under review

பங்கிம் சந்திர சட்டர்ஜி

From Tamil Wiki
சந்திரன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சந்திரன் (பெயர் பட்டியல்)
Bankim.jpg

பங்கிம் சந்திர சட்டர்ஜி (பங்கிம் சந்திர சட்டோபாத்யாய) (ஜூன் 26 அல்லது 27, 1838 - ஏப்ரல் 8, 1894) வங்க எழுத்தாளர், நாவலாசிரியர், கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர். இந்தியாவின் முதல் நாவலான 'துர்கேஷ நந்தினி' யை எழுதியவர். நவீன வங்காள மற்றும் இந்திய இலக்கியத்தின் அடையாளங்களில் ஒன்றான 'ஆனந்த மத்' புகழ்பெற்ற படைப்பு. 'வந்தே மாதரம்' என்ற தேசியப் பாடலை இயற்றியவர். பதினான்கு நாவல்கள் மற்றும் பல தீவிரமான, பகடி, அறிவியல் மற்றும் விமர்சனக் கட்டுரைகளை வங்காளத்தில் எழுதினார். வங்க இலக்கியத்தில் 'சாகித்ய சாம்ராட்' (இலக்கியத்தின் பேரரசர்) என்று அழைக்கப்படுகிறார். வங்க இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கும், வங்க மாநிலத்தில் தேசிய இயக்கத்திற்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தவை அவரது படைப்புகள். சரத் சந்திரர், ரபீந்திரநாத் தாகூர் போன்றோரின் முன்னொடி; அவர்கள் படைப்புகளில் தாக்கம் செலுத்தியவர்

பிறப்பு, கல்வி

பங்கிம் சந்திரர் அன்றைய வங்காள மாநிலத்தில் வடக்கு 24 பர்கானாஸ், நைஹாட்டி நகரத்தில் உள்ள காந்தல்பாரா கிராமத்தில், வங்காள பிராமண குடும்பத்தில், மூன்று சகோதரர்களில் இளையவராக, யாதவ் சந்திர சட்டோபாதயாய, துர்காதேபி இணையருக்கு ஜூன் 26 (அல்லது 27), 1838 அன்று பிறந்தார். அவரது முன்னோர்கள் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள தேஷ்முகோ கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவரது தந்தை, அரசு அதிகாரி, மிட்னாபூர் துணை கலெக்டராக இருந்தார். சகோதரர் சஞ்சிப் சந்திர சட்டோபாத்யா நாவலாசிரியர். சகோதரர்கள் மூவரும் ஹூக்லி கல்லூரிப் பள்ளியில் (Hooghly Collegiate School) பயின்றனர். அங்கு பங்கிம் சந்திரர் தனது முதல் கவிதையை எழுதினார். ஹூக்ளி மொஹ்சின் கல்லூரியிலும், பின்னர் கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியிலும் கல்வி பயின்றார். 1859-ல் இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்ற முதல் இருவரில் ஒருவர். 1869-ல் சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பங்கிம்சந்திரர் வங்க அரசாங்கத்தில் துணை நிர்வாகப் பணியில் சேர்ந்தார். 1858-ல் ஆம் ஆண்டில், ஜெஸ்ஸூரின் துணை மாஜிஸ்திரேட்டாக (அவரது தந்தை வகித்த அதே வகை பதவி) நியமிக்கப்பட்டார். பதவி உயர்வுடன் 'ஹில்னா' பகுதிக்கு மாற்றப்பட்ட பங்கிம் சந்திரர் அங்கிருந்த கொள்ளைக் கூட்டத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தினார். அங்குள்ள விவசாயிகளைக் கொத்தடிமைகளாக நடத்திய ஜமீன்தார்கள் மேல் நடவடிக்கை எடுத்தார். மக்களுக்குப் பாதுகாப்பு அளித்தார். ஆங்கில அரசு பங்கிம்மின் நிர்வாகத் திறமையைப் பாராட்டியது.1863-ல் துணை கலெக்டராக உயர்ந்தார். ஹௌராவில் பணிபுரிந்த காலத்தில் பங்கிம் சந்திரர் முதல் பிரிவு அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். 1891-ல் அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

பங்கிம் சந்திரருக்கு ஆன்மீக ஈடுபாடு இருந்தது. ராமகிருஷ்ண பரமஹம்சருடன் பக்தி கலந்த நட்பு இருந்தது.

