under review

அரும்பத உரையாசிரியர்

From Tamil Wiki

அரும்பத உரையாசிரியர் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர். அவரது உரையைப் பெரிதும் பின்பற்றியே பின்வந்த அடியார்க்கு நல்லார் உரை எழுதப்பட்டது. இவரது உரையின் முடிபும் பொருளும் கொண்டுதான் அடியார்க்கு நல்லாரின் உரை இல்லாத பகுதிகளுக்குப் பொருள் கொள்ள முடிந்தது. தமிழிசை மற்றும் பண்கள் பற்றிய பழமையான குறிப்புகளும் இவ்வுரையில் காணப்படுகின்றன.

வாழ்க்கைக் குறிப்பு

அரும்பத உரையாசிரியரின் இயற்பெயர் தெரியவரவில்லை. இவரது உரையில் அரும் பதங்கள் பலவற்றுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பதன் காரணமாக இவரது பெயர் 'அரும்பத உரையாசிரியர்' என வழங்கப்பட்டு வருகிறது.

பெயர்க்காரணம்

செய்யுளில் காணப்படும் அரிய சொற்களுக்கு மட்டும் விளக்கம் தரும் உரை ‘அரும்பதவுரை’ எனப்படும். இந்த வகையில் மிகப் பழைய அரும்பதவுரை சிலப்பதிகாரத்துக்கு எழுதப்பட்டுள்ள உரையே. எனவே 'அரும்பதவுரை' இந்தச் சிலப்பதிகார அரும்பதவுரையைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாக மாறிவிட்டது. அடியார்க்கு நல்லார்க்கும் அரும்பதவுரையாசிரியரின் பெயர், வரலாறு தெரியவில்லை என்பதால், அவரது காலப் பழமை நன்கு விளங்கும்.

சிலப்பதிகாரத்திற்கு எழுதப்பட்ட பழமையான உரைகள் மூன்று. அவற்றுள் 12-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அடியார்க்கு நல்லார் உரையில் அரும்பத உரை பல இடங்களில் மேற்கோள் காட்டப்படுகிறது. அரும்பதவுரையில் அதற்கும் முந்தைய உரை மேற்கோள் காட்டப்படுகிறது.

காலம்

கரும்பும் இளநீரும் கட்டிக் கனியும்
விரும்பும் விநாயகனை வேண்டி-அரும்விழ்தார்ச்
சேரமான் செய்த சிலப்பதிகா ரக்கதையைச்
சாரமாய் நாவே தரி

என்ற வெண்பா அரும்பத உரையின் தொடக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் விநாயகர் வழிபாடு தோன்றிது ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலாகும். பொ.யு. 642-ல் சிறுத்தொண்டர் மேலைச்சாளுக்கியரைவென்று அவர்களின் தலைநகரான வாதாபியிலிருந்து விநாயகரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தார். இதன் பின்னரே விநாயகர் வணக்கம் தமிழகத்தில் பரவியது. விநாயக வணக்கம் நூலின் தொடக்கத்தில் கூறும் வழக்கம் பொ.யு. எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னரே ஏற்பட்டது. எனவே, அரும்பதவுரையாசிரியரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டிற்குப்பின் என்று கருதப்படுகிறது. இவர் சைவர் என்றும் புலனாகிறது.

உரையின் இயல்பு

அரும்பத உரையாசிரியரின் உரை, சிலப்பதிகாரம் முழுமைக்கும் உள்ளது. எல்லா இடங்களிலும் அருஞ்சொற்பொருள் கூறுகின்றார். தேவையான இடங்களில் இலக்கணம் காட்டுகின்றார். மிகச் சில இடங்களில் வினைமுடிபு காட்டுகின்றார். தொடர்களுக்குப் பொழிப்புரை கூறுகின்றார். “அடியார்க்கு நல்லார் உரையில் காணப்படாத பல அரிய கருத்துகள் இவ்வுரையால் விளங்குகின்றன. இவ்வுரையில் உள்ள முடிபுகளும் பொருளும் இல்லையாயின், அடியார்க்கு நல்லாருடைய உரை இல்லாத பாகங்களுக்குப் பொருள் காண்பது அரிது” என்பார் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்.

