பாபநாசம் சிவன்
- பாபநாசம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாபநாசம் (பெயர் பட்டியல்)
- சிவன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிவன் (பெயர் பட்டியல்)
பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 1, 1973) திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், நடிகர், நாடக வசன ஆசிரியர், இசையமைப்பாளர், கர்நாடக இசைப் பாடகர், திரைப்படப் பாடகர். தமிழிசைக் கீர்த்தனைகள் பலவற்றை இயற்றினார். திரைப்பாடல்களில் கர்நாடக இசையைப் பயன்படுத்திப் பாடல்களைப் பிரபலமுறச் செய்தார். 'தியாகபூமி' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
ராமையா என்னும் இயற்பெயரை உடைய பாபநாசம் சிவன், செப்டம்பர் 26, 1890 அன்று, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள போலகத்தில், ராமாமிருதம் - யோகாம்பாள் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். மூத்த சகோதரர் ராஜகோபால். சிவன், ஏழு வயதாக இருக்கும்போது தந்தையை இழந்தார். அதன் பிறகு தாய் மற்றும் சகோதரருடன் திருவனந்தபுரம் சென்றார். அங்குள்ள 'ஊட்டுபுரா' என்னும் இலவச தர்மசாலையில் குடும்பத்துடன் தங்கினார்.
தனது சகோதரருடன் சேர்ந்து சுவாதித் திருநாள் மகாராஜாவின் சமஸ்கிருதப் பள்ளியில் கல்வி பயின்றார். 'உபாத்யாய', 'வ்யாகரணி' பட்டங்களைப் பெற்றார். தமிழ், மலையாளம், சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றார்.
தனி வாழ்க்கை
பாபநாசம் சிவனின் மனைவி பெயர் அம்மணி என்கிற லட்சுமி. இவர்களுக்கு நீலா, கீர்த்திவாசன், ராமதாஸ், ருக்மிணி என நான்கு பிள்ளைகள். பாபநாசம் சிவனின் அண்ணன் ராஜகோபாலின் மகள்தான், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் மனைவியும், மேனாள் நடிகையும், முதல்வருமான வி.என். ஜானகி.
இலக்கியம்
பாபநாசம் சிவன் 'விவேகபோதினி' இதழில் சில கட்டுரைகளை எழுதினார். மிகவும் கடினமான பதங்களையுடைய, 'வடமொழிச் சொற்கடல்" என்னும் தலைப்பிலான வடமொழி - தமிழ் அகராதியைத் தொகுத்தளித்தார். 24 பத்திகளில் 24 ராகங்களில் ராமாயணத்தை 'ஸ்ரீராம சரித கீதம்' என்ற தலைப்பில் இசைக் கோர்வையாக அளித்தார். ஜெயதேவரின் அஷ்டபதியைத் தமிழில் மொழிபெயர்த்தார். காரைக்காலம்மையார் சரித்திரத்தை எழுதினார்.
நாடகம்
பாபநாசம் சிவன் நாடகத்துறையிலும் ஈடுபட்டார். திருவாரூரிலுள்ள ஸ்ரீ வாணி விலாச சபாவின் நாடகம் ஒன்றுக்காகப் பல பாடல்களை இயற்றினார்; பாபநாசத்தில் பரத ரஞ்சனி சபாவிற்காகச் சாகுந்தலம், உத்தர ராமசரிதம், சுபத்திரா பரிணயம் முதலிய பதினைந்து நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதினார். பாபநாசத்திலும், திருத்துறைப்பூண்டியிலும் நடைபெற்ற பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகத்தில் மார்க்கண்டேயர் பாத்திரத்தில் நடித்தார். மேலும் சில நாடகங்களில் முக்கிய வேடமேற்று நடித்தார்.
