under review

சுவாதித் திருநாள் ராம வர்மா

From Tamil Wiki
சுவாதி திருநாள் ராம வர்மா

சுவாதித் திருநாள் ராம வர்மா (ஏப்ரல் 16, 1813 - டிசம்பர் 25, 1846) இந்தியாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை (தற்காலக் கேரள மாநிலத்தில் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி, மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு பகுதியை) 1829 முதல் 1846 வரை ஆண்ட மன்னர். இசைவாணர். கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகள் பல இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இளமை

ராஜராஜ வர்மாவிற்கும், ராணி கெளரி லட்சுமிபாய்க்கும் இரண்டாவது மகனாக ஏப்ரல் 16, 1813-ல் ராம வர்மா பிறந்தார்‌. இயற்பெயர்‌ குலசேகரர்‌. இவருடைய சகோதரி ருக்மிணி பாய், சகோதரர் உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. சுவாதி நட்சத்திரத்தில்‌ பிறந்தமையால்‌ அந்நாட்டு மரபுப்படி இவர்‌ சுவாதித்‌ திருநாள்‌ என்று பெயரிட்டு முடிசூட்டப்‌ பெற்றார்‌. இவர் பிறந்த ஆண்டிலேயே அரசராக அறிவிக்கப்பட்டார். ராணி கெளரி லட்சுமி பாய் இறந்த பின், 1815-ம் ஆண்டு முதல் 1829-ம் ஆண்டு வரை அரசனின் இளவயது காரணமாக கௌரி லட்சுமி பாயின் சகோதரி ராணி கெளரி பார்வதி பாய் ஆட்சி செய்தார். சுவாதித் திருநாள் 1829-ல் தன் பதினாறாவது வயது முதல் 1846 வரை ஆட்சி செய்தார்.

கல்வி

சுவாதித் திருநாள் மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், வங்காள மொழி, தமிழ், ஒரியா மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார். 1843-ம் ஆண்டு முதல், ஆசிய அரச சங்கத்தின் (Royal Asiatic Society) உறுப்பினராக இருந்தார். வடிவவியல் போன்ற துறைகளிலும் ஈடுபாடு கொண்டார். கர்னல் வெல்ஷ் என்ற ஆங்கிலேய அதிகாரி அரண்மனைக்கு வந்தபோது அவரிடம் வடிவவியல், அறுகோணம், எழுகோணம் போன்ற வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியதாக வாதிட்டார் என்பர்.

குதிர மாளிகை (மன்னர் சுவாதி திருநாள் கட்டியது)

தனி வாழ்க்கை

சுவாதி திருநாள், ஸ்ரீமதி நாராயணபிள்ளை கொச்சம்மா அம்மாவீடு குடும்பத்தைச் சேர்ந்த கர்நாடக இசைப் பாடகியும், வீணைக் கலைஞருமான திருவட்டார் அம்மாச்சி பணபிள்ளை அம்மா என்பவரைத் திருமணம் செய்தார். இவர் கொல்லத்தில் ஆய்குட்டி வீடு என்ற பெயருடைய சாதாரண நாயர் குடும்பத்தைச் சேர்ந்த பெண். திருமணத்துக்கு முன்பு இவர் திருவட்டார் அம்மாவீட்டாரால் (இவரின் பூர்வீக தாய் மற்றும் சகோதரிகள் உட்பட) தத்தெடுக்கப்பட்டார். இவரின் சகோதரி மன்னரின் சகோதரர் உத்திரம் திருநாளை மணந்தார். சுவாதித் திருநாளுக்கு திருவட்டார் சித்திரை திருநாள் அனந்த பத்மநாபன் தம்பி என்ற பெயரில் ஒரு மகன் பிறந்தான். மன்னர் 1843-ம் ஆண்டு முதலியார் இனத்தைச் சேர்ந்த சுந்தர லட்சுமி அம்மாள் என்ற நடன நங்கையை மணந்து கொண்டார். சுந்தர லட்சுமி சுகந்தவல்லி என்றும் அழைக்கப்பட்டார். முதலில் மன்னர் சுகந்தவல்லியை அம்மாச்சி என்ற பட்டத்துடன் வடசேரி அம்மாவீடு என்ற வீட்டுக்குத் தத்தெடுத்தார். தஞ்சாவூர் அம்மாவீடு என்ற மாளிகையை 1845-ம் ஆண்டு கட்டி சுகந்தவல்லி குடும்பத்தாரை இங்கு குடியமர்த்தினார். எனினும் இவர் குடும்பத்தார் இந்தத் திருமண உறவை அங்கீகரிக்கவில்லை. மன்னர் 1846-ம் ஆண்டு இறந்தார். சுகந்தவல்லி தன இறுதிக் காலமான 1856-ம் ஆண்டு வரை (பத்தாண்டுகள்) தஞ்சாவூர் அம்மாவீட்டில் வசித்தார் என சொல்லப்படுகிறது. ஒரு ராணிக்கு உரிய சகல மரியாதைகளையும் தனிவகை முறைகளையும் இவர் பெற்றார். இவர் மறைவுக்குப் பின் மன்னர் உத்திரம் திருநாள் வீட்டையும் சொத்தையும் பிணைத்து ஒரு உத்தரவு பிறப்பித்தார். சுகந்தவல்லிக்காக ஏற்படுத்தப்பட்ட சொத்துக்களை திரும்ப எடுத்துக்கொள்ள இருப்பதாக உத்தரவு வந்தது. இதை எதிர்த்துச் சுகந்தவல்லியின் தங்கை கணவர் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் மனுவினைப் பதிவு செய்தார். தனது தீர்ப்பில் உயர்நீதி மன்றம் சொத்துக்களை பிணைத்துக்கொள்ளும் உரிமையை ஒரு நிபந்தனையின் பேரில் அளித்தது. சுகந்தவல்லி குடும்பத்தாருக்கு மாதம் ரூபாய் பத்தாயிரம் மானியமாக அளிக்க வேண்டும் என்பது நிபந்தனை வந்தது.

