under review

நாவலர் சோமசுந்தர பாரதியார்

From Tamil Wiki
நாவலர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நாவலர் (பெயர் பட்டியல்)
பாரதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாரதி (பெயர் பட்டியல்)
நாவலர் சோமசுந்தர பாரதியார்
நாவலர் வரலாறு
அமர்ந்திருப்பவர் நாவலர். சோழவந்தான் ஆர்.ஶ்ரீனிவாசன், மதுரை வி.ஜி.கணேசன் நிற்பவர்கள். சித்திரபாரதி நூலில் இருந்து
நின்றிருப்பவர் சோமசுந்தர பாரதியார் (மீசையுடன்). காமராஜ், முத்துராமலிங்கத் தேவர், வ.உ.சி ஆகியோர் உள்ளனர்
நாவலர் வழக்கறிஞராக (மேம்படுத்தப்பட்ட புகைப்படம்

நாவலர் சோமசுந்தர பாரதியார் (ஜுலை 27, 1879 - டிசம்பர் 14, 1959) தமிழறிஞர், சைவ அறிஞர், கல்வியாளர், தமிழியக்க அரசியல்வாதி என்னும் தளங்களில் அறியப்படுகிறார். தமிழிலக்கியங்களுக்கு உரையெழுதி, அவற்றை உயர்கல்விநிலையங்களில் கற்பிக்க முறைமைகளை உருவாக்கியவர். தமிழ்மொழி சார்ந்த அரசியலை முன்னெடுத்தவர்.

பிறப்பு, கல்வி

நாவலர் சோமசுந்தர பாரதியார் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள (தற்போதைய தூத்துக்குடி மாவட்டம்) எட்டயபுரத்தில் சுப்பிரமணிய நாயகர், முத்தம்மாள் இணையருக்கு ஜுலை 27, 1879-ல் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரம்.

சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் அரண்மனையில் அரசியாரின் அரவணைப்பில் வளர்ந்தார். இளமையில் பாரதியாருடன் நட்பு கொண்டிருந்தார். தனது தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும் இடைநிலைக் கல்வியை நெல்லையிலும் முடித்ததார். இளமையில் எட்டையபுரத்தில் இவரும் சுப்ரமணிய பாரதியும் அறிஞர் ஒருவரிடமிருந்து பாரதி என்னும் பட்டம் பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.

எஃப்.ஏ. முடித்ததும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் (இன்றைய தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி) பி.ஏ. வரலாறு படித்தார். 1901-1903 வருடங்களில் இக்கல்லூரியில் மறைமலையடிகளும், பரிதிமாற்கலைஞரும் தமிழாசிரியர்களாக இருந்தனர். சென்னை சட்டக் கல்லூரியில் படித்து 1905-ம் ஆண்டில் சட்ட இளவர் பட்டமும் (Bachelor of Law) பெற்றார். தேர்வு எழுதிய உடனேயே வருவாய்த்துறையில் வேலையும் கிடைத்தது. அங்கு ஓர் ஆண்டு வேலை பார்த்து, பின் தூத்துக்குடியில் குடியேறினார். தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றியபொழுது தானே பயின்று 1913-ம் ஆண்டில் முதுகலைப்பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தனிவாழ்க்கை

குடும்பம்

சோமசுந்தர பாரதியார் 1894-ல் பதினைந்து வயதான கடம்பூர் மீனாட்சியுடன் திருமணம் நடந்தது. மகன்கள் இராசராம் பாரதி, இலக்குமிரதன் பாரதி. மகள் இலக்குமி பாரதி.

நாவலர் வழக்கறிஞராக

சோமசுந்தர பாரதியார் திருவெட்டாற்றில் டிசம்பர் 1, 1927-ல் தனது 48-ம் வயதில்வசுமதியை மணந்தார். இவர்களுக்கு மீனாட்சி மற்றும் லலிதா ஆகிய இரு மகள்கள் பிறந்தனர். லலிதா பின்னர் லலிதா காமேஸ்வரன் என புகழ்பெற்ற மருத்துவ அறிஞராகவும், தமிழ்நாடு மருத்துவப் பல்கலை துணைவேந்தராகவும் அறியப்பட்டார்.