திரைப்படம்
பாபநாசம் சிவனின் ஆற்றலை அறிந்த கே. சுப்ரமணியம், தான் இயக்கிய 'பக்த குசேலா' படத்தில் சிவனை குசேலராக நடிக்க வைத்தார். அடுத்து சுப்ரமணியம் இயக்கிய 'தியாக பூமி' படத்தில் சிவனின் நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து 'சேவாசதனம்', 'குபேர குசேலா' போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
பாபநாசம் சிவன் 'சேவா சதனம்' உள்ளிட்ட சில திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.
இசை வாழ்க்கை
தொடக்கம்
சிவனுக்குக் கர்நாடக இசையில் ஆர்வம் அதிகம் இருந்தது. கரமனையில் இருந்த பஜனைக் குழு ஒன்றுடன் இணைந்து பல பாடல்களைப் பாடி வந்தார். கரமனை நீலகண்ட பாகவதரின் அறிமுகம் ஏற்பட்டது. அவர் மூலம் முழுமையான இசை ஞானம் கைவரப்பெற்றார். அவரது பஜனைக் குழுவில் இணைந்து பல பாடல்களைப் பாடினார். பஜனை சம்பிரதாயத்தை முழுமையாகக் கற்றார். நூரணி மகாதேவ பாகவதரிடம் இசை பயின்றார். சாம்பசிவ பாகவதரிடமும் இசை கற்றார். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், அருட்பா, தாயுமானவர் பாடல்கள், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். தாயார் காலமானதும் துறவி போல் வாழத் தலைப்பட்டார்.
இசைப் பயணங்கள்
சிவன், தமிழகம் திரும்பி பழமார்நேரியில் சில ஆண்டுகள் வசித்தார். தமிழ்நாடு முழுவதும் பல தலங்களுக்கும் சென்று தேவாரம், திருவாசகம், தமிழ்க் கீர்த்தனைகளைப் பாடினார். பின் தஞ்சாவூருக்குத் திரும்பினார். அங்கும் ஆலயங்கள் தோறும் சென்று தமிழ்க் கீர்த்தனைகளை, பக்திப் பாடல்களை, பஜனைப் பாடல்களைப் பாடினார். கோனேரிராஜபுரம் வைத்தியநாத பாகவதர் இல்லத்தில் தங்கி இசைப் பயிற்சி பெற்றார். அவரே சிவனுக்கு குருவாக அமைந்தார். பின் கும்பகோணத்தில் உள்ள மருதாநல்லூர் ஸ்ரீசத்குரு சுவாமிகள் மடத்தில் சிறிதுகாலம் தங்கினார்.
ஹரிகேச நல்லூர முத்தையா பாகவதர், திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள், நீலகண்ட சிவன் போன்றோரின் பாடல்கள் சிவன் மனத்தில் இசை ஞானத்தை வளர்த்தன. தானே சொந்தமாகப் பாடல்கள் புனைந்து பாடுவதிலும், பஜனைப் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தினார். தன் சகோதரர் ராஜகோபால் தமிழாசிரியராகப் பணியாற்றிய பாபநாசம் ஊருக்குச் சென்று தங்கினார். அங்கும் தனது இசைப் பணியைத் தொடர்ந்தார். பின் இசையறிவு மிக்க தன் சகோதரருடன் தஞ்சை மாவட்டம் முழுவதும் கால்நடையாகவே சென்று பல ஆலயத் திருவிழாக்களில் கலந்து கொண்டார்.
முதல் கச்சேரி
பாபநாசம் சிவனின் முதல் கச்சேரி, 1916-ல். திருவையாற்றில், தியாகராஜ சுவாமிகளின் நினைவிடத்தில் நடைபெற்றது. 'உன்னைத் துதிக்க அருள் தா' என்பது சிவன் இயற்றிப் பாடிய முதல் பாடல். தொடர்ந்து நாகை ஆடிப்பூரத் திருவிழாவிலும், திருவையாற்றின் சப்தஸ்தானத்திலும் பஜனைப் பாடல்கள் பாடினார். ஹரிகதா நிகழ்ச்சிகள் சிலவற்றை நடத்தினார்.
