விவேகபோதினி
விவேக போதினி (1908) ஜூலை 1908 தொடங்கி 1932 வரை வெளிவந்த தமிழ் இதழ். இதன் ஆசிரியர் அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர்.
வெளியீடு
அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர், தமிழில் நல்லதொரு இதழைத் தொடங்கி நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஜூலை 1908-ல், விவேக போதினி இதழைத் தொடங்கினார்.
இதழ் அமைப்பு
விவேக போதினி இதழில்,
எப்பொரு ளெத்தன்மைத் தாயிறு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- என்ற திருக்குறள் ஒவ்வொரு இதழிலும் இடம் பெற்றது.
ஒவ்வொரு இதழிலும் புகழ்பெற்ற ஒருவரின் புகைப்படத்தை நல்ல தாளில் வெளியிட்டது. மதசெய்திகள், மகாபாரதக் கதைகள், பஞ்சாங்கம், அரசச் செய்திகள், மக்கள் செய்திகள், பெரியோர் சரிதை என பல இடம்பெற்றன.
உள்ளடக்கம்
விவேக போதினி, இதழ்அந்தக் காலக் கட்டத்தில் வாழ்ந்த பெருவாரியான பெரியோர்கள், கல்வியாளர்கள், இதழ்களால் பாராட்டப்பட்டது. விவேக போதினி இதழ்களில், மத விஷயம், பெரியோர் சரிதை, ராஜாங்க விஷயம், ஸ்தல ஆராய்ச்சி, வான சாஸ்திரம், தாவர சாஸ்திரம், தத்வ சாஸ்திரம் (Physics), ரசாயன சாஸ்திரம் (Chemistry), தேக தத்துவ சாஸ்திரம் (Physiology), விவசாயம் (Agriculture) போன்ற செய்திக் கட்டுரைகள் இடம்பெற்றன.
தமிழ்மொழி ஆராய்ச்சி, வ்யாசங்கள், செய்யுள், நாடகம், சிறுகதைகள், கட்டுரைகள், சிறு தொடர்கள், நமது சிறுகதை பகுதி, மாணவர் பக்கங்கள், சிறுவர்களுக்கான பக்கங்கள், ஸ்திரீகளுக்கான பக்கங்கள், பிரபஞ்ச வர்த்தமானம், அடிக் குறிப்புகள் என பல்வேறு தலைப்பிலான கட்டுரைகள், செய்தித் துணுக்குகள் இடம்பெற்றன.
பங்களிப்பாளர்கள்
விவேக போதினி இதழில் பாரதியாரின் கட்டுரைகள் வெளியாகின. கீழ்காண்பவர்கள் உள்ளிட்ட பலரது பங்களிப்புகள் இவ்விதழில் இடம்பெற்றன.
- உ.வே. சாமிநாத ஐயர்
- ஆர். சந்திரசேகர சாஸ்திரிகள்
- டி. செங்கல்வராய முதலியார்
- பம்மல் சம்பந்த முதலியார்
- மகேச குமார சர்மா
- பி.ஸ்ரீ. ஆச்சார்யா
- சோமசுந்தர பாரதி
- சுத்தானந்த பாரதி
- பாபநாசம் சிவன்
- தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை
தமிழின் முதல் நவீனச் சிறுகதை
விவேக போதினி இதழில் தான், தமிழின் முதல் பெண் எழுத்தாளர் எழுதிய சிறுகதையாக ஆய்வாளர்களால் கருதப்படும் 'சங்கல்பவமும் சம்பவமும்' சிறுகதை 1913-ல் வெளியாகியது. இதனை அம்மணி அம்மாள் எழுதியிருந்தார். தமிழின் முதல் நவீனச் சிறுகதையாகக் கருதப்படும் வ.வே.சு. ஐயர் எழுதிய 'குளத்தங்கரை அரசமரம்', அவரது மனைவி பாக்கியலக்ஷ்மி அம்மாள் பெயரில் விவேக போதினி இதழில் 1915-வெளியானது.
இதழ் நிறுத்தம்
1932-ல், விவேகபோதினி இதழ் நின்று போனது.
ஆவணம்
விவேக போதினி இதழ்களில் சில தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
மதிப்பீடு
விவேகபோதினி தமிழில் இலக்கியம் வளர்த்த முன்னோடி இதழ்களுள் ஒன்று. சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, சாத்திரங்கள், சமயம், பெண்கல்வி உள்ளிட்ட பல செய்திகளுக்கு இடமளித்தது. தமிழின் முதல் நவீனச் சிறுகதையை வெளியிட்ட இதழாகவும், பெண் எழுத்தாளரின் சிறுகதையை வெளியிட்ட முன்னோடி இதழாகவும் அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:43 IST