under review

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்

From Tamil Wiki
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் (படம் நன்றி: கல்கி இதழ்)

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் (நவம்பர் 15, 1876-ஜூன் 30, 1945) கர்நாடக இசைப் பாடகர். ஹரிகதா வித்வான். இசை ஆசிரியர். பல கீர்த்தனைகளை இயற்றினார். திருவிதாங்கூர் சமஸ்தான வித்வானாகப் பொறுப்பு வகித்தார். இசைக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார். இசை நூல்களை எழுதி வெளியிட்டார். இவர் இயற்றிய ‘இங்க்லீஷ் நோட்' மதுரை மணி ஐயர் உள்ளிட்ட பல இசைக் கலைஞர்களால் பாடப்பட்டுப் பிரபலமானது.

பிறப்பு, கல்வி

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், திருநெல்வேலியை அடுத்துள்ள ஹரிகேசநல்லூரில், நவம்பர் 15, 1876 அன்று, லிங்கமையர் - ஆனந்தவல்லி தம்பதியருக்குப் பிறந்தார். முத்து சுப்பிரமணியன் என்பது இவரது இயற்பெயர். ஹரிகேசநல்லூர் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். இளம் வயதில் தந்தையை இழந்தார். மாமா லக்ஷ்மணசூரியிடமிருந்து சமஸ்கிருதத்தையும், வேதாந்த, இதிகாச, புராணங்களையும் கற்றுக் கொண்டார். திருவையாற்றில் உள்ள வேதபாடசாலையில் வேதம் கற்றார். தியாகராஜரின் சீடர் பரம்பரையில் வந்த திருவையாறு சாம்பசிவ ஐயரிடம் இசை கற்றார்.

தனி வாழ்க்கை

முத்தையா பாகவதர், இசையையே தனது வாழ்க்கையாகக் கொண்டார். மாமன் மகள் சிவகாமியை மணந்தார். தனது சகோதரர் ஹரிகர பாகவதரின் மகனான வைத்தியலிங்கத்தைத் தத்தெடுத்து மகனாக வளர்த்தார்.

ஸங்கீத கல்பத்ருமம் - ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்

இசை வாழ்க்கை

முத்தையா பாகவதர், குருநாதர் சாம்பசிவ ஐயரிடமிருந்து முழுமையாக இசை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். ஆபிரகாம் பண்டிதர், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, கும்பகோணம் அழகநம்பிப் பிள்ளை போன்றோரது நட்பைப் பெற்றார். அவர்கள் மூலம் தனது இசையறிவை மேம்படுத்திக் கொண்டார். குருவுடன் இணைந்து பல கச்சேரிகளைச் செய்தார். பின்பு தனியாகக் கச்சேரிகள் செய்தார். ராமநாதபுரம் அரசர், எட்டயபுரம் ஜமீந்தார் உள்ளிட்ட பலர், முத்தையா பாகவதரின் திறமையை அறிந்து ஊக்குவித்தனர். தொடர்ந்து தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று கச்சேரிகள் செய்தார். கச்சேரியில் தானே பல கீர்த்தனைகளை இயற்றிப் பாடுவது இவர் வழக்கமாக இருந்தது.

முத்தையா பாகவதரின் இசையால் ஈர்க்கப்பட்ட மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையார், பாகவதரை மைசூர் சமஸ்தான வித்வானாக நியமனம் செய்தார். திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரும் முத்தையா பாகவதரது இசை மேன்மையை அறிந்து அவரை சமஸ்தான வித்வானாக நியமித்தார். முத்தையா பாகவதர், திருவிதாங்கூர் மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஸ்ரீ சித்திரைத் திருநாள் மகாராஜா ஸ்ரீபாலராம வர்மா, ஸ்ரீ ஸ்வாதித் திருநாள் மகாராஜா இயற்றிய பல கீர்த்தனைகளை ஸ்வரஸ்தான அடையாளங்களுடன் அச்சிட்டு வெளியிட்டார்.