பங்கிம் சந்திரருக்கு அக்கால வழக்கப்படி பதினொன்றாம் வயதில் ஐந்து வயது சிறுமி ஒருத்தியுடன் திருமணம் நடைபெற்றது. முதல் மனைவி இறந்து விட்டார். பத்தாண்டுகளுக்குப் பின் ராஜலக்ஷ்மி தேவி என்பவரை மணந்து கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

பங்கிமின் எழுத்துப் பணி ஈஸ்வர சந்திரா குப்தா என்பவர் வெளியிட்ட 'சங்க்பத் பிரபாகர்' என்ற வார இதழில் தொடங்கியது.

கவிதை

வங்காளப் புனைகதைத் துறையில் புகுமுன் பங்கிம்சந்திரர் ஈசுவர சந்திர குப்தா ஆசிரியப்பணி ஏற்றிருந்த சம்பத் பிரபாகர்(சங்க்பத் பிரபாகர்), 'சம்பத் சாது ரஞ்சன்' (சங்பத் சாது ரஞ்சன்) என்ற வெளியீடுகளுக்கு, பெரும்பாலும்கவிதை வடிவிலேயே, படைப்புகள் தந்து கொண்டிருந்தார். மாணவப் பருவத்திலேயே (1850) 'லலிதா ஓ மனஸ்' எனும் கவிதை நூல் வெளியானது.

பங்கிம் சந்திரர் தமது சமகாலத்தில் வாழ்ந்த கவிஞர் ஈஸ்வர சந்திரகுப்தாவின் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கினார்

நாவல்கள்

ராஜ்மோகனின் மனைவி

பங்கிமின் முதல் நாவலான 'ராஜ்மோகனின் மனைவி' (1864) முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளியிடப்படாமலே இருந்தது. கிஷோரிசந்த் மித்ரா என்பவர் ஆசிரியாராயிருந்த *'இந்தியன் ஃபில்டு' என்னும் பத்திரிகையில் பின்னர் வெளிவந்தது. இதுவே இந்தியாவில், ஓர் இந்தியரால் எழுதப்பட்ட முதல் ஆங்கில நாவல் எனக் கருதப்படுகிறது.

துர்கேஷ நந்தினி

பங்கிம் சந்திரர் வங்காள மொழியில் எழுதிய முதல் நாவல் 'துர்கேஷ நந்தினி' 1865-ம் வருடம் வெளியானது. முதல் வங்க நாவலாகவும், இந்திய நாவலாகவும் கருதப்படுகிறது. அக்பரின் ஆட்சியின் போது பச்சிம்பங்கா (மேற்கு வங்கம்) தென்மேற்கு பகுதியில் நடந்த பதான்-முகலாய மோதல்களின் பின்னணியில் அமைந்த காதல் கதை.

கபால குண்டலா

பங்கிம்மின் இரண்டாவது நாவல் கபால குண்டலா[1]' (1866) (தமிழில் த.நா. குமாரசுவாமி) மக்கள் தொடர்பு இல்லாத கடலோரக் காடு ஒன்றில் நரபலி கொடுக்கும் காபாலி சந்நியாசியால் வளர்க்கப்படும் பெண்ணையும், அங்கு வழி தவறி சென்று சேரும் வாலிபனையும் சுற்றிப் பின்னப்பட்ட கதை. இந்த நாவலில் ஹூக்ளி நதியின் கிளைநதியான ரசூல்புல் ஆற்றின் கரையில் அமைந்த அடர் காடு மற்றும் காபாலிகர்கள் பற்றிய வர்ணனைகள் குறிப்பிடத்தக்கவை.