பாடல்கள் இயற்றும் திறனுடன், அதனை அழகான இசைக் கோர்வையாக்கிப் பாடும் திறமையையும் சிவன் பெற்றிருந்ததால், அவரது பாடல்களைக் கேட்கப் பெருந் திரளாக மக்கள் கூடினர். பஜனைப் பாடல்களைப் பாடும்போது தன்னை மறந்து சிவத்தோடு ஒன்றிப் பாடினார். எப்போதும் நெற்றி நிறையத் திருநீற்றுப் பட்டையுடனும், கழுத்தில் ருத்ராட்ச மாலையுடனும் காட்சி அளித்ததார். அத்தகைய தோற்றத்தில் சிவன் பாடுவது மக்களை மிகவும் கவர்ந்தது. அது வரை 'ராமையா' என்றும், 'போலகம் ராமையா' என்றும், 'ராம சர்மா' என்றும் அழைக்கப்பட்டு வந்த அவர் 'பாபநாசம் சிவன்' என்று அழைக்கப்படலானார். நாளடைவில் அப்பெயரே நிலைத்தது.
சென்னை வாழ்க்கை
பாபநாசம் சிவன், பணி வாய்ப்புத் தேடிச் சென்னைக்குச் சென்றார். அங்கு அறிமுகமான வக்கீல் வி. சுந்தரம் ஐயர், பாபநாசம் சிவனின் திறமையை உணர்ந்து தனது நண்பரும் ஆங்கிலத்தில் வெளிவந்த 'சவுண்ட் அண்ட் ஷேடோ' இதழின் ஆசிரியருமான ஜி.கே. சேஷகிரியின் இல்லத்தில் தங்க வைத்தார். தனது பிள்ளைகளுக்கு இசை ஆசிரியராகப் பாபநாசம் சிவனை நியமித்தார். அப்பணிகளோடு கூடவே மைலாப்பூரில் நிகழ்ந்த பல்வேறு பஜனை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிவன் பல பாடல்களைப் பாடினார். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் மைலாப்பூரில் நடைபெறும் பஜனைக் குழு நிகழ்ச்சியில் சிவன் முதன்மைப் பாடகராக இருந்தார். சில ஆண்டுகள், பிரம்ம ஞான சபை நடத்தி வந்த உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
பாபநாசம் சிவனின் திறமையை அறிந்த ருக்மிணி அருண்டேல், 1939-ல், பாபநாசம் சிவனைத் தனது கலாக்ஷேத்ராவில் மாணவர்களுக்கு இசை பயிற்றுவிக்கும் ஆசிரியராக நியமித்தார். நாளடைவில் இசைத்துறையின் தலைவராகப் பாபநாசம் சிவன் பொறுப்பேற்றார். அக்காலக்கட்டத்தில் தமிழ் மற்றும் சமஸ்கிருத நாட்டிய நாடகங்கள் பலவற்றுக்கு இசையமைத்தார். குறிப்பாக ஆண்டாள், கீத கோவிந்தம் போன்ற பல தமிழ், வடமொழி நாட்டிய நாடகங்களுக்கு இசையமைத்தார். ருக்மிணி அருண்டேலின் நாட்டிய நாடகங்களுக்கு இசைக் கலைஞராகப் பணியாற்றினார்.
திரைப் பாடலாசிரியர்
பாபநாசம் சிவனின் பல்வகை ஆற்றலையும், பன்மொழிப் புலமையையும் அறிந்துகொண்ட வக்கீல் வி. சுந்தரமய்யர், தான் நண்பர்களுடன் இணைந்து, அவரது மகன் எஸ். ராஜம் கதாநாயகனாகவும், எஸ். பாலசந்தர் துணை நடிகராகவும் நடித்த 'சீதா கல்யாணம்' படத்திற்குப் பாடல்கள் எழுதவும், இசையமைக்கவும் சிவனுக்கு வாய்ப்பளித்தார். சம்ஸ்கிருத அறிஞர் வே. ராகவன் இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்தார். அப்படத்தில் 17 பாடல்களை எழுதினார் சிவன். அந்த வாய்ப்பைத் தொடர்ந்து 'பவளக்கொடி' திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதும் வாய்ப்பு வந்தது. அப்படத்தில் 50 பாடல்களை எழுதினார். அவற்றை எம்.கே. தியாகராஜ பாகவதர், எஸ்.டி. சுப்புலட்சுமி, எஸ்.எஸ். மணி பாகவதர் உள்ளிட்டோர் பாடினர். படம் வெற்றி பெற்றது. பாடல்களும் பேசப்பட்டன. தொடர்ந்து பல பாடல் வாய்ப்புகள் வந்தன. பாபநாசம் சிவன், எம்.கே. தியாகராஜ பாகவதர், ஜி. ராமநாதன் இணைந்த கூட்டணி பல படங்களின் வெற்றிக்கு வழி வகுத்தது.
'உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ?..,' 'பூமியில் மானிட ஜென்மம்...', 'அன்னையும் தந்தையும் தானே..', 'ராதே உனக்குக் கோபம் ஆகாதடி...', 'மன்மத லீலையை வென்றார் உண்டோ...' போன்ற பாடல்கள் பாகவதருக்கும் சிவனுக்கும் புகழைச் சேர்த்தன. தொடர்ந்து 'திருநீலகண்டர்', 'தியாகபூமி', 'சிவகவி', 'நந்தனார்', 'சத்யசீலன்', 'பக்த ஸேதா'. 'அம்பிகாபதி' எனப் பல திரைப்படங்களுக்குச் சிவன் பாடல்கள் எழுதினார். சிவன் பாடல்களால் தியாகராஜ பாகவதரும், பாகவதரின் குரலால் சிவனும் தங்கள் பாடல்களுக்காகப் புகழ்பெற்றனர். பி.யூ. சின்னப்பா, ஹொன்னப்ப பாகவதர், டி.ஆர். மகாலிங்கம் உள்ளிட்ட பலரது வெற்றிப் படங்களுக்கும் சிவன் பாடல்கள் எழுதினார்.
பாபநாசம் சிவன் தனித்தும், பிற பாடலாசிரியர்களுடன் இணைந்தும் 125--க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவராகப் பாபநாசம் சிவன் அறியப்படுகிறார்.
திரைப்படங்கள்
பாபநாசம் சிவன் பின் வரும் திரைப்படங்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.
- சீதா கல்யாணம்
- பவளக்கொடி
- நவீன சதாரம்
- பக்த ராமதாஸ்
- நவீன சாரங்கதாரா
- ரத்னாவளி
- பக்த குசேலா
- அம்பிகாபதி
- சிந்தாமணி (அல்லது) பில்வமங்கள்
- பாலயோகினி
- அநாதைப் பெண்
- தேச முன்னேற்றம்
- யயாதி
- தாயுமானவர்
- ஸ்ரீகிருஷ்ணன் தூது
- பக்த ஸேதா
- பால சந்யாசினி (அல்லது) மணிமேகலை
- கச்சதேவயானி
- காமதேனு
- சுபத்ரா அர்ஜுனா
- சூர்யபுத்திரி
- வேதவதி (அல்லது) சீதா ஜனனம்
- அனந்தசயனம்
- ராஜஸூயம்
- பரஞ்சோதி (அ) சிறுத்தொண்ட நாயனார்
- மகாத்மா உதங்கர்
- ஆதித்தன் கனவு
- கோகுலதாஸி
- ஸ்ரீ சங்கராச்சாரியா
- திருநீலகண்டர்
- மாத்ருபூமி
- மாயா மச்சீந்திரா
- சகுந்தலை
- ஊர்வசி (அல்லது) கிராத அர்ஜுனா
- அசோக்குமார்
- சாவித்திரி
- திருவள்ளுவர்
- மதனகாமராஜன்
- பக்த நாரதர்
- காரைக்கால் அம்மையார்
- சிவகவி
- நவயுவன் (அல்லது) கீதாசாரம்
- பக்த ஹனுமான்
- ஜகதலப்பிரதாபன்
- ஹரிதாஸ்
- சுபத்ரா
- குண்டலகேசி
- ஸ்ரீமுருகன்
- ருக்மாங்கதன்
- லவங்கி
- வால்மீகி
- கன்னிகா
- கடகம்
- துளஸி ஜலந்தர்
- தெய்வ நீதி
- பக்த துளஸிதாஸ்
- ஞானசௌந்தரி (சிட்டாடல் தயாரிப்பு)
- ஞானசௌந்தரி (ஜெமினி தயாரிப்பு)
- பிரும்மரிஷி
- பக்த ராமதாஸ்
இசையமைப்பாளர்
- பாபநாசம் சிவன், கீழ்காணும் திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
- சீதா கல்யாணம் (1934)
