under review

மணிமேகலை

From Tamil Wiki
மணிமேகலை முதல் பதிப்பு - 1894
மணிமேகலை - உ.வே.சா. பதிப்பு-1898
மணிமேகலைச் சுருக்கம் : உரை - ஔவை சு. துரைசாமிப் பிள்ளை
மணிமேகலை மூலமும் உரையும்: ந.மு. வேங்கடசாமி நாட்டார், ஔவை சு. துரைசாமிப் பிள்ளை
மணிமேகலை உரை : சாமி சிதம்பரனார்
மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்பு : டாக்டர் பிரேமா நந்தகுமார்

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று மணிமேகலை. சீத்தலைச் சாத்தனார் இயற்றிய நூல் இது. பௌத்த சமயக் கொள்கைகளான இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்த நூலை இயற்றிய சீத்தலைச் சாத்தனாரும், சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் சமகாலத்தவர்கள். சீத்தலைச் சாத்தனாரே, தனது நண்பரான இளங்கோவடிகளிடம் கண்ணகியின் கதையைப் பற்றிக் கூறி சிலப்பதிகாரம் உருவாகக் காரணமாக அமைந்தார்.

மணிமேகலை பெயர் விளக்கம்

இக்காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால், இந்நூலுக்கு ‘மணிமேகலை' என்ற பெயர் வந்தது. இதற்கு 'மணிமேகலை துறவு' என்ற பெயரும் உண்டு. தமிழ் அன்னை தனது இடையில் அணியும் அணிகலனாக மணிமேகலை கருதப்படுகிறது.

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங் காப்பியங்கள் கருதப்படுகின்றன.

கால் சிலம்பு - சிலப்பதிகாரம்

இடை ஒட்டியாணம் - மணிமேகலை

கழுத்துமாலை - சீவக சிந்தாமணி

கை வளையல் - வளையாபதி

காதுத் தோடு - குண்டலகேசி

பதிப்பு வெளியீடு

மணிமேகலையின் முதல் பதிப்பை (மூலம் மட்டும்) க. முருகேசச் செட்டியார், ரிப்பன் பிரஸ் மூலம் 1894-ல் அச்சிட்டார். மணிமேகலையை மூலம் மற்றும் அரும்பத உரையுடன் உ.வே.சா. 1898-ல் பதிப்பித்தார். மூலமும் உரையும் கொண்ட முதல் பதிப்பு இது. இதன் இரண்டாம் பதிப்பை மேலும் பல ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் உ.வே.சா., 1921-ல் பதிப்பித்தார். தொடர்ந்து திருத்திய மூன்றாம் பதிப்பை சாமிநாதையரின் மகன் கலியாணசுந்தரையர் வெளியிட்டார். தொடர்ந்து பலர், பல அச்சுப் பதிப்புகளை வெளியிட்டனர்.

காப்பிய நோக்கம்

பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நூல் மணிமேகலையாகும். மக்களிடையே பௌத்த சமய உணர்வு மேலோங்கவும், சமயக் கொள்கைகளைப் பரப்பிடவும், அதனை நடைமுறையில் பின்பற்றவும் எழுந்த சமயப் பிரச்சார விளக்க நூலே மணிமேகலை.

“மணிமேகலை காப்பியத்தில்தான் முதன் முதலில் சமயம் என்ற சொல் பயின்று வந்துள்ளது” என்பது ஆய்வாளர்களின் கருத்து.’சமயம்’ என்னும் சொல் சங்கப் பாடல்களில் இல்லை. ‘தெய்வம்’ என்னும் சொல் உள்ளது. சமயம் என்னும் சொல் சிலப்பதிகாரத்திலும் இல்லை. பண்டைய நூல்களில் மணிமேகலை, பழமொழி நானூறு ஆகியவற்றில் மட்டும் வருகிறது.

