under review

டைகர் வரதாச்சாரியார்

From Tamil Wiki
நன்றி - தினமலர்

டைகர் வரதாச்சாரியார் (ஆகஸ்ட் 1, 1876-ஜனவரி 31, 1950) கர்னாடக இசைக்கலைஞர் இவர் பூர்ணசந்திரிகா ராகத்தில் அமைந்த ஒரு பல்லவியை நான்கு மணி நேரம் பாடக்கேட்ட மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் இவருக்கு டைகர் என்ற சிறப்பு பெயரை அளித்தார்.

பிறப்பு,கல்வி

டைகர் வரதாச்சாரி தற்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளத்தூரில் ஆகஸ்ட் 1, 1876 அன்று கந்தாடை ராமனுஜராச்சாரியாருக்கு மூன்று மகன்களில் முதலாவதாகப் பிறந்தார். சங்கீத கதாகலாட்சேபகராகரான கந்தாடை ராமனுஜராச்சாரியார் தெலுங்கு, சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.

வரதாச்சாரிக்கு இசை ஆர்வம் ஏற்பட அவரது அக்கா காரணமாக இருந்தார். வரதச்சாரி தன் கிராமத்தில் இருந்த தொடக்க நிலைப்பள்ளியில் தம் சகோதரர்களுடன் ஆரம்ப இசைக்கல்வி பெற்றார். தமது 14-வது வயதில் திருவையாறு சென்று குருகுல முறையில் பட்டணம் சுப்பிரமணிய ஐயரிடம் இசை கற்றார். பட்டணம் சுப்பிரமணிய ஐயர் சென்னை சென்றபோது, சகோதர்களுடன் காலடிப்பேட்டையில் தங்கி மூன்று ஆண்டுகள் இசைப்பயிற்சியைத் தொடர்ந்தார். சிறு வயது முதல் பெரும் இசைக்கலைஞர்களின் கச்சேரிகளை கேட்டதன் மூலமும் இசையறிவையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டார். காலடிப்பேட்டை நாவரத்திரி உற்சவத்தில் தியாகராஜரின் பாடல்கள், அருணாச்சல கவியின் ராம நாடகத்தின் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், நடனப் பாடல்கள் மற்றும் பைரவி, மோகனம், தோடி, காம்போஜி, தர்பார் போன்ற ராகங்களைக் கேட்டு அவற்றைக் கற்க ஆர்வம் கொண்டார்.

டைகர் வரதாச்சாரியின் இளைய சகோதர்கள் வீணை கிருஷ்ணமாச்சாரியார், ஶ்ரீனிவாச ஐயங்கார் இருவரும் புகழ்பெற்ற சங்கீத அறிஞர்கள். ஶ்ரீனிவாச ஐயங்கார் 'கான பாஸ்கரம்', 'சங்கீத ரத்னவாலி', 'தியாகராஜ ஹிருதயம் என்ற தெலுங்கு சங்கீத நூல்களை இயற்றியுள்ளார். மூவரும் 'காலடிப்பேட்டை சகோதரர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள். வீணை கிருஷ்ணமாச்சாரியார் காலடிப்பேட்டையில் உள்ள கல்யாண வரதராஜ சுவாமியின் பேரில் பல இசைப்பாடல்கள் எழுதியுள்ளார்.

டைகர் வரதாச்சாரி பெரும்பாலும் நாமம் தரித்த, கையில் ஒரு குடையுடன், சட்டைக்கு மேல் ஒரு கோட் அணிந்து, கையில் தென்னங்கீற்றில் ஆன ஒரு வெத்திலை செல்லத்துடன் இருப்பார் என்று அவரின் சீடர்களில் ஒருவரான விஞ்சமுரி வரதராஜ ஐயங்கார் நினைவு கூறுகிறார்.

தனிவாழ்க்கை

டைகர் வரதாச்சாரி குடும்பத்தின் தேவை காரணமாக அப்போதைய சென்னை சர்வே அலுவலகத்தில் மாதம் 12 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார் பின்னர் தற்போதைய கேரளத்தின் கோழிக்கோடு பகுதிக்கு மாற்றப்பட்டார். அங்கு ஓய்வு நேரங்களில் சங்கீத கச்சேரி, திருமணங்கள், திருவிழாக்களில் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்து பெரும் புகழ் பெற்றார். டைகர் வரதாச்சாரியின் புகழைக்கேள்விப்பட்ட அப்போதைய மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் மைசூர் நவராத்திரி விழாவிற்கு பாட அழைப்பு விடுத்தார். டைகர் வரதாச்சாரி நுட்பமாக பாடிய பல்லவியை கேட்டு இவரை அரண்மனை சங்கீத வித்வானாக இருக்க அழைப்பு விடுத்தார். பின்னர் டைகர் வரதாச்சாரி சர்வே அலுவலக வேலையை விட்டு முழு நேர சங்கீத வித்வானாக மைசூர் அரண்மனையில் இருந்தார்.