- பக்த குசேலா (1936)
- அம்பிகாபதி (1937)
- சிந்தாமணி (1937)
- சேவாசதனம் (1938)
- திருநீலகண்டர் (1939)
- தியாக பூமி (1939)
- சந்திரகுப்த சாணக்யா (1940)
- அசோக் குமார் (1941)
- சிவகவி (1943)
- கன்னிகா (1947)
பாடகர்
பாபநாசம் சிவன், பின்வரும் பாடல்களைத் திரைப்படங்களில் பாடினார்.
- கிருஷ்ணநாமம் ஜபி... - பக்த குசேலா
- ஸ்ரீ ஜகதம்பிகையே... - தியாக பூமி
- சாந்தம் அளிப்பது... - தியாக பூமி
- தந்ததே ஆனந்தம்... - பக்த ஸேதா
- ஏதுமறியேன்... - பக்த சேதா
கீர்த்தனைகள்
பாபநாசம் சிவன் கர்நாடக இசைக் கச்சேரிகள் பலவற்றை நிகழ்த்தினார். 1912 முதல் 1957 வரை கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் திருவையாறு சப்தஸ்தான பஜனையில் கலந்து கொண்டு பாடினார். 18 மைல்கள் கொண்ட ஏழு ஊர்களில் 28 மணி நேரம் தொடர்ந்து பஜனை செய்தார். நாகப்பட்டினம் ஆடிப்பூர உற்சவத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகள் பங்குகொண்டு பாடினார். மயிலாப்பூர் மார்கழி மாத பஜனையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கலந்துகொண்டு பாடினார்.
சிவன் பாடிய பல பாடல்கள் இசைத்தட்டுகளாக வெளிவந்தன. 'ராமதாஸன்' எனும் முத்திரையோடு தனது பல பாடல்களை எழுதினார். 2000-த்துக்கும் மேற்பட்ட கிருதிகளை இயற்றினார். சிவனின் கீர்த்தனைகளை அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், செம்பை வைத்யநாத பாகவதர், முசிறி சுப்ரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், டி.கே. பட்டம்மாள், என்.சி. வசந்தகோகிலம், மதுரை மணி ஐயர், ஜி.என். பாலசுப்பிரமணியம், எம்.எஸ். சுப்புலட்சுமி, எம். எல். வசந்தகுமாரி உள்ளிட்ட பல பிரபல வித்வான்கள் பாடினர். தமிழிசை இயக்கத்தினர் சிலரது ஆதரவைப் பெற்றார். 'தமிழிசைப் பிதாமகர்' என்று போற்றப்பட்டார்.
சிவனது வர்ணங்களும், கீர்த்தனைகளும் தனித்தன்மை மிக்கவை. இசை நாடகங்களுக்கான ஜாவளிகளையும், பதங்களையும் சிவன் இயற்றினார். சுதந்திர வேட்கையைத் தூண்டும் தேச உணர்ச்சிப் பாடல்களை எழுதினார். காந்தி மற்றும் பாரதியார் மீதும் சில பாடல்களை எழுதினார்.
பாபநாசம் சிவன் இயற்றியப் பாடல்களைக் "கீர்த்தனை மாலை" என்ற பெயரில் ஆறு பாகங்களாக சிவனின் மகள் ருக்மிணி ரமணி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வெளியிட்டார். சிவன் இயற்றிய வர்ணங்கள் 'வர்ணமாலை' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளன.