நூல் ஆசிரியர் வரலாறு

மணிமேகலையைப் படைத்தவர் சீத்தலைச்சாத்தனார். இவர், பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர். தம் சமயக் கருத்துக்களை மணிமேகலையின் இலக்கியத்தரம் குன்றாமல் கூறியுள்ளார். இவரைத் ‘தண்டமிழ்ச்சாத்தன் எனவும், ‘கூல வாணிகன் சாத்தன்’ எனவும் சிலப்பதிகாரப் பதிகம் குறிப்பிடுகிறது. ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’, ‘நல்நூல் புலவன்’ என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் மணிமேகலையை இயற்றிய சீத்தலைச் சாத்தனாரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒன்று கூடிக் கலந்தாலோசித்தே சிலம்பையும் மேகலையையும் படைத்துள்ளனர்.

இதனை,

இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளம்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்திறம் மணிமே கலைதுறவு
ஆறுஐம் பாட்டினுள் அறியவைத் தனன்

- என்ற பாடல் மூலம் அறிய முடிகிறது. அதனால் இந்த இரு காப்பியங்களும் ‘இரட்டைக் காப்பியங்கள்’ எனப் போற்றப்படுகின்றன. இளங்கோவும், சாத்தனாரும் இரட்டைப் புலவர்களாகக் கருதப்படுகின்றனர்.

சீத்தலைச் சாத்தனார்: மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

சங்க காலத்தில் வாழ்ந்த சாத்தனார் வேறு, மணிமேகலை இயற்றிய சாத்தனார் வேறு என்ற கருத்து ஆய்வாளர்களிடம் காணப்படுகிறது. ”சங்ககாலத்துச் சாத்தனார் பெயர் சீத்தலைச்சாத்தனார். அவர் சீத்தலை என்னும் ஊரில் பிறந்தவர். அதனால் அப்பெயர் பெற்றார். மணிமேகலை இயற்றிய சாத்தனார், மதுரைக் கூலவாணிகன் சாத்தனார். மதுரையில் பதினெண் வகைத் தானியங்களை வியாபாரம் செய்தவர். அதனால் அப்பெயர் பெற்றார்” என்ற கருத்து ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது. 'சாத்து' என்னும் வணிகக் கூட்டத்தின் தலைவராக இருந்ததால் இவர், ‘சாத்தன்’ என்று அழைக்கப்பட்டிருக்கிறார். ‘சீத்தலைச் சாத்தன்’ என்கிற பெயரிலேயே மேலும் சில புலவர்கள் இருந்ததனால், அவர்களிலிருந்து தனித்து அடையாளம் காட்டுவதற்காக, இவர் 'மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன்' என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

மணிமேகலையின் காலம்

மணிமேகலை காப்பியத்தின் காலம் தொடர்பாக ஆய்வாளர்களிடையே முரண்பட்ட கருத்துகள் காணப்படுகின்றன. “சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே காலத்தில் தோன்றியவை; மணிமேகலையின் காலம் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு” என்ற கருத்து பரவலாக உள்ளது. “சிலப்பதிகாரத்துக்குப் பின் தோன்றியது மணிமேகலை; இதன் காலம் மூன்றாம் நூற்றாண்டு” என்றும் கூறப்படுகிறது. மணி மேகலை இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டது என்கிறார், ‘தன் கால ஆராய்ச்சி’ எனும் நூலில் மா. இராசமாணிக்கனார்.

நூல் அமைப்பு

பெருங்காப்பியங்களுக்கு இருக்க வேண்டிய இலம்பகம், சருக்கம், காண்டம், காதை என்கின்ற பிரிவுகளுள், மணிமேகலை காப்பியத்தில் ‘காதை’ என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் முப்பது காதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முதல் காதையாக விளங்குவது விழாவறை காதையாகும். இக்காதை, நிலைமண்டில ஆசிரியப்பா யாப்பினால் அமைந்துள்ளது. பூம்புகார் நகரில் இந்திர விழா நடப்பதனை அறிவித்தல் என்னும் செய்தியினை இக்காதை விளக்குகிறது.

