under review

திருப்பள்ளியெழுச்சி (மாணிக்கவாசகர்)

From Tamil Wiki
திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில்

திருப்பள்ளியெழுச்சி மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) கோவில் கொண்ட ஆவுடையாரைத் துயில் எழுப்புவதாகப் பாடிய பத்து பாசுரங்களைக் கொண்ட பதிகம். சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் இடம்பெறுகிறது. அதிகாலைப் பொழுதில் இருள் நீங்கி ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய இருள் நீங்குதலும், நம்முள் மறைந்து உறங்கும் இறைவனை எழுப்புதலும் (திரோதான சுத்தி) திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களின் நோக்கம். மார்கழி மாதத்தின் அதிகாலையில் சைவ ஆலயங்களிலும் இல்லங்களிலும் திருப்பள்ளியெழுச்சியுடன் மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல்களையும் பாடுவது சைவர்களின் மரபு.

ஆசிரியர்

திருப்பள்ளியெழுச்சியை இயற்றியவர் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர். வாதவூரார் என்றும் அழைக்கப்பட்டார். 9 -ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியனின் காலத்தைச் சேர்ந்தவர். அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார். மாணிக்கவாசகர் இயற்றியவை திருவாசகமும், திருக்கோவையாரும்.

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் இருந்த காலத்தில் அங்கு கோவில் கொண்ட ஆத்மநாதர் எனப்படும் ஆவுடையாரான சிவனைத் துயிலெழுப்புவதற்காகப் பாடப்பட்டது திருப்பள்ளியெழுச்சி.

பெயர்க்காரணம்

'திரு' - சிறப்பையும், பள்ளி -படுக்கையையும், எழுச்சி- எழுதலையும் குறிக்கும்.

சங்க காலங்களில் மன்னர்களை அதிகாலையில் துயிலெழுப்பப் பாடும் பாடல் வகை துயிலெடை நிலை எனப்பட்டது. (தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்-தொல்காப்பியம் 1037). பன்னிரு பாட்டியலும் துயிலெடை நிலைக்கு இலக்கணம் கூறியுள்ளது. பிற்காலங்களில் அது 'பள்ளியெழுச்சி' எனப் பெயர் மாற்றம் பெற்றது. மன்னர்களைப் பாடும் இலக்கிய வகைமை இறைவனைப் போற்றித் துயிலெழுப்பும் போது' திருப்பள்ளியெழுச்சி' எனப் பெயர் பெற்றது. சமஸ்கிருதத்தில் இது 'சுப்ரபாதம்' என அழைக்கப்படுகிறது.

பாடல் அமைப்பு

மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி எட்டாம் திருமறையின் இருபதாம் பதிகமாக இடம்பெறுகிறது. பத்து எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்களைக் கொண்டது. 'திருப்பெருந் துறை உறை சிவபெருமானே' என்பது ஒவ்வொரு பாடலிலும் ஆறாவது வரியாக அமைகிறது. ஈற்றடி 'பள்ளி எழுந்தருளாயே' என நிறைவு பெறுகிறது. இப்பாடல்களில் புலரியில் இயற்கையின் அழகு, இறைவனின் இயல்பு, திரோதான சக்தியின் இயல்பு, அன்னையின் அருள், அடியாரின் சிறப்பு, திருப்பெருந்துறையின் பெருமை, அடியார்களை ஆற்றுப்படுத்தல், மெய்யியல், யோகத் தத்துவம், சைவ சித்தாந்தம் ஆகிய கருத்துகள் விரவி வருகின்றன.

திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் கதிரவன் எழுவதும், பறவைகள் பாடுவதும், ஆலயங்களில் அடியவர் வாத்தியங்களை இசைக்கும் ஒலியும், அடியவர் வந்து அடையும் ஒலியும், காட்சிகளும் எனப் புலர்காலைக்குரிய நிகழ்வுகளைக்கூறி, பொழுது புலர்ந்தது, பள்ளி எழுந்தருளாய் என சிவபெருமானை வேண்டுபவை. இறுதிப் பாடல் இனிப் பிறவாமையையும், இப்பிறவியில் சிவத்தொண்டையும் வரமாக வேண்டுகிறது.

தத்துவப் பொருள்

திரோதானம் என்பது இறைவனின் ஐந்து தொழில்களில்(பஞ்ச க்ருத்யம்) ஒன்றான மறைதல். இது சைவ சித்தாந்தத்தில் மறைப்பாற்றல் எனப்படுகிறது. திருப்பள்ளியெழுச்சி திரோதான சுத்தி (மறைப்பாற்றல் மங்கி இறைவன் வெளித் தெரிதல்) எனப் பொருள்படும். தமோ குணத்தின் இருளில் அமிழ்ந்திருக்கும் மனிதனை உறக்கத்திலிருந்து எழுப்பும் செயல் திரோதான சுத்தி அல்லது திருப்பள்ளியெழுச்சி. தன்னுள் மறைந்துகிடக்கும் இறையை, ஆன்மிக உணர்வை எழுப்பும் அக விழிப்பாகவும் கருதப்படுகிறது.