இவருக்கு திருமணம் நடந்தது என்று அறியப்படுகிறது ஆனால் தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

கல்விப்பணி

டைகர் வரதாச்சாரி மைசூரில் பத்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு சென்னையில் தற்போதைய மைலாப்பூரில் உள்ள அப்பர்சாமி தெருவில் வசித்தார். அப்போது சென்னை மியூசிக் அகெடெமி உருவாக்கிய ஆசிரியர்களுக்கான இசைக்கல்லூரியின்(டீச்சர்ஸ் காலேஜ் ஆஃப் மியூசிக்) முதல்வராக 5 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சென்னைப்பல்கலைகழகத்தின் இசைத்துறையின் துறைத்தலைவராக பணியில் அமர்ந்தார். அங்கே அவரது ஆலோசனையின்பேரில் இசையில் பட்டய வகுப்புகள்(diploma) தொடங்கப்பட்டன.

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் உள்ள இசைக்கல்லூரியில் 1937-1941 வரை இசைத்துறையின் முதல்வராக பணியாற்றியபின் சென்னை கலாக்ஷேத்திராவின் துணை முதல்வராகப் பணியேற்று இறக்கும்வரை அப்பணியில் இருந்தார்.

இசைப்பணி

நன்றி-கலாக்ஷேத்ரா நூற்றாண்டு மலர்
இசைப்பாணி

டைகர் வரதாச்சாரி கச்சேரிகளில் மத்திமகால பல்லவி பாடுவதில் சிறந்த திறமை கொண்டிருந்தார்.

அவரது காலத்தில் பெரும் புகழ் கொண்ட, ராகங்களின் அனைத்து சாத்தியங்களையும் தொட்டுச்செல்லும் விரிவான இசைமுறைக்கு (expansive music) அனைத்து இசைக்கலைஞர்களும் முக்கியத்துவம் கொடுத்தனர். இவர்கள் ஒரு ராகத்தை எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் அந்த ராகத்தின் அனைத்து சாத்தியங்களையும், ஒரு சில பல்லவிகளை கொண்டு வாசிக்கும் வழக்கம் இருந்தது. இவற்றிக்கு நேர் எதிராக மிகவும் கச்சிதமாக ஒரு ராகத்தின் முக்கியமான சாஹித்தியங்களை மட்டும் தொட்டுச் செல்லும் வீணை வாசிப்பு போன்ற ஆலாபனைகளும் அக்காலங்களில் வழக்கமாக இருந்தன. அரியக்குடி ராமானுஜ ஆச்சாரியார் இந்த இரண்டாவது முறையை பாடி பிரபலப்படுத்தியது மூலம் முந்தைய நாகஸ்வர முறை அல்லது விரிவான இசை ஆலாபனை முறை வழக்கத்தில் இருந்து மறைந்தது. பெரும் ராகங்களான தோடி, பைரவி, சங்கராபரணம் மற்றும் கல்யாணி போன்றவற்றின் அனைத்து விதமான சாத்தியங்கள் விரிவான ஆலாபனை மூலமே வெளிப்படும்.

டைகர் வரதாச்சாரியார் இந்த இரு முறைமைகளின் ஆகச் சிறந்த பகுதிகளை ஒன்றிணைத்து பாட வல்லவராகத் திகழ்ந்தார். குறிப்பாக அவர் ஒரு ராகத்தின் கச்சிதமான சில சாகித்தியங்களை மட்டும் எடுத்து அதை விரிவாக ஆலாபனை செய்வதில் நிகரற்று விளங்கினார். இவர் பெரும்பாலும் அப்போது வழக்கத்தில் இருந்த ஒரு குறியீட்டில் தொடங்கி அதன் அனைத்து விதமான சாத்தியங்களை சொல்லாமல், அதிலிருந்து வேறு வேறு தளங்களுக்கு கொண்டு செல்வதில் ஞானம் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இதை ஒரு மரத்தின் கிளைகளின் வளர்ச்சிக்கு ஒப்பாக கூறலாம். இவற்றை அவரே மியூசிக் அகடெமில் வாசித்த "ராக அமைப்பும் அதன் குணாதிசியங்களும்" "The Raga system and its characterestics" என்ற குறிப்பில் "ஒரு ராகம் ஒரு ஒவியத்தின் வர்ணங்களைப் போல எண்ணற்ற சாத்தியங்களை கொண்டது, அவற்றின் ஒரு குறியீட்டுக்கும் அடுத்த குறியீட்டும் இடையில் பல்லாயிரம் சாத்தியங்களை கொண்டது" என்று குறிப்பிடுகிறார்.

