under review

கீத கோவிந்தம்

From Tamil Wiki
ராதா - கிருஷ்ணன் (வங்க நாட்டின் ராஜ்ஷாஹி மாவட்டம், பஹார்பூர்) (பொ.யு. 6-7ஆம் நூற்றாண்டு) (இதுவரை கண்டறியப்பட்ட ராதா - கிருஷ்ணன் சிலைகளில் பழமையானது)

கீத கோவிந்தம் (பொ.யு. 12-ஆம் நூற்றாண்டு) சமஸ்கிருதக் கவிஞரான ஜெயதேவர் எழுதிய காவியம். பக்தி காலகட்டத்தைச் சேர்ந்த நூல். ராதா - கிருஷ்ணனுக்கு இடைப்பட்ட காதலைப் பற்றி பேசுகிறது. பொ.யு.12-ம் நூற்றாண்டின் இறுதியில் சிறிது சிறிதாக மறைந்து வந்த வடமொழி மரபின் இறுதி நூலாகவும், இதற்குப்பின் வந்த புதிய மரபான தேசிய யுகத்தின் முதல் நூலாகவும் கருதப்பட்டது.

நூல் பற்றி

கீத கோவிந்தம் ஒரு காவிய நூல். பொ.யு. 12-ம் நூற்றாண்டில் இந்தியாவின் ஒடிசா மாநிலம் கேண்டுலியில் வாழ்ந்த ஜெயதேவர் இயற்றிய நூல். ஜெயதேவர் வாழ்ந்த காலத்தில் ஒடிசாவை கிழக்கு கங்கைப் பேரரசு ஆண்டு கொண்டிருந்தது. ஜெயதேவர் வங்கநாட்டின் கடைசி மன்னனாகிய லக்ஷ்மண சேனனின் ஆஸ்தான கவிகளுள் ஒருவராக இருந்தார்.

இக்காவியத்தில் 12 சருக்கங்களும், 24 பாடல்களும் (பிரபந்தங்கள்), 97 சுலோகங்களும் உள்ளன. பிரபந்தங்களில் அஷ்டபதிகள் எனப்படும் எட்டுகளாக தொகுக்கப்பட்ட ஜோடிச் சொற்கள் உள்ளன. வருணனை, விவரணை ஆகியவை அடங்கிய 'கண்ட காவியம்' அல்லது 'சிறு காவியம்' என இக்காவியத்தை வகைப்படுத்தலாம். இறைவணக்கமாக ஒரு பாடல் உள்ளது. விஷ்ணுவின் பத்து அவதாரங்களை வருணிக்கும் இரண்டு துதிகள் உள்ளன.

புத்த மதத்தைச் சேர்ந்த 'சர்ய' கவிகளுக்கு ஏறக்குறைய சமகாலத்தவரான ஜெயதேவர் தமது பாடல்களை 'கீதங்கள்' என்று குறிப்பிட்டபோதிலும் அவை 'பதங்கள்' என்ற வழங்கப்பட்டன. ஆதிகிரந்தத்திலுள்ள அவரது பாடல் 'பதம்' என்று அழைக்கப்பட்டது. கீதகோவிந்தத்தில் (1.3) 'பதாவலி' என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளார். பொ.யு 950 முதல் பொ.யு. 1200 வரை இயற்றப்பட்ட சர்ய பதங்களைப் போல் ஜெயதேவரின் பதங்களும் வங்காள இலக்கியத்தின் மூலமாக அமைகின்றன.

பாடுபொருள்

கீதகோவிந்தம் இந்து சமயக் கடவுளான கண்ணனுக்கு பொதுவாக கோபிகைகள் மீதும், குறிப்பாக ராதை மீதும் இருந்த காதலை இசையுடன் விவரித்தது. தெய்வீகக் காதலை எளிய மொழியில் விளக்கியது. ஜெயதேவர் சிருங்கார ரசத்தைப் பாடுவதில் வல்லவராக இருந்தாலும் பிற ரசங்களையும் பாடுவதில் நிபுணத்துவம் உடையவர் என்பதை பாடல்களிலிருந்து அறிய முடிகிறது.

