under review

ரோஜா முத்தையா

From Tamil Wiki
முத்தையா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்தையா (பெயர் பட்டியல்)
ரோஜா முத்தையா
ரோஜா முத்தையா

ரோஜா முத்தையா (1926 - ஜூன் 4, 1992) தமிழகத்தைச் சேர்ந்த புத்தக சேகரிப்பாளர், ஓவியர். இவரது சேகரிப்புகளை அமேரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம் வாங்கி ரோஜா முத்தையா நினைவு ஆராய்ச்சி நூலகம் எனும் பெயரில் ஒரு நூலகத்தை நிறுவி நிர்வகித்து வருகிறது.

வாழ்க்கைக் குறிப்பு

ரோஜா முத்தையா தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூரில் 1926-ல் பிறந்தார். இயற்பெயர் முத்தையா. "ரோஜா ஆர்ட்ஸ்" என்னும் கலைக்கூடத்தின் நிறுவனர். பின்னாளில் ரோஜா முத்தையா என்று அழைக்கப்பட்டார். ரோஜா முத்தையா தனது விளம்பரப் பலகைகளுக்கான யோசனைகளைத் தூண்டுவதற்காக சென்னை மூர் மார்க்கெட்டின் புத்தகக் கடைகளைத் தேடிச் சென்றார். அங்கிருந்த புத்தகங்களால் கவரப்பட்டு அவற்றைச் சேகரிக்கத் தொடங்கினார்.

பண்பாட்டு செயல்பாடு

ரோஜா முத்தையா தன் சொந்த முயற்சியால் 1950 முதல் பல்லாயிரக்கணக்கான அரிய நூல்களைச் சேகரித்துப் பேணினார். அவரது முழு சேகரிப்பும் மூன்று முறை (இரண்டு முறை சென்னை குடியிருப்பில் இருந்தபோது திருடப்பட்டது) திருடப்பட்ட பிறகு தனது புத்தகங்களை கோட்டையூருக்கு மாற்றினார். தன் வாழ்க்கையை நூல்களைத் தொகுப்பதற்கும், வரிசைப்படுத்தவுமே முற்றிலுமாய் அர்ப்பணித்தார். தன் மகள் வள்ளிக்கண்ணு நாகராஜன் மற்றும் இரு பணியாட்களின் துணை மட்டுமே கொண்டு இப்பணியைச் செய்தார்.

நூல்களைத் தவிரவும் அந்தக் காலத்து டெண்ட்டுக் கொட்டகை சினிமா பிட் நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், பழைய கவர்க்கூடுகள், பழைய விளம்பரங்கள், பழைய காலத்தில் வெளியான பத்திரிக்கைகள், மரப்பாம்பூச்சி பொம்மைகள், தொங்கல்கள், தோரணங்கள், கையெழுத்துப் பிரதிகள், பழங்காலத்துப் பென்ஸில்கள், கட்டைப் பேனாக்கள் போன்றவையும் இவர் சேகரிப்பில் அடங்கும். 1910-ம் ஆண்டின் கடிதங்கள் உட்பட பல கடிதங்களைச் சேகரித்து வைத்துள்ளார்.

புத்தகங்களை வைக்க இடம் போதாததால், மூன்று வீடுகளை வாடகைக்கு எடுத்து அவற்றில் பாதுகாத்தார். புத்தகங்களை வைத்துப் படிப்பதற்காக கூடம் ஒன்றை வீட்டிற்கு முன்னால் கட்டி, வீட்டை நூலகமாக்கினர். ஒருநாளில் பதினாறு மணி நேரத்தை நூல்களை அடுக்கி வைக்கவும், தூசிகளை தட்டவும், கரையானிடம் இருந்து புத்தகங்களை பாதுகாக்கவும் செலவிட்டார்.

நினைவு

சென்னை, தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மறைந்த இவரின் பெயரால் அமைந்துள்ளது. இந்நூலகத்தைச் சிக்காகோ பல்கலைக்கழகத்தினர் ஊக்கத்தொகை அளித்துப் பராமரித்து வருகின்றனர். இதில் இவர் சேகரித்த அனைத்து நூல்களும், ஆவணங்களும் பாதுகாப்பில் உள்ளன.

மறைவு

ரோஜா முத்தையா ஜூன் 4, 1992-ல் காலமானார்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Feb-2026, 12:16:38 IST