under review

ஹொன்னப்ப பாகவதர்

From Tamil Wiki
ஹொன்னப்பா பாகவதர்
ஹொன்னப்பா
ஹொன்னப்பா
பிரபாவதி விளம்பரம்

ஹொன்னப்ப பாகவதர் (சௌடசாந்த்ரா ஹொன்னப்ப பாகவதர்) (14 ஜனவரி 1915- 2 அக்டோபர் 1992) பாடகர், நடிகர். கன்னடம், தமிழ் உட்பட பல திரைப்படங்களில் பாடி நடித்தார். நாடகமேடையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர்.

பிறப்பு, கல்வி

ஹொன்னப்ப பாகவதர் பெங்களூர் அருகே நெலமங்கலா பகுதியில் சௌடசாந்திரா என்னும் சிற்றூரில் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த சிக்கலிங்கப்பாவுக்கும் கல்லம்மாவுக்கும் 14 ஜனவரி 1915-ல் பிறந்தார். இளமையிலேயே தந்தையை இழந்த ஹொன்னப்ப பாகவதர் தாயின் ஊரான மொட்டஹனஹள்ளிக்கு இடம்பெயர்ந்தார். தாயிடமிருந்து இசைப்பாடம் பயின்றார்.

1928 முதல் பெங்களூரில் சிறிய வேலைகளைச் செய்துவந்த அவர் சம்பந்த மூர்த்தி என்னும் ஹரிகதை கலைஞரிடம் மாணவராக சேர்ந்தார். பின்னர் ஆர்மோனியக் கலைஞர் அருணாசலப்பாவிடம் மாணவராக ஆனார்.

நாடக வாழ்க்கை

ஹொன்னப்ப பாகவதர் புகழ்பெற்ற குப்பி வீரண்ணாவின் (ஜி.எச்.வீரண்ணா) நாடகக்குழுவான குப்பி ஸ்ரீ ரீசென்ன பசவேஸ்வரா நாடக சபாவில் 1930-ல் இளம்நடிகராகச் சேர்ந்து படிப்படியாக கதைநாயக நடிகராக பாடி நடித்தார்.

திரைப்படங்களில் இருந்து விலகிய பின் 1960-ல் பெங்களூரில் உமா மகேஸ்வரா நாடகசபா என்னும் அமைப்பை தொடங்கி பல கன்னட நாடகங்களில் நடித்தார். நாடகங்களை நடத்தினார்.

திரை வாழ்க்கை

சேலம் நகரில் நடைபெற்ற நாடகத்தில் ஹொன்னப்ப பாகவதரின் நடிப்பையும் பாட்டையும் கண்ட எம்.கே. தியாகராஜ பாகவதர் அவரை இயக்குநர் எல்லிஸ். ஆர். டங்கன் பார்வைக்கு கொண்டுசென்றார். ஹொன்னப்ப பாகவதர் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி படத்தில் ஒரு சிறு வேடத்தில் 1937ல் அறிமுகமானார். தளபதி கருணாகரத் தொண்டைமானாக 'உனையல்லால் கதியார் ஜெகதம்மா' என்ற பாடலைப் பாடி இப்படத்தில் பாடி நடித்தார்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் சிறை சென்றபோது அவருக்கு பதிலாக 1946ல் ஸ்ரீமுருகன் என்னும் படத்தில் நடித்தார். அப்படத்தில் எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைப்பில் 'எங்கே ஒளிந்ததம்மான்...', 'குமரனையே நினைத்து...' 'உள்ளம் புகுந்த அந்த', 'வள்ளியைக் காணேனே' ஆகிய நான்கு பாடல்களை பாடினார்.

தியாகராஜ பாகவதர் சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர் நடிக்கவிருந்த பல படங்களில் ஹொன்னப்ப பாகவதர் நடித்தார். தமிழில் பத்தாண்டுக்காலம் குறிப்பிடத்தக்க நடிகராக திகழ்ந்தார். மொத்தம் 14 படங்களில் தமிழில் நடித்திருக்கிறார்.