சிவன் இயற்றிய தமிழ்க் கீர்த்தனைகளில் சில...
- ஸ்ரீ கணேச சரணம்...
- நீயே சரண் ஷண்முகா...
- கபாலி...
- கற்பகமே...
- நம்பிக்கெட்டவர் எவரய்யா...
- உன்னை அல்லால் வேறே துணை....
- மா ரமணன்...
- கூவி அழைக்காத...
- நானொரு விளையாட்டு பொம்மையா...
- கடைக்கண் பார்வை...
- ஸ்ரீ வள்ளி தேவசேனாபதே...
- இனி ஒரு கணம்...
- துணை புரிந்தருள்...
- கஜவதனா...
- தேவி நீயே துணை...
- ஸ்ரீனிவாஸா...
- கண்ணே என் கண்மணியே...
- கா வா வா வா...
- கண்ணனைப் பணி...
- நீ இரங்காயெனில்...
- உன்னைத் துதிக்க...
- ஸ்ரீ ராம பத்ர...
- பிறவா வரம் தரும் பெம்மானே...
- மகாலக்ஷ்மி ஜகன்மாதா
- காந்தியைப் போலொரு...
- கருணாகரனே சிவசங்கரனே...
- குருவாயூரப்பா...
- காணக்கண் கோடி வேண்டும்...
- குழந்தாய் முகுந்தா...
- ஏறெடுத்தும் பாராத காரணம் என்னவோ...
- கற்பகமே கண் பாராய்...
- கணபதே மகாமதே...
- சரவண பவ என்னும் திருமந்திரம்...
- தாமதமேன் சுவாமி...
- கார்த்திகேய காங்கேய...
- என்ன தவம் செய்தனை...
விருது
- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அளித்த 'கலைமாமணி' விருது
- காஞ்சி காமகோடி பீடம் அளித்த 'சிவபுண்ணிய கானமணி' பட்டம்
- இசைப் பேரறிஞர் பட்டம்
- தமிழ்த் தியாகய்யர் பட்டம்
- இசைப் பணிக்காக இந்தியக் குடியரசுத் தலைவரின் விருது
- தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, சென்னை வழங்கிய 'சங்கீத கலாசிகாமணி' விருது
- சங்கீத கலாநிதி விருது
- இந்திய அரசின் பத்மபூஷண் விருது
சீடர்கள்
பாபநாசம் சிவனிடம் இசை பயின்றவர்கள்:
- எஸ்.எஸ். மணி பாகவதர்
- செதலபதி பாலசுப்பிரமணியம்
- நீலா ராமமூர்த்தி
- ருக்மிணி ரமணி
பாபநாசம் சிவனிடம் திரையிசைக்கான பயிற்சி பெற்றவர்கள்:
- எம்.கே. தியாகராஜ பாகவதர்
- பி.யூ. சின்னப்பா.
- எம்.எஸ். சுப்புலட்சுமி
- வி.ஏ. செல்லப்பா
- எம்.எல். வசந்தகுமாரி
- டி.ஆர். ராஜகுமாரி
- எம்.எம். தண்டபாணி தேசிகர்
மறைவு
பாபநாசம் சிவன் அக்டோபர் 1, 1973-ல், தனது 83-ம் வயதில் காலமானார்.
நினைவு
ராணிமேரி கல்லூரி இசைத்துறைப் பேராசிரியர் டாக்டர் ஜெயசீதாலட்சுமி, பாபநாசம் சிவனைப் பற்றி ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார்.
பாபநாசம் சிவனின் மகள் ருக்மிணி ரமணி சிவனின் கீர்த்தனைகளையும், 'ஸ்ரீ பாபனாசம் சிவன் சரிதம்' என்ற தலைப்பில் வாழ்க்கை வரலாற்றையும் நூல்களாக வெளியிட்டுள்ளார்.
