புலியூர்க் கேசிகன்
- புலியூர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: புலியூர் (பெயர் பட்டியல்)
புலியூர்க் கேசிகன் (இயற்பெயர் சொக்கலிங்கம்; அக்டோபர் 16, 1923 - ஏப்ரல் 17, 1992) கவிஞர், இலக்கண-இலக்கிய உரையாசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் சங்க இலக்கிய நூல்கள் பலவற்றிற்கு எளிய உரைகளை எழுதியவர். ஜோதிடம், எண் கணிதம் போன்ற துறை சார்ந்தும் நூல்கள் எழுதியிருக்கிறார்.
பிறப்பு, கல்வி
புலியூர்க் கேசிகன், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புலியூர்குறிச்சி என்னும் சிற்றூரில் கந்தசாமிப் பிள்ளை-மகாலட்சுமி இணையருக்கு, அக்டோபர் 16, 1923 அன்று பிறந்தார். இயற்பெயர் சொக்கலிங்கம். பள்ளிப் படிப்பை டோணாவூர் பள்ளியில் பயின்றார். இன்டர்மீடியட் வகுப்பை மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் நிறைவு செய்தார். புலியூர் கிராமத்தில் இருந்து பட்டம் பெற்ற முதல் மாணவர் இவர்.
தனி வாழ்க்கை
கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் புலியூர்க் கேசிகனுக்கு அருகிலுள்ள வடுகச்சிமலைப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. நெல்லைப் பகுதியில் வாழ்ந்த தமிழறிஞர்கள் பலரைத் தேடிச் சென்று சந்தித்தார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், திரு.வி.க., டாக்டர் மு.வரதராசன் போன்றோருடன் நெருங்கிப் பழகி, தனது தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.
டோணாவூரில் உள்ள மருத்துவமனையில் மறைமலை அடிகளின் மகளான நீலாம்பிகை அம்மையார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மறைமலை அடிகளின் மீது கொண்டிருந்த பற்றால் நீலாம்பிகை அம்மையாரை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்தார் புலியூர்க் கேசிகன். நீலாம்பிகை அம்மையார், தனது கணவர் திருவரங்கப் பிள்ளையிடம் புலியூர்க்கேசிகனின் திறமை, தமிழார்வம் பற்றி எடுத்துரைத்தார். நீலாம்பிகை அம்மையின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேலாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டார் புலியூர்க் கேசிகன். நீலாம்பிகை அம்மையின் விருப்பத்தில் பேரில் அவர்களது மகள் சுந்தரத்தம்மையை மணம் செய்து கொண்டார்.
பதிப்புத்தொழில்
திருவரங்கப் பிள்ளையின் மறைவிற்குப் பின் வ. சுப்பையாப் பிள்ளையின் மேலாண்மையில் சில வருடங்கள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேலாளராகப் பணியாற்றினார் புலியூர்க் கேசிகன். பல நூல்களின் பதிப்புப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் கழகத்திலிருந்து விலகி, அருணா பப்ளிஷர்ஸில் மேலாளராகப் பணி புரிந்தார். பின் பாரி நிலையத்தில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. தொடர்ந்து மாருதி பதிப்பகத்திலும் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
பாரி நிலையத்தில் பணியாற்றும்போது தான் புலியூர்க் கேசிகன் இலக்கண, இலக்கிய நூல்களுக்கு உரை எழுதத் தொடங்கினார். அதுவரை சொக்கலிங்கம் என்ற பெயரில் செயல்பட்டவர், 'புலியூர்க் கேசிகன்’ என்ற பெயரில் இலக்கண, இலக்கிய நூல்களுக்கு எளிய உரைகள் எழுத முற்பட்டார்.
1958-ல், தொல்காப்பியம் முழு உரை நூல் புலியூர்க் கேசிகனின் முதல் உரை விளக்க நூலாக வெளியானது. தொடர்ந்து மணிமேகலை, சிலப்பதிகாரம் உள்பட பல இலக்கிய நூல்களுக்கு உரை எழுதினார். ஆன்மிகம், ஜோதிடம், எண் கணிதம் போன்றவற்றிலும் புலியூர்க் கேசிகனுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஜோதிடம், எண் கணிதம் சார்ந்து பல நூல்களை எழுதினார். பிரபல ஜோதிடர்களான வித்வான் வே. லட்சுமணன், புலியூர் பாலு போன்றவர்களால் பாராட்டப்பட்டார்.
புலியூர்க் கேசிகன் மணிமேகலை பிரசுரத்திற்காக 60 வருடப் பஞ்சாங்கத்தைத் தொகுத்தளித்திருக்கிறார். 'நந்திவாக்கு', 'ஜோதிட நண்பன்’ போன்ற நூல்களின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்திருக்கிறார். ஆனந்தவிகடன், அமுதசுரபி, குமுதம், குங்குமம், இதயம் பேசுகிறது, கல்கண்டு, தாய், ஞானபூமி உள்ளிட்ட பல இதழ்களில் ஆன்மிகம், ஜோதிடம், எண் ஜோதிடம், ஆவியுலகம், உளவியல், இலக்கியம் தொடர்பாகப் பல கட்டுரைகளை, தொடர்களை எழுதியுள்ளார். 'இதயம் பேசுகிறது’ இதழில் 'தேவி தரிசனம்’ என்ற பெயரில் இவர் எழுதிய தொடர் பலராலும் வரவேற்கப்பட்டது.