காதைகள்
  1. விழாவறை காதை
  2. ஊரலர் உரைத்த காதை
  3. மலர்வனம் புக்க காதை
  4. பளிக்கறை புக்க காதை
  5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை
  6. சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை
  7. துயிலெழுப்பிய காதை
  8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை
  9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
  10. மந்திரம் கொடுத்த காதை
  11. பாத்திரம் பெற்ற காதை
  12. அறவணர்த் தொழுத காதை
  13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
  14. பாத்திர மரபு கூறிய காதை
  15. பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை
  16. ஆதிரை பிச்சையிட்ட காதை
  17. உலக அறவி புக்க காதை
  18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை
  19. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை
  20. உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் எறிந்த காதை
  21. கந்திற்பாவை வருவது உரைத்த காதை
  22. சிறை செய் காதை
  23. சிறை விடு காதை
  24. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
  25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை
  26. வஞ்சி மாநகர் புக்க காதை
  27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
  28. கச்சி மாநகர் புக்க காதை
  29. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை
  30. பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

மணிமேகலை காப்பியம், சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சிக் காப்பியம். மணிமேகலை கதாபாத்திரம் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற கதாபாத்திரம். சிலப்பதிகாரத்தில் வரும் கோவலன், மாதவி, சித்ராபதி போன்ற பல முதன்மைக் கதாபாத்திரங்களோடு தொடர்புடையது மணிமேகலை கதா பாத்திரம். அசோதரம், இடவயம், இரத்தினதீபம், உஞ்சை, கச்சயம், கலிங்கநாடு, காகந்தி, காந்தாரம், கொற்கை, சண்பை , சம்பாபதி, சாவகநாடு, சித்திபுரம், நாகநாடு, புகார், பூருவதேயம், மகதநாடு, மணிபல்லவம், வயணங்கோடு, வாணனன் பேரூர் என்று பல்வேறு நாடுகள், நகரங்கள் பற்றிய குறிப்புகள் மணிமேகலையில் இடம்பெற்றுள்ளன.

