under review

பிரேம்சந்த்

From Tamil Wiki
Prem.jpg

பிரேம்சந்த்(प्रेमचंद ,தனபத்ராய் ஶ்ரீவாஸ்தவ், நவாப்ராய், முன்ஷி பிரேம்சந்த்) (ஜூலை 31,1880 – அக்டோபர் 8,1936) புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளர். ஹிந்தி, உருது மொழிகளின் நவீன, இயல்புவாத எழுத்தின் முன்னோடியாகவும், இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகவும் மதிப்பிடப்படுகிறார். அவரது படைப்புகளில் 14 நாவல்களும் சுமார் 300 சிறுகதைகளும், அரசியல், இலக்கியக் கட்டுரைகளும் மேலை நாட்டு இலக்கியங்களின் மொழியாக்கங்களும் அடங்கும். சரத் சந்திரரால் 'நாவல் பேரரசன்' (உபன்யாஸ் சம்ராட்) என்று அழைக்கப்பட்டார். சமுதாய நோக்கில் சாதி அடுக்குகளையும், உழைப்பாளிகள், பெண்களின் நிலையையையும் எழுதிய முன்னோடி. ஹிந்தியில் முற்போக்கு மற்றும் தலித் இலக்கியங்களின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். 'கோதான்' இந்தியாவின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது. அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உருவாக்கத்தில் பங்கு வகித்து, அதன் முதல் தலைவராகவும் பொறுப்பேற்றார். பிரேம்சந்த் தன் படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருந்த 1918-1936 காலகட்டம் ஹிந்தி இலக்கியத்தில் 'பிரேம்சந்த் யுகம்' என அழைக்கப்படுகிறது. ஹிந்தி மொழியின் நவீன உரைநடை வளர்ச்சிக்கும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

இளமை, கல்வி

பிரேம்சந்த் 1907-ல்

தன்பத்ராய் உத்தரப் பிரதேசத்தில் காசிக்கு அருகிலுள்ள லம்ஹி என்ற ஊரில் காய்ஸ்த சமூகத்தில் அஜப் லால்-ஆனந்தி தேவி இணையருக்கு ஜூலை 31, 1880 அன்று நான்காவது குழந்தையாகப் பிறந்தார். தமக்கை சுக்கி. அதற்கு முன் பிறந்த இரு பெண் குழந்தைகளும் சிறுவயதில் இறந்து விட்டன. காசிக்கருகில் மதரஸாவில் உருதும் பாரசீகமும் பயின்றார். எட்டாவது வயதில் தாயை இழந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்டார். சிறுவயதில் தாயை இழந்ததின் பாதிப்பு அவர் படைப்புகளில் தாயை இழந்த சிறுவன் மற்றும் மாற்றாந்தாய் பாத்திரங்களாக வெளிப்பட்டது. தந்தை பணிபுரிந்த கான்பூர், கோரக்பூர், லக்னோ போன்ற ஊர்களுக்கு அவருடன் சென்றார். தனிமையைப் போக்க வாசித்த புனைவு நூல்கள் வாசிப்பின் மீது ஆர்வத்தை வளர்த்தன. ஹிந்தி, உருது, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் சிறந்த புலமை பெற்றார். தாகூர், டால்ஸ்டாய், விக்டர் ஹ்யூகோ, ரொமைன் ரோலந்த்(Romain Rolland), டிக்கன்ஸ் ரெநால்ட்ஸ்(George W. M. Reynolds) போன்றவர்கள் அவரது ஆதர்ச எழுத்தாளர்களாக இருந்தனர்.

1890-ல் காசியில் குவீன்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். ஆங்கிலம் கற்றார். மெட்ரிகுலேஷன் தேர்வில் இரண்டாம் நிலையில் தேர்ச்சி பெற்றார். கணிதத்தில் தேர்ச்சி இல்லாமையால் மேல்படிப்பிற்கு இடம் கிடைக்கவில்லை. கணிதம் அவருக்கு மிகக் கடினமானதாக இருந்தது. பின்னாட்களில் இந்த அனுபவம் 'படே பாயீ சாஹப்' (அண்ணாச்சி) என்ற சிறுகதையில் வெளிப்பட்டது.