இவர் எழுதிய 'புகழ் பெற்ற பேரூர்கள்’, 'புலவரும் புரவலரும்’, 'அறநெறிச் செல்வர்’ போன்ற நூல்கள் பாட நூல்களாக வைக்கப்பட்டன. இவரது படைப்புகளை ஆராய்ந்து பல ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
இலக்கிய, இலக்கண நூல்களுக்கான உரைகள்; சோதிட நூல்கள்; உளவியல் நூல்கள்; யோக நூல்கள்; ஆன்மிக நூல்கள்; வரலாற்று நூல்கள் என 90 நூல்களைப் புலியூர்க் கேசிகன் அளித்துள்ளார்.
புலியூர்க் கேசிகன் இலக்கியப் பேரவை
தனது தந்தையின் நினைவாக 'புலியூர்க்கேசிகன் இலக்கியப் பேரவை' என்ற அமைப்பை அவரது மகள் கலைச்செல்வி புலியூர் கேசிகன் தோற்றுவித்து நடத்தி வருகிறார். அந்த அமைப்பு மூலம், ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளை, கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி வருகிறார். இப்பேரவை மூலம் மறைமலையடிகள், நீலாம்பிகை அம்மை, புலியூர்க்கேசிகன், நம்பி ஆரூரன், திருவரங்கம் பிள்ளை போன்றோர் பெயரில் சிறந்த தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விருதுகள்
- முத்தமிழ் மன்ற விருது
- ஸ்ரீராம் நிறுவன விருது
- கம்பன் கழகம் வழங்கிய விருது
- திருவள்ளுவர் இலக்கிய மன்றம் வழங்கிய விருது
- பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் வழங்கிய விருது
மறைவு
ஏப்ரல் 17, 1992-ல் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் புலியூர்க் கேசிகன் காலமானார்.
ஆவணம்
புலியூர்க் கேசிகனின் நூல்களை தமிழக அரசு 2009-ல் நாட்டுடைமையாக்கியுள்ளது. புலியூர்க் கேசிகனின் நூல்கள் சிலவற்றை தமிழ் இணைய நூலகச் சேகரிப்பிலும், ஆர்கைவ் தளத்திலும் வாசிக்கலாம்.
இலக்கிய இடம்
புலியூர்க் கேசிகன் சங்க இலக்கிய நூல்களுக்கு மிக எளிய உரைகளை எழுதியவர். இலக்கண நூல்களுக்கும் உரை விளக்கம் எழுதியுள்ளார். "சங்க இலக்கிய அறிமுக வாசிப்புக்கு அதிக விளக்கங்கள் இல்லாமல் எளிமையாகப் பத்தி பிரித்து, பதம் பிரித்து அளிக்கப்பட்டுள்ள புலியூர்க்கேசிகன் உரைநூல்களே சிறந்தவை" [1] என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். புலியூர் கேசிகனின் உரைகள் பண்டிதத்தன்மையோ பாடநூல்தன்மையோ இல்லாதவை என்பதனால் பொதுவாசகர்களால் விரும்பப்பட்டன.
நூல்கள்
உரை நூல்கள்
- தொல்காப்பியம்
- நன்னூல்
- திருக்குறள் உரை
- நாலடியார்
- பழமொழி நானூறு
- அகநானூறு
- புறநானூறு
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- கலித்தொகை
- நற்றிணை
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- புறப்பொருள் வெண்பாமாலை
- நளவெண்பா
- கலிங்கத்துப் பரணி
- திருக்குற்றாலக் குறவஞ்சி
- முக்கூடற்பள்ளு
- தகடூர் யாத்திரை
- திருப்பாவை
- திருவாசகம்
- திருவெம்பாவை
- திருவருட்பா பாராயணத் திரட்டு
- கம்பன் தனிப்பாடல்கள் திரட்டு
- கவி காளமேகம் தனிப்பாடல்கள்
- ஔவையார் தனிப்பாடல்கள்
ஆன்மிக நூல்கள்
- மாங்காடு காமாட்சி அம்மன் வரலாறு
- ஸ்ரீ சந்தோஷி மாதா
கட்டுரை நூல்கள்
- முத்தமிழ் மதுரை
- பூலித்தேவனா? புலித்தேவனா?
- தியானம்
- மனோசக்தி
- புறநானூறும் தமிழர் சமுதாயமும்
- புறநானூறும் தமிழர் நீதியும்
- புகழ் பெற்ற பேரூர்கள்
- குறள் தந்த காதல் இன்பம்
- ஐந்திணை வளம்
- புலவரும் புரவலரும்
- அறநெறிச் செல்வர்
- சிங்கார நாயகிகள்
- பெண்மையின் ரகசியம்
ஜோதிட நூல்கள்
- எண்களின் இரகசியம்
- எண்களும் எதிர்காலமும்
- ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்
- திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தங்கள்
உசாத்துணை
- தென்றல் இதழ் கட்டுரை
- புலியூர்க் கேசிகன் நூல்கள்: தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
- புலியூர்க் கேசிகன் நூல்கள்-ஆர்கைவ் தளம்
- புலியூர்க் கேசிகன் – நாட்டுடைமை ஆன எழுத்துகள்:கூட்டாஞ்சோறு தளம்
- புலியூர்க் கேசிகனின் கட்டுரை-பசுபதிவுகள்
- புலியூர்க் கேசிகனின் நூற்றாண்டு விழா
- புலியூர் கேசிகனின் தமிழ்ப்பணி காணொளி
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Aug-2022, 10:26:04 IST