மணிமேகலையின் கதை

மணிமேகலை கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள். கோவலன் கொலையுண்டதை அறிந்த மாதவி, தன் அக வாழ்வைத் துறந்து, அறவண அடிகள் என்னும் துறவியிடம் அறங்கேட்டுத் தெளிந்து பௌத்தத் துறவியாகிறாள். தன்மகள் மணிமேகலையையும் துறவி ஆக்குகிறாள். அப்போது புகார் நகரில் இந்திர விழா தொடங்கியது. கணிகையர் குல முறைப்படி மாதவியும் மணிமேகலையும் ஆடல் பாடல்களில் கலந்து கொள்ள வேண்டும். கலை வாழ்க்கையைத் துறந்ததனால் இருவரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் சினமுற்ற மாதவியின் தாய் சித்திராபதி, வயந்தமாலை என்பவளை அனுப்பி மாதவியை விழாவில் ஆட வருமாறு அழைக்கிறாள் மாதவி அதனை மறுக்கிறாள். மணிமேகலையிடம் அவள் பிறப்பு வரலாற்றைத் தெரிவிக்கிறாள். கோவலன் கொலைப்பட்ட துன்ப நிகழ்ச்சியைப் பற்றி மாதவி கூறக் கேட்ட மணிமேகலை, தன் பெற்ரோரை நினைத்துக் கண்ணீர் வடிக்கிறாள். அவள் கண்ணீர்த் துளி புத்த பெருமானுக்காகத் தொடுத்த பூமாலையில் பட்டுப் புனிதம் இழக்கச் செய்கிறது. அதனால் புதிய பூக்களைப் பறித்து வந்து மாலை தொடுக்க எண்ணி மணிமேகலையும், அவள் தோழி சுதமதியும் உவவனம் என்னும் பூங்காவுக்குச் செல்கின்றனர். அங்கு சோழ மன்னனின் மகன் உதயகுமரன் வருகிறான். அவன் மணிமேகலையைக் கண்டு காதல் வசப்படுகிறான். எப்படியும் அவளை அடைவேன் என்று உறுதி கூறுகிறான். மனம் வருந்தும் மணிமேகலையை, மணிமேகலா தெய்வம், மணிபல்லவம் தீவிற்கு எடுத்துச் செல்கிறது. அங்கு மணிமேகலைக்கு அவளது பழம் பிறப்பு உணர்த்தப்படுகிறது. வேற்று உருவம் கொள்ளுதல், பசியைத் தாங்கிக் கொள்ளுதல், வான்வழிச் செல்லுதல் என மூன்று மந்திரங்களும் அவளுக்கு அங்கு மணிமேகலா தெய்வத்தால் அருளப்படுகின்றன. மணிமேகலை முன் தீவ திலகை என்னும் தெய்வம் தோன்றி, அவளுக்கு ஆபுத்திரன் கையில் இருந்த பசிப்பிணி தீர்க்கும் ‘அமுதசுரபி’ என்னும் அட்சயபாத்திரத்தைக் கிடைக்கச் செய்கிறது. “அமுதசுரபியில் இடும் அன்னம் எடுக்க எடுக்கக் குறையாது பெருகும்” என்று அதன் சிறப்பினைக் கூறி, அதைக் கொண்டு அறம் செய்து வாழ தெய்வம் வாழ்த்துகிறது. அதன் பின் மணிமேகலை மந்திரத்தின் உதவி கொண்டு வான் வழியே பயணப்பட்டு புகார் நகரம் வருகிறாள். அன்னை மாதவி, தன் தாய் சுதமதியுடன் சென்று அறவண அடிகளைப் பணிகிறாள். அவரிடம் நடந்த நிகழ்வுகளைச் சொல்கிறாள். அவர், மாதவி, சுதமதியின் பழம் பிறப்பையும், ஆபுத்திரனின் வரலாற்றையும் அவர்களிடம் எடுத்துரைத்து மணிமேகைலையைப் பசிப்பிணி தீர்க்கும் பேரறத்தை மேற்கொள்ளப் பணிக்கிறார். அவளும் துறவுக் கோலங்கொண்டு, காயசண்டிகையின் அறிவுரையின்படி கற்பரசி ஆதிரையிடம் முதல் பிச்சை ஏற்றுப் பசிப்பிணி தீர்க்கிறாள்; காயசண்டிகையின் ‘யானைத் தீ’ என்னும் அடங்காப் பசிநோயும் அமுதசுரபியால் நீங்குகிறது. அவள் விண் நாடு புறப்பட்டுச் செல்கிறாள். மணிமேகலையின் துறவு வாழ்வை விரும்பாத மாதவியின் தாய் சித்திராபதி, சோழ இளவரசன் உதயகுமரனைத் தூண்டி விடுகிறாள். அவன் மணிமேகலையை அடைய முயற்சி செய்ய, மணிமேகலை, தனக்கிருக்கும் மந்திர பலத்தால் காய சண்டிகையைப் போல் தன் உருவத்தை மாற்றிக் கொள்கிறாள். காய சண்டிகை உருவில் இருப்பவள் மணிமேகலை என உணர்ந்த உதயகுமரன், நள்ளிரவில் அவளைக் காண வருகிறான். அதனை அறிந்த காய சண்டிகையின் கணவன் காஞ்சனன், தன் மனைவியிடம் உதயகுமரன் தவறுதலாக நடந்து கொள்வதாக நினைத்து அவனைக் கொன்று விடுகிறான். இளவரசன் கொலைக்குக் காரணமான மணிமேகலையை அரசன் கைது செய்கிறான். சிறையில் அடைக்கப்பட்ட மணிமேகலை பல்வேறு துன்பங்களை எதிர்கொள்கிறாள். தான்பெற்ற மந்திரத்தால் அனைத்துத் துன்பத்திலிருந்தும் விடுபடுகிறாள். சிறையில் அனைவருக்கும் அறம் போதிக்கிறாள். பின் சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். பின் அவள் ஆபுத்திரனைச் சந்திக்கிறாள். இருவரும் மணிபல்லவம் தீவை அடைகின்றனர். அங்கு அவன் தன் பழம் பிறப்பை உணர்கிறான். பின் வஞ்சி நகர் செல்லும் மணிமேகலை கண்ணகி தெய்வத்தை வணங்குகிறாள். கண்ணகியின் ஆணைப்படி அனைத்து மதங்களைப் பற்றி அறிய, பல்வேறு மத அறிஞர்களைச் சந்தித்து உரையாடுகிறாள். பின் காஞ்சி மாநகர் சென்று அந்நாட்டு மக்களின் பசிப்பிணி போக்குகிறாள். அங்கு, அவளது முயற்சியால் தீவ திலகைக்கும், மணிமேகலா தெய்வத்துக்கும் கோவில்கள் எழுப்பப்படுகின்றன. மணிமேகலையைக் காண அறவணர், மாதவி, சுதமதி ஆகியோர் வருகின்றனர். காவிரிபூம்பட்டினம் கடலால் அழிந்ததை அறவண அடிகள் எடுத்துரைக்கிறார். பௌத்த சமயத்துத் தர்க்க நெறிகளை அவளுக்குப் போதிக்கிறார். மணிமேகலை “புத்தம் சரணம் கச்சாமி; தர்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி” என்ற மந்திரத்தை மும்முறை தியானம் செய்து தன் பவத்திறம் நீங்க நோன்பு மேற்கொள்கிறாள். - இதுவே மணிமேகலைக் காப்பியத்தின் கதை

