under review

கரந்தைத் தமிழ்ச் சங்கம்

From Tamil Wiki
கரந்தைத் தமிழ்ச் சங்க நிறுவனர்: த.வே. இராதாகிருட்டினப் பிள்ளை
த.வே. உமாமகேஸ்வரம் பிள்ளை

கரந்தைத் தமிழ்ச் சங்கம், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்காக, தஞ்சாவூரில் உள்ள கருந்தட்டைகுடி என்னும் கரந்தையில் 1911-ல் தோற்றுவிக்கப்பட்டது. த. வே. இராதாகிருட்டினப் பிள்ளை இச்சங்கத்தை நிறுவினார். த. வே. உமாமகேசுவரம் பிள்ளை தலைமையில் இச்சங்கம் செயல்பட்டது. நூறாண்டுகளைக் கடந்து இன்றும் செயல்பட்டு வருகிறது.

தோற்றம்

1901-ல் தோற்றுவிக்கப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கத்தை (நான்காம் தமிழ்ச்சங்கம்) முன் மாதிரியாகக் கொண்டு, தஞ்சாவூரில் உள்ள கருந்தட்டாங்குடி என்னும் கரந்தையில், மே 14, 1911-ல் கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. த.வே. இராதாகிருட்டினப் பிள்ளை இச்சங்கத்தை நிறுவினார். அவரது சகோதரரான த. வே. உமாமகேசுவரம் பிள்ளை தலைவராகச் செயல்பட்டார். முதன்மை உறுப்பினர்களாக வி. சாமிநாதப் பிள்ளை, எல். உலகநாதப் பிள்ளை, ஆர். வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், நீ. கந்தசாமிப் பிள்ளை ஆகியோர் செயல்பட்டனர்.

பெத்தாச்சிச் செட்டியார், கோபாலசாமி இரகுநாத இராஜாளியார், சர். ஏ. டி. பன்னீர் செல்வம் ஆகியோர் இதன் புரவலர்களாக இருந்தனர்.

தற்போது நா, கலியமூர்த்தி கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், ச. இராமநாதன் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளனர்.

கரந்தைத் தமிழ்ச் சங்கச் சின்னம்
கரந்தைத் தமிழ்ச் சங்கச் சின்னம்

நோக்கம்

‘தொண்டு-தமிழ்-முன்னேற்றம்’ என்பதே கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் குறிக்கோள். உலக மக்களிடையே தமிழின் பெருமையைப் பரப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இச்சங்கம் செயல்பட்டது.

“வேற்றுமொழி கலவாத தூய தமிழில் மக்கள் பிழையின்றிப் பேசுமாறும் எழுதுமாறும் செய்தல்; தமிழ்ப் பெரும்புலவர்களை ஒன்றுகூடச் செய்து, வெளியுலகிற்கு அறிமுகப்படுத்துதல்; தமிழ் இலக்கியங்களைப் பரப்புதல்; தமிழ் பயில்பவர்களை ஊக்கமளித்து, மக்களிடையே தமிழ்ப் பற்றை வளர்த்தல்; தமிழின் இசை-நாடகப் பகுதிகளை வளர்த்தல்” போன்றவை சங்கத்தின் பிற நோக்கங்களாக இருந்தன.

கல்வி நிறுவனங்கள்

கரந்தை தமிழ்ச் சங்கம் உருவானதால் அதன் மூலம் கீழ்காணும் கல்வி நிலையங்கள் உருவாகின.

  • உமாமகேசுவரனார் மேல்நிலைப்பள்ளி
  • உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி
  • உமாமகேசுவரனார் ஆசிரியர் பயிற்சி மையம்
  • உமாமகேசுவரனார் கல்வியியல் கல்லூரி
  • தி. ச. பழனிச்சாமிப் பிள்ளை தொழிற் பயிற்சி மையம்

பணிகள்

கரந்தைத் தமிழ்ச் சங்கம் கீழ்காணும் பணிகளைச் செயல்படுத்தியது.

தமிழ் மொழியைச் செம்மொழி ஆக அறிவிக்க வேண்டும் என 1919-ல் தீர்மானம் நிறைவேற்றி அன்றைய அரசுக்கு அனுப்பி வைத்தது. அதே கருத்தை வலியுறுத்தி 2003-ம் ஆண்டில் மீண்டும் கோரிக்கையை அரசுக்கு அனுப்பியது. மாநாடுகளை, கருத்தரங்குகளை, ஊர்வலங்களை நடத்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியது.

தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவ வேண்டும் என்று 1925 முதலே பல முயற்சிகளை மேற்கொண்டது.

பிறமொழிச் சொற்கள் கலவாத தூய தமிழ் நடையை அறிமுகப்படுத்தியது.

தமிழ் நிகவுகளில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து வலியுறுத்தி தமிழக அரசையும் ஏற்க வைத்தது. தமிழிசை இயக்கத்தை ஆதரித்தது. சுவாமி விபுலானந்தரின் சுருதி வீணை, யாழ்நூல் போன்றவற்றை சங்கம் மூலம் வெளியிட்டது. தமிழை வளர்ப்பதற்காக ’தமிழ்ப் பொழில்’ இதழைத் தொடங்கி நடத்தியது.

கலைச்சொல்லாக்கப் பணிகளுக்குத் தூண்டுகோல் அளித்து, திரு. திருவாளர். திருமதி, செல்வன், செல்வி. திருமண அழைப்பிதழ் என பல சொற்களை உருவாக்கியது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்துச் செயல்பட்டது.

கரந்தை கல்விக்கூடங்கள்

செயல்பாடுகள்

கரந்தைத் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் புலவர் திருநாள்களையும், கலைமகள் விழாவையும் கொண்டாடுகிறது. ‘கரந்தைப் புலவர் கல்லூரி’ தோன்றிய பின், அக்கல்லூரியின் இளங்கோவடிகள் தமிழ்க்கழகம் சார்பாக, அதன் ஆண்டுவிழாவும், இளங்கோவடிகள் விழாவும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இதன் ஆண்டு விழா நிகழ்வுகளில் தமிழ்ச் சான்றோர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

சிறந்த தமிழ்ப் பேராசிரியர்களுக்கு கரந்தைத் தமிழ்ச் சங்கம், ’தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது’ வழங்கிப் பாராட்டுகிறது.

நூல் வெளியீடு, கருத்தரங்கு, இலக்கியப் பயிலரங்கம், கருத்தரங்கம் எனத் தமிழ் இலக்கிய வளர்ச்சி தொடர்பான பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்து வருகிறது.

உசாத்துணை


✅Finalised Page