தொழில்

1906-1920 வரை தூத்துக்குடியில் வழக்குரைஞர் பணியாற்றினார். 1920 முதல் 1933 வரை மதுரையில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1933 முதல் மதுரை தமிழ்ச்சங்க ஆசிரியராகவும், பின்னர் அண்ணாமலை பல்கலை கழக தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

அமைப்புப்பணிகள்

நாவலர் சோமசுந்தர பாரதியார் தமிழாய்வுக்காகவும் மொழிப்போருக்காகவும் 1937-ம் ஆண்டு தமிழர் கழகம் என்ற அமைப்பை நிறுவி நடத்தினார்.

கல்விப்பணிகள்

சோமசுந்தர பாரதியார் 1932 -1933-ம் ஆண்டுகளில் நான்காம் தமிழ்ச்சங்கம் (மதுரை) அமைப்பின் செயலாளராக இருந்தார். 1933 முதல் அண்ணாமலை பல்கலைக் கழக தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார். 1938 ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார்.

அக்காலத்தில் பண்டிதமணி கதிரேசன் செட்டியார். ஏ.சி. செட்டியார், வேங்கடசாமி நாட்டார் போன்றோர் இவரின் சக ஆசிரியர்களாக இருந்தனர். நாவலரின் மாணவர்கள் க. வெள்ளைவாரணர், அ.ச.ஞானசம்பந்தம், அ.மு. பரமசிவானந்தம் போன்றோர்.

இலக்கியவாழ்க்கை

ஆய்வுகள்

சோமசுந்தர பாரதியார் சங்ககால 'வஞ்சி நகரம்', 'சேரர் தாய் முறை' ஆகிய ஆய்வு நூல்களை எழுதினார். இவை இலக்கியச் சான்றுகளைக் கொண்டு தமிழ் வரலாற்றையும் பண்பாட்டையும் ஆராய்பவை. வஞ்சி நகரம் நூல் 'Some Studies about the Chera of Yore' என்னும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டது. சேரர் தாய்முறை என்ற நூல் பண்டைத் தமிழகத்தில் தாய்வழி சமூக மரபு இருந்தது என்று நிறுவுகிறது. இந்த நூல் பதிற்றுப்பத்தின் வழி பண்டைய உறவுமுறைகளையும், வம்சாவழியையும் ஆராய்ந்தது. இது 'System of Succession in Chera kingdom' என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டது.

கவிதைகள்
நாவலர் (மேம்படுத்தப்பட்ட படம்)

நாவலர் எழுதிய 'மாரிவாயில்', 'மங்கலக் குறிச்சியில் பொங்கல் விழா' ஆகிய இரண்டும் கவிதை நூல்கள். அர்ஜுனன் பாண்டியன் மகளுக்குத் தூது விடுப்பது போன்ற அமைப்புடைய 122 பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் 'மாரிவாயில்'. 'மங்கலக்குறிச்சியில் பொங்கல் விழா' நூல் பொதியமலையில் நிகழ்வதாகப் புனையப்பட்ட காதல் கதை.

உரைகள்

சோமசுந்தர பாரதியார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வகுப்பு மாணவர்களுக்குத் தொல்காப்பியம் பொருளதிகாரத்தைப் பாடம் நடத்தியபோது மாணவர்கள் எழுதிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் 'தொல்காப்பியம், பொருட்படலம் - புதிய உரை'. இது 1942-ல் வெளியானது. தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணப்பகுதியில் உள்ள அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் முழுமையாக உரை எழுதினார். மீதமுள்ளவற்றுள் களவியல், கற்பியல், செய்யுளியல் ஆகியவற்றில் இன்றியமையாச் சில நூற்பாக்களுக்கு மட்டும் உரை எழுதினார்.

1997-ல் 'நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி - 2, தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை' என்னும் தலைப்பில் பொ.வெ. சோமசுந்தரனார் தொல்காப்பிய பொருளதிகாரத்திற்கு எழுதிய உரைகள் அனைத்தையும் திரட்டி மதுரை ச. சாம்பசிவனாரை பதிப்பாசிரியராகக் கொண்டு நாவலரின் மகள் மருத்துவர் லலிதா காமேசுவரன் அந்நூலை வெளியிட்டார்.