இசை வாழ்க்கை

சுவாதி திருநாள்

புகழ் பெற்ற கவிஞரும், நெருங்கிய உறவினருமான இறையம்மன் தம்பி எழுதிய 'ஓமனத்திங்கள் கிடாவோ நல்ல கோமளத்தாமரப் பூவோ'[1]என்ற மிகப் புகழ் பெற்ற மலையாளத் தாலாட்டுப் பாடல் சுவாதித் திருநாளுக்காக அவர் பிறந்த நேரத்தில் எழுதப்பட்டது. இளமையிலிருந்தே தன் சிற்றன்னையால் இசையின் மீது நாட்டங் கொண்டார். கரமண சுப்பிரமணிய பாகவதர் மற்றும் கரமண பத்மநாப பாகவதரிடம் இசை பயின்றார். இசையை ஆங்கிலத்தில் சுப்பாராவிடம் கற்றார். தொடர்ந்து புகழ் பெற்ற இசைக் கலைஞர்களின் இசையைக் கேட்டும் பாடியும் கற்றார்.

சுவாதித் திருநாள் ராம வர்மா சிறந்த இசை வல்லுனர், இசைப் புரவலர். இந்திய இசைக்கலையின் வடிவங்களுள் ஹிந்துஸ்தானி இசை, கர்நாடக இசையை ஆதரித்தார். கர்நாடக இசை மரபின் ரசிகர். இவர் நானூற்றுக்கும் மேலான கீர்த்தனைகளைக் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை வடிவங்களில் இயற்றினார். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர் (1767–1847), சியாமா சாஸ்திரிகள் (1762–1827) மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் (1775–1835) இவர் காலத்தைச் சேர்ந்தவர்கள். சகோதரர்களான தஞ்சை நாட்டிய சகோதரர் நால்வர், தியாகராசரின் மாணவர் கண்ணையா பாகவதர், அனந்தபத்மநாப கோஸ்வாமி (கோகிலாகந்தமேரு சுவாமி என்ற பெயர் பெற்ற மராத்தி பாடகர்), ஷாட்கலா கோவிந்த மாரார் இவரின் அரண்மனைக்கு வருகை தந்த கலைஞர்கள்.

சுவாதித் திருநாள் சமஸ்கிருதத்தில் வர்ணங்கள்‌, தில்லானா, ஜாவளி, கீர்த்தனைகள் இயற்றினார். பல மொழிகளைச்‌ சேர்ந்த இசைவாணர்‌ இவர்‌ அவையில் இருந்தார்கள். அவர் இயற்றிய நானூறுக்கும் மேற்பட்ட கிருதிகளில் பெரும்பாலானவை சமஸ்கிருதத்தில் அமைந்தவை. இந்தி மொழியில்‌ முப்பத்தியேழு கிருதிகள் செய்தார்‌. மலையாள மொழிக்கே உரிய மணிப்பிரவாளத்திலும், தெலுங்கு, கன்னட மொழிகளிலும்‌ பாடல்கள்‌ இயற்றினார். பக்தி மஞ்சரி, பத்மநாப சதகம் இரண்டையும் இயற்றினார். சுவாதித் திருநாளின் கிருதிகளில்‌ 'பத்மநாப' முத்திரை அமைந்திருக்கும். கிருதிகளில்‌ பெரும்பகுதி புகழ்பெற்ற, அதிகம் பாடப்படும் ராகங்களில் அமைந்தவை.