சருக்கங்கள்

  • முதற் சருக்கத்தில் நாடக அமைப்பு மிகக் குறைவு. இசைப் பாடல்களே மிக அதிகம். பிருந்தாவனத்தில் நிகழ்ந்த இராதா-கிருஷ்ணரின் காதல் கதையின் ஒரு நிகழ்ச்சியே சாராம்சம். பிருந்தாவனத்தில் ஆயர் மகளிரான கோபியருடன் கண்ணன் காதல் விளையாட்டுக்களில் ஈடுபடுகிறான். வசந்த காலத்திற்குரிய சிருங்கார ரசமே உருவெடுத்ததுபோல விளங்கியவன் கண்ணன். வசந்த காலத்தில் இயற்கை அன்னை அணிகின்ற அதிசய வடிவத்தை ஜெய தேவர் தமக்கே உரிய இனிய நடையில் வருணித்துள்ளார், 'மகிழ்ச்சி நிரம்பிய தாமோதரன்' என்னும் பொருள்கொண்ட 'ஸாமோத தாமோதரன்' என முதல் சருக்கம் முடிவடைகிறது.
  • 'அக்லேஷ கேசவம்' அல்லது 'துயரமற்ற கேசவன்' என்ற சருக்கம் தொடங்குகிறது. இச்சருக்கத்தில் இரு பாடல்கள் உள்ளன.
  • 'முக்த மதுசூதனன்' அல்லது 'மோகங்கொண்ட மதுசூதனன்' என்பதில் ராதையை புறக்கணித்ததைப் பற்றி கண்ணன் வருந்துவதாக அமைந்த பாடல்கள் மூன்றாவது சருக்கத்தில் உள்ளன.
  • 'ஸ்நிக்த மதுசூதனன்' அல்லது 'நிம்மதியடைந்த கிருஷ்ணன்' என்பது நான்காவது சருக்கம். தோழி கண்ணனிடம் வந்து ராதையின் பிரிவாற்றாமையைப் பற்றி சொல்லும் இரு பாடல்கள் உள்ளன.
  • 'ஸாகாங்க்ஷ புண்டரீகாஷன்' அல்லது 'விருப்பம் மிகுந்த தாமரைக் கண்ணன்' என்பது ஐந்தாவது சருக்கம். ராதை விடுத்த செய்தியைக் கேட்டு கண்ணன் அடையும் கிளர்ச்சி சொல்லப்பட்டது. கண்ணன் கொடி வீட்டில் ராதைக்காக காத்திருப்பது பற்றியதும்,தோழியிடம் எடுத்துச் சொல்லி ராதையிடம் சென்று சொல்லச் சொல்லும் பாடலும் உள்ளது. ராதையை சந்திக்க முடியாமல் கண்ணன் வருந்து பாடல் சிறப்பானது. தோழி ராடஹியிடம் சென்று கண்ணனைச் சென்று அடையச் சொல்லி பாடும் பாடல் உள்ளது.
  • 'த்ருஷ்ட வைகுண்டன்' அல்லது 'நாணயம் இல்லாத கிருஷ்ணன்' என்ற தலைப்பு கொண்ட ஆறாம் சருக்கத்தில் பன்னிரெண்டு சுலோகங்களும், ஒரு பாடலும் உள்லது. கண்ணனின் பிரிவாற்றாமையால் வருந்திய ராதையின் காத்திருப்பு பற்றியது.
  • ஏழாவது சருக்கம் நீண்டது. காவியத்தில் இரண்டாவது நீளமான பகுதியாக உள்ளது. இதற்கு 'நாகர நாராயணன்' அல்லது 'விடபுருஷனாகிய கிருஷ்ணன்' என்று பெயர். இதில் நான்கு பாடல்கள் உள்ளன. தென்றலையும், மன்மதனையும், யமுனை ஆற்றையும் விளித்து தன்னை வருத்தாமல் இருக்கச் சொல்லிப் பாடுகிறாள்.
  • 'விலக்ஷ லஷ்மீபதி' அல்லது 'திகைப்படைந்த திருமகள் கேள்வன்' என்ற எட்டாவது சருக்கம் ஒரு பாடலைக் கொண்டது. இரவு முழுவதும் பிரிவாற்றாமையால் தவித்த ராதை கண்ணன் பொழுது புலர்ந்து வரும்போது அவனை கடிந்து கொள்வதாக பாடல் உள்ளது.
  • 'முக்த முகுந்த' அல்லது 'மோகமடைந்த கண்ணன்' என்பது ஒன்பதாவது சருக்கம். பதினொரு சுலோகங்களும், ஒரு பாடலும் உள்ளன. கண்ணன் திரும்பிச் சென்ற பிறகும் அவனை நினைக்கும் ராதை பற்றியும், அவன் திரும்பி வரும்போது சினத்தை விடுத்து அவனை வரவேற்க தோழி சொல்லும் அறிவுரையும் உள்ளது.
  • 'முக்த மாதவம்' என்பது பத்தாவது சருக்கம். இதில் ராதையின் காலுக்கு கண்ணன் செம்பஞ்சுக் குழம்பு பூச தன் தலையில் அவள் கால்களை ஏந்தும் பகுதி பிரசித்தி பெற்றது. 'ஸ்மர கரல கண்டனம், மம சிரஸி மண்டனம், தேஹி பத பல்லவ உதாரம்' என்ற வரியைப் பற்றிய தொன்மம் புழங்கி வருகிறது.
  • 'ஸாநந்த கோவிந்த' அல்லது 'மகிழ்ச்சிமிக்க கண்ணன்' என்ற பதினொராவது சருக்கத்தில் 12 சுலோகங்களும், 3 பாடல்களும் உள்ளன. ராதையை அமைதி கொள்ளச் செய்து கொடிப்பந்தலையே மணவறையாக்கி காதல் செய்யும் கிருஷ்ணனைப் பற்றிய விவரணை உள்ளது.
  • பன்னிரெண்டாவது சருக்கம் இரு பாடல்களைக் கொண்டது.