டைகர் வரதாச்சாரி எந்தவிதமான வகைமாதிரிக்குள் சிக்காமல், பெரும்பாலும் இவர் உருவாக்கும் சாஹித்தியங்கள் அந்தந்த நேரத்தில் உருவாக்கி பாடுவார். இதையே மீண்டும் உருவாக்க அவரால் இயன்றதில்லை. ஒருமுறை நண்பர் ஒருவர் வேண்டுகோளுக்கினங்க சில வர்ணங்களை தோடியில் உருவாக்கினார். அது அனைத்து விதங்களிலும் நேர்த்தியாக அமைந்தது அடுத்த நாள் அதை மீள் உருவாக்கம் செய்ய சொன்னபோது, தன்னால் முடியாது என்று கூறினார் என்று இவரின் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இசைப்பயிற்சி

டைகர் வரதாச்சாரி பெரும்பாலும் குறியீட்டுகளை(notations) கொடுக்காமல் நேரடியாக ஒரு ராகத்தை ஒரு அரை மணி நேரம் மாணவர்கள் முன் பாடுவார். அதன் அனைத்து சாத்தியங்களையும் பாடிய பின்பு மாணவர்களை பாடச்சொல்லி திருத்தங்கள் செய்வார். இப்படியாக ஒரு வாரம் முழுவதும் ஒரு ராகத்தை மாணவர்களுக்கு சொல்லித்தருவார் என்று அவரின் மாணவரான விஞ்சமுரி வரதராஜ ஐயங்கார் நினைவுகூறிகிறார்.

இசை ஆக்கங்கள்

1948-இல் தமிழகத்தின் கவர்னர் ஜெனரலாக இருந்த சி.ராஜகோபாச்சாரி கலாக்ஷேத்ராவிற்கு வந்தபோது 'ஈடினமே சூடினமோ' என்ற இசைப்பாடலை பாடி வாழ்த்தினார்.

வரதாச்சாரியார் 11 கீதங்களும், 11 வர்ணங்களையும் உருவாக்கினார். அவை அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் இசைத்தமிழ் வெளியீட்டின் இரண்டாம் தொகுதியில் வந்துள்ளன. மணிரங்கு இராகத்தில் ஒரு ஜம்ப வர்ணம், தர்பார் ராகத்தில் ஒரு ஆதி தாள வர்ணம், ஸ்ரீரஞ்ஜனி ராகத்தில் ஒரு ஆதி தாள வர்ணம், சாவேரி ராகத்தில் ஒரு ஆதி தாள வர்ணம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

கலாக்ஷேத்ராவில் நடைபெரும் 'குமார சம்பவம்' என்ற இசை நாடகத்திற்கு மெட்டமைத்துக் கொடுத்துள்ளார்.

மாணவர்கள்

சீடர்களுடன் நன்றி-கலாக்ஷேத்ரா நூற்றாண்டு மலர்
  • எம்.டி.ராமநாதன்
  • விஞ்சமுரி வரதராஜ ஐயங்கார்
  • கல்கத்தா K.S கிருஷ்ணமூர்த்தி

விருதுகள்

  • 1932-ம் ஆண்டு சென்னை மியூசிக் அகடெமி இவருக்கு சங்கீத கலாநிதி பட்டத்தை வழங்கி கவுரவித்தது.
  • ஒரு சமயம் இவர் பூர்ணசந்திரிகா ராகத்தில் அமைந்த ஒரு பல்லவியை நான்கு மணி நேரம் பாடக்கேட்ட மகாராஜா இவருக்கு "டைகர்" என்ற சிறப்பு பெயரை அளித்தார், அதுமுதல் இவர் டைகர் வரதாச்சாரியார் என்று அழைக்கபெற்றார்.
  • இவரை கவுரவிக்கும்விதமாக சென்னை மாநகராட்சி தற்போதைய அடையாறு, பெசண்ட் நகர், அண்ணா காலனியில் ஒரு தெருவுக்கு டைகர் வரதாச்சாரியார் அவென்யு என்று பெயர் சூட்டியுள்ளனர்.

மறைவு

டைகர் வரதாச்சாரி ஜனவரி 31, 1950-ம் ஆண்டு தமது 73-வது வயதில் சென்னையில் மறைந்தார்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-May-2025, 20:30:03 IST