அரும்பதவுரையாசிரியர் மங்கல வாழ்த்துப் பாடலில் (28.9) கண்ணகியை முதலில் அறிமுகப்படுத்துவதற்குக் காரணம் கூறுகின்றார். “இவளை (கண்ணகியை) முன்கூறியது கதைக்கு நாயகியாதலின்” என்று உரைக்கின்றார்.

அரங்கேற்று காதை உரை மிக விரினாகவும், அரிய விளக்கங்கள் பல கொண்டதாகவும் உள்ளது. வழக்குரை காதையில் (80) ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்ற அடிக்கு விளக்கம் எழுதும் போது ‘தந்தை தாய் முதலாயினோரை இழந்தார்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டலாம். இஃது அவ்வாறு வாக்கானும் சொல்லல் ஆகாமையின், காட்டுவதுஇல் என்றாள்” என்று உரைக்கிறார்.

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார் நாடகம் பற்றிய ஒவ்வொரு தொடருக்கும் அரும்பதவுரையை மேற்கோள் காட்டியே உரை எழுதுகிறார். இதனால் தமிழிசை பற்றிய பழமையான சான்றுகள் அரும்பதவுரையில் உள்ளன எனத் தெரிகிறது.

அரும்பத உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும்

அடியார்க்கு நல்லார் அரும்பதவுரையாசிரியர் அமைத்துத் தந்த பாதையில் அவரது உரையை அடியொற்றியே உரையெழுதியுள்ளார். சில இடங்களில் அரும்பதவுரையாசிரியர் கூறும் விளக்கங்களை அடியார்க்குநல்லார் விளக்காமல் விட்டுச் செல்லுதலும் உண்டு. அரும்பதவுரையாசிரியரிடமிருந்து அடியார்க்கு நல்லார் சில இடங்களில் வேறுபடுகின்றார்; வேறு பாடம் கொள்ளுகின்றார்: மிகச் சில இடங்களில் அரும்பதவுரையாசிரியரை மறுக்கின்றார். ஆனால், “இருவரும் மாறுபட எழுதியிருக்கும் உரைகளை ஆராய்வுழிச் சில இடங்களில் அரும்பதவுரையே பொருத்தமுடையதாகக் காணப்படுகின்றது” என்று ந.மு. வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடுகிறார். சில இடங்களில் அடியார்க்கு நல்லார் மாறுபட்ட போதிலும் இசை நாடகப் பகுதிகளில் அரும்பதவுரையையே ஆதாரமாகக் கொண்டு விளக்குகின்றார். அரும்பதவுரை விளக்காத கலைப்பகுதியை அடியார்க்குநல்லார் விளக்காமல் விட்டுவிடுகின்றார்.

“அரங்கேற்று காதையில் குழலாசிரியர் அமைதியும் யாழாசிரியன் அமைதியும் கூறுவதற்கு எழுந்த இன்றியமையாத இசையிலக்கணப் பகுதிகளில் அரும்பதவுரையில் உள்ளவற்றினும் வேறாக ஒரு சொல்தானும் எழுதப்படாமை அறியற்பாலது. அடியார்க்கு நல்லார் இவ்விடங்களில் அரும்பதவுரையைப் பட்டாங்கு பெயர்த்தெழுதி, சொல் முடிபு தானும் காட்டாது விட்டிருப்பது வியப்பிற்குரியதே. இவ்வாற்றால் அரும்பதவுரையாசிரியர் விரியாதுவிடுத்த விலக்குறுப்பு முதலியவற்றை அடியார்க்கு நல்லார் பிறநூல் மேற்கோள் கொண்டு விரித்துக்காட்டி இருப்பினும். நுட்பமாகிய இசைநாடகப் பகுதிகளை விளக்குதற்கு முயன்ற வகையால் அரும்பத வுரையாசிரியருக்கே அனைவரும் கடமைப்பாடு உடையவர் ஆவர்” என்று கூறுகின்றார் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

உரை நடை (உரையிலிருந்து சான்று)