பரதநாட்டியத்துக்கேற்ற பதங்களையும்‌ செய்தார்‌. ஹரி கதாகாலட்‌சேபத்துக்‌ கேற்றவாறு குசேலோபாக்கியானம்‌, அஜாமிளோபாக்கியானம்‌ என்ற பாகவத கிளைக்கதைகளையும் செய்தார்‌. அக்காலத்திருந்த பெரும்பான்மையான இசைவாணர்களை அழைத்து அவையில் பாட வைத்து கிறப்புச்‌ செய்தார்‌.

ராமவர்மா சிறப்பு செய்த இசைவாணர்கள்
  • பாலக்காடு பரமேஸ்வர பாகவதர்‌
  • ஷட்கால கோவிந்தமாரார்‌
  • தஞ்சை சாரங்கி வித்துவானான சிந்தாமணி
  • ரவிவர்மன்‌ தம்பி
  • கன்னையா
  • ஹீராப்தி சாஸ்திரி
  • மேருசாமி பாகவதர்‌
  • பொன்னையா (தஞ்சை)
  • சின்னையா (தஞ்சை)
  • சிவானந்தம்‌ (தஞ்சை)
  • வடிவேலு (தஞ்சை)
சுவாதி திருநாள் அஞ்சல்தலை
பாராட்டு
  • மேருசாமி பாகவதர்‌ இவருடைய உபாக்கியானங்களைக்‌ காலட்சேபம்‌ செய்யக்கேட்டு அவருடைய பிரசங்க ஆற்றலைப்‌ பாராட்டி அவருக்கு 'கோகிலகண்ட' என்ற பட்டத்தையும்‌, சால்வையையும்‌, ஐநூறு ரூபாய் பரிசையும்‌ அளித்தார்‌. இவர் திருவாங்கூர்‌ ராஜ்யத்தில்‌ காலட்சேபத்தைப்‌ புதிதாய்க்‌ கொண்டுவந்து பரப்பினார்.
விவாதங்கள்

சுவாதி மன்னர்‌ பெயரால்‌ வந்த கிருதிகள்‌ பெரும்பகுதி தஞ்சை நால்வருள் ஒருவரான வடிவேலு செய்து அவர்‌ பெயரால்‌ வெளியிட்டவையே என்ற விவாதம் இருந்தது. முற்காலத்தில்‌ பெரும்புலவர்கள்‌ நூல்செய்து தம்மை ஆதரித்த வள்ளல்‌ பெயரால்‌ வெளியிடுவது எங்கும்‌ வழக்கம்‌. வடமொழியில்‌ இந்தச்‌ சம்பிரதாயம்‌ மிகவும்‌ அதிகம்‌. பொன்னையா பிள்ளையின்‌ புதல்வர்களான சிவானந்தம்‌, கிட்டப்பா இருவரும்‌, "சுவாதித்‌ திருநாள்‌ பெயரில்‌ வெளிவந்த கிருதிகள்‌ அவர்‌ செய்தவையல்ல. அவை அந்த நால்வர்‌ முக்கியமாக வடிவேலு செய்தவையே" என்று நூலில் எழுதினர். இவர்கள்‌ கருத்தை பரதநாட்டிய மேதை பாலசரஸ்வதி மறுத்தெழுதினார். "வடிவேலுவின்‌ தூண்டுதல்‌ இருந்திருக்கலாம்‌. அனால்‌ அவரே பாடினார்‌, மன்னர்‌ பாடவில்லை என்பது தவறு" என்று திருவனந்தபுரம்‌ சர்வகலாசாலையில்‌ சமஸ்கிருதப்‌ பேராசிரியர்‌ டாக்டர்‌ வேங்கடகிருஷ்ண ஐயர்‌ கூறினார்.

சுவாதித் திருநாள் இசைவிழா

சுவாதி சங்கீதோத்சவம் என்ற ஒரு வாரம் முழுவதும் சுவாதித் திருநாள் மன்னரின் கீர்த்தனைகளை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்ட இசை விழாவினை இளவரசர் இராம வர்மா நடத்தினார். ஆண்டுதோறும் ஜனவரி மாதம், 6-12 தேதிகளில் வரை திருவனந்தபுரம் குதிர மாளிகையில் சுவாதித் திருநாள் இசைவிழா நடக்கும்.