1919-ம் ஆண்டில் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம், வரலாறு, பாரசீகம் ஆகியவற்றை முக்கியப் பாடங்களாகப் படித்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பிரேம்சந்த் குடும்பத்துடன்

பிரேம்சந்துக்கு அக்கால வழக்கப்படி 1895-ல் பதினைந்தாம் வயதில் அவரைவிட மூத்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. பொருந்தாத் திருமணத்தின் கருத்து வேறுபாடுகளால் முதல் மனைவி அவரைப் பிரிந்து சென்றார். 1897-ல் தந்தையின் இறப்பு காரணமாக குடும்பப் பொறுப்பை ஏற்றார். வழக்கறிஞர் ஒருவரின் மகனுக்கு வீட்டில் கல்வி கற்பித்தார். 1906-ம் ஆண்டில் ஃபதேபூரில் வாழ்ந்த முன்ஷி தேவி பிரசாதின் மகள் பால்ய விதவையான ஷிவ்ராணி தேவியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். ஷிவ்ராணி தேவி ப்ரேம்சந்தின் இலக்கிய முயற்சிகளுக்கு உற்சாகமும், தூண்டுதலும் அளித்தவர். விடுதலைப் போராட்டத்தில் இருமுறை சிறை சென்றவர். அவர் தனது கணவரைப்பற்றி எழுதிய 'பிரேம்சந்த் கர் மேன்'( प्रेमचंद घर में, வீட்டில் பிரேம்சந்த்) பிரேம்சந்தின் ஆளுமையைப் பற்றிய குறிப்பிடத்தகுந்த நூல்.

பிரேம்சந்த் 1899 முதல் 1920-ம் ஆண்டு வரை உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப்பகுதி பள்ளிகளில் உதவி பள்ளிகல்வி ஆய்வாளராகவும் (Deputy Inspector of Schools) ,ஆசிரியராகவும் பணிகளில் இருந்தார். 1916-ல் கோரக்புர் நார்மல் உயர்நிலைப்பள்ளியில் உதவி தலைமையாசிரியராகப் பணியேற்றார். மகாத்மா காந்தியின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு 1920-ல் தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட மனைவி ஷிவ்ராணி தேவி சிறை சென்றார். ஓத்துழையாமைப் போராட்டத்திற்குப்பின் கிராமத்தில் ராட்டைகளை விற்பனை செய்யும் கடையை நடத்தினார். அது வெற்றிகரமாக நடக்கவில்லை. 'மர்யாதா', 'மாதுரி', 'ஹன்ஸ்' போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தார். 1923-ல் காசியில் 'சரஸ்வதி ப்ரெஸ்' என்ற அச்சகத்தைத் துவக்கி நடத்தினார். பல இதழ்களின் ஆசிரியராக இருந்தார். 1931-ல் சில மாதங்கள் கான்பூரின் மார்வாரி கல்லூரியில் ஆசிரியராகவும், அதன்பின் காசி வித்யாபீடத்தின் முதல்வராகவும் பணியாற்றினார்.

1932-ல் தனது குடும்பத்துடன் பிரேம்சந்த் தனது கிராமமான லம்ஹிக்குச் சென்றார். கிராமத்தின் சூழலில் குடியானவர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களது இன்ப துன்பங்களை நேரில் கண்டறிந்து அதன் பின்னணியில் 'கோதான்' நாவலை எழுதத் தொடங்கினார்

1934-ல் பம்பாய் அஜந்தா சினிடோனில் இணைந்து ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார். திரையுலகம் அவருக்கு அத்து வராததால் பம்பாயிலிருந்து வாரணாசிக்குத் திரும்பினார்.

பிரேம்சந்த், ஷிவ்ராணி தேவி இணையருக்கு இரண்டு மகன்கள் அம்ருத் ராய், ஶ்ரீபத்ராய். மகள் கமலா தேவி. அம்ருத் ராய் ஹிந்தி எழுத்தாளர். 'கலம் கா சிபாஹி'(பேனா வீரர்) என்ற பெயரில் எழுதிய பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாற்று நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.

அரசியல்

பிரேம்சந்த் மகாத்மா காந்தியில் கொள்கைகளிலும், அஹிம்சைப் போராட்டத்திலும் ஈடுபாடு கொண்டு, 1920-ல் தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஈடுபட்டார். விடுதலையானபின் சிலகாலம் ஒரு ராட்டை விற்பனை செய்யும் கடையை நடத்தினார். 1935-ல் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (All India Progressive Writers Movement) தொடங்கப்பட்டபோது லண்டனில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அதன் கொள்கை விளக்க அறிக்கையை(manifesto) மதிப்பாய்வு செய்தார். அதை ஹிந்தியில் மொழியாக்கம் செய்து 'ஹன்ஸ்' இதழில் வெளியிட்டார். 1936-ல் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் முதல் மாநாட்டில் 'இலக்கியத்தின் நோக்கம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