தேவி சௌதராணி

'தேவி சௌதராணி' விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் கணவன் வீட்டால் புறக்கணிக்கப்பட்ட பெண் மெல்ல வலிமை பெற்று ஒரு போராட்டக் குழுவின் தலைமையை ஏற்கும் கதையைக் கூறுகிறது. எழுதப்பட்ட காலகட்டத்தில் மிகப் புரட்சிகரமான நாவலாகக் கருதப்பட்டது. அன்னிய ஆடவரின் முகத்தைக் கூட காண அனுமதிக்கப்படாத வங்காளப் பெண்கள் விடுதலைப் போரில் பங்கேற்கக் காரணமாக அமைந்தது. 1949-ல் சுமித்ரா தேவியின் நடிப்பில் அதே பெயரில் திரை வடிவம் பெற்றது. மீண்டும் 1974-ல் தொனேன் குப்தாவின் இயக்கத்தில் திரைவடிவம் பெற்றது. 1990-ல் தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்டது.

ராஜசிம்ஹா

'ராஜ்சிம்ஹா' என்ற வரலாற்றுப் புதினம் 1881-ல் எழுதப்பட்டு , 1893-ல் மீண்டும் விரிவு படுத்தி எழுதப்பட்டது.

மிருணாளினி

புக்தியார் கில்ஜியின் தலைமையில் பதினேழு குதிரை வீரர்கள் வங்காளத்தை வென்றதன் பின்னணியில் மிருணாளினி, ஹேமசந்திரன் இருவரின் காதலைக் கூறும் நாவல் 'மிருணாளினி'.

விஷ விருக்ஷம்

விஷ விருக்ஷம்(1853) வங்காள சமூகத்தில் ராஜா ராம் மோகன்ராய் போன்றோரால் ஏற்பட்ட சமூக மறுமலர்ச்சியைப் பிரதிபலித்து கைம்பெண் மறுமணம், பலதார மணம் போன்றவற்றைப் பேசிய நாவல். இவை சமூகப் பிரச்சினைகளாக அல்லாமல் பாத்திரங்களின் வாழ்வுச் சிக்கல்களாகவே பேசப்படுகின்றன. கிரேக்க துன்பியல் நாடகப் பண்புகளாகிய கவிதை ரசமும் அழுத்தமான கதைக் கருவும் நவீன நாடக இயல்புகளான விரிவான தன்மையும் கதையைக் காட்டிலும் பாத்திர வார்ப்புக்கு முக்கியத்துவமும் 'விஷ விருட்சம்' நாவலில் இணைந்து காணப்படுகின்றன.

சந்திர சேகர்

சந்திரசேகர் (1875) பங்கிமின் முந்தைய நாவல்களைக் காட்டிலும் பெரிதான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. நவாப் மீர் காசிமின் வீழ்ச்சியைத் தொடர்ந்து வங்காளத்தில் பிரிட்டிஷார் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகளின் பின்னணியில் இந்த வரலாற்று இடர்ப்பாடில் சிக்கித் தம் வீடு வாசல்களைத் துறக்க நேரும் சாதாரண கிராமப்புற மக்களின் பாதிப்புகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

ரஜனி

லிட்டன் (Lytton) எழுதிய 'பாம்ப்பியின் இறுதி நாட்கள்' நாவலின் பெண் பாத்திரத்தின் சாயலில் அமைந்த ரஜனி என்ற பார்வையற்ற பெண்ணின் காதலைப் பற்றிய நாவல் 'ரஜினி'. ஒவ்வொரு முக்கிய பாத்திரமும் தன்னுடைய கதையைச் சொல்லும் உத்தியைப் பங்கிம்சந்திரர் இந்த நாவலில் பயன்படுத்தியிருக் கிறார். "கர்ரே பைர்ரே(வீடும் உலகமும்) என்ற நாவலில் தாகூரும் இதே உத்தியைப் பயன்படுத்தினார்.

கிருஷ்ணகாந்தனின் உயில்

பங்கிம் சந்திரரின் நாவல்களில் மிகுந்த சர்ச்சைக்குள்ளானதும், ஆனந்த மத் அளவுக்கே புகழ் பெற்றதும் கிருஷ்ணகாந்தர் வில் (கிருஷ்ணகாந்தனின் உயில்' -தமிழில் த.நா. குமாரசாமி) . காதலும், துராகமும் நாவலின் பேசுபொருள்கள். சரத்சந்திரர் இந்த நாவலுக்குத் தன் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்.

