under review

கே.ஆர். ராமசாமி

From Tamil Wiki
ராமசாமிப் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராமசாமிப் (பெயர் பட்டியல்)
கே.ஆர். ராமசாமி
கே.ஆர். ராமசாமி

கே.ஆர். ராமசாமி (கும்பகோணம் ராமபத்ர இராமசாமி) (ஏப்ரல் 14, 1914 - ஆகஸ்ட் 5, 1971) தமிழ் நாடக நடிகர், திரைப்பட நடிகர், பாடகர். நடிப்பிசைப் புலவர் என்றழைக்கப்பட்டார். திராவிட இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டவர். அண்ணாத்துரையின் நண்பர். அண்ணாத்துரையின் கதை, வசனத்தில் சமூக நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்தார். சட்டமன்ற மேலவை உறுப்பினராக சில காலம் இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

கே.ஆர். ராமசாமி தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் அம்மாசத்திரம் என்ற சிற்றூரில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இராமபத்திர செட்டியார், குப்பம்மாள் இணையருக்கு ஏப்ரல் 14, 1914-ல் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். ஏழாம் வயதில் நாடக உலகிற்குள் நுழைந்தார்.

கே.ஆர். ராமசாமி கல்யாணியை மணந்தார். இரு பிள்ளைகள்.

அரசியல் வாழ்க்கை

கே.ஆர். ராமசாமி அண்ணாத்துரையுடன் தொடர்பில் இருந்தார். திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னர் அது எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்தபோது கலையுலகின் சார்பாக முதல் மேலவை உறுப்பினராகும் (எம்.எல்.சி) வாய்ப்பைப் பெற்ற முதல் நடிகர். தி.மு.க-வின் வளர்ச்சிக்காகத் தான் ஈட்டிய பொருள் அனைத்தையும் வழங்கினார்.

நாடக வாழ்க்கை

கே.ஆர். ராமசாமி தன் ஏழாவது வயது முதல் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனி நடத்திய நாடகங்களில் நடித்தார். பதின்மூன்றாவது வயதில் டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்த சபையில் இணைந்து எட்டாண்டுகள் பணியாற்றினார். பின்னர் என்.எஸ்.கிருஷ்ணன் நடத்திய என்.எஸ்.கே நாடகக் குழுவில் இணைந்தார். என்.எஸ்.கிருஷ்ணன் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் சிறை செல்ல நேர்ந்த பிறகு அவரது நாடக சபையில் இருந்து விலகி கலைவாணர் பெயரிலேயே 'கிருஷ்ணன் நாடக சபா'-வை ஜூலை 17, 1946-ல் தொடங்கினார். இந்த சபாவிற்காக அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி என்ற நாடகம் புகழ்பெற்றது.

கே.ஆர். ராமசாமி தமிழ் நாடு முழுவதும் நாடகங்களை நடத்தினார். சென்னை வால்டாக்ஸ் தியேட்டரில் இவர் நடத்திய மனோகரா நாடகம் மூன்றரை மாதம் வரை நடந்தது. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் சென்று நாடகங்களில் நடித்தார்.

திரை வாழ்க்கை

1935-ல் டி.கே.எஸ் சகோதரர்கள் 'மேனகா' என்ற தங்கள் நாடகத்தை திரைப்படமாக எடுத்தபோது அதில் பைத்தியமாக கே.ஆர். ராமசாமி நடித்தார். தமிழில் வெளிவந்த முதலாவது சமூகப்படமான 'மேனகா' கே.ஆர்.ராமசாமி நடித்த முதல் திரைப்படம். 1941-ல் டி.கே.எஸ். சகோதாரர்களின் 'குமாஸ்தாவின் பெண்’ என்ற திரைப்படத்தில் 'சினிமா இயக்குநர் வி.பி.வார்' என்ற நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தின் துணை இயக்குநர்களாகப் பணியாற்றிய இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு பின்னாளில் ‘பூம்பாவை’என்ற படத்தை இயக்கினர். அவர்களுடைய பரிந்துரையினால் அந்தப் படத்தின் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு 1944-ல் கே.ஆர்.ராமசாமிக்குக் கிடைத்தது. இந்தப்படத்தில் யூ.ஆர்.ஜீவரத்தினத்துடன் ஜோடியாக நடித்தார்.

கே.ஆர். ராமசாமி 1935 முதல் 1969 வரை திரைப்படங்களில் நடித்தார். கதாநாயகனாகப் பல படங்களில் நடித்தார். அண்ணாத்துரை முதன்முதலாக கதை, வசனம் எழுதிய 'வேலைக்காரி' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்றார்.

