எஸ். பாலசந்தர்
எஸ். பாலசந்தர் (வீணை எஸ். பாலசந்தர்; வீணை பாலசந்தர்; சுந்தரம் பாலசந்தர் ) (ஜனவரி 18, 1927 - ஏப்ரல் 13, 1990) நடிகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை - வசன ஆசிரியர், இயக்குநர், இசைக்கலைஞர். தமிழ்த் திரையுலகில் பல புதுமைகளைச் செய்தார். வீணை இசைப்பதில் பல புதிய நுட்பங்களைக் கையாண்டார். இந்திய அரசின் பத்மபூஷண் உள்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றார்.
பிறப்பு, கல்வி
சுந்தரம் பாலசந்தர் என்னும் எஸ். பாலசந்தர், ஜனவரி 18, 1927-ல், சென்னை மயிலாப்பூரில், சுந்தரம் அய்யர் - பார்வதி அம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார். உடன்பிறந்தோர் இரண்டு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். பட்டப்படிப்பை முடித்தார்.
தனி வாழ்க்கை
எஸ். பாலசந்தர் மணமானவர். மனைவி: சாந்தா. மகன்: எஸ்.பி. ராமன்.
இசை வாழ்க்கை
தொடக்கம்
பாலசந்தரின் தந்தை சுந்தரம் ஐயர் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இசை ஆர்வலரான அவர் பல இசைக் கலைஞர்களுக்கு நண்பர் மற்றும் புரவலர். இசைக் கலைஞர்கள் பலரும் அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து செல்வர். பல கச்சேரிகளை நிகழ்த்துவர். அவர்கள் மூலம் பாலசந்தர் இசை ஆர்வம் பெற்றார். பாலசந்தரின் மூத்த சகோதரர் எஸ். ராஜம் இசை கற்று வந்தார். அதுவும் பாலசந்தருக்கு இசை மீது ஆர்வம் வரக் காரணமானது.
முதலில் 'கஞ்சிரா' வாசிக்கத் தொடங்கிய பாலசந்தர் பிறகு ஹார்மோனியம், தபேலா, புல்புல்தாரா, மிருதங்கம் எனப் பல்வேறு வாத்தியங்களை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றார். டைகர் வரதாச்சாரியார், காரைக்குடி சாம்பசிவ ஐயர், டி.என். ராஜரத்னம் பிள்ளை, திருவாலங்காடு சுந்தரேச ஐயர், வீணை தனம்மாள் போன்ற பலரது கச்சேரிகளைக் கேட்டு தனது இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டார்
சகோதரர் ராஜத்தின் கச்சேரிகளில் பக்கவாத்தியம் வாசித்தார். செம்பை வைத்தியநாத பாகவதர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், டைகர் வரதாச்சாரியார், புல்லாங்குழல் மாலி, மஹாராஜபுரம் விஸ்வநாதய்யர் போன்றோருக்குப் பக்கம் வாசித்தார். அண்ணன் ராஜத்துடன் இணைந்து நாடெங்கும் பயணம் செய்து இசைக்கச்சேரிகள் செய்தார். ஒருமுறை கச்சேரி ஒன்றிற்காக கராச்சி சென்றிருந்த போது 'சிதார்' ஒன்று பரிசாகக் கிடைத்தது. அதை வாசித்துப் பழகினார். பாலசந்தரின் முதல் சிதார் கச்சேரி சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் நடைபெற்றது. தொடர்ந்து சிதாரைக் கொண்டு சில கச்சேரிகள் செய்தார். ஆனால் கீர்த்தனைகளை பாவத்துடன் வாசிக்க சிதார் உதவவில்லை என்று கருதி, வீணை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.
