under review

பி.வி. கிரி

From Tamil Wiki
பி.வி. கிரி

பி.வி. கிரி (பி. வேதகிரி ) (பி.வி.ஜி.) (ஜூன் 2, 1938 - நவம்பர் 9, 2012) எழுத்தாளர், கவிஞர், இதழாளர். சிறார் இலக்கிய நூல்கள் பலவற்றைப் படைத்தார். தமிழரசு இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். சிறார் இலக்கியப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

பி. வேதகிரி என்னும் பி.வி.கிரி, ஜூன் 2, 1938 அன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூரில் பிறந்தார். உள்ளூரில் ஆரம்பக் கல்வி பயின்றார். உயர்நிலைக் கல்வியை, சென்னை, சௌகார்பேட்டையில் உள்ள ஜெயின் பள்ளியில் கற்றார்.

தனி வாழ்க்கை

பி.வி. கிரி, மணமானவர். பிள்ளைகள்: ஒரு மகன், ஒரு மகள்.

பி.வி. கிரி நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

பி.வி.கிரி, பள்ளியில் படிக்கும்போதே நண்பர்களுடன் இணைந்து ‘கலைஞன்’ என்னும் கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தினார். டாக்டர் மு. வரதராசன், நாரண துரைக்கண்ணன் ஆகியோர் பி.வி. கிரியை ஊக்குவித்தனர். பி.வி. கிரியின் முதல் படைப்பான, 'மலைக்குகை மர்மம்’ என்னும் துப்பறியும் நாவல், 1960-ல், ’தொழில்’ என்னும் இதழில், தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் அது நூலாக வெளியானது. ஆனந்தபோதினி, பிரசண்டவிகடன், திராவிடநாடு, திராவிடன் போன்ற இதழ்களில் கதை, கட்டுரைகளை எழுதினார். முதல் சிறுகதைத் தொகுப்பு ‘மடியில் விழுந்த கனி’ 1987-ல் வெளிவந்தது.

பி.வி. கிரி எழுதிய ’பொது அறிவுப் பூமாலை’, ஒரே வானம் ஒரே நிலவு ஆகிய நூல்கள், பள்ளிகளில் துணைப்பாட நூலாக வைக்கப்பட்டன. தமிழ்நாடு, கர்நாடக மாநிலத் தமிழ்ப் பாட நூல்களிலும், மொரீஷியஸ் நாட்டுத் தமிழ்ப்பாட நூலிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் பி.ஏ. மற்றும் பி.லிட். பட்ட வகுப்பில் சிறப்புத் தமிழ் பாடத்தில் இவரது கவிதை இடம் பெற்றது. இவரது ’இதழியல்’ நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாட நூலாக வைக்கப்பட்டது.

பல்வேறு கருத்தரங்குகளிலும், உலகத் தமிழ் மாநாட்டு இதழ்களிலும் பி.வி.கிரியின் கட்டுரைகள், கவிதைகள் வெளியாகின. மாணவர்கள் சிலர் கிரியின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றனர். பி.வி. கிரி அறுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவற்றில் பல சிறார் படைப்புகள்.

பி.வி. கிரியின் சிறுகதை
தமிழரசு பொங்கல் சிறப்பிதழ்

இதழியல்

பி.வி. கிரி , ஏ.வி.பி.ஆசைத்தம்பி நடத்திய ’தனியரசு' என்ற இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ’சங்கநாதம்’ என்னும் மாதமிருமுறை இதழின் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். ‘இளையபாரதம்’ என்ற இதழில் துணை ஆசிரியராக இருந்தார். சில ஆண்டுகள் சுதந்திர இதழாளராகச் செயல்பட்டார். அக்காலக்கட்டத்தில் குமுதம், கல்கி, தினமணி கதிர் போன்ற இதழ்களில் பேட்டிகள், நேர்காணல் கட்டுரைகளை எழுதினார். 1971-ல், தமிழக அரசின் தமிழரசு இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 25 ஆண்டுகள் பணியாற்றி, ஜூன் 1996-ல் ஓய்வு பெற்றார்.