'கிருஷ்ணகாந்தர் வில்' அதே பெயரில் ஜ்யோதிஷ் பானர்ஜி இயக்கத்தில் திரை வடிவம் கண்டது.

ராஜசிம்மன்

ராஜசிம்மன்(1882) முகலாய மன்னன் ஔரங்கசேபுக்கும் ராஜபுத்ர மன்னன் ராஜசிம்மனுக்கும் ஏற்பட்ட போரைப் பின்னணியாகக் கொண்ட நாவல்.

ஆனந்த மத்

பங்கிம் சந்திரரின் 'ஆனந்தமத்' (The Abbey of Bliss, 1882) (தமிழில் ஆனந்த மடம் மொழியாக்கம் த.நா. குமாரசாமி ) என்னும் அரசியல் நாவல் இந்திய, வங்காள இலக்கியங்களில் ஒரு குறிப்பிடத்தக்க புதினம். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த சன்னியாசிகளின் புரட்சி மற்றும் 1770-ல் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் பினாணியில் அமைந்தது. இந்நாவலை சட்டர்ஜி 'வங்க தர்சன்' எனும் நாளேட்டில் தொடராக எழுதினார். ஆனந்த் மடம் நூலின் முதல் அத்தியாயத்தில் வங்க தேசத்தை அன்னையாக, கடவுளாக வாழ்த்தும் பாடலாக இடம்பெற்ற வந்தே மாதரம் (தாயை வணங்குகிறேன்) என்னும் பாடல் பிற்காலத்தில் இந்திய விடுதலை இயக்கத்தில் பெரும்பங்கு வகித்தது. 1896-ல் 'வந்தே மாதரம்' பாடலை தாகூர் அந்த ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் மல்லாரி ராகத்தில் பாடினார். அதன்பின் 'வந்தே மாதரம்' இந்திய விடுதலைப் போராட்டத்துக்கான உரிமை முழக்கமாக அமைந்தது. இந்திய விடுதலைக்குப்பின் இப்பாடலின் முதல் இரண்டு பத்திகள் இந்தியாவின் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்பட்டன.

ஆங்கில அரசுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டதால் இந்நூலுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்திய விடுதலைக்குப்பின் தடை விலக்கப்பட்டது.

1952-ல் ஆனந்த் மத் ஹேமன் குப்தாவின் இயக்கத்தில் திரைப்படமாக்கப்பட்டது.

சீதாராம்

இந்த நாவலின் கதைக் கரு, கட்டற்ற காமத்தால் மகத்தான மனிதன் ஒருவன் வீழ்ச்சியுறுவது பற்றியது.

அனுஷீலன் தத்வ

பங்கிம் சந்திரரின் 'அனுஷீலன் தத்வ' என்ற நூல் வலிமை, ஒழுக்கம், கல்வி, ஆன்மிக முன்னேற்றம் என முழுமையான வளர்ச்சி பெற்ற ஒரு இளைஞர் சமூகத்தைப் பற்றிப் பேசியது. இந்த நூல் 'அனுஷீலன் சமிதி' என்ற பெயருடைய ரகசிய இளைஞர்கள் புரட்சி இயக்கத்துக்கான அடிப்படையாக அமைந்தது.

கமலாகாந்த தஃப்தர்

கமலாகாந்தர் தஃப்தர்(1875) கமலாகாந்தர் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து கூர்ந்த பகடி கலந்த எழுத்தில் அரசியல், சமூக விமரிசனங்களை முன்வைத்தது.