பிரேம்சந்த் 'நவாப்ராய்' என்ற பெயரில் ஜமானா( Zamana) என்ற உருது நாளிதழில் பல கட்டுரைகளும் கதைகளும் எழுதினார். முதல் கட்டுரை விடுதலைப் போராட்டத்தில் கோகலேயின் மிதவாதப் போக்கை எதிர்த்தும் திலகரை ஆதரித்தும் எழுதப்பட்டது. சமகால அரசியல், சமூக நிகழ்வுகளைப்பற்றிய பத்திகளை(column) தொடர்ந்து எழுதினார். முதல் சிறுகதை 'துனியா கே சப்சே அன்மோல் ரதன்'(உலகின் விலைமதிப்புமிக்க மணி). தேசிய எழுச்சியின் பின்னணியில் அமைந்த ஆரம்பகால உருது சிறுகதைகளின் தொகுப்பு சோஜ்-ஏ-வதன்(सोज़े-वतन ) (தேசத்தின் விம்மல்) 1907-ல் வெளிவந்தது. ஹமிர்புர் மாவட்டத்தில் கல்வித்துறைக் கண்காணிப்பாளராகப் பணியில் இருந்தபோது இத்தொகுப்பின் பிரதிகள் மாவட்ட ஆட்சியரால் கைப்பற்றப்பட்டு, புரட்சியைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 'நவாப்ராய்' என்ற பெயரில் எழுதுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஜமானா இதழின் ஆசிரியர் தயாநாராயண் நிகம் சூட்டிய 'பிரேம்சந்த்' என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார் .

பிரேம்சந்த் ப்ரதாப்கர், ராய் பரேலி, ஃபைஸாபாத் மாவட்டங்களில் பணியாற்றியபோது உழவர்கள் நிலவுடமையாளர்களால் சுரண்டப்படுவதையும், அவர்களின் வறுமையையும் நேரில் கண்ட அனுபவங்களின் பாதிப்பு அவரது படைப்புகளில் காணப்படுகிறது.

பிரேம்சந்தின் படைப்புகள் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழியக்கம் செய்யப்பட்டன. ஆங்கிலம் மற்றும் ரஷ்ய, ஜெர்மானிய, பிரஞ்சு, ஸ்பானிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. ரஷ்ய மக்கள் விரும்பி வாசித்த இந்திய எழுத்தாளராக பிரேம்சந்த் இருந்தார்.

நாவல்கள்

பிரேம்சந்த் 14 நாவல்கள் எழுதினார். சில நாவல்கள் உருது, ஹிந்தி இரு மொழிகளிலும் எழுதப்பட்டன. இயல்புவாதமும், முற்போக்குக் கருத்துகளும், பேசாப் பொருளைப் பேசும் துணிவும் அவரது புதினங்களின் சிறப்புகள். தேசிய எழுச்சி மற்றும் சமூகப்புரட்சிகளால் விழிப்புணர்வு பெறத் தொடங்கியிருந்த காலகட்டத்தில் ஹிந்தியில் எழுதப்பட்ட அவரது படைப்புகள் பரவலாக அதிகம் வாசகர்களைச் சென்றடைந்தன. உருதுவில் 'பரத்தை'(बज़ार-ए-हुस्न) என்ற தலைப்பில் எழுதப்பட்ட நாவல் ஹிந்தியில் 'சேவாசதன்' என்று பெயர்மாற்றம் கண்டது. இலக்கியத்தை சமுதாய மாற்றத்திற்கான கருவியாகக் கண்டார் பிரேம்சந்த். பண்டிதர்கள் எழுதும் சமஸ்கிருதம் கலந்த ஹிந்தியில் அல்லாமல் உருது கலந்த, எளிய மக்கள் பேசும் ஹிந்துஸ்தானியில் அவரது நாவல்கள் எழுதப்பட்டன.