மணிமேகலை காப்பியத்தின் சிறப்புகள்

இலக்கிய சுவையோடு கூடிய முதல் சமயக் காப்பியமாக மணிமேகலைப் புகழப்படுகின்றது. சிலப்பதிகாரம் போன்றே மணிமேகலையும் சாதாரணப் பெண் ஒருத்தியின் வாழ்க்கையைக் கூறுகிறது. பௌத்த மதம் சார்ந்து துறவு பூண்ட கன்னிப்பெண் ஒருத்தி, பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையே மக்களுக்குச் சேவை செய்கிறாள். வாழ்வில் வெற்றி பெறுகிறாள். இத்தகைய பெண்ணைக் காவியத்தின் தலைவியாக வைத்துப் பாடியிருப்பது மணிமேகலையின் முக்கிய சிறப்பாகக் கருதப்படுகிறது. மணிமேகலை ஒரு புரட்சிக் காப்பியம். சிலப்பதிகாரத்தைப் போலவே புரட்சிக்கு வழிகாட்டும் காப்பியம். சிலப்பதிகாரம் அரசியல் புரட்சியை மக்களுக்கு அறிவுறுத்தியது. மணிமேகலை சமுதாயப் புரட்சியை மக்களுக்கு அறிவுறுத்தியது. பழங்காலத்துக் காப்பியங்கள் பெரும்பாலும் அரச குடும்பத்தைத் தழுவியவை. ஒரு சில மட்டும் தெய்வத்தைப் பற்றியதாக இருக்கும். காப்பியத்தின் கதாநாயகர்கள் அரசர்களாகவோ, கடவுளாகவோதான் இருப்பார்கள். இந்த முறைக்கு முற்றிலும் வேறுபட்டதாக அமைந்திருப்பது மணிமேகலை காப்பியம். சிலப்பதிகாரம் ஒருபெரு வணிகர் குடும்பத்தின்கதை. மணிமேகலையோ ஒரு பரத்தையின் மகளைப் பற்றிய கதை . பரத்தையின் மகளைக் கதையின் நாயகியாக்கிக் காப்பியம் இயற்றியது சீத்தலைச்சாத்தனாரின் துணிவான முயற்சியாகக் கருதப்படுகிறது.