கட்டுரை

பங்கிம் சந்திரர் நாளிதழ்களிலும் பிற இதழ்களிலும் பல கட்டுரைகள் எழுதினார். அரசியல், பொருளாதாரம், சமுகம், மதம், தத்துவம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவை குறித்த பல நூல்களை எழுதியுள்ளார். சமஸ்கிருத, ஆங்கில இலக்கியங்கள் குறித்த பல திறனாய்வுக் கட்டுரைகள் எழுதினார். இந்து சமயம் சார்ந்த ஆன்மிகக் கட்டுரைகள் எழுதினார். 'இந்துத் திருவிழாக்களின் தோற்றம்', 'வங்காள இலக்கியமும் பௌத்தமும்', 'சாங்கிய தத்துவம்', 'இந்து தத்துவ ஆராய்ச்சி' போன்ற அவரது கட்டுரைகள் பரவலான கவனம் பெற்றன.

செப்டம்பர் 1882-ல் கல்கத்தாவின் ஜமீன்தார் ஒருவர் வீட்டில் நடந்த பூஜை பற்றிய செய்தி 'ஸ்டேட்ஸ்மென்' ஆங்கில இதழில் வெளியானது இது குறித்து பங்கிம் சந்திரருக்கும் போதகரான ரெவரெண்ட் ஹாஸ்டி என்பவருக்கும் உருவ வழிபாடுபற்றிய விவாதம் ஸ்டாட்ஸ்மென் இதழில் நடந்தது. ஆனது. ஹாஸ்டியின் உருவ வழிபாட்டுக்கு எதிரான கருத்துகளுக்கு இந்து சமயம் மற்றும் உருவ வழிபாட்டின் அடிப்படைகளை விளக்கி பங்கிம் சந்திரர் கடிதங்கள் எழுதினார்.

பங்கிம் சந்திரரின் தன் நண்பர் அக்ஷய சந்திர சர்கார் நடத்திய 'நவஜீவன்' என்னும் இதழில் 'தர்மதத்துவ - அனுஷீலன்' எனும் தலைப்பில் சமயம் மற்றும் வழிபாடுகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

அவருடைய விஞ்ஞானக் கட்டுரைகள் விஞ்ஞானத்தை எளிய மொழியில் அனைவருக்கும் எடுத்துக் கூறிய வகையில் குறிப்பிடத்தக்கவை.

ஶ்ரீ கிருஷ்ண சரித்திரம்

பங்கிம் சந்திரர் 'ஶ்ரீ கிருஷ்ண சரித்திரம்' என்ற நூலில் பாகவதம், மகாபாரதம், ஹரி வம்சம் மற்றும் புராணங்களைக் கொண்டு கிருஷ்ணன் என்ற மானுடனின் சரித்திரத் தன்மையை ஆராய்கிறார். கண்ணன் என்ற தெய்வத்தின் வரலாற்றுத் தன்மையை ஆராய்ந்த முதல் இந்திய நூல் இதுவே. கண்ணனை அவதாரங்களைத் தாண்டி ஒரு மீமானுடனாகச் சித்தரிக்கிறார். மனிதனுக்கு சாத்தியமான அளவுக்குக் கிருஷ்ணன் உடல், அறிவு, அழகியல் மற்றும் நெறியுணர்வு ஆகிய ஆற்றல்களை வளர்த்துக் கொண்டவனாக வரையறுக்கிறார். கமலகாந்தர் தஃப்தர் போன்ற நாவல்களில் அன்றைய இளைஞர்களுக்கு செயல்யோகத்திற்கான முன்மாதிரியாக கிருஷ்ணனையே முன்வைக்கிறார்.

குறுநாவல்/சிறுகதை

பங்கிம்சந்திரர் எழுதிய நீண்ட சிறுகதைகள் 'இந்திரா (1873)', 'யுகாலங்குரியா' அல்லது 'இரு மோதிரங்கள்'1874), ராதாராணி (1877).

இதழியல்

பங்கிம் சந்திரர் 1872-ல் 'பங்க தர்சன்' இதழைத் தொடங்கினார். கற்றவர்களிடையே ஆங்கில மொழிப் புழக்கம் அதிகரித்துவந்த காலத்தில் மக்களனைவரும் படிப்பதற்காகவும், மேல்தட்டு மக்களுக்கும் அடித்தள வர்க்கத்தினருக்கும் பாலமாகவும் இந்த இதழைத் தொடங்கியதாகக் குறிப்பிட்டார். இந்த இதழில் எளிய வங்க மொழியில் கதை, கட்டுரை என படைப்புகள் வெளியாயின. பங்கிம் சந்திரரின் பல படைப்புகள் தொடராக வெளிவந்தன. விழிப்புணர்வுக் கட்டுரைகளோடு வேதம், வேதாந்தம், புராண இதிகாசங்கள் பற்றிய கட்டுரைகளும் வெளிவந்தன.