சுவாதித் திருநாளுக்கு விருப்பமான கீர்த்தனைகள்
  • தேவ தேவ[2]
  • சரசிஜநாப[3]
  • பத்மநாப பாஹி[4]
  • ஸ்ரீ ரமண விபோ[5]
மாணவர்கள்
  • கோவிந்தமாரார்
  • உபநிஷத்‌ பிரம்மம்‌
  • வீணை குப்பையர்‌

அரசியல் வாழ்க்கை

ராம வர்மா தன் பதினாறாம் வயதில் அரசப் பொறுப்பேற்றுக் கொண்டார். தன் ஆசிரியரான சுப்பாராவைத் தன் முதலமைச்சராக(திவான்) நியமித்தார். அரசாங்க அலுவல்களில் தனி கவனம் செலுத்த அரசின் செயலகத்தை எழுபத்தி ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்த கொல்லம் நகரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றினார். கையூட்டைத் தடுக்க பல வழிகளில் முயன்றார். திவான் ஒரு நிலத் தாவாவில் ஒரு சார்புடன் இருந்தமைக்காக அவரிடம் கண்டிப்புக் காட்டினார். திருவனந்தபுரத்தில் 1834-ம் ஆண்டில் ஆங்கிலப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். பின்னாளில் இது மகராஜா மேனிலைப்பள்ளி என்றும் மகராஜா கல்லூரி என்றும் வளர்ந்து தற்போதைய திருவாங்கூர் பல்கலைக்கழகக் கல்லூரியாக ஆனது. சட்டத் துறையில் நிறைய சீர்திருத்தங்கள் செய்தார். இவர் தொடங்கிய முன்சிப் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், மற்றும் மேல் முறையீட்டு நீதி மன்றங்கள் சட்டத் துறையில் புதுமையை ஏற்படுத்தின. மலபாரைச் சேர்ந்த கந்தன் மேனன் என்பவர் இவரால் கண்டறியப்பட்டு ஹுசூர் திவான் பேஷ்கார் என்ற பதவியில் அமர்த்தப் பட்டார். மேனனின் துணை கொண்டு நில சச்சரவுகளைத் தீர்க்க மீண்டும் நில அளவை செய்தார். இவர் 1836-ம் ஆண்டு முதன்முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினார். இந்தக் கணக்கெடுப்பின்படி அக்கால மக்கள் தொகையை(1,28,068) அறியலாம்.

மருத்துவம்

சுவாதித் திருநாள் நவீன மருத்துவத்தை கேரளத்தில் அறிமுகப்படுத்தினார். ஒரு ஐரோப்பியரை அரண்மனை வைத்தியராய் நியமித்தார். உள்ளூர் மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் பொறுப்பை ஏற்று பல மருத்துவமனைகளைத் தொடங்கினார். கேரளா மாநிலம் உருவாகும் காலம் வரையிலும் இந்தப் பதவி சர்ஜன் ஜெனரல் என்று அழைக்கப்பட்டது. லெப்டினன்ட் ஹோர்ஸ்லி தலைமையில் ஒரு பொறியியல் துறையையும் நிறுவினார். கரமண பாலம் கட்டினார்.

வானியல்

இந்திய வானியல் அறிவைப் பயன்படுத்தி மேல்நாட்டு வானியலுடன் ஒப்பிட்டு நோக்க விரும்பினார். வானியல் பொறிகளைக் கட்டமைக்க ஆலப்புழையில் வாழ்ந்த கால்டிகாட் என்ற தொழிலக சார்பாளரை அழைத்துப் பணிகளை நிறைவேற்றினார். 1837-ல் ஒரு வானியல் ஆய்வகம்(astronomical observatory) ஒன்றை நிறுவிக் கால்டிகாட்டை அதன் பொறுப்பாளாராக்கினார். திருவனந்தபுரம் வானியல் ஆய்வகத்தில் (இயற்பியல் துறை, கேரளா பல்கலைக்கழகம்) இந்தக் கருவிகள் உள்ளன. இவர் கண்டறிந்த அண்டம் பற்றிய உண்மைகள் இந்திய மற்றும் மேற்கத்திய தகவல்களுடன் ஒத்துப் போனது. அரசு அச்சகத்தையும் (அப்போது கேரளாவிலிருந்த தனியார் அச்சகம் சி.எம்.எஸ் பிரஸ்), அருங்காட்சியகத்தையும், வனவிலங்குப் பூங்காவையும் மன்னர் நிறுவினார்.

பிற சேவைகள்

திருவனந்தபுரத்தில் உள்ள வானியல் ஆய்வகம், அருங்காட்சியகம் மற்றும் விலங்கியல் தோட்டம், அரசு அச்சகம், திருவனந்தபுரம் பொது நூலகம் (தற்போதைய மாநில மைய நூலகம் இது), கீழ்த்திசைச் சுவடி நூலகம் (தற்போதைய கேரளப் பல்கலைக்கழகம் இதை நிர்வாகிக்கிறது), போன்ற அமைப்புகள் சுவாதி திருநாள் மன்னரால் தொடங்கப்பட்டன.

மறைவு

சுவாதித் திருநாள் ராமவர்மா டிசம்பர் 25, 1846 அன்று காலமானார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

இன்னும் சில புகழ் பெற்ற சுவாதித் திருநாள் கீர்த்தனைகள்


✅Finalised Page