சிலப்பதிகாரத்தைப் பாடம் நடத்தியபோது மாணவர்கள் எழுதிய குறிப்புகளைக் 'கானல்வரி' என்னும் தலைப்பில் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் நூலாக வெளியிட்டார். நச்சினார்க்கினியர், பரிமேலழகர் இருவருமே வடமொழி நூல்களை மேற்கோள் காட்டுபவர்கள். இவர்கள் தங்கள் காலக்கட்டத்தைப் பிரதிபலிப்பவர்கள் அல்லர் என்று கருதினார்.

கட்டுரைகள்

சோமசுந்தர பாரதியார் பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் எழுதிய கட்டுரைகள் 'நற்றமிழ்', 'பழந்தமிழ் நாடு' என்னும் தலைப்புகளில் நூல்களாக வந்துள்ளன. தொகுக்கப்படாத கட்டுரைகளும் உள்ளன. இவரது ஆங்கில நூல் 'Tamil Classics and Tamilakam'. சங்கப்பாடல்களில் குறிக்கப்படும் கரிகாலனும் திருமாவளவனும் வேறானவர்கள். மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், மணிமேகலை சீத்தலைச் சாத்தனாரினின்று வேறானவர், மெய்கண்டாரின் சிவஞானபோதம் மொழி பெயர்ப்பல்ல என்பன போன்ற கருத்துகள் இவரது கட்டுரைகளில் விவாதிக்கப்படுகின்றன.

சொற்பொழிவாளர்

சோமசுந்தர பாரதியார் ஆகஸ்ட் 16, 1916 அன்று கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் 'தசரதன் குறையும் கைகேயி நிறையும்' என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு அதே தலைப்பில் பின்னர் நூலாக வெளியிடப்பட்டது.

மதுரைத் தமிழ்ச் சங்கமும் இளம் கிறித்துவ ஆடவர் சங்கமும் (YMCA) மதுரையில் ஜனவரி 26, 1926 அன்று நடத்திய ஆய்வரங்கிலும், மார்ச் 11, 1929-ல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் சோமசுந்தர பாரதியார் திருவள்ளுவர் பற்றி ஆற்றிய உரைகள் பின்னர் 'திருவள்ளுவர்' என்னும் நூலாக மதுரைத் தமிழ்ச் சங்கம் வழியாக உ.வே.சா உதவியுடன் வெளிவந்தது.

திராவிடர் கழகம் சார்பில் கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் எரிக்க வேண்டும் என இயக்கம் நடதப்பட்டது. அதன் ஒருபகுதியாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் சோமசுந்தர பாரதியார் கலந்துகொண்டு கம்பராமாயணத்தை எரிக்கக் கூடாது என அண்ணாதுரையுடன் வாதிட்டார். அச்சொற்பொழிவு 'தீபரவட்டும்' என்னும் நூலில் இடம்பெற்றிருக்கிறது.

கரந்தைத் தமிழ்ச்சங்கக் கூட்டம் ஒன்றில் (1916) 'தசரதன் நிறையும் கைகேயியின் குறையும்' என்னும் தலைப்பில் சோமசுந்தர பாரதியார் பேசினார். இலக்கியக் கதாபாத்திரங்களை முழுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தும்போது பொதுவான சட்டங்களையும் காலப்பின்னணியையும் துணையாகக்கொள்ள வேண்டும் என்னும் முன்னுரையுடன் தசரதனை விமர்சிக்க ஆரம்பித்த இவரின் வாதம் சிறு பிரசுரமாக வந்தது. 1916 - 1919-ம் ஆண்டுகளில் இதே தலைப்பில் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி எனப் பல இடங்களில் பேசிய பேச்சு விரிவாக நூலாக வந்தது.

அரசியல்

விடுதலைப்போராட்டம்

சோமசுந்தர பாரதியார் 1905-ல் தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றத் தொடங்கியபொழுது, இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் நடத்திய பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இதனால் 1905-ம் ஆண்டு முதல் 1919-ம் ஆண்டு வரை அவரது பெயர் அரசினரின் சந்தேகப் பட்டியலில் இடம்பெற்று இருந்தது. இந்த காலத்தில்தான் இவருக்கு அன்னி பெசன்ட்டின் நட்பு ஏற்பட்டது. காந்தியடிகளை முதன்முதலில் தமிழகத்துக்கு வரவழைத்து உரையாற்றச் செய்தார் என்று குறிப்பிடப்படுகிறது.