'பங்க தர்ஷன்' வங்காள மாநிலத்தின் மொழி சார்ந்த அடையாளத்தின் உருவாகத்திலும், விடுதலை இயக்கத்திலும் மிகப் பெரிய தாக்கம் செலுத்தியது. 1880-களின் இறுதியில் நின்று போன இந்த இதழ் 1901-ல் ரவீந்திரநாத் தாகூரால் மீண்டும் தொடங்கப்பட்டது.

விருதுகள் பரிசுகள்

  • பிரிட்டிஷ் அரசின் Companion of the Most Eminent Order of the Indian Empire (CMEOIE) (1884)
  • ராய் பஹாதுர்(1891)
  • பங்கிம் புரஸ்கார் என்ற நினைவு விருது வங்காள இலக்கியத்துக்கான சிறந்த பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது

இலக்கிய இடம்

பங்கிம் சந்திரர் இந்தியாவின் முதல் நாவலாசிரியர், நவீன இந்திய இலக்கியச் சிற்பிகளில் ஒருவர், புனைவிலக்கியத்தைத் தாண்டி இந்திய மறுமலர்ச்சியில் அவருக்கு இருந்த ஈடுபாடும் விமரிசனக் கோட்பாடுக்கும் செயல்முறைக்கும் அவர் ஆற்றிய பங்கும் குறிப்பிடத்தக்கவை. தியாகத்தையும் ஆன்ம பலத்தையும் அடிப்படையாகக் கொண்ட தேச பக்தியை முன்வைத்த 'ஆனந்த மடம்', 'தேவி சௌதராணி' போன்ற நாவல்கள் விடுதலைப் போராட்ட எழுச்சிக்கு தூண்டுகோலாக அமைந்தன. 'வந்தே மாதரம்' பாடல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தது.

பங்கிம் சந்திரரின் படைப்புகள் இந்திய மரபு தொன்மம் அளிக்கும் ஞானத்தையும் தற்கால விஞ்ஞான அறிவுவாதச் சிந்தனையையும் ஒருங்கிணைத்த வாழ்க்கைத் தத்துவத்தை முன்வைத்தன.

அரவிந்தர் பங்கிம் சந்திரர் நவீன வங்க மொழியயும், வங்க தேசத்தையும், அதன் இலக்கியத்தையும் உருவாக்கியவர்(Bankim created a language, a literature and a nation). எனக் குறிப்பிட்டார்.

பங்கிம் சந்திரரின் 'ஶ்ரீ கிருஷ்ண சரித்திரம்' நூலைக் குறித்து ரபீந்திரநாத் தாகூர் "கிருஷ்ணருடைய சரித்திரத்தன்மையை நிலைநாட்ட இது நிச்சயமாக முதல் முயற்சி. அதனால் பங்கிம் சந்திர சட்டர்ஜியை, இலக்கிய உருவாக்கம் மற்றும் அழிப்பு என்ற இரண்டிற்கும் பாராட்ட வேண்டும். சரித்திரம் இதுதான் என்று ஒருவர் சொல்லும் போது, சரித்திரம் அதுவல்ல என்று சொல்வதற்கு கடின உழைப்பும், ஞானமும் தேவை. அவ்வகையில், அவர் தொன்மத்தை உடைப்பதில் வெற்றி கொண்டுள்ளார். ஆனால், மறு-உருவாக்க முயற்சியில் அவரது முயற்சி முழுமையடையவில்லை. ......அது ஒருவரது வாழ்நாளில் முடிக்கமுடியாத செயலாகும். அதனால், ஒரு பெரிய அடர்ந்த காடாக உள்ள மகாபாரதத்தில், ஒரு சிறிய பாதையை கண்டுபிடித்துள்ளது, நமக்கு பெரிய அதிருஷ்டமாகத்தான் இருக்கிறது", என்று 'அதுனிக் சஹிதி' [2]என்ற கட்டுரைத் தொகுப்பில் குறிப்பிடுகிறார்.