மணிமேகலை பாத்திரத்தின் சிறப்பு

மணிமேகலை காப்பியத்தில் கதாநாயகி மணிமேகலை ஒரு பரத்தையின் பெண். ஒரு பரத்தையின் மகளைக் கதைத் தலைவியாக வைத்துக் காப்பியம் எழுதியது புரட்சியான செயலாகக் கருதப்படுகிறது. மணிமேகலை காப்பியத்தில் மணிமேகலையைக் கணிகையர் குலப்பெண்ணாக சாத்தனார் காண்பிக்கவில்லை. காப்பியம் முழுவதும் உயர்ந்த ஒழுக்கங்களுடைய பெண்ணாகவே மணிமேகலையைப் படைத்துள்ளார். மணிமேகலையின் தாய் மாதவியும், பாட்டி சித்ராபதியும் கணிகையர் குலப் பண்புகளோடு அத்தொழிலில் இருந்தவர்கள். அந்த இழுக்கையும் மணிமேகலையைத் துறவு பூண வைத்து, நீக்கிவிடுகிறார் சாத்தனார். தன் பாட்டி சித்திராபதியையே திருத்தியவளாக, மணிமேகலையைச் சாத்தனார் காட்டியிருப்பது புரட்சி வெளிப்பாடாகக் கருதப்படுகிறது.

“மாபெரும் பத்தினி மகள், மணிமேகலை
அருந்தவப் படுத்தல் அல்ல தியாவதும்”

என்கிறார், சாத்தனார்.

மணிமேகலை, கண்ணகியையும் தன் தாயாகவே கருதினாள் என்பதை,

"தணியாக் காதல் தாய் கண்ணகியையும்
கொடைகெழு தாதை கோவலன் தன்னையும்”
வணங்கி நின்று குணம்பல ஏத்தித் தொழுதாள்”

- என்ற வரிகள் மூலம் காட்டுகிறார்

மணிமேகலை பாடல் சிறப்புகள்

சொற்சுவையும் பொருட்சுவையும் மிக்க காப்பியமாக மணிமேகலை விளங்குகிறது. பசிப்பிணியின் கொடுமை பற்றி, மணிமேகலை,

குடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்;
பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்;
நாண் அணி களையும்;மாண் எழில் சிதைக்கும்;
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி (மணி 11-76)

- என்கிறது. அறத்தின் சிறப்பை,

அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்
மறவாது இது கேள் மண் உயிர்க்கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல் (மணி 25-228)

என்று கூறுகிறது.

உணவை தானம் செய்வதன் உயர்வு மற்றும் சிறப்பை

ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)

என்று மணிமேகலை குறிப்பிட்டுள்ளது.

அரசன் மற்றும் அரசாட்சியின் முக்கியத்துவம் குறித்து,

கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங்கூரும்
மாரிவறங்கூரின் மன் உயிர் இல்லை
மன் உயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதி இன்றாகும்
தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத்திறம் ஒழிக (மணி 7-8)

- என்கிறது.

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
பற்றின் உறுவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக (மணி 2-64)

என்பன போன்று பல அறக்கருத்துக்கள் இக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன.

மணிமேகலை உரைகள்

உ.வே.சா., ஔவை துரைசாமிப் பிள்ளை, மா. இராசமாணிக்கனார் உள்ளிட்ட பலர் மணிமேகலைக்கு உரை விளக்கம் அளித்துள்ளனர். ’மணிமேகலை உரைநடை’ என்ற தலைப்பில் சாமி. சிதம்பரனார், ம. கோபாலகிருஷணக் கோன் உடன் இணைந்து 1935-ல் வெளியிட்டார். நடுக்காவேரி மு. வேங்கடசாமிநாட்டார், ஔவை சு. துரைசாமிப் பிள்ளை ஆகியோர் இணைந்து எழுதிய உரையுடன் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1946-ல் வெளியிட்டது. ஔவை சு. துரைசாமிப் பிள்ளையின் தனி ஆராய்ச்சி உரையையும் கழகம் வெளியிட்டது. செம்பதிப்பாக மணிமேகலையை மர்ரே எஸ். ராஜம், 1957-ல் வெளியிட்டார். தொடர்ந்து பொ.வே. சோமசுந்தரனார் உரை, புலியூர்க் கேசிகன் உரை, ஜெ.ஸ்ரீ சந்திரன் உரை, மா. நன்னன் உரை, கொ.மா. கோதண்டம் உரை எனப் பல உரை விளக்க, தெளிவுரை நூல்கள் மணிமேகலைக்கு வெளியாகியுள்ளன.