கன்னடத்தில் பி.புல்லையா இயக்கத்தில் சுபத்ரா என்னும் படத்தில் 1941-ல் அறிமுகமானார். அப்படத்தில் பத்மநாப சாஸ்திரி இசையமைப்பில் பாடினார்.

ஹொன்னப்ப பாகவதர் முப்பத்தைந்து ஆண்டுக்காலம் திரைப்படங்களில் தோன்றினார். 1977-ல் வெளிவந்த சதானந்தா அவர் நடித்த கடைசிப் படம்.

தயாரிப்பு

ஹொன்னப்ப பாகவதர் லலிதகலா பிலிம்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி மகாகவி காளிதாஸா என்னும் படத்தை 1955-ல் தயாரித்தார். தமிழில் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்னும் படத்தை 1959-ல் தயாரித்தார்.

இசைவாழ்க்கை

ஹொன்னப்ப பாகவதர் மகாகவி காளிதாஸா, பக்த கும்பாரா, பஞ்சரத்னா ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். திரைவாழ்க்கையில் இருக்கும்போதும் பிறகும் தனி இசைநிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்திவந்தார். கன்னடத்திலும் தெலுங்கிலும் 300க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றினார். இவை 1983-ல் ஓங்காரநாதசுதா என்ற பேரில் நூலாகத் தொகுக்கப்பட்டன.

இசைப்பள்ளி

1960-ல் ஹொன்னப்ப பாகவதர் நாதப்பிரம்ம சங்கீத வித்யாலயா என்னும் அமைப்பை தொடங்கினார்.

பதவிகள்

ஹொன்னப்ப பாகவதர் கன்னட திரை ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் கர்நாடக சங்கீத நிருத்ய அக்காதமி உறுப்பினராகவும் பணியாற்றினார்.

பட்டங்கள், விருதுகள்

பட்டங்கள்

ஹொன்னப்ப பாகவதர் கான கலாபூஷணம், கான கலா, கந்தர்வ கான கலாநிதி, கான அபிநய சந்திரா, நாட்டியாசார்யா ஆகிய பட்டங்கள் பெற்றார்

விருதுகள்
  • தேசிய விருது (1955) மகாகவி காளிதாசா
  • பத்மசங்கீதா விருது (1956) கர்நாடக அரசு
  • சிறந்த நடிகர் விருது (1956), சென்னை திரைப்பட ரசிகர்கள் சங்கம்
  • தேசிய விருது (1959) ஜகஜோதி பசவேஸ்வரா
  • கர்ண சிகாமணி தங்கப்பதக்கம் (1976), சிருங்கேரி மடம்
  • கர்நாடக சங்கீத நாடக அகாதமி விருது (1972)
  • மத்திய சங்கீத நாடக அகாதெமி விருது (1979)
  • ராஜயோத்சவா விருது (1986) கர்நாடக அரசு

நடித்த படங்கள்

தமிழ்
  • அம்பிகாபதி (1937)
  • கிருஷ்ணகுமார்
  • ரதி சுகன்யா
  • அருந்ததி (1943)
  • வால்மீகி (1946)
  • ஸ்ரீமுருகன் (1944)
  • குணசாகரி
  • தேவமனோகரி
  • பர்மா ராணி (1945)
  • மகாகவி காளிதாசா (1959)
  • உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
கன்னடம்
  • சுபத்திரா (1941)
  • பக்தகும்பாரா (1947)
  • மகாகவி காளிதாசா (1955)
  • பஞ்சரத்னா (1956)
  • ஜெகஜோதி பசவேஸ்வரா (1959)
  • ஹேமரெட்டி மல்லம்மா
  • குணசாகரி
  • சதானந்தா (1977)

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Mar-2025, 09:03:09 IST