என்.எஸ். கிருஷ்ணன்
- கிருஷ்ண என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கிருஷ்ண (பெயர் பட்டியல்)
என்.எஸ். கிருஷ்ணன் (நாகர்கோயில் சுடலைமுத்துப் பிள்ளை கிருஷ்ணன்) (நவம்பர் 29, 1908 - ஆகஸ்ட் 30, 1957) நாடக நடிகர், சொந்தமாக நாடகக் கம்பெனி நடத்தினார். தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம் செய்தார். திரைப்பட நகைச்சுவை நடிகர், இயக்குனர், பாடகர். 'கலைவாணர்' என்ற பட்டத்தை நாடக ஆசிரியர் பம்மல் சம்மந்த முதலியார் அளித்தார். தன்னைக் கேலிப்பொருளாக்கி செய்வதே நகைச்சுவை என்ற நிலையிலிருந்து நகைச்சுவையின் தரத்தை உயர்த்தியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
என்.எஸ். கிருஷ்ணன் நாகர்கோவில் ஒழுகினசேரியில் நவம்பர் 29, 1908-ல் சுடலைமுத்துப் பிள்ளை, இசக்கி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தந்தை ஆங்கிலேயர்கள் ஆட்சியில் நடத்தி வந்த தபால் அலுவலகத்தில் தபால்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்தார். இசக்கி அம்மாள் தனது வீட்டிலே சிற்றுண்டி செய்து விற்று வந்தார்.
தனிவாழ்க்கை
என்.எஸ். கிருஷ்ணன் 1931-ல் நாகம்மையைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கோலப்பன் என்ற மகன். 'வசந்தசேனா' படப்பிடிப்பிற்காக புனேவிற்கு சென்ற போது ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த டி.ஏ. மதுரம் என்ற நடிகையுடன் காதல் வயப்பட்டு அவரைத் திருமணம் செய்துக்கொண்டார். 1948-ல் டி.ஏ. மதுரத்தின் வழி ஒரு பெண்குழந்தை பிறந்தது. மூன்று மாதத்தில் இறந்தது. பின்னர் மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாக மணம் புரிந்தார். வேம்புக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். மதுரம் 1974-ல் காலமானார். என்.எஸ். கிருஷ்ணன் தன் வள்ளல் தன்மைக்காக அறியப்பட்டார்.
அரசியல் வாழ்க்கை
என்.எஸ். கிருஷ்ணன் காந்தியின் மீது பற்று கொண்டவர். அவரின் மறைவுக்குப் பின்னர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்திக்கு நினைவுத்தூண் எழுப்பினார். ஜீவானந்தம், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகியோர் இவரின் நண்பர்கள். ஈ.வெ.ரா மீது பற்று கொண்டவர். மதுஒழிப்பிற்காக பிரச்சாரம் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபிமானி. தி.மு.க-வின் தேர்தல் பிரசாரங்களில் பங்கு கொண்டார்.
நாடக வாழ்க்கை
என்.எஸ். கிருஷ்ணன் முதலில் நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் சிறுவனாகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். பின் வில்லுப்பாட்டுக் கலைஞராக ஆனார். மதுரை ஸ்ரீ பாலசண்முகானந்த சபாவில் சேர்ந்தார். முதலில் சிறிய வேடங்களில் நடித்தார். மதுரைபாஸ்கரதாஸின் பாடல்களை நன்றாகப் பாடுவார். எம்.ஆர். சாமிநாதன் நாடகத்திற்கு வராத காரணத்தினால் டி.கே.ஷண்முகத்தின் பரிந்துரையின் பேரில் மனோகரா நாடகத்தில் பைத்தியக்காரனான வசந்தனாக நடித்தார். அதன் மூலம் நாடகத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களுக்காகப் புகழ் பெற்றார். ஆர்மோனியம், மிருதங்கம் வாசிப்பார். ஓவியம் வரைவார். ஓவியர் கே. மாதவனிடம் நெருங்கிய நட்பு இருந்தது. சொந்தமாக நாடகக் கம்பெனியையும் நடத்தினார். 1930-களில் 'தேசபக்தி' என்ற நாடகத்தின் மூலம் மது ஒழிப்பிற்கான பிரச்சாரம் செய்தார். கிந்தனார் கதாகாலட்சேபம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் நடத்தினார். திரைப்படத்திற்கு நடிக்கச் சென்ற பின்னும் நாடகக்குழுவில் உள்ளவர்களின் நலனுக்காக நாடகங்களைத் தொடர்ந்து நடத்தினார். நஷ்டத்தில் இயங்கும் நாடகக்குழுக்களைத் தானே ஏற்று நடத்துவது அல்லது அந்தக் குழுவின் நாடகங்களில் நடித்து அதைப் பிரபலப்படுத்துவது போன்ற காரியங்களையும் செய்தார்.