முத்தையா பாகவதர், ஸ்ரீஸ்வாதித் திருநாள் பெயரில் அமைந்த இசைக் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க, கேரள அரசின் சார்பில், இசை பயிலும் மாணவர்கள் முதல் வித்வான்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் 'ஸங்கீதகல்பத்ருமம்' என்ற நூலை இயற்றினார்.

கீர்த்தனைகள்

முத்தையா பாகவதர், ஹரிகேசநல்லூரில் உள்ள முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவைப் பொறுப்பேற்று நடத்தினார். ’வள்ளி நாயகனே...’ உள்பட பல்வேறு கீர்த்தனைகளை முருகன் மீது இயற்றினார்.

முத்தையா பாகவதர், ஒரு சமயம் படுத்த படுக்கையாக இருந்த மைசூர் மன்னரைப் பிழைக்கச் செய்ய வேண்டி, சாமுண்டீஸ்வரி தேவியின் மீது நிரோஷ்டமாக (உதடுகள் ஒட்டாமல் வார்த்தைகளை அமைத்துப் பாடுவது) ‘சாஜ ராஜ ராதிதே...’ என்ற கீர்த்தனையைப் பாடி வேண்டுகோள் வைத்தார். மன்னரும் பிழைத்துக் கொண்டதாக ஒரு தொன்மக் கதை உள்ளது.

முத்தையா பாகவதர் அம்பாள் மீது ‘ஸ்ரீ சாமுண்டேஸ்வரி அஷ்டோத்திர கீர்த்தனை’யை இயற்றினார். ‘சிவ அஷ்டோத்திர கீர்த்தனை’யை இயற்றி, சிருங்கேரி ஆச்சாரியரிடமிருந்து மரகதலிங்கத்தைப் பரிசாகப் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி எனப் பல மொழிகளில் கீர்த்தனைகளை இயற்றினார். ‘பசுபதிப்ரியா’, ‘புதமனோகரி’, ‘நிரோஷ்டா’ என்று பல புதிய ராகங்களை உருவாக்கினார். சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த ‘ஹிமகிரி தனயே’ என்ற முத்தையா பாகவதரின் பாடலை ஜி.என். பி. மேடைதோறும் பாடிப் பிரபலபப்படுத்தினார். மதுரை மணி ஐயர் பாடிப் பிரபலமான ‘இங்க்லீஷ் நோட்’டை இயற்றியது முத்தையா பாகவதர் தான். கர்நாடக சங்கீத மேடைகளில் மட்டுமல்லாது திரைப்படங்களிலும், நாடகங்களிலும் இவரது பாடல்கள், கீர்த்தனைகள் பயன்படுத்தப்பட்டன. இவரது பாடல்களில் பல கிராமபோன் இசைத்தட்டாக வெளியாகி வரவேற்பைப் பெற்றன. மகாகவி பாரதியை முத்தையா பாகவதர் சந்தித்திருக்கிறார். ‘ஜெயமுண்டு பயமில்லை’ என்ற பாடலை பாரதியே பாடக் கேட்டு ரசித்திருக்கிறார் பாகவதர்.

வெளிநாடுகளுக்கும் இலங்கை, மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கும் சென்று கச்சேரிகளை, ஹரிகதா நிகழ்ச்சிகளை நடத்தினார்.

இசைப் பள்ளி

1924-ம் ஆண்டில் மதுரையில் இசைப்பள்ளி ஒன்றைத் தொடங்கினார் முத்தையா பாகவதர். அப்பள்ளிக்கு, மிருதங்க வித்வான் முருகபூபதியின் மூத்த சகோதரரான சங்கரச் சேர்வையை முதல்வராக நியமித்தார். இந்தப் பள்ளியில் தான் மதுரை மணி ஐயர், டி.என்.சேஷகோபாலன் ஆகியோ இசை பயின்றனர். தனது இசைப் பள்ளியின் மூலம் பல இசைக்கலைஞர்களை உருவாக்கினார் முத்தையா பாகவதர்.