  • அஸ்ரார்-ஏ-முஆவித்(असरारे म आबिद) ,கோவில்களின் புதிர்)- பிரேம்சந்தின் முதல் நாவல். ஜமானா உருது பத்திரிகையில் தொடராக (1903-1905)வெளிவந்தது. இதன் ஹிந்தி மொழி வடிவம் 'கோவில்களின் மர்மம்' (देवस्थान रहस्य). எளிய மக்களின், இளம் பெண்களின் இறைநம்பிக்கையும், அப்பாவித்தனமும் கோவில் பூசாரிகளால் சூறையாடப்படுவதைப் பேசுபொருளாகக் கொண்டது.
  • ப்ரேமாஷ்ரம்-எழை விவசாயிகள் ஜமீந்தாரி முறையின் அடக்குமுறையை எதிர்த்த அகிம்சைப் போராட்டத்தின் சித்திரம். நாயகன் பிரேம்சங்கரின் கதாபாத்திரம் காந்தியின் சாயலைக் கொண்டது.
  • சேவாசதன்-பிரேம்சந்தின் பெரும் சமூகநாவல்களில் முதலாவது சேவாசதன். இதுவே உருது. இந்தி மொழிகளில் தோன்றிய முதலாவது சமூகநாவல். தமிழில் 'சேவாசதனம்' என்ற பெயரில் எஸ். அம்புஜம்மாளால் மொழியாக்கம் செய்யப்பட்டு ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, நூல்வடிவம் கண்டது. வரதட்சிணை கொடுக்க முடியாததால் வயது முதிர்ந்தவருடன் பொருந்தாத் திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண் சிறு தவறுக்காக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வாரணாசி நகரின் புகழ்பெற்ற கணிகையால் அடைக்கலம் அளிக்கப்படுகிறாள். வாரணாசியில் கணிகைகள் கலைகளில் வல்லவர்களாகயும் செல்வந்தர்கள் நாடி வருபவர்களாகவும் இருந்தனர். புரிதலோ, மரியாதையோ இல்லாமல் ஒருவருடன் வாழும் வாழ்வைவிட கணிகைகளின் வாழ்வே மேல் என்று அந்த பாதையைத் தேர்வு செய்து, புகழ்பெற்ற கணிகையாகிறாள். அரசியல், சமூக நிலை மாறுபாடுகளால் நகரின் நடுவில் பெருமையுடன் வாழ்ந்த கணிகைகள் நகரின் வெறும் பாலியல் தொழிலாளிகளாக புற எல்லைக்குத் தள்ளப்படும் காட்சி விரிகிறது. தன் சகோதரியின் வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பரத்தை வாழ்க்கையைத் துறந்து ஆசிரியையாகிறாள். அவர்களின் குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆதரவு இல்லத்தில் ஆசிரியையாக அவளுக்கு மீட்சி அமைகிறது.
  • நிர்மலா(1926)-வரதட்சிணை காரணமாக வயதானவர்க்கு மணம் முடிக்கப்படும் இளம் பெண் நிர்மலா. தன் மகனுக்கும் நிர்மலாவுக்கும் தவறான உறவிருப்பதாக சந்தேகப்படும் கணவன். 1925-26 'சாந்த்' பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.
  • ப்ரதிக்ஞா(1927)(சபதம்)- விதவை மறுமணத்தை பேசுபொருளாகக் கொண்ட நாவல்
  • கபன்(1929,ஊழல்) மக்களிடையே குறைந்து வரும் நேர்மையும் பெண்களுக்கு தங்க நகைகள் மேல் இருந்த தீராத மோகமும் பேசுபொருள்கள். 1966-ல் அதே பெயரில் ரிஷிகேஷ் முகர்ஜியால் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
  • வர்தான் (வரம்)-விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்த லட்சியவாதப் படைப்பு. கதையின் நாயகன் விவேகானந்தர், காந்தி, தயானந்த சரஸ்வதி ஆகியோரின் சாயல்களும், சேவை மனப்பன்மையும் கொண்ட நாயகன்.
  • காயகல்ப்(காயகல்பம்)-சந்தர்ப்பங்களாலும், மாறும் வாழ்க்கைச் சூழல்களாலும் மனிதன் அடையும் வளர்சிதை மாற்றத்தை பேசுபொருளாகக் கொண்டது. விதிவசத்தால் களங்கமில்லாத மனம் கொண்டவர் ஆணவக்காரராகவும், கருணை உள்ளம் கொண்டவன் கொடுங்கோல் ஆட்சியாளனாகவும், கொடூரமான குற்றவாளி நல்ல மனிதனாகவும் மாற்றமடைகின்றனர்.
  • ரங்க்பூமி(அரங்கம்)-1000 பக்கங்கள் கொண்ட நாவல். தனது பூர்வீக நிலத்தை தக்கவைத்துக்கொள்ளவும், கிராமத்தில் தொழிற்சாலையின் வரவினால் விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடும், காந்தியின் சாயலை உடைய சூர்தாஸ் என்ற பார்வையிழந்த இரவலனின் கதை. சூர்தாஸ் மாற்றுத்தரப்புடன் உரையாடலும் சமரசமும் தன் போராட்டத்திற்கான வழிமுறையாகக் கொண்டவன்.
  • கோதான் (தமிழில் கோதானம்)-கோதான் பிரேம்சந்தின் மகத்தான படைப்பு என மதிக்கப்படுவது. ஒரு வகுப்பு, வர்க்கத்தின் வாழ்வியல் போராட்டம், சுரண்டல்கள், அறியாமை., இந்திய விவசாயியின் நெடுநாளையத் துன்பத் துயரங்களை ஹோரி என்ற ஒரு பாத்திரத்தின்மூலம் உருவகப்படுத்தினார். கதாநாயகநான ஹோரி பரம்பரைப் பழக்க வழக்கங்களாலும், நம்பிக்கைகளாலும் செலுத்தப்படுபவன். தன் மண்ணின் மீது மிகுந்த பற்றுடையவன். வீட்டின் முற்றத்தில் ஒரு பசு இருப்பதுதான் வளமும், நிறைவும் தரும் என்ற ஆசையில், ஒரு பசுவை வாங்க பொருள் சேர்க்கும் அவனது முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. , தன் பேரனுக்கு பால்தர பசு வாங்க வேண்டும் என்று கூலி வேலை செய்து, கல் சுமந்து பாடுபடும் அவன், முடிவில் அக்கனவு நனவாகாமலேயே சுரண்டலுக்குப் பலியாகி, கடனில் மூழ்கி உயிர் துறக்கிறான். ஹோரியின் மனைவி தனியா மிகச் சிறப்பான அழுத்தமான பாத்திரம். அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்கும் துணிவு கொண்டவள்.
  • பிரேம்சந்த் இறுதியாக எழுதிய நாவல் 'மங்கல்சூத்ர' (மங்கலநாண்) தன்வரலாற்றுத்தன்மை கொண்டது. 70 பக்கங்கள் மட்டுமே எழுதப்பட்டிருந்து நண்பர் எழுத்தாளர் ஜைனேந்திர குமாரால் நிறைவு செய்யப்பட்டது.
சிறுகதைகள்