திரை வாழ்க்கை
என்.எஸ். கிருஷ்ணன் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தார். 1936-ல் 'சதிலீலாவதி' என்ற கறுப்பு, வெள்ளை திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டார். நகைச்சுவை மூலமாக சமூக சீர்திருத்தக் கருத்துகளை பரப்பினார். நூற்றியைம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மனைவி மதுரத்துடன் இணைந்தே பல படங்களில் நடித்தார். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தார். திரைப்படங்களில் பல பாடல்கள் பாடினார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தார்.
கொலைக் குற்றச்சாட்டு
என்.எஸ். கிருஷ்ணன் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் அப்போது புகழ்பெற்ற கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் குற்றம் சாட்டப்பட்டார். இந்தியா விடுதலை பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டது. முப்பது மாதங்களுக்கு மேலான சிறைவாழ்க்கைக்குப் பின்னர் விடுதலை பெற்று மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்துக்கள் கரைந்தன. சிறை மீண்ட பின் அவருக்கு 'கலைவாணர்' பட்டத்தை ஸ்ரீநடராஜா கல்விக் கழக இலவச வாசகர் சாலையில் பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்.
மதிப்பீடு
டி.கே. ஷண்முகம், “பாடம் சொல்லிக் கொடுத்த முதல் நாளே ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இளைஞர் கலவாணர் என்.எஸ். கிருஷ்ணன். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அதைப்போல என்.எஸ்.கிருஷ்ணன் வருங்காலத்தில் மகோன்னதமாக விளங்கப்போகிறார் என்பதை அவரின் இளம்பருவச் செயல்கள் காட்டின” என எனது நாடக வாழ்க்கை என்ற தன்வரலாற்று நூலில் குறிப்பிட்டார்.
முகத்தை அஷ்ட கோணலாக்கி அங்குமிங்கும் ஓடி, அடிபட்டு, உதைபட்டு, தன்னைக் கேளிக்கைப்பொருளாக்கி மக்களைச் சிரிக்கவைப்பதுதான் அதுவரை தமிழ் சினிமாவில் நகைச்சுவைக் காட்சி என்பதன் வரையறையாக இருந்துவந்தது. என்.எஸ்.கிருஷ்ணன் வருகைக்குப்பின் நகைச்சுவையின் தரம் உயர்ந்தது. நகைச்சுவை என்பது வெறுமனே உடல் மொழி, வார்த்தை ஜாலங்கள் என்பதைத் தாண்டி மக்களைச் சிந்திக்கவும் வைப்பது என்பதைத் தன் படங்களில் முன்வைத்தார். 'இந்தியாவின் சாப்ளின்' என்று அழைக்கப்பட்டார்.
மறைவு
என்.எஸ். கிருஷ்ணன் ஆகஸ்ட் 30, 1957 அன்று காலமானார்.
நினைவேந்தல்
தமிழ்நாடு அரசு என்.எஸ். கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு 'கலைவாணர் அரங்கம்' எனப் பெயர் சூட்டியது.
நடித்த நாடகங்கள்
- கோவலன்
- சத்தியவான் சாவித்திரி
- மனோகரா
- இரத்தினாவளி
- இராஜைராஜசோழன்
- இராஜாம்பாள்
- இராஜேந்திரா
- காலவரிஷி
- சந்திரகாந்தா
- கள்வர் தலைவன்
- பவளக்கொடி
திரைப்படங்கள்
- அலிபாபாவும் 40 திருடர்களும் (1941)
- பைத்தியக்காரன் (1947)
- நல்ல தம்பி (1949)
- அமரகவி (1952)
- பணம் (1952)
- டாக்டர் சாவித்திரி (1955)
- நம் குழந்தை (1955)
- முதல் தேதி (1955)
- காவேரி (1955)
- மதுரை வீரன் (1956)
- நன்னம்பிக்கை (1956)
- கண்ணின் மணிகள் (1956)
- ஆசை (1956)
- சக்கரவர்த்தி திருமகள் (1957)
- புது வாழ்வு (1957)
- அம்பிகாபதி (1957)
- தங்கப்பதுமை (1959)
- தோழன் (1960)
- 67-ல் என். எஸ். கிருஷ்ணன் (1967) (என்.எஸ்.கே.நடித்த படங்களின் தொகுப்பு)
இயக்கிய படங்கள்
- பணம் (1952)
- மணமகள்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Nov-2023, 09:20:04 IST