under review

கண்ணி

From Tamil Wiki

இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலை கண்ணி. அதே போல் இரண்டிரண்டு அடிகளை வைத்துத் தொடுக்கப்படும் செய்யுள் கண்ணி. ஒத்த இரண்டு அடிகள் ஒரே எதுகை பெற்று அமையும்போது அவை 'கண்ணி' என அழைக்கப்படுகின்றன. இரண்டிரண்டு அடிகள் ஒரே எதுகை பெற்று அமைந்தால் அவை 'கண்ணிகள்' எனப்படுகின்றன. 'கண்ணி' சிற்றிலக்கிய வகைமைகளுள் ஒன்று.

கண்ணி - இலக்கண விளக்கம்

"எண்ணும் இரண்டடி எதுகை ஒன்றின்
கண்ணி என்று கருதப் படுமே" (சிந்துப்பாவியல், நூற்பா 33)

- எனும் சிந்துப்பாவியல் இலக்கணத்தின்படி, ஒத்த இரண்டு அடிகள் ஒரே எதுகை பெற்று அமையும்போது அவை கண்ணி என்று அழைக்கப்படுகின்றன. பாடல்களின் உட்பகுதியாக இரண்டிரண்டு அடிகள் ஒரெ எதுகை பெற்று அமைந்திருப்பின் அவை 'கண்ணிகள்' எனப்படும்.

"நாலடி பெற்று நடக்கும் கண்ணியும்
ஓரடிக் கண்ணியும் உளவென மொழிப" (சிந்துப்பாவியல், நூற்பா 34)

- என்ற பாடல், ஒரே எதுகை பெற்று நான்கு அடிகள் கொண்ட பாடல்களும் அமையும் என்பதையும், ஒரே அடியில் வரும் கண்ணியும் உண்டு என்பதையும் கூறுகிறது.

மூன்றடிகள் ஒரே எதுகை பெற்றுவரும் கண்ணிகளும் பாடப்படுவது உண்டு.

எடுத்துக்காட்டுகள்

ஒரே எதுகை, ஓரடி

ஒரே எதுகை பெற்றுவந்த ஓரடிக்கண்ணி:

"எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே"

இப்பாடலில் 'எல்லாரும்' என்பது தொடங்கி 'பராபரமே' என்று முடிவது வரை ஓர் அடி. 'எல்லாரும்', 'அல்லாமல்' என ஒரே எதுகை பெற்று வந்துள்ளது. அதனால் இது ஒரே எதுகை பெற்று வந்த ஓரடிக் கண்ணி.

ஒரே எதுகை, இரண்டு அடி

ஒரே எதுகை பெற்று வந்த இரண்டடிக் கண்ணி:

தண்மதி ஒண்முகப் பெண்மணியே - உன்னைத்
தான்கொண்ட நாயகர் ஆரேடி
அண்மையில் பொன்னணி அம்பலத் தாடல்செய்
ஐயர் அமுதர் அழகரடி

இப்பாடலில் 'தண்மதி' என்பது முதல் 'ஆரேடி' என்பது வரையில் ஓரடி; 'அண்மையில்' என்பது முதல் 'அழகரடி' என்பது வரையில் ஓரடி. இவ்விரண்டு அடிகளும் 'தண்மதி', 'அண்மையில்' என்ற எதுகை பெற்று வந்துள்ளன. அதனால், இது ஒரே எதுகை பெற்று வந்த ஈரடிக் கண்ணி.

ஒரே எதுகை, மூன்றடி

ஒரே எதுகை பெற்று வந்த மூன்றடிக் கண்ணி:

காளைசொற்படி மறு . நாளைக்குச் சென்றேன்
கனிபோன்ற தென்பாங்கு பாடாயோ என்றான்
வேளை யாகிவிடும் என்று நவின்றேன்
விரும்பிப் பசுக்கறந்து குடியென்று நின்றான்
ஆளன் கொடுத்தபா லாழாக்குப் பாலென்றேன்
அல்லடி காதற் கலப்பால்தான் என்றான்

இப்பாடலில் 'காளை' என்பது முதல் 'என்றான்' என்பது வரை முதல் அடி; 'வேளை' என்பது முதல் 'நின்றான்' என்பது வரை இரண்டாவது அடி; 'ஆளன்' என்பது முதல் 'தான் என்றான்' என்பது வரை மூன்றாவது அடி. இம்மூன்று அடிகளும் 'காலை', 'வேளை', 'ஆளன்' என்ற ஒரே எதுகை பெற்று அமைந்துள்ளன. அதனால் இது ஒரே எதுகை பெற்று வந்த மூன்றடிக் கண்ணி.

ஒரே எதுகை, நான்கடி

ஒரே எதுகை பெற்று வந்த நான்கடிக் கண்ணி:

நெஞ்சுபொ றுக்குதிலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
அஞ்சியஞ் சிச்சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்களென் பார் - இந்த
மரத்திலென் பார்அந்த குளத்திலென் பார்
துஞ்சுது முகட்டிலென் பார் - மிகத்
துயர்படு வாரெண்ணிப் பயப்படுவார்

இப்பாடலில் 'நெஞ்சு' என்பதுமுதல் 'விட்டால்' என்பதுவரை முதல் அடி; 'அஞ்சி' என்பதுமுதல் 'அவனியிலே' என்பதுவரை இரண்டாம் அடி; 'வஞ்சனை' என்பதுமுதல் 'என்பார்' என்பதுவரை மூன்றாம் அடி; 'துஞ்சுது' என்பது முதல் 'பயப்படுவார்' என்பது வரை நான்காம் அடி. இந்த நான்கு அடிகளும் 'நெஞ்சு', 'அஞ்சி', 'வஞ்ச', 'துஞ்சு' என்ற ஒரே எதுகையினால் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் இது ஒரே எதுகை பெற்று வந்த நான்கடிக் கண்ணி:

இவ்வாறாகக் கண்ணிகள் ஓரடிக் கண்ணி, ஈரடிக் கண்ணி, மூவடிக் கண்ணி, நான்கடிக் கண்ணி என இலக்கியங்களில் பயின்று வந்துள்ளன. எக்காலக் கண்ணி, பராபரக் கண்ணி, கிளிக்கண்ணி என பாடும் பொருண்மைகளைப் பொறுத்தும் கண்ணிகளின் வகைமைகள் அமையும்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Dec-2024, 19:24:34 IST