பிரேம்சந்த் 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். அவரது சிறுகதைகள் நேரடியான கதைகூறலில் மானுட உண்மைகளை, வாழ்வின் தருணங்களை, புதிய கோணங்களில் வெளிப்படுத்தின. சில கதைகள் அவருடைய வாழ்க்கை மற்றும் இளமைக்கால அனுபவங்களின் தொகுப்பாக அமைந்தன. கஃபன்( தமிழில்: சவச்சல்லா), ஷத்ரஞ்ச் கே கிலாடி (தமிழில்:சதுரங்க ஆட்டக்காரர்கள்), ஈத்காஹ்(ஈத் பண்டிகை), பூஸ் கி ராத்(தை மாத இரவு), பூடி காகி (கிழக்குழந்தை) , நமக் கா தாரோகா ( உப்பு இன்ஸ்பெக்டர்) , தோ பைலோன் கி கதா(தமிழில்: இரு எருதுகளின் கதை), டாகுர் கா குவான்(டாக்குரின் கிணறு) போன்ற சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை. குலைந்து வரும் கிராம வாழ்க்கை, வறுமை, பலவீனங்கள், நிர்ப்பந்தங்களுடன் போராடினாலும் திடமான உறுதியும், குலைக்க முடியாத நம்பிக்கைகளுடனும் வாழும் விவசாயிகள், அவர்கள் வாழ்வில் வந்து செல்லும் அரிய மகிழ்வான, நெகிழ்வான தருணங்கள், நாடு அன்னியர் கைகளுக்குச் செல்வதை உணராது ஆடம்பரத்திலும், கேளிக்கையிலும் மூழ்கிய சிற்றரசர்கள் என பிரேம்சந்தின் சிறுகதைகள் அக்கால சமூக சூழலையும், வாழ்வியலையும் பிரதிபலித்தன. 'சதுரங்க ஆட்டக்காரர்கள்' சிப்பாய்க் கலகத்தின் போது பிரிட்டிஷார் நாட்டைக் கைப்பற்றும் தருணத்திலும் சதுரங்க விளையாட்டில் மூழ்கி, பூசலிட்டு ஒருவரையொருவர் வெட்டி சாய்க்கும் இரு சிற்றரசர்களைப் பற்றியது. சத்யஜித் ரேயால் 1977-ல் திரைப்படமாக எடுக்கப்பட்டு, சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. வரப்போகும் சமுதாய மாற்றத்திற்கான அறிகுறிகளாக, இறக்கும் தருவாயிலுள்ள கணவனின் தாகம் தீர்க்க கிராமக் கட்டுப்படுகளை மீறி ஜமீந்தாரின் கிணற்றில் துணிந்து தண்ணீர் எடுக்கச் செல்லும் பெண் போன்ற கதாபாத்திரங்கள் அமைந்தன.