வீணை இசை
எஸ். பாலசந்தரின் முதல் வீணைக் கச்சேரி அரங்கேற்றம், 1943-ல் மயிலாப்பூரில் நிகழ்ந்தது. அந்நிகழ்ச்சியில் திருவாலங்காடு சுந்தரேசய்யர் வயலின் வாசிக்க, ராம்நாட் ஈஸ்வரன் மிருதங்கம் வாசித்தார். அக்கச்சேரியைத் தொடர்ந்து பாலசந்தர் நாடெங்கும் பயணம் செய்து வீணைக் கச்சேரிகள் செய்தார். கர்நாடக இசையின் சிறப்பு மிக்க அம்சமான கமகங்களை வெளியிட வீணையே சிறந்தது என்று பாலசந்தர் கருதினார். அதில் பல்வேறு ஆய்வுகள் செய்தார். வீணை இசையில் 'காயகி பாணி' என்பதை பாலசந்தர் பின்பற்றினார். வீணை இசையை, மனிதக் குரலில் பாடுவதைப் போலவே வாசிக்கும் ஒரு பாணியாக இது அறியப்படுகிறது.
பாலசந்தர், சென்னை கிருஷ்ணகான சபாவில் 45 ராகங்களைக் கொண்டு கச்சேரி செய்தார். மத்தியபிரதேசத்தின் பிலாய் நகரில் உள்ள குணாள் பல்கலைக் கழகத்தில் கௌரவ இசைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
அமெரிக்காவில் வீணை இசை
1962-ல் அமெரிக்காவில் இருக்கும் Asia Society என்ற அமைப்பு, வீணை எஸ்.பாலசந்தர், உமையாள்புரம் சிவராமன், புல்லாங்குழல் ரமணி, வேலூர் ராமபத்ரன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்த Sangeetha Madras என்னும் இசைக் குழுவை கச்சேரி செய்ய அழைத்தது. அமெரிக்கா சென்ற அவர்கள் 30-க்கும் மேற்பட்ட கச்சேரிகளை அங்கே நிகழ்த்தினர். லாஸ் ஏஞ்சலஸின் புகழ் பெற்ற ரிச்சர்ட் பாக் இக்கச்சேரிகளைப் பதிவு செய்து அக்காலத்தில் எல்.பி. ரெகார்ட் (LP Record) ஆகக் கொண்டு வந்தார்.
வெளிநாடுகளில் வீணை இசை
1965-ல் ரஷ்யா சென்று பாலசந்தர் நிகழ்த்திய வீணைக் கச்சேரிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து ஜெர்மனி, போலந்து, ஹங்கேரி, பிரான்ஸ், சீனா, ஜப்பான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணம் செய்து பல கச்சேரிகளை நிகழ்த்தினார்.
சர்ச்சைகள்
தனக்கு சரி என்று மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டிருந்தார் பாலசந்தர். அதனால் அவருக்கு சக இசைக் கலைஞர்களுடன் அடிக்கடிக் கருத்து வேறுபாடுகளும் சர்ச்சைகளும் ஏற்பட்டன. குறிப்பாக பாலசந்தர் எழுதிய நூல் ஒன்றில், "கேரள சமஸ்தான ராஜாவான சுவாதி திருநாள் என்றொருவர் இல்லவே இல்லை; அவர் எழுதியதாகக் கூறப்படும் கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகள் அனைத்தும் அவர் சமஸ்தானத்துக் கலைஞர்கள் அமைத்தது" என்று எழுதியிருந்தார், அது பலத்த எதிர்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
ஒரு சமயம் மிருதங்க மேதையான பாலக்காடு மணி ஐயர், "மிருதங்கம் இன்றி கர்நாடக இசைக் கச்சேரிகள் இல்லை. அப்படி நடத்தினால் அது சோபிக்காது" என்று ஒரு கூட்டத்தில் பேசினார். அது கேட்டு வெகுண்ட பாலசந்தர், 'மிருதங்கம் இன்றி வீணைக் கச்சேரி' என்று அறிவித்து அவ்வாறே அக்கச்சேரியைப் பல்வேறு ராகங்களைக் கொண்டதாக அமைத்து நிகழ்த்திக் காட்டினார்.