கே.ஆர். ராமசாமி தெய்வ நீதி (1947), கங்கணம் (1947), பில்ஹணா ஆகிய படங்களில் நடித்தார். 'கிருஷ்ண பக்தி'யில் துணை நடிகராக நடித்தார். 1949-ல் நடித்த 'வேலைக்காரி' திரைப்படத்தின் மூலம் புகழ் அடைந்தார். 1950-ல் 'விஜயகுமாரி' திரைப்படத்தில் டி.ஆர். ராஜகுமாரியுடன் இணைந்து நடித்தார். 1951-ல் அண்ணாத்துரையின் ‘ஓர் இரவு’ படத்தில் நடித்தார். 'எதையும் தாங்கும் இதயம்' என்னும் திரைப்படத்தில் எஸ். ஜானகியுடன் இணைந்து 'உள்ளம் தேடாதே என்று சொல்லுதே' என்ற பாடலைப் பாடினார். பின்னாட்களில் நாடோடி (1966), அரச கட்டளை (1967), நம் நாடு (1969) போன்ற படங்களில் கௌரவ நடிகராக ராமசாமி நடித்தார். கடைசியாக நடித்த படம் ‘நம் நாடு’

மதிப்பீடு

”ஒரு முறை சென்னைக்கு வந்தபோது வால்டாக்ஸ் தியேட்டரில் ஏறக்குறைய மூன்று மாதம் வரை எனது மனோகரா நாடகத்தையும், ரத்னாவளி நாடகத்தையும் கோர்வையாக நடத்தியிருக்கிறார். இம்மாதிரியாக வேறெந்த நாடகக் கம்பெனியும் இடைவிடாது மாதக் கணக்காக நடத்தியதில்லை. அச்சமயங்களில் நான் அவர் நடித்ததை நேரில் கண்டு புகழ்ந்திருக்கிறேன். முக்கியமாக இவர் மனோகரன் பாத்திரத்தில் நடித்தது மிகவும் நன்றாக இருந்தது. அதை தினம் தினம் நடிப்பதென்றால் கடினமான வேலை. நான் இந்த மனோகரன் பாத்திரத்தை அநேகர் நடிப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுள் இவர் நடித்ததும், நண்பர் டி.கே.ஷண்முகம் நடித்ததும் தான் எனக்கு திருப்திகரமாக இருந்தது.” என பம்மல் சம்பந்த முதலியார் கே.ஆர். ராமசாமியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

“நண்பர் கே.ஆர். ராமசாமி கலை உலகில் ஒரு கருவூலம். காசுக்காக மட்டுமே நடிக்காத ஒரு கடமை வீரர். நிலம் பிளந்து விழ நேர்ந்தாலும் நெஞ்சம் குலையாத ஒரு கொள்கைத் தங்கம். தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பாசறையிலே சேர்ந்து அவருடைய எழுச்சியூட்டும் இலட்சியங்களைப் பரப்பும் எழுத்தாளனாக, பேச்சாளனாக இருந்துவந்த என்னை முதன்முதலில் கலையுலகம் பற்றியும் சிந்திக்க தூண்டியவர் நடிகமணி டி.வி. நாரயணசாமி. அந்தக் கலையார்வம் கருகிய மொட்டாகிவிடாமல் காய்த்திடவும், கனிந்திடவும் இன்று எனக்கு ஊக்கமூட்டுபவர், உதவிவருபவர்” என அண்ணாத்துரை குறிப்பிட்டுள்ளார்.

மறைவு

கே. ஆர். ராமசாமி ஆகஸ்ட் 1971-ல் காலமானார்.

நினைவு

கே.ஆர். ராமசாமி நூற்றாண்டு நிறைவு விழாவை சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை ‘திராவிட இயக்கத் தொடர்பியலின் கதாநாயகன்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கருத்தரங்கமாக 2015-ல் நடத்தியது.

நடித்த திரைப்படங்கள்

  • குமாஸ்தாவின் பெண் (1941)
  • பூம்பாவை (1944)
  • தெய்வ நீதி (1947)
  • கங்கணம் (1947)
  • கிருஷ்ண பக்தி (1949)
  • வேலைக்காரி (1949)
  • விஜயகுமாரி (1950)
  • காஞ்சனா (1952)
  • துளி விசம் (1954)
  • சுகம் எங்கே (1954)
  • சொர்க்க வாசல் (1954)
  • மேனகா (1955)
  • நீதிபதி (1955)
  • சதாரம் (1956)
  • அவன் அமரன் (1958)
  • கன்னியின் சபதம் (1958)
  • தலை கொடுத்தான் தம்பி (1959)
  • செந்தாமரை (1962)
  • எதையும் தாங்கும் இதயம் (1962)

இவரைப் பற்றிய நூல்கள்

  • கே.ஆர்.ராமசாமி: திராவிட இயக்கத்தின் முதல் சூப்பர்ஸ்டார் - ஆர் முத்துக்குமார்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Aug-2024, 13:52:52 IST