பார்க்க: பிரேம்சந்த் சிறுகதைகள்(தமிழில்)[1]

அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

1935-ல் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (All India Progressive Writers Movement) தொடங்கப்பட்டபோது லண்டனில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அதன் கொள்கை விளக்க அறிக்கையை(manifesto) மதிப்பாய்வு செய்தார். அதை ஹிந்தியில் மொழியாக்கம் செய்து 'ஹன்ஸ்' இதழில் வெளியிட்டார். 1936-ல் அகில் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் முதல் மாநாட்டில் 'இலக்கியத்தின் நோக்கம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்[2]. உண்மை, அழகு, மனிதத்தன்மை, அக விடுதலை இவற்றை அடித்தளமாகக் கொண்டு, சமகாலத்தன்மையோடு, வாழ்வை மறுவிசாரணை செய்வதே இலக்கியத்தின் நோக்கம் என்று வலியுறுத்தினார். இந்த உரையின் முக்கியத்துவம் கருதி இந்தியாவின் பல மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.

மொழியாக்கங்கள்

பிரேம்சந்த் ஆங்கில, உருது மொழி இலக்கியங்களை ஹிந்தியில் மொழியாக்கம் செய்தார். சார்ல்ஸ் எலியட்டின் சைலாஸ் மார்னர்(Silas Marner) நாவலை 'சுக்தாஸ்' என்ற பெயரில் ஹிந்தியில் இந்தியச் சூழலுக்கேற்ப மறு ஆக்கம் செய்தார். சார்லஸ் டிக்கன்ஸ்(The Story of Richard Doubledick),மேக்சிம் கார்க்கி, கார்க்கி, ஆஸ்கர் வைல்ட், டால்ஸ்டாய், மாப்பசான் போன்றோரின் ஐரோப்பிய இலக்கியங்களை ஹிந்தியில் மொழியாக்கம் செய்தார். ரதன் நாத் தர் சர்ஷாரின் இரு நாவல்களை உருதுவிலிருந்து ஹிந்தியில் மொழியாக்கம் செய்தார்.

இதழியல்

பிரேம்சந்த் 'ஹன்ஸ்', 'ஜாகரண்', 'மாதுரி' ஆகிய இதழ்களை நடத்தினார். அரசியல், சமூகச் சீர்கேடு, தீண்டாமை, இன, மத மோதல்கள் குறித்து பல கட்டுரைகளை அந்தப் பத்திரிகைகளில் எழுதிவந்தார்.

திரைத்துறை

அஜந்தா சினிடோன் திரைப்படக் கம்பெனியில் திரைக்கதை எழுதுவதற்காக பம்பாய்(தற்போது மும்பை) சென்றார். மஜ்தூர் (mazdoor) திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதினார். அந்தப் படத்தில் பிரேம்சந்த் பாத்திரத்தில் நடித்தார்.

பரிசுகள், விருதுகள்

ஹிந்துஸ்தானி அகாதெமி(ரூ. 500/- (ரங்க்பூமி)

லம்ஹியில் பிரேம்சந்தின் மார்பளவு சிலை wikimedia commons

இலக்கிய இடம்

google.com/doodles

பிரேம்சந்த் ஹிந்தி இலக்கியத்தின் முதல் இயல்புவாத எழுத்தாளராக மதிப்பிடப்படுகிறார். சாகசமும் கற்பனாவாதமும், காதலும் மட்டுமே பேசுபொருள்களாக இருந்த ஹிந்தி இலக்கியத்தில் இயல்புவாதத்தின் தொடக்கமாக பிரேம்சந்தின் படைப்புகளைக் குறிப்பிடலாம். "கற்பனை அலங்காரம், மர்மம், சரித்திர மோகம் முதலிய அம்சங்களே நிறைந்து கிடந்த உருது, இந்திமொழிகளின் படைப்பிலக்கியத்தில் புதிய ஒளியைப் புகுத்திய பெருமை பிரேம் சந்தையே சேரும்" என்று வல்லிக்கண்ணன் குறிப்பிடுகிறார். பிரேம்சந்தின் இலக்கியக் கோட்பாடு யதார்த்தவாதத்தில் காலூன்றிய இலட்சியவாதம் (Idealistic Realism) என வரையறுக்கப்படுகிறது. அவரது ஆரம்பகாலப் படைப்புகளில் லட்சியவாதமும், தேசப்பற்றும் மேலோங்கியிருந்தன. அவரது பல கதாபாத்திரங்கள் காந்தியின் சாயலைக் கொண்டிருந்தன. சமகால இந்திய இலக்கியப்படைப்புகளைவிட பிரேம்சந்தின் படைப்புகளில் தேசீய விழிப்புணர்வும், நாட்டுப்பற்றும் சமூக மாற்றத்திற்கான விழைவும், பொதுவுடைமை, முற்போக்குக் கருத்துக்களும் பிரதிபலித்து, சமூக மாற்றத்திற்கான கருவிகளாக அமைந்தன. ஹிந்தியில் தலித் இலக்கியத்தின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். மத நல்லிணக்கம் ஒவ்வொரு படைப்பிலும் வலியுறுத்தப்பட்டது.