வ. உ. சிதம்பரம் பிள்ளையின் அழைப்பை ஏற்று சோமசுந்தர பாரதியார் 'இண்டியன் நேவிகேஷன்' என்னும் சுதேசி கப்பல் கம்பெனியின் செயலாளராக இருந்தார். மதுரையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் மாநாட்டினைக் கூட்டி அதன் செயலாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். 1926-ம் ஆண்டில் சித்தரஞ்சன் தாசை மதுரைக்கு அழைத்து, சொற்பொழிவாற்றச் செய்தார்.

இந்தி எதிர்ப்பு

1937-ல் சி. ராஜகோபாலாச்சாரி சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது உயர்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று படிவங்களில் (6, 7, 8-ம் வகுப்புகளில்) இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. தாய்மொழியைத் தவிர்த்து வேற்று மொழியைத் திணிக்கக் கூடாதென்ற கருத்தால் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை நாவலர் உருவாக்கினார்.

செப்டம்பர் 5, 1937-ல் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார். அக்டோபர் 25, 1937-ல் கட்டாய இந்திக் கல்வியைக் கைவிடக் கோரி, அன்றைய முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரியருக்குத் திறந்த மடல் ('An Open Letter to Honourable Minister C. Rajagopalachariar)'ஒன்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார்.

1948-ம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது இந்திப் போராட்டத்தின்பொழுது சோமசுந்தர பாரதியார் அன்றைய கல்வி அமைச்சர் தி. சு. அவிநாசிலிங்கனாருக்கு மடல் எழுதினார். மதுரை கோவில் நுழைவுப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றிலும் பங்கேற்றார் .

மொழி அரசியல்

நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் தமிழகத்தில் மொழிக்காக நடந்த பெரிய மாநாடுகளில் நாவலர் முக்கிய இடத்தை வகித்திருக்கிறார்.

  • மதுரை முத்தமிழ் மாநாட்டுத் தலைவர் (1942),
  • கோவை முத்தமிழ் மாநாட்டுத் தலைவர் (1950)
  • அண்ணாமலை நகர் தமிழாசிரியர் மாநாட்டுத் திறப்பாளர் (1954)
  • மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டுப் பொறுப்பு (1956)
  • திருச்சி சாதி ஒழிப்பு மாநாட்டுத் தலைமை (1958)
திராவிட எதிர்ப்பு

நாவலர் சோமசுந்தர பாரதியார் ஈ.வெ.ரா முன்வைத்த திராவிட நாடு கொள்கையை எதிர்த்தார். சி.பா.ஆதித்தனார் அதற்கு எதிராகத் தொடங்கிய தமிழரசுக் கட்சியை ஆதரித்தார். 1943ல் சேலத்தில் நிகழ்ந்த கம்பராமாயண எரிப்புப் போர் மாநாட்டில் "தமிழன் தன்னைத் தமிழனென்று கூறிக் கொள்ளவும் வெட்கப்பட்டுத் 'திராவிடன், திராவிடன்' என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது?" என்று விமர்சனம் செய்தார்.

விருதுகள்

  • 1944 - ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம் சோமசுந்தர பாரதியாருக்கு நாவலர் பட்டம் வழங்கியது
  • 1954 - மதுரைத் திருவள்ளுவர் கழகம் சோமசுந்தர பாரதியாருக்கு கணக்காயர் விருது அளித்தது.
  • 1954-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அதன் வெள்ளி விழாவில் சோமசுந்தர பாரதியாருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.
எண்பது அகவைநிறைவு விழா

27.07.1959 அன்று சோமசுந்தர பாரதியாரின் 80ஆவது அகவை நிறைவு விழா மதுரையில் கி. பழனியப்பன் முயற்சியில் மதுரை நகரவையும் தமிழகப் புலவர் குழுவும் இணைநது நடத்தப்பட்டது

இறுதிக்காலம்

நாவலர் சோமசுந்தர பாரதியார் டிசம்பர் 14, 1959-ல் தன் எண்பதாவது வயதில் காலமானார். டிசம்பர் 15 அன்று அவரது உடல் மதுரை பசுமலையில் எரியூட்டப்பட்டது