எழுத்தாளரும், இதழாளருமான வீயெஸ்வி, பாபநாசம் சிவனின் வாழ்க்கையை, 'பாபநாசம் சிவன்' என்ற தலைப்பில் எழுதினார். விகடன் பிரசுரம் அந்நூலை வெளியிட்டது.
ஆவணம்
பாபநாசம் சிவனின் நூல்களில் சில தமிழ் மின் நூலகத்திலும், ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்திலும், ஆர்கைவ் தளத்திலும் சேகரிக்கப்பட்டுள்ளன.
மதிப்பீடு
இசையமைப்பாளர் என்கிற தனிப் பொறுப்பு உருவாகாத அன்றைய காலகட்டத்தில், தான் எழுதிய பாடல்களுக்குத் தானே மெட்டமைத்துப் பாடிய பாபநாசம் சிவன், தமிழின் முதல் இசையமைப்பாளராகக் கருதப்படுகிறார். கர்நாடக இசையின் பரிமாணங்களும் செழுமையும் சாதாரண மக்களைச் சென்றடைய சிவன் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தார். திரையிசையில் பல பக்திப் பாடல்களைப் படைத்தார். வர்ணங்கள், கீர்த்தனைகள், தரு, தில்லானா, கண்ணிகள், திருப்புகழ், நொண்டிச்சிந்து, வழிநடைச்சிந்து எனப் பல வகைகளில் சாகித்யங்களை இயற்றினார். இசையின் நுணுக்கங்களை சிறப்பாக வெளிப்படுத்துவதில் வல்லவராக அறியப்பட்டார். ஜி. ராமநாதன், தியாகராஜ பாகவதர், பாபநாசம் சிவன் என்ற மூவர் கூட்டணியின் இசைக்காலம் தமிழ்த் திரையிசையின் பொற்காலமாகப் போற்றப்பட்டது.
தியாகராஜருக்குப் பிறகு தமிழில் தோன்றிய சிறந்த இசை மேதையாக பாபநாசம் சிவன் அறியப்படுகிறார். தமிழ் வாக்கேயக்காரராகவும், வாய்ப்பாட்டிசைக் கலைஞராகவும் அக்காலத்து வித்வான்கள் பலராலும் மதிக்கப்பட்டார். "கர்நாடக இசை வரலாற்றிலே தியாகராஜசுவாமிகளின் பின்தோன்றிய பெரிய இசைமேதை இவரே' எனக் 'கர்நாடக இசைவரலாறு' பற்றிய நூலை எழுதிய ரங்கராமானுஜ ஐயங்கார் குறிப்பிட்டார். சிவனின் சமகாலப் பாடலாசிரியரான உடுமலை நாராயண கவி, பாபநாசம் சிவனைப் பற்றிக் கூறும்போது, 'அவர் ஒரு பெரிய மேதை. பெரும் புலமை மிக்கவர். 'சத்யவான் சாவித்ரி' படத்தில் 'சொல்லு குழந்தாய்' என்றொரு பாடல் வரும். 56 தேசத்து இளவரசர்களை, இளவரசிக்குத் தோழி அறிமுகப்படுத்தும் பாடல் அது. இந்தப் பாடல் ஒன்றே போதும், அவரது தமிழ்ப் பற்றைக் காட்ட, என்னைப் பிரமிக்க வைத்த பாடல் அது' என்று குறிப்பிட்டார்.
தமிழிசை மரபு, கர்நாடக இசையோடு இணைந்த திரை இசை மரபாகத் தொடரச் சிவன் மிக முக்கியப் பங்களித்தார். பாபநாசம் சிவன், கர்நாடக இசையின் அடிப்படைகளோடு, தமிழ் பக்தி இசை மரபின் இசைக் கூறுகளையும் இணைத்துப் பல பாடல்களை எழுதிய முன்னோடித் தமிழ்ப் பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் மதிப்பிடப்படுகிறார்.
பாடல்கள்
பாபநாசம் சிவன், திரைப்படங்களுக்காகப் பின்வரும் பாடல்கள் உள்படப் பல பாடல்களை இயற்றினார்.