"பின்னாளில் ஆனந்தமடம் இந்தியாவில் உருவாகி வந்த தேசிய எழுச்சியை, ஆங்கிலேய எதிர்ப்பை மிகச்சரியாக பிரதிநிதித்துவப் படுத்தியது. ஆகவேதான் அதை ஆங்கிலேயர் அஞ்சினர், தடைசெய்தனர். வந்தேமாதரம் என்னும் கோஷம் இந்தியாவை அரசியல் மயப்படுத்தியது" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

மறைவு

உடல் நலக் கோளாறு காரணமாக பங்கிம் சந்திரர் பணியிலிருந்து 1891-ல் வருடம் விருப்ப ஒய்வு பெற்றார். அதன் பின்னர் இருந்த சொற்ப காலத்தை ஆன்மிகத்தில் கழித்தார். ஏப்ரல் 8, 1894 அன்று காலமானார்.

நினைவேந்தல்

1965-ல் முதல் வங்காள மொழி நாவலாகிய துர்கேஷ நந்தினியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது

நூல் பட்டியல்

புதினம்
  • துர்கேச நந்தினி (1865)
  • கபாலகுந்தல (1866)
  • ம்ருனாளினி (1869)
  • வ்ருஷப்ருக்ஷா (1873)
  • இந்திரா (1873)
  • ஜுகலங்குரியா (1874)
  • ராதாராணி(1876) (1893-ல் விரித்தெழுதப்பட்டது)
  • சந்திரசேகர் (1875)
  • கமலகாந்தர் தப்தர் (1875) (கமலகாந்தரின் மேசையிலிருந்து)
  • ரஞ்சனி(1877)
  • கிருஷ்ணகாந்தர் உயில் (1878)
  • ராஜசிம்ஹா(1882)
  • ஆனந்தமத்(1882),
  • தேவி சௌதுராணி (1884)
  • கமலகாந்தா(1885)
  • சீதாராம்(1887)
  • முசிராம் குரேர் ஜீவசரிதா (முசிராமின் வாழ்க்கை வரலாறு)
ஆன்மிகம்
  • க்ருஷ்ண சரித்ரா (1886)
  • தர்மதத்வ (1888)
  • தேவதத்வ
  • ஶ்ரீமத்பகவத்கீதா( கீதையைப் பற்றிய விரிவுரை, (முடிக்கப்படவில்லை. 1902-ல் வெளியிடப்பட்டது)
கவிதை
  • லலிதா ஓ மானஸ்
கட்டுரை
  • லோக் ரஹஸ்ய (சமூகக் கட்டுரைகள் 1874, 1888-ல் விரித்தெழுதப்பட்டது)
  • பிக்ஞான் ரஹஸ்ய (அறிவியல் கட்டுரைகள், 1875)
  • பிசித்ர பிரபந்தா (பல்சுவைக் கட்டுரைகள், முதல் பாகம் 1876, இரண்டாம் பாகம் 1892)
  • விவித சமாலோசனை (பல்வகை விமரிசனங்கள்) : கட்டுரைகள், 1676
  • சம்யா (1879)
  • பிரபந்த புஸ்தகம்(1879)
  • விவித பிரபந்தம்-பகுதி 1 (1887)
  • விவித பிரபந்தம்-பகுதி 2 (1892)
  • சகஜ ரசன சிக்ஷை (கட்டுரை எழுத எளிய முறை) : பாடநூல், இரண்டாம் பதிப்பு, 1894
  • சகஜ ஆங்கில சிகை (எளிய ஆங்கில பாடம்) : பாடநால், மூன்றாம் பதிப்பு, 1894 (இதன் ஒரு பிரதியும் காணக் கிடைக்கவில்லை)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-May-2025, 09:10:12 IST