அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர்
- குப்புசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குப்புசாமி (பெயர் பட்டியல்)
அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர் ( 1877 - ஆகஸ்ட் 23, 1949), முன்னோடி தமிழ் நூல் வெளியீட்டாளர், இதழாசிரியர். நூறாண்டு கண்ட அல்லயன்ஸ் பதிப்பகத்தை நிறுவி பல அரசியல், இலக்கிய, மொழியாக்க நூல்களை வெளியிட்டவர். மகாத்மா காந்தி உள்ளிட்ட பலரால் பாரட்டப்பட்டவர்.
பிறப்பு / இளமை
அல்லயன்ஸ் ஐயர் என்று அழைக்கப்படும் வி. குப்புஸ்வாமி ஐயர், தஞ்சாவூர் மாவட்டம் மாயவரத்துக்கருகில் உள்ள கோமல் என்ற கிராமத்தில் 1877-ம் ஆண்டு வைத்தியநாத ஐயர், பாலாம்பாள் இணையருக்குப் பிறந்தார். கோமல் கிராமத்திலேயே பள்ளிப் படிப்பை முடித்த வி. குப்புஸ்வாமி ஐயர் தனது 19-ம் வயதில் சென்னைக்கு வந்து உறவினர் ஒருவரின் உதவியுடன் 'ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி' என்னும் சிறு நிறுவனத்தை தொடங்கி பேனா, பென்சில், குறிப்பேடு போன்ற எழுது பொருட்களை விற்பனை செய்தார். அத்துடன், தேசியத் தலைவர்களைப் பற்றிய சில நூல்களையும் வெளியிட்டார். இளைஞர்களிடையே இந்த நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
அல்லயன்ஸ் பதிப்பகம்
வி. குப்புஸ்வாமி ஐயர் 1901-ம் ஆண்டு 'அல்லயன்ஸ் கம்பெனி' என்ற பெயரில் நூல் வெளியீட்டு நிறுவனத்தை தொடங்கினார். நூல்கள் அதிகம் விற்காத அக்காலத்தில் தேசியத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் குறைந்த விலையில் வெளியிட்டார். இராமாயணம், மகாபாரதம் முதலான இதிகாசங்களை சிறுவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் எளிமையான வடிவத்தில் வெளிக்கொணர்ந்தார். தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம், எம்.எஸ். சுப்பிரமணியம், சுந்தர ராகவன் போன்ற பல எழுத்தாளர்கள் எழுதிய நூல்களையும் அல்லயன்ஸ் நிறுவனம் வெளியிட்டது. கி.வா. ஜகன்னாதன், எஸ்.வி.வி, கு.ப. ராஜகோபாலன், க.நா.சு. தேவன், வ. ராமசாமி, சோ. ராமசாமி, வை.மு. கோதைநாயகி அம்மாள் போன்ற பல எழுத்தாளர்களின் நூல்களை அல்லயன்ஸ் மூலம் வெளியிட்டார் குப்புஸ்வாமி ஐயர்.
விடுதலைப் போராட்ட நூல்கள்
வி. குப்புஸ்வாமி ஐயர், விடுதலைப் போராட்டம் தொடர்பான நூல்களை ஏராளமாக வெளியிடத் தொடங்கினார். தேசத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய பத்திரிகையாளர்கள் அல்லது எழுத்தாளர்களைக் கொண்டு எழுதப்பட்டு வெளியிடப்பட்டதால், இந்த நூல்களின் நம்பகத்தன்மை மேம்பட்டது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டு சம்பவங்களையும் தமிழில் புத்தகங்களாக வெளியிட்டு வந்தார். அப்போது அல்லயன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஹரிபுரா காங்கிரஸ், திரிபுரா காங்கிரஸ், நாகபுரி காங்கிரஸ் தொடர்பான புத்தகங்கள் இன்றளவும் அரசியல் ஆவணங்களாகத் திகழ்கின்றன.
ராஜாஜி , தன்னுடைய எழுத்துக்களை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வெளியிட வி. குப்புஸ்வாமி ஐயருக்கு அனுமதி வழங்கினார். ராஜாஜியின் நூல்களுக்கு இருந்த வரவேற்பும் அல்லயன்ஸ் பதிப்பகத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.
