under review

வளையாபதி

From Tamil Wiki
வளையாபதி கதை (நன்றி: tamilvu)

வளையாபதி தமிழின் ஐம்பெருங் காப்பியங்களின் வரிசையில் ஒன்று. சமணசமய நூல். இதனை இயற்றியவர் யார், எந்த ஆண்டைச் சேர்ந்த நூல் என்பது பற்றிய விவரங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. இக்காப்பியத்தின் சில செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதன் ஏட்டுப் பிரதியைத் திருவாவடுதுறை ஆதினத்தில் பார்த்ததாக உ.வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் இதனைப் பதிப்பிப்பதற்காகத் தேடியபோது அந்தப் பிரதி கிடைக்கவில்லை என்று பதிவு செய்துள்ளார்.

நூல் வரலாறு

வளையாபதியை இயற்றியவர் யார், இதன் காலம் என்ன என்பது போன்ற முழுமையான விவரங்களை இல்லை. இயற்றிய ஆசிரியர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. இக்காப்பியத்தின் எழுபத்தி இரண்டு செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன.

இக்காப்பியத்தில் இடம் பெற்றிருக்கும் அறுபத்தியாறு பாடல்கள் 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டு நூலிலும், மூன்று பாடல்கள் சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாகவும், இரண்டு பாடல்கள் யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூலின் பெயர்தெரியாத ஓர் அறிஞரால் இயற்றப்பட்ட விருத்தியுரையில் மேற்கோளாகவும், இளம்பூரணரின் தொல்காப்பிய உரையில் மேற்கோளாக் காணப்படுவதும் கடவுள் வாழ்த்துப் பாடலென்று கருதப்படுவதுமாகிய எஞ்சிய ஒரு பாடல் நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோளாகவும் கிடைத்துள்ளன.

காப்பியத்தின் கதை

வளையாபதி கதையைக் கிடைத்திருக்கும் பாடல்கள் மூலம் முழுமையாக அறிய இயலவில்லை. ஆனால், 'வளையாபதி' கதை என்பதான ஒரு கதை வழக்கில் உள்ளது.

"புகார் நகரில் நவகோடி நாராயணன் என்னும் செல்வச் செழிப்புமிக்க வணிகன் இருந்தான். அவனுக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி அவன் குலத்தைச் சார்ந்தவள். இரண்டாம் மனைவி வேறு குலத்தைச் சார்ந்தவள். அவன் வேற்றுச் சாதிப் பெண்ணை மணந்ததை எதிர்த்து அவன் குலத்தவர்கள் அவனைச் சாதியைவிட்டு ஒதுக்கி வைப்பதாக அச்சுறுத்தவே அவன் தன் இரண்டாம் மனைவியை விட்டுப் பிரிந்தான். அவன் பிறிந்த சமயத்தில் அப் பெண் கருவுற்றிருந்தாள். பின்னர் அவன் கடற்பயணத்தை மேற்கொண்டு பெரும்பொருள் ஈட்டித் திரும்பித் தன் முதல் மனைவியுடன் இன்பமாக வாழ்ந்து வந்தான். இரண்டாம் மனைவி தன் துன்பம் தீர காளி தேவியை வழிபட்டு வந்தாள். சில மாதம் கழித்து அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனை நன் முறையில் வளர்த்து வந்தாள். அச்சிறுவனுடைய விளையாட்டு தோழர்கள் அவனைத் தகப்பன் பெயர் தெரியாதவனென்று எள்ளித் துன்புறுத்தவே, அச்சிறுவன் அதுபற்றி தன் தாயிடம் முறையிட்டான். அவள் ஒருவழியாக அவன் தந்தையின் பெயரை அவனுக்குத் தெரிவித்தாள். அது கேட்ட அவன் தன் தந்தையைத் தேடிச் சென்று தன்னை மகனாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். ஆயினும் ஊர்க் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு நவகோடி நாராயணன் அவனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறான். பின்னர் அவன் தாய் காளியின் உதவியால் செட்டிச்சாதிப் பெரியவர்களிடம் தன் கற்பின் உண்மையை நிலைநாட்டுகிறாள். நாராயணனும் அவனைத் தன் மகனாக ஏற்று அவனுக்கு வீரவாணிபன் எனப் பெயரிட்டு, அவர்களுடன் இனிது வாழ்ந்தான்."

இவ்வாறு இக்காப்பியத்தின் கதை கூறப்பட்டாலும், இந்நூல் சமண சமயக் கருத்துக்களைக் கூறுவதால் காளி என்ற தெய்வம் வருவதையும், வணிகனை சைவ சமயத்தவன் என்று சொல்வதையும் முழுமையாக அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இந்நூலின் செய்யுட்கள் முழுமையாக கிடைக்கப் பெறாததால் இதுபற்றி அறுதியிட்டுக் கூற இயலவில்லை.

வளையாபதியின் கதையை ஆய்வுசெய்து, யோகி சுத்தானந்த பாரதி வளையாபதி அகவல் என்ற நூலை இயற்றியிருக்கிறார்.

பாடல் நடை

  • கடவுள் வாழ்த்து: பாடல் 1

[இளம்பூரனார் தொல்காப்பிய உரையில் செய்யுளியல் 98-ம் நூற்பாவுக்கும், யாப்பருங்கலக்காரிகை விருத்தியுரையாசிரியர் 37-ஆம் நூற்பாவுக்கும் நூற்பெயரைக் குறிப்பிடாமல் மேற்கோளாக இச்செய்யுளைக் காட்டியுள்ளனர். நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் செய்யுளியல் 148-ம் நூற்பாவின் உரையில் இப்பாடல் வளைபதிச் செய்யுள் எனக் கூறப்பட்டுள்ளது.]

உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்
திலகம் ஆய திறல் அறி வன் அடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான்.

  • பாடல்: 2

[புறத் திரட்டிலிருந்து தொகுக்கப் பட்டவை]

வினைபல வலியி னாலே வேறுவேறு யாக்கை யாகி
நனிபல பிறவி தன்னுள் துன்புறூஉம் நல்லு யிர்க்கு
மனிதரின் அரியதாகும் தோன்றுதல்; தோன்றி னாலும்
இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்ன தேயாம்.

  • பாடல்: 68

[சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாக வருபவை]

துக்கம் துடைக்கும் துகளறு காட்சிய
நிக்கந்த வேடத்து இருடி கணங்களை
ஒக்க அடிவீழ்ந்து உலகியல் செய்தபின்
அக்கதை யாழ்கொண்டு அமைவரப் பண்ணி.

  • பாடல்: 72

[யாப்பருங் கலம்: 93-ஆம் நூற்பாவிற்கு மேற்கோளாகச் சொல்லப்பட்டது]

வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்
மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே!
மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே
உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே!
உத்தம நன்னெறிக்கண் நின்றுஊக்கஞ் செய்தியேல்
சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே.

வளையாபதி உரை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Aug-2023, 00:44:34 IST