிரியராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இதழியல்

ச. சாம்பசிவனார் 1991-ம் ஆண்டு முதல் 'தமிழ் மாருதம்' என்னும் இலக்கிய ஆய்விதழை நடத்தி வருகிறார்.

அமைப்புப்பணிகள்

ச. சாம்பசிவனார் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தின் பொறுப்பில் இருந்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பணிகளிலும்,-செந்தமிழ்க் கல்லூரியின் பணிகளிலும் பங்களிப்பாற்றினார்.

தமிழ்க்கல்லூரி ஆசிரியர் மன்றம் என்ற அமைப்பை 1970-ல் நிறுவி கல்லூரித் தமிழாசிரியர்களின் உரிமைகளுக்காக போராடினார்.

இலக்கியவாழ்க்கை

சொற்பொழிவு

ச. சாம்பசிவனார் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரீசியஸ்எனப் பல வெளிநாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்றார். ஆய்வரங்குகளிலும், சமய மாநாடுகளிலும் உரையாற்றிநார்.

கல்விப்பணி

நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை கல்வியேடுகளில் எழுதியுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்விக்காகப் பல பாடநூல்களையும் எழுதியுள்ளார். பணி ஓய்வுக்குப் பிறகும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பணியில் இருந்தார்.

பிப்ரவரி 4, 2001 முதல் தமிழ் மாருதம் நூலகம் என்னும் ஆய்வுநூலகத்தை மதுரையில் தன் இல்லத்தில் மாணவர்களுக்காக நடத்தி வருகிறார்.

ஆய்வுப் பணி

ச. சாம்பசிவனார் அவர்களின் ஆய்வுகளில் முதன்மையானது தொல்காப்பிய ஆய்வு. தொல்காப்பியத்திற்கு விரிவான ஆய்வுரையுடன் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றில், நாவலர் சோமசுந்தர பாரதியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்ப்பணிகள், ஔவை துரைசாமிப் பிள்ளை ஆகியோர் சார்ந்து எழுதிய நூல்கள் முதன்மையானவை. சைவ இலக்கிய அகராதி குறிப்பிடத்தக்க பங்களிப்பு.

பங்களிப்பு

ச. சாம்பசிவனார் கல்வியாளர், இலக்கிய ஆய்வாளர் என்னும் நிலைகளில் மதிப்பிடப்படுகிறார். மதுரைப் பல்கலையின் தமிழ்க் கல்வியை வழிநடத்தியவர். இலக்கிய ஆய்வாளராக தொல்காப்பிய ஆய்வு, சைவ இலக்கிய ஆய்வு மற்றும் தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் ஆகியவற்றின் வழியாக தமிழிலக்கியப் பங்களிப்பாற்றியவர்.

நூல்கள்

  • மாநகர் மதுரை (1960
  • நாவலர் நால்வர் (1960)
  • அரசஞ்சண்முகனார் (1961)
  • தமிழவேள் உமாமகேசுவரனார் (1964)
  • தமிழ் இலக்கியத்தில் நெய்தல் திணை (1964)
  • கவி மன்னர் மூவர் (1965)
  • உடம்பும் உயிரும் (1965)
  • புகழின் காயம் (1967)
  • வள்ளுவர் தெள்ளுரை (1970)
  • கண்ணன் பிள்ளைத் தமிழ் மூலமும் பொழிப்புரையும் (1971)
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூலமும் குறிப்புரையும் (1978)
  • தொல்காப்பியம் பொருளதிகாரம் பகுதி 2 மூலமும் குறிப்புரையும் (1978)
  • தொல்காப்பியம் பொருளதிகாரம் பகுதி 1 மூலமும் குறிப்புரையும் (1980)
  • ஐங்குறுநூறு: குறிஞ்சி மூலமும் விளக்க உரையும் (1980)
  • மேகலை நாடகம் (1982)
  • தொல்காப்பியம் எழுத்ததிகாரம் கருத்துக்கோவை (1982)
  • நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப் பணி (1985)
  • தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் முதலான 4 இயல் கருத்துக்கோவை (1986)
  • பிழையின்றி எழுத (1996)
  • திருவாசகத்தில் சைவ சித்தாந்தக் கருத்துகள் (1997)
  • திருநாவுக்கரசர் தேவாரத்தில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் (1998)
  • தமிழா இதோ உன் புதையல் (1998)
  • தொல்காப்பியம் பொருளதிகாரம் முதல் 5 இயல்கள் மூலமும் குறிப்புரையும் (1998)
  • நாவலர் சோமசுந்தர பாரதியார் (1999)
  • சிவஞானபோதச் செம்பொருள் (1999)
  • நற்றமிழ்க்காவலர் நாவலர் சோமசுந்தர பாரதியார் (2000)
  • அறநெறியண்ணல் கி.பழனியப்பனார் (2002)
  • சைவசித்தாந்தக் கலைச்சொல் அகராதி (2003)
  • இராமலிங்கர் பாடல்களில் சமய நல்லிணக்கச் சிந்தனைகள் (2004)
  • இராமலிங்கர் (2004)
  • சைவ சமய இலக்கிய அகராதி 1 (2006)
  • சைவ சமய இலக்கிய அகராதி 2 (2008)
  • உரைவேந்தர் ஔவை துரைசாமி பிள்ளை (2007)

உசாத்துணை



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-May-2026, 16:56:08 IST