under review

அடியார்க்கு நல்லார்

From Tamil Wiki

அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியவர். இவர் பொ.யு. 12-ம் நூற்றாண்டினர் என்று கருதப்படுகிறது. அரும்பத உரையாசிரியரைத் தழுவி இவர் உரையெழுதியுள்ளார். சிலப்பதிகாரம் முழுவதற்கும் உரை எழுதியிருந்தாலும் தற்காலத்தில் அதன் ஒரு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. இவரது உரையிலிருந்து, இவ்வுரையில் இசைத்தமிழுக்கு இவர் அளித்துள்ள விளக்கங்கள் அறிஞர்களினால் போற்றப்படுகின்றன. அடியார்க்கு நல்லார் உரை இல்லாவிடின் பண்டைய இசைத்தமிழ் பற்றிய பல தகவல்கள் தெரியாமலே போயிருக்கும் என்று கருதப்படுகிறது

வாழ்க்கைக் குறிப்பு

அடியார்க்கு நல்லார் பிறந்த ஊர் கொங்கு மண்டலத்தில் உள்ள நிரம்பை என்னும் ஊர் என்று கொங்கு மண்டல சதகம் பாடல்[1] குறிப்பிடுகிறது. இவர் பல நூல்களையும் கற்றவர் என அறிய முடிகின்றது. சிறப்புப் பாயிரப்பாடல்களின் மூலம் இவர் நிரம்பர் என்னும் ஊரினர் என்பதையும், இவருக்கு நிரம்பையர் காவலன் என்று மற்றொரு பெயரும் உண்டு என்பதையும், இவரை ஆதரித்து உரை செய்வித்தவர் பொப்பண்ண காங்கேயர் கோன் என்பதையும் அறியலாம். இவ்வுரையாசிரியர் அடியாருக்கு நல்லான் என்றே அப்பாடல்களில் குறிப்படப்பட்டுள்ளார். நிரம்பையர் காவலர் என்னும் பெயர் ஊரால் வந்தது என்றும், நிரம்பை என்னும் ஊர் கொங்கு மண்டலத்தில் விஜயமங்கலத்தின் அருகில் உள்ளதென்றும் டாக்டர் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடுகிறார். திருஞான சம்பந்தர் தம் தேவாரப் பாடலில் சிவபெருமானை அடியார்க்கு நல்லார் என்னும் பெயரால் அழைக்கின்றார். உரையாசிரியர் சிவபெருமானை இறைவன் என்றே சுட்டுவதையும் துறவறம் யோகம் ஆகிய சொற்களின் உரைகளில் சைவச் சமயக் கருத்துக்களை விரித்துரைப்பதையும், 'பிறவா யாக்கைப் பெரியோன்' என்னும் 'அடிக்கு என்றும் பிறவாத யாக்கையையுடைய இறைவன்' என்று பொருள் கூறுவதையும் கொண்டு அடியார்க்கு நல்லார் சைவ சமயத்தை சார்ந்தவர் என்று கொள்ளப்படுகிறது.

அடியார்க்கு நல்லார் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்ற கருத்தும் உண்டு. அவர் குறிப்பிடும் மூன்று அதிசயம், மூன்று ஆகமம், எண்வகை கன்மங்கள், எண் குணங்கள், பஞ்ச நமஸ்காரம் என்று சமணர்களால் வழங்கப்படும் பஞ்சமந்திரம் , பஞ்சபரமேட்டிகள் பற்றிய கருத்துகள் யாவும் சமணம் சார்ந்தவை என்பதாலும் 'ஆதியில் தோற்றத்து அறிவினை வணங்கி' என்றும், 'பெருமகன்' என்றும் அருகதேவளைச் சிறப்பித்ததாலும் தேனுண்ணலைப் பரிகசித்தமையாலும் இவர் சமண சமயத்தவர் எனக் கொள்வாரும் உண்டு.