"மாயையின் அறியாமையின் ஒரு கூறாகிய மறைப்பு சக்தியே திரோதான சக்தி. அறியாமையும் மறைப்பு சக்தியும் ஒருவரிடம் பக்குவம் அடையாத நிலையில் இருப்பவை. அவர் பக்குவம் பெற்றபோது அவர் உள்ளே அருள் ஒளி உதயமாகும். அக விளக்கம் ஏற்படும். அப்போது அவரிடம் இருந்த அறியாமையின் ஒரு கூறாகிய மறைப்பு சக்தியும் விலகி விடும். அருட் ஜோதி தோன்றும். இதைத்தான் திருப்பள்ளி எழுச்சி சொல்கிறது." என்று சுவாமி சரவணானந்தா குறிப்பிடுகிறார்[1].

இலக்கிய/பண்பாட்டு இடம்

தமிழில் உள்ள திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களில் மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சியும், தொண்டரடிப்பொடியாழ்வாரின் வைணவத் திருப்பள்ளியெழுச்சியும் புகழ்பெற்றவை.

அதிகாலையில், குறிப்பாக மார்கழி மாதத்தில் இறைவனைத் துயிலெழுப்பும் முகமாகவும், அக விழிப்புக்காகவும் சைவ ஆலயங்களிலும் இல்லங்களிலும் மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகிறது. சிந்தைக்கும் அறியான் என்றும் அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் என்றும் முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் எனவும் சிவனின் காலாதீதத் தன்மை சுட்டப்படுகிறது. மார்கழி அதிகாலையில் சிவனைத் தரிசிக்க ஆலயங்களில் மக்கள் கூடிய செய்தியும் அறிய வருகிறது.

திருப்பள்ளியெழுச்சி-பாடல்களும் எளிய பொருளும்

போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறை உறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.1

சேற்றில் செந்தாமரை பூத்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது. உனது பூப்போன்ற திருவடிகளில் மலர் தூவி வழிபட வந்துள்ளேன். எம்பெருமானே! உன் அழகிய முகத்தில் எமக்கு அருள் செய்யும் புன்னகை மல்ர்வதற்காகக் காத்திருக்கிறோம். பள்ளி எழுந்தருள்வாய்!

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே.2

திருப்பெருந்துறை சிவபெருமானே! அருணன் கிழக்கே வந்து விட்டான். உனது முகத்தில் காணும் கருணை ஒளியைப் போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து இருளை நீக்கி விட்டான். அண்ணலே! உனது கண்களைப் போன்ற தாமரைகள் தடாகங்களில் மலர்ந்து விட்டன. வண்டினங்கள் அவற்றில் தேன்குடிக்க திரளாக வந்து கொண்டிருக்கின்றன. அருட்செல்வத்தை வாரி வழங்கும் ஐயனே! மலை போல் இன்பம் தருபவனே! அருட்கடலே! நீ கண் விழிப்பாயாக.

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 3

தேவனே! திருப்பெருந்துறை உறை சிவபெரு மானே! யாவரும் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு எளியவனே! எம் தலைவனே! அழகிய குயில்கள் கூவின; கோழிகள் கூவின; பறவைகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; நட்சத்திரங்களின் ஒளி மங்கியது. உதய காலத்து வெளிச்சம் தோன்றுகிறது. எமக்கு அன்புடன் சிறந்த நெருங்கிய வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டுவாயாக! பள்ளி எழுந்தருள்வாயாக.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
  இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
  தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
  திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்
  எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! அடியேனையும் அடிமை கொண்டு, இனிய அருளைச் சுரக்கும் தலைவனே! இனிய ஓசையையுடைய வீணையை யுடையவரும் யாழினையுடையவரும் கீதம் இசைக்க, ஒரு பக்கத்தில், வேதங்களோடு தோத்திரம் இயம்ப, ஒருபக்கத்தில்; மலர்களாகிய மாலைகளை ஏந்திய கையோடும், வணங்கிக்கொண்டும், அழுதுகொண்டும், கைகளைக் குவித்துக் வணங்கிக்கொண்டும் உள்ளனர்.என்னையும் ஆட்கொண்டு அவர்களுக்கும் அருள் புரிய எழுந்தருள்வாய்!

பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்
  போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
  கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
  சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
  எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

குளிர்ச்சியைக் கொண்ட, வயல் சூழ்ந்த திருப் பெருந்துறைக்கு அரசனே! நினைத்தற்கும் அருமையானவனே! எங்கள் எதிரில் எழுந்தருளி வந்து, குற்றங்களைப் போக்கி எங்களை ஆட்கொண்டருளும் எம் பெருமானே! உன்னை, எல்லாப் உயிர்களிலும் வாழ்கிறாய் என்று பலரும் சொல்வதும், போதலும் வருதலும் இல்லாதவன் என்று அறிவுடையோர் இசைப்பாடல்களைப் பாடுவதும்; ஆனந்தக் கூத்தாடுவதும் தவிர உன்னை நேரே பார்த்தறிந்தவர்களை நாங்கள் கேட்டு அறிந்ததும் இல்லை. ஆயினும், நாங்கள் நேரே காணும்படி பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
  பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
  வணங்குகின்றார் அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
  திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
  எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 6

உமையம்மைக்கு மணவாளனே! கிண்ணம் போன்ற தாமரை மலர்கள் விரியப்பெற்ற குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே! இந்தப் பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள் செய்கின்ற எம் பெருமானே! மனவிரிவு ஒடுங்க பற்றற்று இருந்து உணருகின்ற உன் அன்பர்கள் உன்பால் அடைந்து பிறவிக்கயிறை அறுத்த துறவியரும், மை பொருந்திய கண்களையுடைய பெண்களும் மனித இயல்பில் நின்றே உன்னை வணங்கி நிற்கின்றார்கள்; பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

அது பழச்சுவையென அமுதென அறிதற்கு
  அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
  எங்களை ஆண்டுகொண்டு இங் கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
  மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
  எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே. 7

பரம்பொருளானது கனியின் சுவைபோன்றது எனவும், அமுதத்தை ஒத்தது எனவும் அறிவதற்கு அருமையானது எனவும், அறிதற்கு எளிமையானது எனவும் வாதிட்டு, தேவரும் உண்மையை அறியாத நிலையில் எம்பெருமான் இருப்பார்; இதுவே அப்பரமனது திருவடிவம்; திருவுருக்கொண்டு வந்த சிவனே அப்பெருமான், என்று நாங்கள் தெளிவாகச் சொல்லும் படியாகவே, இவ்வுலகத்தில் எழுந்தருளுகின்ற, தேன் பெருகுகின்ற சோலை சூழ்ந்த திரு உத்தரகோசமங்கையில் எழுந்தருளி இருப்பவனே! திருப் பெருந்துறைக்கு அரசனே! எம் பெருமானே! எம்மைப் பணி கொளும் விதம் யாது? அதனைக் கேட்டு அதன்படி நடப்போம். பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
  மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின்னடியார்
  பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
  திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்
  ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே. 8

அருமையான அமுதமே! எப்பொருளுக்கும் முற்பட்ட முதலும், நடுவும் முடிவும் ஆனவனே! மும்மூர்த்திகளும் உன்னை அறியமாட்டார்; வேறு யாவர் அறியக்கூடியவர்? பந்தை ஏந்திய விரல்களை உடைய உமையம்மையும் நீயுமாக உன்னுடைய அடியார்களுடைய பழைய சிறு வீடுதோறும் எழுந்தருளியவனே! சிவந்த நெருப்பை ஒத்த வடிவத்தையும் காட்டித் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற திருக்கோயிலையும் காட்டி, அழகிய தண்ணிய அருளாளன் ஆதலையும் காட்டி வந்து ஆட்கொண்டவனே! பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
  விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
  வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
  கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
  எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 9

விண்ணில் வாழும் தேவர்களும், அணுகவும் முடியாத, மேலான பொருளே! உன்னுடைய அடியார்களாகிய எங்களை இவ்வுலகில் வந்து வாழச் செய்தோனே! பரம்பரை அடியாராகிய எங்களுடைய கண்ணில் ஆனந்தம் அளிக்கும் தேனே! கரும்பே! அன்பு செய்கின்ற அடியவரது எண்ணத்தில் இருப்பவனே! உலகம் அனைத்துக்கும் உயிரானவனே! பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

புவனியில் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
  போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
  திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
  படவும்நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
  ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 10

திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ள படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த பிரம்மாவும் வருந்துகின்றனர். எனவே நீ, உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய். எவருக்கும் கிடைக்காத அமுதமே! நீ பள்ளி எழுந்தருள்வாயே!

உசாத்துணை

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page