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்

ஹரிகதை

ஒரு சமயம் முத்தையா பாகவதர், தஞ்சாவூர் சென்றிருந்தபோது கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதரின் ஹரிகதையைக் கேட்டார். பாகவதருக்குத் தாமும் அதுபோன்று ஹரிகதை செய்ய வேண்டும் என்ற ஆவல் உண்டானது. தஞ்சாவூரில் வசித்து வந்த தனது மாமா லக்ஷ்மணசூரியிடமிருந்து ஹரிகதாவின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹரிகதா வித்வான் ஸ்ரீபட்ஜியிடமிருந்து மகாராஷ்டிர பாணி ஹரிகதாவைக் கற்றுக் கொண்டார். இசைக் கச்சேரிகளோடு ஹரிகதாவையும் செய்தார். இவரது ஹரிகதாவிற்கு இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்தது. முத்தையா பாகாவதரின் ‘தியாகராஜ ராமாயணம்’ ஹரி கதை இசைக் கலைஞர்கள் பலராலும் வரவேற்கப்பட்டது.

புதிய பாணிகளைப் பின்பற்றிக் கதை சொல்வது, புதிதாகப் பல பாடல்களைப் புனைந்து பாடி இரண்டையும் கலந்து சொல்வது எனப் பல்வேறு உத்திகளை இவர் ஹரிகதையில் கையாண்டார். முத்தையா பாகவதரின் ‘வள்ளி பரிணயம்' ஹரிகதை செட்டிநாட்டுப் பகுதிகளில் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

விருதுகள்

  • மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையார் அளித்த ‘காயசிகாமணி’ பட்டம்.
  • மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான் பட்டம்
  • திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான் பட்டம்
  • திருவாங்கூர் ஸர்வகலாசாலை வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டம்
  • சங்கீத கலாநிதி விருது
  • ஹரிகதா சக்கரவர்த்தி விருது

மாணவர்கள்

மதுரை மணி ஐயர், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் போன்றோர் முத்தையா பாகவதரிடம் இசை பயின்ற மாணவர்களாவர்.

ஸ்ரீ முத்தையா பாகவதர் சரிதம்

ஆவணம்

’ஸ்ரீ முத்தையா பாகவதர் சரிதம்' என்ற நூலை, வித்துவான் ஹெச். வைத்தியநாதன் எழுதியுள்ளார். அந்த நூல் தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது.

இவரது ‘ஸங்கீதகல்பத்ருமம்' நூல், இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது [1].

மறைவு

மைசூர் மன்னரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்த ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், திடீர் உடல்நலக் குறைவால் ஜூன் 30, 1945 அன்று காலமானார்.

வரலாற்று இடம்

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், கர்நாடக இசைக் கலைஞராகவும், சிறந்த இசை ஆசிரியராகவும் திகழ்ந்தார். இசை பற்றிய அடிப்படை விளக்க நூல்களை எழுதினார். இவரது ‘ஸங்கீதகல்பத்ருமம்' நூல், முக்கியமான ஒன்றாக இசை ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது. முத்தையா பாகவதர் வர்ணங்கள், ராகமாலிகைகள், தருக்கள், தில்லானாக்கள் இவற்றுடன் பல கீர்த்தனைகளையும் இயற்றினார். இருபதிற்கும் மேற்பட்ட புதிய ராகங்களை அறிமுகப்படுத்தினார். ஹரிகதைக்குத் தனி ஒரு பரிணாமத்தை அளித்தார். இசை, ஹரிகதை இரண்டிலுமே விற்பன்னராகத் திகழ்ந்தார்.

“தரு வர்ணம் என்ற ஒரு வர்ணத்தைப் பற்றிய விவரங்களை முதன் முதலில் தந்தவர் ஹரிகேசநலூர் முத்தையா பாகவதர் தான்” என்கிறார் இசை வித்வான், டி.என். சேஷகோபாலன்.

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் கீர்த்தனைகள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page