அவரது பிற்காலப் படைப்புகள் எளிய மக்களின் வாழ்வியலையும், துன்பங்களையும் பேசின. அடித்தளத்து உழைக்கும் வர்க்கத்தினர், குடியானவர்களின் துன்பமும் துயரமும், அவர்களைச் சூழ்ந்திருக்கும் அடக்குமுறையும், யதார்த்த வாழ்வின் கசப்பான உண்மைகளும், அவர்களிடையே மண்டிக் கிடக்கும் அறியாமையும், இருளிடையே ஒளிரும் மின்னல் போன்ற அவர்களின் மனித நேயமும் சித்தரிக்கப்பட்டுள்ளன. எளியவர்களின் துன்பம் பற்றிய ஆழ்ந்த அக்கறையும், இந்திய கிராமப்புற வாழ்வின் இயங்கியல்(dynamics) மற்றும் சமகால வரலாறு பற்றிய கூர்ந்த அவதானிப்பும் அவர் படைப்புகளில் வெளிப்பட்டன. 'கோதான் குந்தர் கிராஸ் போன்றவர்களால் பாராட்டப்பட்ட, இந்தியாவின் தலைசிறந்த நாவல்களுள் ஒன்றாக மதிப்பிடப்படும் படைப்பு. ஹோரியின் கதாபாத்திரம் துயருறும் இந்தியாவின், இந்திய விவசாயியின் உருவகமாகப் பார்க்கப்பட்டது.

பிரேம்சந்தின் கதாபாத்திரங்கள் உயிரோட்டம் மிக்கவை. அவரது பெண் கதாபாத்திரங்கள் வலுவான எதிப்புக்குரல்கள் எழுப்பியவை. அவரது சிறுகதைகள் வட இந்தியாவின், குறிப்பாக கங்கைச் சமவெளியின் வாழ்வியலை, மொழியின் எளிய அழகியலை, வாழ்வின் தருணங்களைக் காட்சிப்படுத்தியவை. சரஸ்வதி இதழ் "மேற்குலகின் உத்திகளோடு இந்தியாவின் ஆன்மாவும் இணைந்த எழுத்து" என்று 'சேவாசதன்' நாவலைப் பாராட்டியது. அவரது சிறுகதைகளை மொழியாக்கம் செய்த டேவிட் ருபின் தன் முன்னுரையில் "ஹிந்தி, உருது மொழிகளில் நவீன சிறுகதை, நாவல் என்னும் இலக்கிய வகைமைகளை உருவாக்கிய பெருமை பிரேம்சந்தையே சேரும். தனி ஒருவராக மேற்கின் புனைவுலகுக்கு சமமாக அதை உயர்த்தியதோடு, அதில் தலைசிறந்தவராகவும் இருந்தார்" என்று குறிப்பிட்டார் (To Premchand belongs the distinction of creating the genre of the serious short story—and the serious novel as well—in both Hindi and Urdu. Virtually single-handed he lifted fiction in these languages from a quagmire of aimless romantic chronicles to a high level of realistic narrative comparable to European fiction of the time; and in both languages, he has, in addition, remained an unsurpassed master).

பிரேம்சந்த் சிறுகதைகள், கோதான் க.நா. சு.வின் உலக இலக்கிய சிகரங்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன.

பிரேம்சந்த் நவீன ஹிந்தி உரைநடையின் முன்னோடிகளுள் குறிப்பிடத்தகவர். ஹிந்தி உரைநடைக்கு எளிமையும், சரளமும், யதார்த்தமும் பிரேம்சந்தின் இன்றியமையாத பங்களிப்புகள்.

Premchand1980stamp.jpg

மறைவு

தொடர்ந்து வயிற்றுக் கோளாறுகளால் துன்பப்பட்டு வந்த பிரேம்சந்த் அக்டோபர் 8,1936 அன்று காலமானார்.

