under review

நீலாம்பிகை அம்மையார்

From Tamil Wiki
நீலாம்பிகை அம்மையார்

நீலாம்பிகை அம்மையார் (நாகை நீலாம்பிகை அம்மையார், திருவரங்க நீலாம்பிகை அம்மையார்) (செப்டம்பர் 6, 1903 - நவம்பர் 5, 1945) மறைமலையடிகளின் மகள். தனித்தமிழ் இயக்கச் செயற்பாட்டாளார், கட்டுரையாளர், தமிழறிஞர்.

பிறப்பு, கல்வி

நீலாம்பிகை அம்மையார் மறைமலையடிகள் அவர்களுக்கும், சவுந்தரவல்லியம்மையாருக்கும் நாகப்பட்டினத்தில் செப்டம்பர் 6, 1903 அன்று மகளாகப் பிறந்தார். நீலாம்பிகை அம்மையாருடன் உடன் பிறந்தவர்கள் நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும். நீலாம்பிகை அம்மையார் 1911-ம் ஆண்டு தன் குடும்பத்துடன் சென்னையை அடுத்த பல்லாவரத்திற்குக் குடிபெயர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை சென்னையிலும், பல்லாவரத்திலும் படித்தார். நீலாம்பிகை அம்மையார் தமிழும் சம்ஸ்கிருதமும் கற்றார். 1918-ம் ஆண்டு சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரியில் ஆங்கிலம் கற்றார்.

நீலாம்பிகை அம்மையார் பல்லாவரம் கல்லூரியில் 1920-ம் ஆண்டு முதல் இரண்டாண்டுகள் தமிழாசிரியராக பணிபுரிந்தார். பின்னர், சென்னை ராயபுரத்தில் உள்ள நார்த்விக் மகளிர் கல்லூரியில் 1928 வரை தமிழாசிரியராக பணிபுரிந்தார்.

நூல் 7.png

தனிவாழ்க்கை

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை உருவாக்கிய திருவரங்கம் பிள்ளை அவர்களை 1918-லிருந்து காதலித்து, தந்தையின் சம்மதத்துடன் செப்டம்பர் 2, 1927- ல் திருமயிலை கபாலீஸ்வரர் கோவிலில் மணம் புரிந்துகொண்டார். பின் 1928-ல் பாளையங்கோட்டைக்கு தன் கணவருடன் குடிபெயர்ந்தார். இவர்களுக்கு எட்டு பெண் பிள்ளைகளும், மூன்று ஆண் பிள்ளைகளும் பிறந்தனர்.சுந்தரம்மை, முத்தம்மை, வயிரமுத்து, வேலம்மை, சங்கரியம்மை. பிச்சம்மை, மங்கையர்கரசி, திருநாவுக்கரசு ஆகியோர். நீலாம்பிகை அம்மையார் 1920-ம் ஆண்டு முதல் கடுமையான ஆஸ்துமா (இளைப்பிருமல்) நோயினால் அவதிப்பட்டுவந்தார். இதை 1930-ம் ஆண்டு பிச்சாண்டியா பிள்ளை என்பவர் சில அரிய தமிழ் மருத்துவ முறைகளின் மூலம் குணப்படுத்தினார். இதற்கு கைம்மாறாக இவர் இவருடைய முப்பெண்மணிகள் வரலாறு என்ற நூலை பிச்சாண்டியாபிள்ளைக்கு அர்ப்பணித்துள்ளார்.

பங்களிப்பு

நீலாம்பிகை அம்மையார்

நீலாம்பிகை அம்மையார் 1925-ம் ஆண்டு தனித்தமிழ்க் கட்டுரைகள் என்னும் நூலை எழுதி வெளியிட்டார். தனித்தமிழ் பற்றியும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பல சொற்பொழிவுகள் ஆற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நீலாம்பிகை அம்மையார் தன் தந்தை மறைமலையடிகளின் தூண்டுதலின் பேரில் தனித்தமிழில் பேச,எழுத ஆரம்பித்து, தமிழில் கலந்துள்ள வடமொழியை அறியும் பொருட்டு வடமொழியைக் கற்றார். பின் தமிழ் மொழியில் கலந்துள்ள வடமொக்ச் சொற்களை அறிந்து கொள்ள வடசொல்தமிழ் அகரவரிசை[1] என்ற நூலை எழுதி 1939-ல் வெளியிட்டார்.

நீலாம்பிகை அம்மையார் 1938-ம் ஆண்டு தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாடும் தமிழ்மொழியும் முன்னேறுவது எப்படி? என்ற கட்டுரையை வாசித்தார். பெண்களுக்கான அறிவுச்செயல்பாடுகளை முன்னிறுத்துவதில் ஆர்வம் கொண்ட நீலாம்பிகை அம்மையார் மேல் நாட்டுப் பெண்களைப்பற்றியும், பழந்தமிழ்ப் பெண்களையும் பற்றியும் பொது வாசகர்களுக்கு புரியும் வண்ணம் பல நூல்கள் எழுதி வெளியிட்டர்.

மறைவு

நீலாம்பிகை அம்மையார் நவம்பர் 5, 1945 அன்று தன்னுடைய 38-வது வயதில் மறைந்தார்.

இலக்கிய இடம்

தமிழகத்தில் தேசிய இயக்கம், நவீன இலக்கியம் ஆகியவற்றிலுள்ள பெண்கள் பங்களிப்பு திராவிட இயக்கம், தனித்தமிழியக்கம் ஆகியவற்றில் இல்லை. தனித்தமிழியக்கத்தின் முதன்மை முகம் என அறியப்படுபவர் நீலாம்பிகை. தனித்தமிழியக்கக் கொள்கைகளையும் சைவக்கொள்கைகளையும் சார்ந்து அவர் எழுதிய நூல்கள் அவ்வகையில் முக்கியமானவை.

நூல் 5.png

நூல்கள்

 • முப்பெண்மணிகள் வரலாறு -இணையநூலகம்[2]
 • எலிசபெத் பிரை
 • தமிழ்நாடும் தமிழ்மொழியும் முன்னேறுவது எப்படி?
 • ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் (ஆங்கிலப் பழமொழிகளும்)
 • வடசொல்தமிழ் அகரவரிசை
 • ஜோன் வரலாறு
 • பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
 • அருஞ்செயன் மூவர்
 • மேனாட்டுப் பெண்மணிகள்
 • பழந்தமிழ் மாதர்
 • நால்வர் வரலாறு

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page