சோமசுந்தர பாரதியாரைப் பற்றிய நூல்கள்

  • ச. சாம்பசிவம் எழுதிய நாவலர் சோமசுந்தர பாரதியாரின் 'தமிழ் இலக்கியப்பணி' என்னும் நூலில் இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் இலக்கியப்பணி பற்றிய திறனாய்வும் இடம்பெற்றிருக்கின்றன.
  • குன்றக்குடி பெரியபெருமாள் எழுதிய தமிழ் வளர்த்த 'நல்லறிஞர்கள்' என்னும் நூலில் இவரைப் பற்றிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. (சென்னை, 1996)
  • தமிழ்ப்பிரியன் எழுதிய 'இரு நூற்றாண்டுகளும் 50 தமிழ் அறிஞர்களும்' என்னும் நூலில் இவரைப் பற்றிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. (சென்னை, 2005)

இலக்கிய இடம்

நாவலர் சோமசுந்தர பாரதியார் கல்வியாளர், தமிழறிஞர், சைவ அறிஞர், அரசியல்வாதி என்னும் தளங்களில் பங்களிப்பாற்றியவர்.

  • தமிழகத்தில் உயர்நிலைத் தமிழ்க்கல்வி உருவாகி வந்த காலகட்டத்தில் அதை வடிவமைப்பதில் பெரும்பங்களிப்பாற்றினார். பழந்தமிழ் நூல்களை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான முறையியலை தன் வகுப்புகள் மற்றும் வகுப்புகளை ஒட்டி உருவான நூல்கள் வழியாக கட்டமைத்தார்.
  • தமிழியக்கம் உருவான முதற்கட்டத்தில் இலக்கியங்கள் பதிப்பிக்கப்பட்டன. இரண்டாம்காலகட்டத்தில் அந்நூல்களை புரிந்துகொள்வதற்கும் மக்களிடையே பரப்புவதற்கும் அறிஞர்கள் முயன்றனர். நாவலர் இரண்டாம் காலகட்டத்தினர். தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்களுக்கு உரை எழுதியும் சொற்பொழிவுகள் ஆற்றியும் தமிழிலக்கியங்களை புரிந்துகொள்ளும் முறைமையை உருவாக்குவதில் பங்களிப்பாற்றினார்.
  • சைவநூல்களை தமிழிலக்கியத்தின் பண்பாட்டு மரபில் வைத்து புரிந்துகொள்வதற்கான முறையை உருவாக்கிய அறிஞர்களில் ஒருவர் சோமசுந்தர பாரதியார். தன் ஆய்வுநூல்கள், மேடையுரைகள் வழியாக அதற்குப் பங்களிப்பாற்றினார்.
  • சோமசுந்தர பாரதியார் சுதந்திரப்போராட்ட வீரர். பின்னர் மொழிப்போராட்டத்திலும் முன்னணிப்பங்களிப்பாற்றினார். திராவிட அரசியலுக்கு மாற்றாக தமிழ்த்தேசிய அரசியலை முன்வைத்தார்.

நூல்கள் பட்டியல்

1998-ம் ஆண்டு சோமசுந்தர பாரதியின் நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.

ஆய்வு நூல்கள்
  • தசரதன் குறையும் கைகேயி நிறையும் (1926)
  • திருவள்ளுவர் (1929) - தமிழ், ஆங்கிலம்
  • சேரர் தாயமுறை (1960) - தமிழ், ஆங்கிலம்
  • தமிழும் தமிழரும்
  • சேரர் பேரூர் (1917) - தமிழ், ஆங்கிலம்
  • அழகு
  • பழந்தமிழ் நாடு (1955)
  • நற்றமிழ் (1957)
  • Tamil Classics and Tamilakam (1912)
படைப்பிலக்கியங்கள்
  • மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி: ஒரு செய்யுட் கதை (1947)
  • மாரி வாயில் (1936)
உரைநூல்
  • இந்தி கட்டாய பாடமா?
வாழ்க்கை வரலாறு
  • நான் கண்ட சுப்பிரமணிய பாரதி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2023, 22:43:32 IST