ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (ஆர்.எம்.ஆர்.எல்) (R.M.R.L) தமிழ்நாட்டில் சென்னை, தரமணியில் அமைந்துள்ள ஒரு தனியார் தமிழ் நூலகம். இது ரோஜா முத்தையா செட்டியாரின் தனிநபர் சேகரிப்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1994-ல் சிக்காகோ பல்கலைக்கழகம் இந்த சேகரிப்பை வாங்கியது. தற்போது ஆய்வு நூலகமாகச் செயல்படுகிறது.
தோற்றம்
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில் இருந்த ரோஜா முத்தையா 1950களில் நூல்களை சேர்க்கத் தொடங்கி தம் வாழ்க்கையை இந்நூல் தொகுப்பதற்கும், சேர்த்ததை வரிசைப்படுத்தவுமே முற்றிலுமாய் அர்பணித்து 1992ல் மறைந்தார். தமிழக அரசு இந்த நூல் சேகரிப்பை வாங்க மறுக்கவே சி.எஸ். லஷ்மியின் முன்னெடுப்பில் சிகாகோ பல்கலைக்கழகம் 1994-ல் இவரின் சேகரிப்பில் இருந்த முழு தொகுப்பையும் வாங்கியது. ஏ.கே. ராமானுஜன், நார்மன் கட்லர், அர்ஜுன் அப்பாதுரை, ரால்ஃப் நிக்கோலஸ் ஆகியோரின் ஒத்துழைப்பு இதன் பின்னால் இருந்தது. அதன்பின் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 1994-ல் நிறுவப்பட்டது. 1996-ல் ஆராய்ச்சியாளர்களுக்கு திறக்கப்பட்டது. இங்கு பழைய பதிப்பு நூல்கள், சமூக ஆவணங்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் சேகரிப்பில் உள்ளன. 1996 முதல் 2004 வரை "மொழி" என்ற பொது அறக்கட்டளை இதைப் பாதுகாத்தது. 2005-ல் ரோஜா முத்தையா அறக்கட்டளை நிறுவப்பட்டது.
சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளை (ஆர்.எம்.ஆர்.எல்.டி) சிந்து அல்லது ஹரப்பன் நாகரிகத்தின் பல்வேறு அம்சங்கள், குறிப்பாக சிந்து சமவெளி எழுத்துகள் குறித்து விஞ்ஞான விசாரணைகளை மேற்கொள்வதற்காக 2007 ஜனவரியில் சிந்து ஆராய்ச்சி மையத்தை (ஐ.ஆர்.சி) நிறுவியது. ஐராவதம் மகாதேவன் தனது ஆயுட்காலம் வரை இந்த மையத்தின் கௌரவ ஆலோசகராக இருந்தார். தற்போது சென்னையில் அடையாறுக்கு அருகே தரமணியில் உள்ளது.
நோக்கம்
மனித நேயம், சமூக அறிவியல் மற்றும் அறிவியல் முதலான பல்வேறு துறைகளில், தமிழ் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி பொருட்கள் மற்றும் வசதிகளை வழங்குவது இதன் முக்கிய நோக்கமாக சொல்லப்பட்டது.
நூலகம் பற்றி
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் தென்னிந்திய ஆய்வுகளுக்கான ஒரு வள மற்றும் ஆராய்ச்சி மையம். இந்த நூலகத்தில் உள்ள தொகுப்புகள் தமிழ் அச்சு பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் நேரடி பிரதிபலிப்பாக உள்ளது. இது இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நூல்களைக் கொண்டுள்ளது. 1804-ல் வெளியிடப்பட்ட 'காந்தரந்ததி' என்ற தலைப்புள்ள ஒரு நூல் இந்நூலகத்தில் உள்ளது. மொழி மற்றும் இலக்கியம், சுதேச மருத்துவம், மதம், நாட்டுப்புறவியல், கலாச்சாரம், இயற்பியல், காந்திய ஆய்வுகள், பெண்கள் ஆய்வுகள் மற்றும் நவீன வரலாறு ஆகிய தலைப்புகளில் நூல்கள் உள்ளது. திருமண அழைப்பிதழ்கள் மற்றும் தனியார் கடிதங்கள் போன்றவற்றையும் இவை கொண்டுள்ளது.