தமிழரசு இதழ்ப் பணிகள்

பி.வி. கிரி தமிழரசு இதழில் பணியாற்றியபோது மாவட்ட மலர்கள் பலவற்றைத் தயாரித்தார். செங்கல்பட்டு, தஞ்சை, கோவை, தருமபுரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பயணம் செய்து, செய்திகளைத் திரட்டி மாவட்ட மலர்களை வெளியிட்டார். பொங்கல் மற்றும் ஆண்டு மலர் சிறப்பிதழ்களில் பங்களித்தார். ’தமிழ் வளர்த்த பெரியார்' என்னும் தலைப்பில், தேவநேயப் பாவாணர், நெ.து. சுந்தரவடிவேலு முதலான தமிழறிஞர்களின் பேட்டிக் கட்டுரைகளை, மறைந்த தமிழ் அறிஞர்கள் பற்றிய செய்திக் கட்டுரைகளை, இலக்கியக் கட்டுரைகளை எழுதினார்.

நாடகம்

பி.வி. கிரி, சென்னை ஒற்றைவாடை அரங்கில் நிகழ்ந்த சில நாடகங்களுக்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதினார்.

விருதுகள்

  • குழந்தை இலக்கியப் பணிகளுக்காக ‘யுனெஸ்கோ' மன்றச் சான்றிதழ்
  • ஏ.வி.எம். அறக்கட்டளையின் தங்கப் பதக்கம் - ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே நூலுக்கு.
  • சிறந்த நூலுக்கான தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் முதல் பரிசு - பொதுஅறிவுக் கட்டுரைகள் நூலுக்கு.
  • சிறந்த பத்திரிகையாளருக்கான வி.ஜி.பி. அறக்கட்டளையின் சிறப்பு விருது
  • குழந்தை இலக்கியத்துக்கான மத்திய அரசின் தேசிய விருது.
  • இந்தியன் வங்கி விருது
  • மழலைக் கவிஞர் விருது
  • குழந்தை இலக்கியக் கவி அமுதனார் பட்டம்
  • இலக்கிய மாமணி பட்டம்
பி.வி. கிரி

மறைவு

பி.வி. கிரி, நவம்பர் 9, 2012 அன்று தனது 74-ம் வயதில் காலமானார்.

இலக்கிய இடம்

பி.வி. கிரி பொதுவாசிப்புக்குரிய நூல்களையும் சிறார் படைப்புகளையும் எழுதினார். அழ. வள்ளியப்பாவைத் தனது குருவாகக் கொண்டு செயல்பட்டார். இவரது சிறார் படைப்புகள், எளிய மொழியில் இளம் சிறார்களைக் கவரும் வகையில் அமைந்தன. தமிழரசு இதழில் இலக்கியவாதிகளின், சான்றோர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தினார். முன்னோடி இதழாளராகவும், தமிழின் மூத்த சிறார் படைப்பிலக்கியவாதிகளுள் ஒருவராகவும் பி.வி. கிரி மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • மலைக்குகை மர்மம்
  • பொது அறிவுக் கட்டுரைகள்
  • அறிவு வளர்க்கும் சின்னச் சின்னக் கதைகள்
  • கிளிமூக்கு மாங்காய்
  • பொது அறிவுப் பூமாலை
  • ஒரே வானம் ஒரே நிலவு
  • மழலை இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர்
  • இதழியல்
  • ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!
  • திருக்கழக்குன்ற திருத்தலப் பெருமை
  • வழிகாட்டிய ஒளி விளக்குகள்
  • கவிஞர் நெஞ்சில் கண்ணப்பர்
  • புதியதோர் உலகம் செய்வோம்
  • பாப்பாப் பாட்டு பாடிய பாவலர்கள்
  • செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்
  • செந்தமிழில் ஒரு நந்தவனம்
  • மாமனிதர் மகாலிங்கம்
  • வந்தேமாதரம்
  • வாழைப்பூ
  • அருட்செல்வர் அணிந்துரைகள்
  • அருட்பேரொளி வள்ளலார்
  • புதியதோர் உலகம் செய்வோம்
  • நீலமலைத் திருவிழா
  • ஓலை ரகசியம்
  • ராஜாத்தி மண்டபம்
  • சின்னச் சின்ன கதைகள்
  • பி.வி. கிரி கவிதைகள்
  • விஞ்ஞானிகள் வாழ்விலே
  • பொது அறிவுப் புதையல்
  • வழிகாட்டிய ஒளிவிளக்குகள்
  • முதல் உதவி
  • சொல்கிறார் நல்லி
  • நல்லறிவூட்டும் கதைகள்
  • கண் திறந்தது
  • வி.ஐ.பி.பேட்டி
  • வி.பி. சிங்.100

உசாத்துணை


✅Finalised Page