காலம்

அடியார்க்கு நல்லார் உரையில் இளம்பூரணாரும் அரும்பதவுரையாசிரியரும் இடம்பெறுகின்றனர். இவ்விருவர்தம் காலமும் பொ.யு. 11-ம் நூற்றாண்டிற்குப் பின்பட்டது எனக் கருதப்படுகின்றது. மேலும், இவர் உரையில் கலிங்கத்துப் பரணி பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவனான குலோத்துங்கன் காலம் பொ.யு. 1070- 1120-க்கும் பிற்பட்டது என்று கொள்ள இடமுண்டு. ஆனாலும் நச்சினார்க்கினியரால் மறுக்கப்படுவனவற்றுள் சில இவருடைய கொள்கையாக இருத்தல் பற்றி, இவரது காலம் நச்சினார்க்கினியர் காலத்துக்கு முந்தியதாக இருக்கலாமென்றும் ஊகிக்கப்படுகின்றது என்று உ.வே. சாமிநாதையர் குறிப்பிடுகிறார். இவரது காலம் கி.பி 14 -ம் நூற்றாண்டு எனக் கொள்வாரும் உண்டு.

சிலப்பதிகார உரை

அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு எழுதிய உரையில் 18 காதைகளுக்கான உரை மட்டுமே கிடைக்கிறது. புகார்க் காண்டம் தொடங்கி மதுரைக் காண்டம் இறுதி வரை எழுதியதற்கான குறிப்புக் கிடைக்கின்றது . இடையிலுள்ள வழக்குரை காதை , வஞ்சினமாலையாகிய இரண்டிற்கும் நல்லார் உரை எழுதியது பற்றிய குறிப்புக் காணக் கிடைக்கவில்லை. அதற்குப் பின்னுள்ள காதைகட்கு உரை எழுத எண்ணிய செய்தி உள்ளதால் இவ்விரண்டிற்கும் உரை எழுதியிருத்தல் கூடுமென ஊகிக்கலாம் . வஞ்சிக் காண்டத்திற்கு நல்லார் உரை எழுதியதற்கான சான்றுகள் ஒன்றும் கிடைக்கவில்லை. பிற பகுதிகளில் வஞ்சிக் காண்டத்தின் வரிகளை அதிகம் மேற்கோளாக எடுத்தாளுவதைக் காணும்போது நல்லார் சிலப்பதிகாரக் காப்பியம் முழுவதற்கும் உரை எழுத எண்ணி அது ஏதோ காரணத்தாலோ மதுரைக் காண்டத் தோடு நின்றுவிட்டது என ஊகிக்க இடம் உள்ளது. வேனிற்காதை 45-71 வரிகளுக்கு உரை எழுதிய நல்லார்

இனி இவ்விழாவின் முதலும் முடிவும் கடலாட்டும் புலவியும் புறப்
பாடும் வதிச் செலவும் பொறை யுயிர்த்திருப்பும் நிறைபதிப் புகலும்
தீதுறு நாளும் ஊர்தீப் பாடும் முதனடு விறு தியாகக் கட்டுரைக்
காதையுள் விரியக் கூறுவாம் அதனுட் கண்டு கொள்க

எனக் கூறுகின்றார். இதனால் அடியார்க்கு நல்லார் கட்டுரைக் காதைக்கும் உரை எழுதியிருத்தல் கூடும் என ஊகிக்கலாம்.

நிலமும் திணையும்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைகளுக்கும் முதல், உரி, கரு என மூவகைப் பொருட்கூறுகள் அமையும். அடியார்க்கு நல்லார் தம் பதிகவுரையில் எண்வகைப் பொருளாராய்ச்சி பற்றிக் கூறும்போது அவற்றில் ஒன்றான நிலப்பாகுபாடுகளை மிகத் தெளிவாக விளக்குகின்றார். இவ் ஐவகை நிலங்களுக்கும் உரிய முதல், கரு, உரிப் பொருட்களைக் குறிப்பிட்டு அவற்றிற்குச் சிலம்பிலிருந்தே எடுத்துக் காட்டுத் தருகின்றார்.