மொழியாக்கங்கள்
1937-ம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அனுமதியுடன், அவர் எழுதிய 'இளைஞனின் கனவு' 'புது வழி' என்ற இரண்டு நூல்களை வி. குப்புஸ்வாமி ஐயர் தமிழில் வெளியிட்டார். ஆங்கிலேய அரசு அந்நூல்களுக்குத் தடை விதித்தது. அதற்கு முன்பே இரு நூல்களின் பிரதிகளையும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா ஆகிய இடங்களுக்கு வி. குப்புஸ்வாமி ஐயர் அனுப்பியிருந்தார். சுபாஷ் சந்திர போஸ் மலேசியா சென்றிருந்த போது, அவரது அன்பர்கள் இந்த நூல்களை இலவசமாக அச்சிட்டு அங்கிருந்த தமிழர்களுக்கெல்லாம் வழங்கினார்கள் என்றும், அதன் மூலம் சுபாஷ் சந்திர போஸின் மீது பற்று ஏற்பட்ட ஏராளமான தமிழர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தனர் என்று கூறப்படுகிறது.
பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்த மடம் நூலை த.நா. குமாரசாமியின் மொழியாக்கத்தில் வெளியிட்டார். 'வந்தே மாதரம்' என்னும் முழக்கம் இடம் பெற்றிருந்ததால் இந்நூலையும் ஆங்கிலேய அரசு தடை செய்தது. சரத் சந்திரர், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் நூல்களை வங்காள மொழியில் இருந்தும், பிரேம்சந்தின் நூல்களை ஹிந்தி மொழியில் இருந்தும், வி.ஸ. காண்டேகரின் நூல்களை மராத்தி மொழியில் இருந்தும் மொழியாக்கம் செய்வித்து முதன்முதலில் தமிழில் வெளியிட்டவர் வி. குப்புஸ்வாமி ஐயர். முதல் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாதின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிடும் போது, பாபு ராஜேந்திர பிரசாத் சென்னைக்கு வந்திருந்தார். நேரமின்மைமையால் ரயில் வண்டியில் இருந்து இறங்கியவுடன், பிளாட்பாரத்திலேயே நூலை வெளியிட்டு விட்டு சென்றார்.
ஷேக்ஸ்பியர் நாடகங்களின் தமிழாக்கங்களை முதன்முதலில் வெளியிட்டார்.
சுதந்திரநாள் கொண்டாட்டம்
வி. குப்புஸ்வாமி ஐயர், 1947- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் நாள் சுதந்திர தினத்தன்று, அந்தத் திருநாளைக் கொண்டாட "தேசிய கீதம்' என்ற நூலை அச்சிட்டு இலவசமாக வழங்கினார்.
இதழியல்
அல்லயன்ஸ் வி.'குப்புஸ்வாமி ஐயர், விவேகபோதினி என்ற மாத இதழை 1908- ஆம் ஆண்டு தொடங்கி 1932- ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடத்தினார். இந்த இதழில் பால கங்காதர திலகர், மதன் மோகன் மாளவியா, மகாதேவ கோவிந்த ரானடே, மகான் மணி ஐயர், சுப்பிரமணிய ஐயர் போன்ற தேச பக்தர்களின் வரலாறுகளைத் தொடராக வெளியிட்டு, பிறகு புத்தகங்களாகவும் வெளியிட்டார். இந்த இதழின் மூலம் பாரதி, வ.வே.சு ஐயர், தெ.பொ. மீனாட்சிசுந்தரம், பாபநாசம் சிவன் போன்றவர்களின் நட்பு ஏற்பட்டு அவர்களின் நூல்களையும் அல்லயன்ஸ் மூலம் வெளியிட்டார்.
பாராட்டுகள்
- 'கவியரசி சரோஜினி தேவி' என்கிற நூலை வெளியிட்டபோது,சரோஜினி நாயுடு 'அல்லயன்ஸ்' வி. குப்புஸ்வாமி ஐயருக்கு வெண்முத்து ஒன்றை பரிசாக வழங்கினார்.
