சிவஞானபோதம்
- சிவஞானம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிவஞானம் (பெயர் பட்டியல்)
சிவஞானபோதம் ( பொ.யு. 130ம் நூற்றாண்டு) சைவ சித்தாந்தத்தின் மூலநூல், மெய்கண்ட சாத்திரங்களில் முதன்மையானது. சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான பதி, பசு, பாசத்தை விரிவாக விளக்கும் நூல். சிவஞானபோதம் நூலை இயற்றியவர் மெய்கண்டார். இவர் இயற்றிய சிவஞானபோத சாத்திர நூலை முதன்மையாக வைத்து, பிற சித்தாந்திகள் இயற்றிய சாத்திர நூல்களையும் இணைத்து மெய்கண்ட சாத்திரங்கள் என அழைக்கின்றனர்.
நூல் பெயர்க்காரணம்
சிவபெருமானைப் பற்றிய ஞானத்தை உணர்த்தும் நூல் என்ற பொருளில் இந்நூல் 'சிவஞானபோதம்' என்று அழைக்கப்பட்டது.
நூல் அமைப்பு
சிவஞானபோதம், பன்னிரண்டு நூற்பாக்களைக் கொண்டது. நூற்பாக்கள் மூன்று அல்லது நான்கு அடிகளைக் கொண்டன. பன்னிரண்டு நூற்பாக்களையும் சேர்த்து மொத்தம் நாற்பது அடிகள் இந்நூலில் இடம்பெற்றன. பாடல்களின் விளக்கமாக 39 அதிகரணங்களும், 81 எடுத்துக்காட்டு வெண்பாக்களும் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர் குறிப்பு
சிவஞானபோதம் நூலை இயற்றியவர் மெய்கண்டார். மெய்கண்ட தேவர் என்று போற்றப்படும் இவர், சைவ சந்தானக் குரவர்கள் நால்வருள் முதன்மையானவர். 13-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். பரஞ்சோதி முனிவரின் சீடர். சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை உருவாக்கிய சீடர் பரம்பரைக்கு வித்திட்டவர். அருணந்தி சிவாசாரியார் உள்ளிட்ட 49 மாணவர்கள் மெய்கண்டாரிடம் சித்தாந்த சாத்திரங்களைப் பயின்றனர். பிற்காலத்துச் சைவ சித்தாந்த நூல்களுக்கு ஆதாரன நூலான 'சிவஞானபோதம்' நூலை இயற்றினார் மெய்கண்டார். சைவ சித்தாந்த சாத்திரங்களின் மூல ஞானியாக மெய்கண்டார் கருதப்படுகிறார்.
உள்ளடக்கம்
சிவஞானபோதம் நூலின் தொடக்கத்தில் பாயிரம் இடம்பெற்றது. அதில் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் அவையடக்கச் செய்யுளும் இடம்பெற்றுள்ளன. இந்நூல் பொது அதிகாரம், உண்மை அதிகாரம் என இரண்டு இயல்களைக் கொண்டுள்ளது. பொது அதிகாரத்தில் பிரமாண இயல் (மூன்று சூத்திரங்கள்), இலக்கண இயல் (மூன்று சூத்திரங்கள்) அமைந்துள்ளன. உண்மை அதிகாரத்தில் சாதன இயல் (மூன்று சூத்திரங்கள்), பயனியல் (மூன்று சூத்திரங்கள்) உள்ளன.
பிரபஞ்சம், உலக உற்பத்தி, தோற்றம், அழிவு, முழு முதற் கடவுளான சிவபெருமானின் ஆற்றல், சிறப்பு, பெருமை ஆகியன 12 நூற்பாக்களில் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
பாடல்
அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்
உளதுஇலது என்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின்
உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா
விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்து அறிந்து அறியா ஆங்குஅவை போலத்
தாம்தம் உணர்வின் தமியருள்
காந்தம் கண்ட பசாசத்து அவையே
ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி
உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்
தண் நிழலாம் பதிவிதி எண்ணும் அஞ் செழுத்தே
அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே
காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே
உசாத்துணை
- சிவஞானபோதம், சைவம் தளம்
- சிவஞானபோதம் உரை
- சிவஞானபோதம் - மூலமும், உரையும், தமிழ் மின் நூலகம்
- சிவஞானபோதம் - விளக்கவுரை, ஆர்கைவ் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jul-2026, 11:44:48 IST