மேற்கோள்கள்

அடியார்க்கு நல்லார் தன் உரையில் சங்க இலக்கியப் பாடல்களிலிருந்து சான்றுகள் காட்டுகின்றார். கொன்றை என்பது ஒரு பண் என்ற பிற நூலார் கருத்தை மறுத்து அது பண் அல்ல ஒரு கருவியே என நிறுவிய நல்லார் அதற்குச் சான்றாகக் கலித்தொகைப் பாடல் ஒன்றை எடுத்துக் காட்டுகின்றார். தம் உரையில் 168 இடங்களில் 250 -க்கும் மேற்பட்ட வரிகளை எடுத்துக் காட்டுகிறார். பெருங்கதை, மணிமேகலை , வளையாபதி , சூளாமணி, சீவக சிந்தாமணி ஆகிய சமண பௌத்த சமயக் காப்பியங்களிலிருந்தும் பலவரிகளை மேற்கோளாக எடுத்தாளுகின்றார். இராமாயணம் உத்தர காண்டத்திலிருந்து பாடல் எடுத்துக் காட்டப்படுகிறது . 'என் சரித்திரம்' நூலில் உ.வே. சாமிநாதையர் "சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் உரை ஒரு பெரிய சமுத்திரமாக இருந்தது இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் உள்ள பல நூல்களையும் அணி இலக்கணம் யோகம் முதலிய நூல்களையும் அவர் அங்கங்கே மேற்கோள் காட்டுகிறார். நச்சினார்க்கினியரிடம் காணப்படாத ஒரு நல்ல குணத்தை அடியார்க்கு நல்லாரிடம் கண்டேன். மேற்கோள் காட்டும் சில இடங்களில் அதை பற்றிய வரலாற்றையும் அவர் எடுத்துச் சொல்லுகிறார் சீவக சிந்தாமணி உரையிலும் பத்துப்பாட்டு உரையிலும் 'என்றார் பிறரும்' என்பதை கண்டு அந்த பிறர் யார் என்று தேடித் தேடி ஆராய்ந்து கிடைத்தவற்றை தெரிந்து கொள்வதற்காக நான் பட்ட சிரமம் இவ்வளவு என்று சொல்ல முடியாது அந்த சிரமத்தை அடியார்க்கு நல்லார் வைக்கவில்லை இந்தப் பெரிய உபகாரம் அருமையை ஆராய்ச்சி செய்வோர் நன்கு அறிவர்" என்று குறிப்பிடுகிறார்.

சமயம் தத்துவம்

அடியார்க்கு நல்லார் எல்லாச் சமயங்களையும் நன்குணர்ந்து போற்றியமை அவரது உரைகளில் புலப்படுகிறது. சைவ, சமணக் கொள்கைகள் இவரது உரையில் காணப்படுகின்றன. 'வேட்டுவ வரி' உரை அவரது கொற்றவை வழிபாட்டைப்பற்றிய அறிவை விளக்குகிறது. ஆய்ச்சியர் குரவையுரையில் திருமால் வழிபாட்டை உணர்ந்து எழுதுகிறார். நாடுகாண் காதையில் அருகனுக்குச் சாரணர் கூறும் பல்வகைப் பெயர்கட்கு நல்லார் கூறும் விளக்கம் அருக சமயத்தில் அவருக்கிருந்த ஈடுபாட்டைப் புலப்படுத்தும். அவரது சமயக் காழ்ப்பின்மை நோக்கத்தக்கது.

இசை, நடனம், கூத்து

கூத்திலக்கணத்தைப் பற்றிய மிக விரிந்த செய்திகளைத் தருகின்றார் நல்லார். அறுவகை நிலை, ஐவகைப்பாதம், அங்கங்கிரியை பதினாறு, வருத்தனை நான்கு, நிருத்தக் கை முப்பது, விலக்குறுப்பு பதினான்கு, கூத்திற்குரிய உரு, ஆடல் வகை, பாணி, தாக்கு முதலான அவிதயம் செய்யும் முறை, அரங்கில் புகுந்து கூத்து நிகழ்த்தும் முறை, ஆடலரங்கம், தலைக்கோல் பற்றிய செய்திகள் ஆகியன இங்கு குறிப்பிடத்தக்கன. இவற்றுள், விலக்குறுப்புக்களில் ஒன்பான் சுவை பற்றிய நல்லாரின் விளக்க மேற்கோள், 84-வகை அவிநயம் பற்றிய காட்டுக்கள், அவிநயம் செய்யுங்கால் இணையா வினைக்கை-98, இணைக்கை 18-பற்றிய விளக்க மேற்கோள் பாடல்கள் ஆகியன குறிப்பிடத்தக்கன.