- வசந்த ருது மன மோகனமே...
- வள்ளலைப் பாடும் வாயால்...
- கிருஷ்ணா முகுந்தா முராரே...
- சிவபெருமான் கிருபை வேண்டும்...
- தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே...
- அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்...
- அன்னையும் தந்தையும் தானே...
- சத்வ குண போதன்...
- சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...
- ராதே உனக்குக் கோபம் ஆகாதடி...
- மன்மத லீலையை வென்றார் உண்டோ...
- வதனமே சந்திர பிம்பமோ...
- அம்பா மனம் கனிந்து...
- உனையல்லால் கதி...
- உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ...
- பூமியில் மானிட ஜென்மம்...
- என்னுடல் தன்னில்...
- நடனம் ஆடினார்...
- திருவருள் தர இன்னும்...
- மனம் கனிந்தே...
- மாநில வாழ்வு...
- ஞானக்கண் ஒன்று
- வாழ்விலோர் திருநாள்...
- தமியேன் பைந்தமிழ்...
- அற்புத லீலைகளை...
- பிரேமையில் யாவும் மறந்தேனே...
நூல்கள்
தமிழ்
- கீர்த்தன மாலை - 6 பாகங்கள்
- வர்ண மாலை
- ஸ்ரீராம சரித கீதம்
- வடமொழிச் சொற்கடல் (தொகுப்பு)
- காரைக்கால் அம்மையார்
- என் நினைவுக் கடல்
ஆங்கிலம்
- Varna Malai
- Sri Rama Charitha Geetham
உசாத்துணை
- தமிழிசைப் பிதாமகர் பாபநாசம் சிவன், பாசு. ரமணன், தென்றல் இதழ் கட்டுரை
- பாபநாசம் சிவன் கட்டுரை, முனைவர் செ. கற்பகம், தமிழ் இணையக் கல்விக் கழக நூலகம்
- பாபநாசம் சிவன், தாய்.காம்
- பாபநாசம் சிவன் 10, இந்து தமிழ் திசை
- பாபநாசம் சிவன் கட்டுரை
- பாபநாசம் சிவன், தமிழ் அண்ட் வேதாஸ் தளம்
- பாபநாசம் சிவன் தமிழ்ப் பாடல்கள்
- பாபநாசம் சிவன் பாடல்கள், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்
- பாபநாசம் சிவன் கீர்த்தனை மாலைகள், தமிழ் மின் நூலகம்
- பாபநாசம் சிவன் தமிழ்த்திரைப்படப் பாடல்கள், யூ ட்யூப் தளம்
- பாபநாசம் சிவன் தமிழ்க் கீர்த்தனைகள்-1, யூ ட்யூப் தளம்
- பாபநாசம் சிவன் தமிழ்க் கீர்த்தனைகள்-2, யூ ட்யூப் தளம்
- பாபநாசம் சிவன் பக்திப் பாடல்கள், யூ ட்யூப் தளம்
- காந்தியைப் போல் ஒரு...
- Papanasam Sivan: The Tamil Revolution of Carnatic Music
- Papanasam Sivan Article
- Papanasam Sivan, The Hindu Article
- 324 தமிழறிஞர்கள், தொகுப்பாசிரியர்: சூரியசந்திரன், வெளியீடு: கலைஞன் பதிப்பகம், தி.நகர், சென்னை - 17; முதல் பதிப்பு: 2023.
- திரை இசையின் பொற்காலம், வாமனன், வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம் சென்னை, முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2006
- 100/100 திரைக்கவிஞர்கள், வாமனன், வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம் சென்னை, முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2009
- திரையிசை வளர்த்த தமிழ்க் கவிகள், கவிஞர் பொன். செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: ஜூன் 2016
- தமிழ்த் திரையிசை ஆளுமைகள் 1931-2000, முனைவர் ஞா. கற்பகம், வெளியீடு: கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: ஜனவரி 2020.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2026, 12:44:58 IST