இசையைப் பொறுத்தவரை பாலசந்தர் சில பிடிவாதமான கொள்கைகளைக் கொண்டிருந்தார். "இசை என்பது ஒரு தெய்வீகக் கலை. அதில் கண்டபடி புதுமைகளைப் புகுத்துவது சரியல்ல. ரசிகர்களுக்கு ஏற்றவாறு இசையில் மாற்றம் செய்வது அதன் தரத்தைக் குறைக்கும். தூய இசையை ரசிப்பதற்கேற்றவாறு ரசிகர்களின் தரத்தை, அவர்களது இசையறிவை உயர்த்துவதுதான் ஒரு இசைக் கலைஞனின் மிக முக்கிய கடமை" என்பது பாலசந்தரின் கருத்து.
இசைத்தட்டுகள்
பாலசந்தரின் இசை மொத்தம் 25 நீண்ட நேர இசைத் தட்டுகளாக வெளிவந்தது. மேளகர்த்தா ராகங்கள் 72-ஐயும் 12 இசைத் தட்டுகளாக வெளியிட்டார். முத்துஸ்வாமி தீக்ஷிதரின் நவக்கிரகக் கிருதிகளை காயத்ரி நாராயணனுடன் இணைந்து சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, ஆங்கிலக் கையேட்டு விளக்கத்துடன் இசைத்தட்டாக வெளியிட்டார்.
சீடர்கள்
காயத்ரி நாராயணன், ஜெயந்தி குமரேஷ், எஸ்.வி. மாதவன் ஆகியோர் எஸ். பாலசந்தரிடம் இசை பயின்றவர்கள்.
திரை வாழ்க்கை
ஹிந்திப் பட இயக்குநர் வி. சாந்தாராம், 1936-ல் 'சீதா கல்யாணம்' என்ற படத்தைத் தமிழில் தயாரித்தார். இதில் பாலசந்தரின் தந்தை சுந்தரம் ஐயர் தசரதராகவும், சகோதரர் ராஜம் ராமராகவும், சகோதரி ஜெயலட்சுமி சீதையாகவும் நடித்தனர். இதில் ராவண தர்பாரில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாகத் திரையில் தோன்றினார் பாலசந்தர். அதுதான் அவரது முதல் திரை அனுபவம். தொடர்ந்து காமதேனு (1941), ரிஷ்யசிருங்கர், (1941), நாரதர் (1942) போன்ற படங்களில் சிறு சிறுவேடங்களில் நடித்தார். அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் கொள்ளவில்லை. உயர் கல்வியிலும், இசை கற்பதிலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் திரைப்படத் துறையில் ஆர்வம் வந்ததால், தனது 21-ம் வயதில், 1948ல் 'இது நிஜமா?' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படத்தில் திரைக்கதை, பாடல்கள், இசை, இணை இயக்கம் எனப் பல பொறுப்புகளை மேற்கொண்டிருந்தார். தொடர்ந்து 'என் கணவர்' என்ற படத்தையும், 'கைதி' என்ற படத்தையும் இயக்கினார். 'கைதி' அக்காலத்தில் வெளிவந்த சிறந்த த்ரில்லர் படமாக அறியப்படுகிறது. 'ராணி' என்ற படத்தில் பானுமதியுடன் இணைந்து நடித்தார். ஆர்.எஸ். மனோகர் கதாநாயகனாக அறிமுகமான 'ராஜாம்பாள்' (கதை: ஜெ.ஆர்.ரங்கராஜு) படத்தில் வில்லனாக நடித்தார். 'டாக்டர் சாவித்திரி' படத்தில் குணசித்திர வேடமேற்றார். 'பெண்' திரைப்படத்தில் ஜெமினிகணேசனுக்கு தோழனாக, நகைச்சுவை வேடமேற்றார். தொடர்ந்து 'இன்ஸ்பெக்டர்', 'கோடீஸ்வரன்', 'மரகதம்' (கருங்குயில் குன்றத்துக் கொலை எனும் நாவலைத் தழுவியது) போன்ற படங்களில் நடித்தார். கே.ஆர். ராமசாமி - ராஜசுலோசனா நடித்த 'அவன் அமரன்' திரைப்படத்தை இயக்கினார். திரைப்படங்களில் பாடல்கள் அதிகம் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பாடல்களே இல்லாமல் 'அந்தநாள்' என்ற திரைப்படத்தை இயக்கினார். 'பொம்மை' திரைப்படத்தை ஆங்கிலப் படங்களின் பாணியில் இயக்கிப் பாராட்டைப் பெற்றார். 1965-ல் வெளியான 'நடு இரவில்' திரைப்படம்தான், எஸ். பாலசந்தர் இறுதியாக இயக்கிய திரைப்படம்.