இசையின் பிறப்பிடம், ஆதியிசை, பல்வேறு பண்கள், அவவை பிறக்கும் முறை பற்றிப் பேசிய நல்லார் இசைப்பாடல்கள் பற்றியும் குறிப்பிடுகின்றார். கூத்துத்தமிழ் பற்றிப் பேசுங்கால் இசை பற்றிய பல செய்திகளை எடுத்துக் காட்டுகிறார். அடியார்க்கு நல்லாரின் இசை அறிவு குறிப்பிடத்தக்கது. மறைந்து போன யாழையும், சில இசைக்கருவிகளையும் குறிப்பிடுகிறார்.[2] அடியார்க்குநல்லார் சிலம்பின் இசை நுணுக்கங்களை ஆராய்ந்து அறிவதற்கு பஞ்சமரபு நூல் துணை செய்தது. அரங்கேற்று காதை உரையிலும், ஆய்ச்சியர் குரவை உரையிலும் பல பஞ்சமரபு பாக்களை மேற்கோள் காட்டியுள்ளார். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதியில் இசை, கூத்து பற்றி உரை எழுத உதவிய நூல்கள் எவை எவை என்பதை அவரது உரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை ஐந்து. அவை இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம், மதிவாணனார் நாடகத் தமிழ்நூல் என்பன. அடியார்க்கு நல்லார் தம் உரையில் குறிப்பிடும் நூல்கள்: பஞ்சபாரதீயம், செயிற்றியம், இசைத்தமிழ் – பதினாறு படலம், அகத்தியம், பரதம், குணநூல், சயந்தம், முறுவல், கூத்தநூல், அணியியல். நல்லார் தம் உரையில் இயற்றமிழுக்குத் தொல்காப்பியத்தையும், நாடகத்தமிழுக்கு அறிவனார் செய்த பஞ்சமரபு முதலான நூல்களையும் மூலநூற்களாகக் கொள்வது போன்று இசைத்தமிழுக்குச் சிகண்டியார் செய்த இசைநுணுக்கத்தையும், யாமளேந்திரர் செய்த இந்திரகாளியத்தையும் மூலமாகக் கொள்கிறார்.

ஐந்து நிலங்களுக்குரிய இசைக்கருவிகளாக ஆய்ச்சியர் குரவையிலும் (முல்லையாழ்), நடுகற்காதை,குன்றக்குரவையிலும் (குறிஞ்சியாழ்), வேனிற்காதையிலும் (மருதயாழ்),கானல்வரியிலும்(நெய்தலுக்குரிய விளரி,செவ்வழி) புறஞ்சேரியிறுத்த காதையிலும் (பாலையாழ்) விளக்கியுள்ளார். சிலப்பதிகாரத்தில் பல இசையிலக்கணச்செய்திகள் கொட்டிக்கிடப்பது போலவே அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரத்திற்கு இயற்றிய பதிகவுரை தமிழின் மிகப்பெரும் இசை வரலாற்றை உறுதிப்படுத்துகின்றது.

பெரும்பண்களுக்குரிய ஏறுநிரல், இறங்குநிரல் நரம்புகளைக் (சுரங்களைக்) கண்டுபிடிக்கும் முறைகளைச் சுட்டிக் காட்டுகின்றார். மேலும் முல்லையாழ் என்பது செம்பாலை என்றும் குறித்துக் காட்டுகின்றார். செம்பாலையின் ஏழு நரம்புகளின் பெயர்களையும் ஆய்ச்சியா் குரலையுள் பல்வேறுவகைச் சான்றுகளோடு தொல்காப்பியத்தின் 48 இசைக்குறிப்புக்கள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். அடியார்க்கு நல்லார் தந்துள்ள மிக அரிய குறிப்புக்கள் மூலமாகத் தொல்காப்பிய இசைத்துறைச் சொற்களைப் பற்றி மேலும் விளக்கங்கள் கிடைக்கின்றன. இவற்றால் தொல்காப்பியர் காலத்தின் நானிலப் பண்களுள் முதன்மையாய் நிற்கும் முல்லையாழுக்குரிய இராகம் இன்றைய ஹரிகாம்போதி என்று மிகத்திட்டமாக அறியலாம்.

