under review

சூளாமணி

From Tamil Wiki

ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்று சூளாமணி. இது சமண சமயம் சார்ந்த காப்பியம். வடமொழி மகாபுராணத்தில் உள்ள 'சிரேயாம்ச சுவாமி சரிதத்தின்’ ஒரு பகுதியே இது. இதனை இயற்றியவர், தோலாமொழித் தேவர்.

பெயர்க்காரணம்

இந்தக் காப்பியத்தில் நான்கு இடங்களில் 'சூளாமணி' என்ற சொல் இடம் பெறுவதால், இதற்குச் 'சூளாமணி’ என்ற பெயர் வந்தது என்றும், இந்நூலாசிரியர் 'அவனி சூளாமணி’ என்ற பாண்டிய மன்னன் காலத்தில் வாழ்ந்தவர் என்பதால் அவன் நினைவாக இப்பெயரிடப்பட்டது என்றும் கூறப்படுகிறது. சூளாமணி என்பதற்கு நச்சினார்க்கினியர் முடியின் மணி என்றும், நாயக மணி என்றும் பொருள் கூறுகிறார். சூடாமணி என்றும் இக்காவியம் அழைக்கப்படுகிறது. சூடாமணி என்பது மகுடத்தில் உள்ள முடிமணியாகும்.

நூலாசிரியர் வரலாறு

நூலாசிரியர் தோலாமொழித் தேவர். இவரது இயற்பெயர் ஸ்ரீவர்த்த தேவர் என்று கூறப்படுகிறது. சிரவண பெல்கொளாவில் உள்ள வடமொழிக் கல்வெட்டில், "சூடாமணி என்பது காவியங்களுக்கெல்லாம் சூடாமணி போன்றது; இதைக் கீர்த்திபெறத் தக்க புண்ணியம் செய்த ஸ்ரீவர்த்த தேவர் இயற்றினார்" என்ற குறிப்பு காணப்படுகிறது. வர்த்தமான தேவரே, 'வர்த்த தேவர்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறர் என்ற கருத்தும் உள்ளது.

நூல் அமைப்பு

சூளாமணிக் காப்பியம் பாயிரமும், 12 சருக்கங்களும், 2131 விருத்தப் பாக்களும் கொண்டதாக அமைந்துள்ளது.

சருக்கங்கள்

 1. நாட்டுச் சருக்கம்
 2. நகரச் சருக்கம்
 3. குமார காலச் சருக்கம்
 4. இரத நூபுரச் சருக்கம்
 5. மந்திர சாலைச் சருக்கம்
 6. தூதுவிடு சருக்கம்
 7. சீயவதைச் சருக்கம்
 8. கல்யாணச் சருக்கம்
 9. அரசியற் சருக்கம்
 10. சுயம்வரச் சருக்கம்
 11. துறவுச் சருக்கம்
 12. முத்திச் சருக்கம்

முதல் பாடல் அருகன் துதியாகவும் அடுத்த பாடல், காப்பியம் யாரைப் பற்றியது என்ற குறிப்பாகவும் அமைந்துள்ளது.

காப்பியத்தின் கதை

சுரமை நாட்டு மன்னன் பயாபதிக்கு மிகாபதி, சசி என இரண்டு மனைவிகள். அவர்கள் மூலம் விஜயன், திவிட்டன் என இருவர் பிறந்தனர். இவர்கள் பலராமன் மற்றும் கண்ணனின் அவதாரமாகக் கருதப்படுகின்றனர். இளவரசனான திவிட்டன், வித்தியாதர நாட்டு இளவரசியை மணந்து கொள்கிறான். அதனால் அவன் பல்வேறு சிக்கல்களை பகை மன்னனான அச்சுவ கண்டன் மூலம் எதிர்கொள்கிறான்.

அச்சுவ கண்டன், தன் பெரும்படையுடன் வந்து திவிட்டனின் நாட்டைத் தாக்குகிறான். கண்ணனின் அவதாரமாகக் கருதப்படும் திவிட்டன் சங்கு, சக்கரம், கருடன் இவற்றின் துணை கொண்டு அச்சுவ கண்டனை வெற்றிகொள்கிறான். கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கியது போலத் திவிட்டனும் ’கோடிமாசிலை’ என்ற மலையைத் தூக்கித் தன் ஆற்றலை உலகிற்கு நிரூபிக்கிறான். பின் திவிட்டனும் விஜயனும் இணைந்து சிறப்பாக ஆட்சி நடத்துகின்றனர். பயாபதி துறவு பூணுகிறான். - இதுவே சூளாமணியின் கதை.

பாடல்கள் சிறப்பு

இலக்கிய நயங் கொண்ட பாடல்களைக் கொண்டுள்ளது சூளாமணி.

ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை
சோதியஞ் செல்வநின் திருவடி வணங்கினம்
காமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
தேமலர் மாரியை திருமறு மார்பனை
மாமலர் வணங்கிநின் மலரடி வணங்கினம்
ஆரருள் பயந்தனை ஆழ்துயர் அவித்தனை
ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை
ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை
சீரருள் மொழியைநின் திருவடி தொழுதனம்

- இப்பாடல்களில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் அருக தேவனாகவே கருதி வழிபடுகிறார், ஆசிரியர், தோலாமொழித் தேவர். மனித வாழ்க்கையின் நிலையாமையைக் கூறும் பாடல் கீழ்காணுவது.

யானை துரப்ப அரவுஉறை ஆழ்குழி
நால்நவிர் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மானுடர் இன்பம் மதித்தனை கொள்நீ

பாடல் பொருள்: மதயானை ஒருவனை விரட்ட, அதிலிருந்து தப்பிக்க ஓடும் அவன் பாம்புகள் இருக்கும் ஆழமான பள்ளத்தில் விழுகிறான். உள்ளே விழுந்துவிடாமல் இருக்க, அங்குத் தொங்கும் கொடியைப் பற்றிக் கொள்கிறான்; கீழே இருக்கும் பாம்பு படமெடுத்து நிற்கிறது; கொடியைக் கைவிட்டுக் கீழே விழுந்தால், பாம்பு கடித்து அவன் இறந்துவிடுவான்; மேலே சென்றால் யானை மிதித்துக் கொன்றுவிடும்; இவ்வாறு அவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தேன் கூட்டிலிருந்து தேன் சொட்டுகிறது. அதனை நக்கிச் சுவைக்கிறான் அவன். மனிதர்கள் துய்க்கும் இன்பமும் இத்தகையதே என்பதை நீ அறிவாயாக!

துன்பங்கள் நிறைந்தது வாழ்க்கை. இதில் இடையிடையே கிடைக்கும் இன்பமும் சிறிய அளவுடையதுதான். ஆயினும் அதனைத் துய்க்க விரும்புவதே மனித இயற்கை. இந்த அரிய உண்மை இப்பாடலில் காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய பாடல்களோடு, "தானம், தவம், சீலம், ஒழுக்கம் ஆகிய நற்குணங்களே முக்திக்கு வழிவகுக்கும்; நல்ல நீதி நூல்களைக் கல்லாதவனிடத்துத் திருமகள் வந்து தங்க மாட்டாள்; இரக்கச் சிந்தனை இல்லாதவன் வீடுபேறு அடைய முடியாது." என்பது போன்ற சமணம் சார்ந்த பல்வேறு அறக்கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page