விருதுகள்
- தமிழக அரசின் 'கலாசிகாமணி' பட்டம்
- வீணா யோகி
- வீணா வித்யாதர
- அபிநவ நாரத
- வீணா வரப்பிரசாதி
- யாழிசை வல்லுனர்
- வீணை செம்மல்
- வீணா வாத்ய வல்லப
- நாத ப்ரம்மம்
- இசைக் கடல்
- முத்தமிழ் கலைமணி
- மதுர ஞான கான வித்தகர்
- சங்கீத நாடக அகாதமி விருது
- இந்திய அரசின் பத்மபூஷண் விருது
- சீனாவில் உள்ள அகில உலக நுண்கலை கலாசார அகாதமி வழங்கிய டாக்டர் பட்டம்
மறைவு
எஸ். பாலசந்தர், மத்தியபிரதேசத்தில் உள்ள பிலாய் நகரில், ஏப்ரல் 13, 1990 அன்று, தனது 63-ம் வயதில் மாரடைப்பால் காலமானார்.
மதிப்பீடு
நடிகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், கதாசிரியர், இயக்குநர், இசைக்கலைஞர் எனப் பல களங்களிலும் செயல்பட்டவர் எஸ். பாலசந்தர். இசைத்துறை, கலைத்துறை என இரு துறைகளிலும் பல புதிய நுட்பங்களைக் கையாண்டார். பல புதுமைகளை நிகழ்த்தினார். கர்நாடக இசையுலகில் அக்காலத்தில் அதிகம் LP Record வெளியிட்டவராக பாலசந்தர் அறியப்படுகிறார். "வீணையில் பாலசந்தர் ஒரு அசகாய சூரன். நான்கு ஸ்டைல்களிலும் அவர் அளவுக்கு யாரும் சாதித்தவர்கள் இல்லையென்றே சொல்லலாம்" என்று மதிப்பிட்டார் இசைக் கலைஞர் எம்.எஸ். கோபாலகிருஷ்ணன்.
திரைப்பட இயக்கம், வீணை இசை இரண்டிலும் சாதனை நிகழ்த்திய முன்னோடிக் கலைஞராக எஸ். பாலசந்தர் மதிப்பிடப்படுகிறார்.
உசாத்துணை
- வீணை எஸ். பாலசந்தர், பா.சு. ரமணன், தென்றல் இதழ் கட்டுரை
- இந்து தமிழ் திசை கட்டுரை
- இந்துதமிழ் திசை கட்டுரை-2
- விகடன் இதழ் கட்டுரை
- இருபதாம் நூற்றாண்டின் சங்கீத மேதைகள், சு.ரா., அல்லயன்ஸ் வெளியீடு, முதல் பதிப்பு: 1987
- Andha Naal: Remembering veena S. Balachander
- Veena Balachander-Documentary film
- Veena S.Balachander, Youtube music
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Dec-2025, 09:20:41 IST