சிறப்புகள்

  • காதலைப் பற்றிய காவியமாக இருந்தபோதிலும் கீத கோவிந்தத்தில் சகல உயிர்களையும் அன்பு செய்த புத்தரின் பெருமையையும் விளக்கிய நூலாக கருதப்பட்டது.
  • இந்திய சங்கீத சாஸ்திர நூல்களில் காலத்தால் புராதனமான இசை நூல். சாரங்கதேவருடைய சங்கீத ரத்னாகரம் இதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு பிந்தையது.
  • இந்திய சித்திரக்கலையில் கீத கோவிந்தத்தின் தாக்கம் உள்ளது.
  • 'சந்தன சர்சித நீல களேபர' என்று துவங்கும் அஷ்டபதி இசை, நாட்டிய அரங்குகளில் பிரபலமாக பாடப்படும் பாடலாக உள்ளது.

கிருஷ்ணனின் அம்சங்கள்

கீத கோவிந்தத்தின் பன்னிரண்டு அத்தியாயங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் பல்வேறு அம்சங்களை விவரிக்கின்றன:

  • ஸாமோத தாமோதரன் (உற்சாகமான கிருஷ்ணன்)
  • அக்லேஷ கேசவம் (துயரமற்ற கிருஷ்ணன்)
  • முக்த மதுசூதனம் (மோகங்கொண்ட கிருஷ்ணன்)
  • ஸ்நிக்த மதுசூதனம் (மென்மையான கிருஷ்ணன்)
  • சகாங்க்ஷ புண்டரிகாக்ஷம் (விருப்பம் மிகுந்த தாமரைக் கண்ணன்)
  • த்ருஷ்ட வைகுண்டன் (துணிச்சலான கிருஷ்ணன்)
  • நகர நாராயணா (சாமர்த்தியமான கிருஷ்ணன்)
  • விலக்ஷ லக்ஷ்மிபதி: (மன்னிப்பு கோரும் கிருஷ்ணன்)
  • முக்தா முகுந்த (மோகமடைந்த கிருஷ்ணன்)
  • சதுர சதுர்புஜம் (சாதுர்யமான கிருஷ்ணன்)
  • சானந்த தாமோதரம் (மகிழ்ச்சியான கிருஷ்ணன்)
  • சுப்ரித பீதாம்பரஹ (உற்சாகமான கிருஷ்ணன்)

பாடல் நடை

  • சரக்கம் 1 - பாடல் 2 - விஷ்ணுவின் பல அவதாரங்களை விவரிக்கும் இரண்டாவது தோத்திரம்

ச்ரித கமலா குச மண்டல த்ருத குண்டல
கலித லலித வநமால
ஜய ஜய தேவ ஹரே, (பல்லவி)

விளக்கம்: திருமகளின் கொங்கைகளின் மேல் உறைபவனே! காதுகளில் குண்டலம் அணிந்தவனே! காடுகளில் பூக்கும் மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவனே! ஹரியே! உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

கீத கோவிந்தம்மொழிபெயர்ப்பு

ஆங்கிலம்
  • ஏசியாட்டிக் ரிஸச்சர்ஸ் பாகம் III - (ஸர் வில்லியம் ஜோன்ஸ்) - 1786
  • இந்திய கீதங்களின் கீதம் (ஸர் எட்வின் அர்நால்ட்) - 1861
  • ஜெயதேவரும் கீதகோவிந்தமும் - ராதாகிருஷ்ணரின் காதல் (ஜார்ஜ் கேட், இலங்கையைச் சேர்ந்தவர்) - 1947
  • கலகத்தாவின் பி. லால்-இன் ரைட்டர்ஸ் வொர்க் ஷாப்பினால் 1968-ல் வெளியிடப்பட்ட மானிகா வர்மாவின் மொழிபெயர்ப்பு
ஜெர்மன்
  • எப் ரூகர்ட் எழுதிய ஜெர்மன் மொழிபெயர்ப்பு உலகப்ப்புகழ்பெற்றது. 1829, 1837 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டது.

உசாத்துணை

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jul-2025, 18:48:23 IST