மணிமேகலை உரை நூல்கள் சில தமிழ் இணைய மின்னூலகச் சேகரிப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

மணிமேகலை மொழிபெயர்ப்புகள்

மணிமேகலையை, “Manimekalai -A great epic and one of the five great classics of Tamil rendered into English” என்ற தல்லைப்பில், ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அ. மாதவையாவின் மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்பு 1920-ல் வெளியாகியுள்ளது. ‘Manimekhalai (the dancer with the magic bow) by Shattan’ என்ற தலைப்பில், பண்டித வே. கோபாலையர் உதவியுடன், Alain Daanielou 1989-ல் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். டாக்டர் பிரேமா நந்தகுமார், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக மணிமேகலையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

’Manimekhalai-Retold in English and edited with a critical introduction and notes' என்ற தலைப்பில் ஸ்ரீதரன் கே. குருஸ்வாமி, ஏ. ஸ்ரீநிவாஸனுடன் இணைந்து மொழிபெயர்த்துள்ளார். ஓரியண்ட் லாங்மேன் பதிப்பகம் மூலம், லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையை 1996-ல் மொழிபெயர்த்துள்ளார். மலையாளத்தில் நாராயணன் நாயர், ஆர். ஆர். நென்மாறன் ஆகியோர் இணைந்து மொழிபெயர்த்துள்ளனர். சி.ஐ. கோபாலப் பிள்ளை, பி.வி. கோபாலப் பிள்ளை, பி. ஜனார்த்தம் பிள்ளை போன்றோரது மொழிபெயர்ப்புகளும் மலையாளத்தில் வெளியாகியுள்ளன.

தெலுங்கு, ஹிந்தி, ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜப்பானிய மொழிகளிலும் மணிமேகலை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மலாய், கெமர், இந்தோனேசியா, லாவோ, பர்மீஸ், மாண்டரின், சீனம், திபெத்திய மொழி, தாய், வியட்நாமிஸ், ஜப்பனீஸ், மங்கோலியன், கொரியன், திஃசொங்கா, சிங்களம், நேபாளி, பாலி, லடாக்கி, சீக்கியம், கன்னடம், சம்ஸ்கிருதம் என உலக மற்றும் இந்திய மொழிகளில் மணிமேகலை மொழிபெயர்ப்பு செய்யப்பட உள்ளதாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் 2021-ல் அறிவிப்புச் செய்துள்ளது. [1]

மணிமேகலை வரலாற்று இடம் / மதிப்பீடு

ஐம்பெருங்காப்பியங்களில் மணிமேகலை, சொல்லோவியமும், செய்யுள் வனப்பும், இயற்கை அழகும், கற்பனை நயமும், பல்வகைச் சுவைகளும் நிரம்பியதாக அமைந்துள்ளது. வாழ்வை உயர்த்தும் அருளறம், அறநெறிக் கருத்துக்களை பல்வேறு உதாரணக் கதைகளுடன், சம்பவங்களுடன் விரிவாக விளக்குகிறது. பௌத்த சமயக் காப்பியம் என்றாலும் பல்வேறு சமயக்கொள்கைகைளையும் தொகுத்துக் காட்டுகிறது. புத்தமதத் தத்துவங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. வினைகளின் பிணைப்பை அறுத்து வீட்டுலகப் பேற்றுக்கு வழி அமைக்கும் காவியமாக மணிமேகலை மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page