- தி.ஜ. ரங்கநாதன் எழுதிய 'ஆசிய ஜோதி ஜவஹர்' நூலுக்காக ஜவஹர்லால் நேருவால் பாராட்டப்பட்டார்..
- 1932 -ம் ஆண்டு ப்ரெஞ்ச் எழுத்தாளர் ரோமெய்ன் ரோலண்டு (Romain Rolland) எழுதிய 'மகாத்மா காந்தி' என்ற நூலை அவரது அனுமதியுடன் தமிழில் அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர் வெளியிட்டார். மேலும், வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம், சென்னை உப்பு சத்தியாகிரகம் ஆகிய நிகழ்வுகளையும் நூல்களாக வெளியிட்டார். மகாத்மா காந்தி ஜனவர் 28, 1946-ல் சென்னை ஹிந்தி பிரசார சபையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று, அங்கு அமைக்கப்பட்டிருந்த அல்லயன்ஸ் கடைக்கு வருகை தந்து, ஒவ்வொரு நூலாகப் பார்த்து விவரங்களைக் கேட்டறிந்து, வி. குப்புஸ்வாமி ஐயரைப் பாராட்டினார்.
மறைவு
அல்லயன்ஸ் வி. குப்புஸ்வாமி ஐயர் ஆகஸ்ட் 23, 1949 அன்று காலமானார்.
மதிப்பீடு
விடுதலைப் போராட்ட காலத்தில் அரசியல் நிகழ்வுகளை மக்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் நம்பகத்தன்மை கூடிய தரமான நூல்களை குப்புஸ்வாமி ஐயர் தன் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார். புகழ்பெற்ற வங்க, ஹிந்தி, மராத்தி இலக்கியங்களைத் தமிழில் முதன்முதலில் வெளியிட்டார்.
"நீதிகளைக் கற்பிக்கும் சிறு கதைகளையும், பல நாடகங்களையும், பல மொழிபெயர்ப்புக்களையும் இன்னும், பல விஷயங்களையும் எளிய அழகிய நடையில் வெளியிட்டு வரும் அல்லயன்ஸாரை நான் பாராட்டுகின்றேன்.' என்று உ.வே. சாமிநாதையர் அல்லயன்ஸ் பதிப்பகத்தைப் பாராட்டினார்.
கி.வா.ஜ "1938-முதல் அவர், தம் நிறுவன வெளியீடுகளின் மூலம் எங்களைப் போன்ற தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்பு நூல்களை மலிவுவிலையில், நல்லதாளில் அச்சிட்டுப் பிரசுரித்ததால்தான் எங்கள் பெயர்கள் தமிழர்களுக்கு அறிமுகமாயின. இதற்காக அந்தப் பெரியவருக்கு நாங்கள் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறோம்" என்று குறிப்பிடுகிறார்.
"மயிலை அல்லயன்ஸ் கம்பெனியாரின் வெளியீட்டுத். திறத்தை ஈண்டு விரித்துக் கூற வேண்டியதில்லை. அதை நாடறியும். அல்லயன்ஸ் கம்பெனியாரால் வெளியிடப் பெற்ற நூல்கள் யாவும் தமிழ்நாட்டுக்குப் பல வழிகளிலும் பயன் விளைத்து வருதல் கண்கூடு. நாட்டு நலங்கருதி ஒழுங்கு முறையில் உழைக்கும் அவர்களுக்கு நாடு கடமைப் படுவதாக" என்று திரு வி கல்யாணசுந்தர முதலியார் குறிப்பிட்டார்.
உசாத்துணை
- தமிழ் வளர்த்த பெருமக்கள், என் ஸ்ரீநிவாசன், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு
- இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அல்லயன்ஸ், தினமணி இணைய இதழ் பதிவு ஆகஸ்ட் 15, 2021;
- இந்திய சுதந்திர போஇராட்டத்தில் அல்லையன்ஸ் -தினமணி ஆகஸ்ட் 15,2021
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
09-Nov-2023, 09:13:39 IST