ஏ.கே. ராமானுஜத்தின் புத்தகத்தொகுப்பும் இப்பொழுது இந்நூலகத்துடன் சேர்ந்துள்ளது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறங்காவலர் குழு இப்போது சிகாகோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்நூலகத்தை பராமரிக்கிறது.
செயல்பாடுகள்
- அரிய நூல்களை அதிநவீன தொழில்நுட்பத்தின் வழி டிஜிட்டல் வடிவில் மாற்றும் பணிகள் நடக்கின்றன.
- தமிழின் செவ்வியல் இலக்கியங்களின் பதிப்புகள் நுண்படச் சுருளில் பதிவு செய்யப்பட்டு, நூலகத்தின் ஒரு பகுதியில் 18 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையிலும் 35% ஈரப்பதத்திலும் பாதுகாக்கப்படுகின்றன.
- பண்பாட்டுச் செயல்பாடு சார்ந்த சொற்பொழிகள், ஆய்வுத் திட்டங்கள், பயிற்சிகள் இங்கே வழங்கப்படுகின்றன.
- சிந்துவெளி ஆராய்ச்சி மையம், பொதுவியல் ஆய்வு மையம் ஆகிய மையங்களும் இங்கே செயல்படுகின்றன.
தமிழ் அறிவு வளாகம்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் அனைத்துச் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து, தமிழ் அறிவு வளாகம் ஒன்றை உருவாக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் நூலகம், தமிழ் அச்சுப்பயன்பாட்டின் வரலாற்றை விவரிக்கும் வகையிலும் சிந்துவெளி ஆராய்ச்சிகளை புரிந்துகொள்ளும் வகையிலும் இரண்டு அருங்காட்சியகங்கள், ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய ஆவணக் காப்பகம் ஆகியவை உருவாக்கப்படவுள்ளன. பண்பாட்டு சுற்றுலா மையமாகவும் செயல்படவுள்ளது. தமிழக அரசு நிலம் வழங்கியுள்ளது.
பண்பாட்டு விவாதம்
- ரோஜா முத்தையாவின் நூலகம் தமிழக அரசால் புறக்கணிக்கப்பட்டதால் தான் சிகாகோ பல்கலைக்கழகம் வாங்க நேரிட்டதாக சமகால அறிஞர்கள் கண்டனம் தெரிவித்தனர். செயற்கை நுண்ணறிவு காலகட்டத்தில் தகவல்களே ஒரு பண்பாட்டின் பெரும் சொத்துக்களாக இருக்க இயலும் என்பதை அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் அறிஞர்களால் எழுப்பப்பட்டது.
- "தமிழ் அறிவு வளாகம் என்ற பெயரும் செயல்பாடும் ரோஜா முத்தையாச் செட்டியாரின் வாழ்நாள் உழைப்பை மறைத்துவிடும். ரோஜா முத்தையா அவர்களின் பெயர் அழிக்கப்படுவது தமிழாய்வாளர்களுக்கு செய்யப்படும் மாபெரும் துரோகம். இந்த அழித்தொழிப்பின் வரலாற்றையும் சேர்த்தே வரலாற்றில் நினைவாக நிறுத்தவேண்டும்." என எழுத்தாளர் ஜெயமோகன் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 'தமிழ் அறிவுவளாகம்' என பெயர்மாற்றப்படுவதை ஒட்டி தன் கண்டனத்தைப் பதிவு செய்தார்.
செயல்படும் நேரம்
- திங்கள் முதல் சனி(இரண்டாம் சனிக்கிழமை தவிர) வரை -காலை 9.30 முதல் மாலை 5 மணிவரை
- ஞாயிற்றுகிழமைகளும் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமையும் விடுமுறை
உசாத்துணை
- ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - வலைதளம்
- ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - uchicago
- The Roja Muthiah Research Library (RMRL) - Directorete of public libraries
- தமிழ் வளாகம், கடிதம் - ஜெயமோகன் தளம்
- ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகம் - vikatan
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Feb-2026, 12:17:38 IST