சிறப்புகள்

அடியார்க்கு நல்லார் உரைக்குப் பல சிறப்புகள் உண்டு. அவற்றுள் முக்கியமானவை

  • சிலம்பு எனும் காப்பியத்தின் கட்டுக்கோப்பை நன்கறிந்து அதற்கேற்றாற் போல உரை கூறுதல்
  • சிலப்பதிகாரத்தை ‘இயலிசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள்’ என்று சுட்டி வகைப்படுத்தியமை (சிலப்பதிகாரத்தில் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்க் கூறுகளும் இருப்பதாலும், பொருள் (கதைப் பொருள்) தொடர்ந்து அமைந்திருப்பதாலும், சிலப்பதிகாரம் ' இயல் இசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள்' என்று அடியார்க்கு நல்லாரால் வகைப்படுத்தப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது.)
  • பாத்திரப் படைப்பு முறைகளை நன்கறிந்து அதனை விளக்குதல்
  • இசைத்தமிழையும் பல பண்கள், பண்டைத் தமிழின் இசைக்கூறுகள் பற்றிய விரிவான செய்திகளை அளித்தது
  • நல்லாரின் சங்க இலக்கியப் புலமை சொல்லாராய்ச்சி , பொருளாராய்ச்சி செய்வதற்கும் , பிறநூலார் கருத்துக்களை மறுத்து எழுதுவதற்கும் உரிய ஆற்றலையும் துணிவையும் அளித்தது.

அரங்கேற்று காதைக்கு அவரது உரை கிடைத்திராவிட்டால் இசைத்தமிழ், நாடகத்தமிழ் பற்றி அறிந்திருக்க முடிந்திருக்காது. அடியார்க்கு நல்லார் சிறந்த திறனாய்வாளர்க்குரிய பல பண்புகளைப் பெற்றவர். திறனாய்வுக்குரிய எடுபொருள் அல்லது தளம் பற்றிய கூர்த்த அறிவும், அதற்கு உரிய, அதனோடு சார்ந்த பல கருத்துகளையும், துறைகளையும் நன்கு கைவரப்பெற்று உரியவாறு பயன்படுத்துதலும், இலக்கிய நயம்/உத்திகள் முதலியவற்றைப் புலப்படுத்துதலும், இவருடைய உரைகளில் காணத்தக்கன. பிற உரையாசிரியருக்கு. இல்லாத ஒரு தனிச்சிறப்பாக அவரது இசை நாடகப் புலமை அமைந்தது. அதோடு தாம் மேற்கோளாக எடுத்தாளும் நூற்பெயரையும் பாடல் எண்ணையும் பெரும்பாலும் குறிப்பிட்டுக் காட்டுவது நல்லாரின் தனித் தன்மை. இலக்கணப் புலமை, இலக்கியப் பயிற்சி, நிகண்டாராய்ச்சி, கலைஞானம் மிக்க நல்லார் கனாநூல் புலமையும், வானநூல் வன்மையும், உளநூல் அறிவும் மிக்கவர் என்பது அவர்தம் உரைமூலம் தெரிய வருகின்றது.

"அடியார்க்கு நல்லார், ஆய்ச்சியர் குரவையுள் செம்பாலையை விளக்கியதுபோல, வேறு எவரும் ஒரு பண்ணைத் தமிழ் இலக்கியப் பரப்பில் விளக்கவில்லை" என்று ச.வே. சுப்ரமணியன் குறிப்பிடுகிறார்.

பதிகவுரையின் நடை

ஆயிர நரம்பிற் ருதியா மாகும் ஏனை யுறுப்பு மொப்பன கொளலே
பத்தர தளவுங் கோட்டின தளவும் ஒத்த வென்ப
விருமூன் றிரட்டி வணர்சா ணொழித்தென வைத்தனர் புலவர்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. குருவை உணர்ந்த இளங்கோவடிகள் உட்கொண்டு சொன்ன
    தருவை நிகரும் சிலப்பதிகாரத் தனித்தமிழுக்
    கருமை உரை செய் அடியார்க்கு நல்லார் அவதரித்து
    அருமைப் பொழி நிரம்பைப் பதியும் கொங்கு மண்டலமே.95

  2. அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் சில மறைந்து போன இசைக்கருவிகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Nov-2022, 07:57:09 IST