  “வஞ்சி மூதூர் மணி மண்டபத்திடைத் தந்தையோடு இருந்துழி, அரசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டென்று ஒரு நிமித்திகன் சொல்ல, முன்னோனாகிய செங்குட்டுவன் இருப்ப இவ்வாறு முறை பிறழக் கூறியது பொறாது குணவாயிற்கோட்டத்துக் கடவுளர் முன்னர்த் துறந்திருந்த இளங்கோவடிகளுக்கு, கண்ணகி வானவர் போற்றத் தன் கணவனோடு கூடியது கண்டு செங்குட்டுவனுக்கு உரைத்த குறவர் வந்து, ‘எல்லாம் அறிந்தோய்! இதனை அறிந்தருள்’ எனக்கூறிப் போக, பின்பு செங்குட்டுவனைக் கண்டு அடிகளுழை வந்த சாத்தன், அது பட்டவாறு எல்லாம் கூற, அது கேட்டு, ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று என்பதூஉம், பத்தினி மகளிர் பெய்யெனப் பெய்யும் மழை என்பதூஉம், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் இக் கதையகத்து உண்மையின், அதனை யாம் ஒரு செய்யுளாகச் செய்வோம்’ என்று சாத்தன் சொல்ல, இம் முப்பது வகைத்தாகிய செய்யுளை இளங்ககோவடிகள் அருள, கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் என்க.”

இப்பகுதி, ஒரே வாக்கியமாய் அமைந்து, பொருள் தெளிவுடன் விளங்குவதைக் காணலாம்.

சிறப்புகள்

"இவ்வுரை அரும்பதவுரை மட்டுமன்று. வினைமுடிபு காட்டுதல், பொருள் தொடர்பு காட்டுதல், அரங்கேற்றுக் காதையிலும் கானல் வரியிலும் இன்று அடியார்க்கு நல்லார் உரை இல்லாத பிற பகுதிகளிலும் பேருரையும் பெருவிளக்கமும் கூறுதல், மேற்கோள் தருதல் முதலிய பகுதிகளைப் பார்க்கும்போது, இவ்வுரை அரும்பதவுரை அன்று, அரிய உரை என்றே கருதத் தோன்றும். சில இடங்களில் விரிவான பொழிப்புரையே கூறியிருக்கிறார். (தமிழ் இலக்கிய வரலாறு 3:26: 36 பார்க்க); இதைத் தொடர்ந்து அரும்பதவுரை மட்டுமல்லாமல் விளக்கவுரையே கூறிவருகிறார். இவற்றால் இவர் மிக்க விரிவு பெற்ற உரை எழுதவல்ல முத்தமிழாசிரியர் என்பது நன்கு விளங்கும். எங்ஙனம் இளங்கோவடிகள் முத்தமிழ்ப் புலமை வாய்ந்த பேராசிரியரும் பெரும்புலவருமாவாரோ, அப்படியே இவ்வரும்பதவுரை எழுதிய உரைகாரரும் முத்தமிழ்ப் புலமை பெற்றிருந்தமை இளங்கோவடிகள் நூல்செய்த பாக்கியம்" என்று மு.அருணாசலம் குறிப்பிடுகிறார்.

"இதனை எழுதிய ஆசிரியர், அருஞ்சொற்களுக்குப் பொருள் உரைக்கும் நிலையிற் பதவுரையாகவும், இலக்கணக் குறிப்பும் மேற்கோளும் தந்து நூலின் பொருளை விரித்துரைக்கும் நிலையில் அகல வுரையாகவும், காப்பியத்தின் சொற்பொருள் நயங்களைச் சுருங்கச் சொல்லி விளக்குந் திறத்தில் நுட்பவுரையாகவும் நூலாசிரியரது உளக்கருத்தினை உய்த்துணர்ந்து நூலகத்து எஞ்சியுள்ள சொல்லையும் குறிப்பையும் வருவித்து உரைக்கும் திறத்தில் எச்ச வுரையாகவும் உள்ளது.” என வெள்ளைவாரணனார் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

காப்பிய உரையாசிரியர்கள்-தமிழ் இணைய கல்விக்கழகம்


✅Finalised Page