நினைவேந்தல்
  • பிரேம்சந்த் பிறந்த ஊர் லாம்ஹியில் அவரது இல்லம் புதிப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டது. அவரது படைப்புகளுக்கான ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டது.
  • சிலிகுரியில் முன்ஷி பிரேம்சந்த மகாவித்யாலயா என்று அவர் பெயரில் கல்லூரி ஏற்படுத்தப்பட்டது.
  • பிரேம்சந்தின் நூற்றாண்டை ஒட்டி, 1980-ல் இந்திய அரசு 30 காசுக்கான தபால்தலை வெளியிட்டது.
  • ஜூலை 31,2016 ( அவரது 136-ஆவது பிறந்த தினம்) அன்று கூகுள் நிறுவனம் தன் வலைப்பக்கத்தில் டூடுல் (Google doodle) ஓவியத்தால் அவரைச் சிறப்பித்தது.
  • சாகித்ய அகாதெமி 2005-ல் பிரேம்சந்த் ஆய்வுநல்கையை (fellowship) ஏற்படுத்தியது. தென்கிழக்காசிய நாடுகளைச் (SAARC) சேர்ந்த, இந்திய இலக்கியப், பண்பாட்டு ஆய்வாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

படைப்புகள்

நாவல்
  • வர்தான்(1912) (பிரேம்சந்த் என்ற புனைபெயரில்)
  • சேவாசதன் (1919) (உருதுவில் பாஸார்-ஏ-ஹுஸ்ன்)
  • ப்ரேமாஷ்ரம்(1922) (உருதுவில் நகாம்)
  • ரங்க்பூமி (1925) (உருதுவில்)
  • காயகல்ப்(1926)
  • நிர்மலா (1926)
  • ப்ரதிக்ஞா (1926)
  • கபன் (1931)
  • கர்மபூமி(1932)
  • கோதான்(1936)
  • மங்கல்சூத்ர(
புகழ்பெற்ற சிறுகதைகள்
  • ஷத்ரஞ்ச் கே கிலாடி(1924)
  • கஃபன் (1924)
  • கர்பாலா
  • சத்கதி
நாடகம்
  • ஹோன்ஹார் பிர்வான் (விளையும் பயிர்)
    சங்க்ராம்
  • ப்ரேம் கி வேதி (காதல் மேடை)
தமிழ் மொழியாக்கங்கள்
  • சேவாசதனம்- அம்புஜம்மாள்
  • கோதானம்- சரஸ்வதி ராம்நாத்
  • பிரேம்சந்த் சிறுகதைகள்-
மொழியாக்கங்கள்
  • Silas Marner-George Eliot(Sukhdas)
  • Letters from a father to a daughter-Jawaharlal Nehru
  • he Story of Richard Doubledick
பிரேம்சந்தின் படைப்புகளின் திரை வடிவங்கள்
  • சேவாசதன் ஹிந்தியிலும் தமிழிலும்(சேவாசதனம்) திரைப்படமாக்கப்பட்டது.
  • கபன் 1966-ல் திரைவடிவம் கண்டது.
  • 1977-ல் 'ஷத்ரஞ் கே கிலாடி' (சதுரங்க ஆட்டக்காரர்கள்) சத்யஜித் ரேயால் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.
  • கஃபன் சிறுகதை மிருனாள் சென்னால் 'ஒகெ ஊரி கதா' என்ற தெலுங்கு திரைப்படமாக எடுக்கப்பட்டது
  • பிரேம்சந்தின் படைப்புகளைப்பற்றி மூன்றுக்கு மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள் எடுக்கப்பட்டன
penguin.co.in
மொழியாக்கம் செய்யப்பட்ட பிரேம்சந்தின் படைப்புகள்
  • The world of Premchand by David Rubin (selected short stories)
  • நிர்மலாவின் ஆங்கில மொழியாக்கங்கள் 'The Second Wife' - டேவிட் ரூபின், Nirmala-ஆலோக் ராய்(பிரேம்சந்தின் பேரன்)
  • கோதான் - ஆங்கிலத்தில் 'The Gift of a cow' -Gordon C. Toadarmel 1968
  • பெங்குவின் நிறுவனம் பிரேம்சந்தின் அனைத்து சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கங்களையும் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டது(2018).

உசாத்துணை

இணைப்புகள்

டாக்கூரின் கிணறு-பிரேம்சந்த், வனம் இதழ் அக்டோபர் 2021

அடிக்குறிப்புகள்


✅Finalised Page