டி.கே. பட்டம்மாள்
டி.கே. பட்டம்மாள் (தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள்) (D.K. Pattammal) (மார்ச் 19, 1919- ஜூலை 16, 2009) கர்நாடக இசைப்பாடகர். மேடைக் கச்சேரிகளிலும், திரைப்படங்களிலும், காங்கிரஸ் கூட்டங்கலும் பாடினார். தமிழ்க் கீர்த்தனைகளை பிரபலமடையச் செய்தார். கர்நாடக இசை மேடைகளில் பெண் மும்மூர்த்திகளில் ஒருவராக அறியப்பட்டார். பிற இருவர் எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எல். வசந்தகுமாரி.
வாழ்க்கைக் குறிப்பு
டி.கே. பட்டம்மாளின் இயற்பெயர் அலமேலு. டி.கே. பட்டம்மாள் தமிழ்நாடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள தாமல் என்ற ஊரில் கிருஷ்ணசுவாமி தீட்சிதர், காந்திமதி (ராஜம்மாள்) இணையருக்கு மார்ச் 19, 1919-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி. கே. ஜெயராமன் ஆகியோரும் கர்நாடக இசைப்பாடகர்கள்.
தனி வாழ்க்கை
டி.கே. பட்டம்மாள் 1939-ல் ஆர். ஈஸ்வரனை மணந்தார். மகன்கள் சிவக்குமார், லஷ்மண்குமார். பேரன்கள் ராஜகுரு, சரண். பேத்திகள் காயத்ரி, நித்யஸ்ரீ மகாதேவன்.
தொன்மம்
டி.கே. பட்டம்மாள் தன் மூன்று வயதில் தந்தையுடன் ரமண மகரிஷியை சந்திக்கச் சென்றபோது அவர் பட்டம்மாளின் வாயில் தேனை வைத்ததாகவும், அதை அவர் ரசித்துச் சாப்பிடுவதைப் பார்த்து அவர் ஆனந்தப்பட்டார் எனவும், அதுவே அவருக்கு அத்தகைய குரல் வளத்தைத் தந்ததவும் தந்தை கிருஷ்ணசுவாமி தீட்சிதர் நம்பினார்.
இசை வாழ்க்கை
பட்டம்மாள் முறையாக கர்நாடக இசை கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். நாயனா பிள்ளையின் கச்சேரிகள் இவரை ஈர்த்தன. சிறு வயதிலேயே தனது தந்தை சொல்லிக்கொடுத்த பக்திப் பாடல்களைப் பாடுவார். தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
பட்டம்மாள் தன் நான்காவது வயதிலேயே பாடத் தொடங்கினார். டி.கே. பட்டம்மாள் அக்காலக் குடும்ப மரபுக்கேற்ப பொது மேடைகளிலோ அல்லது குடும்ப நண்பர்கள் அல்லது உறவினர்களின் முன்னிலையிலோ பாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 1929-ல் தனது பத்தாவது வயதில் முதல்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 1932-ல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார். பின்னர் காங்கிரஸ் கூட்டங்களில் நிறைய பாட ஆரம்பித்தார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களை மேடைக் கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடினார். முத்துஸ்வாமி தீக்ஷிதர், பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி மற்றும் முத்துத் தாண்டவர் பாடல்களையும் பதங்களையும் பாடினார்.
திரைப்படம்
டி.கே. பட்டம்மாளை பாபநாசம் சிவன் திரையுலகிற்கு அறிமுகம் செய்தார். 1939-ல் 'தியாக பூமி' படத்தில் முதன்முதலாக 'தேச சேவை செய்ய' என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடினார். திரைப்படங்களில் பக்தி அல்லது தேசபக்தி பாடல் மட்டுமே பாடுவது என்பதில் உறுதியாக இருந்தார்.
இறுதியாக ஹேராம் திரைப்படத்தில் இளையராஜா இசையில் 'வைஷ்ணவ ஜனதோ' பாடல் பாடினார்.
மரபு
பட்டம்மாளின் மாணவர்கள் ஜப்பான், சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, சீனா ஆகிய நாடுகளில் உள்ளனர். தனது ஜப்பானிய சீடர் அகிகோ என்பவரை திருவையாற்றில் பாட வைத்தார். பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன் உட்பட பல மாணவர்கள் இருந்தனர்.
மறைவு
டி.கே. பட்டம்மாள் ஜூலை 16, 2009-ல் காலமானார்.
விருதுகள்
- சங்கீத நாடக அகாடெமி விருது (1962)
- பத்ம பூசண் (1971)
- 1973-ல் சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் இசைப்பேரறிஞர் விருது வழகியது
- 1978-ல் தி ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சங்கீத கலாசிகாமணி விருது வழங்கியது
- பத்ம விபூசண் (1998)
- சங்கீத கலாநிதி
- கலைமாமணி விருது
- காளிதாஸ் சம்மன் விருது
மதிப்பீடு
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கர்நாடக இசை மேடைகளில் ஆதிக்கம் செலுத்தினர். இந்த சூழலில் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர் டி.கே. பட்டம்மாள். மற்ற இருவர் எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எல். வசந்தகுமாரி. 'கான சரஸ்வதி' என்றும் 'இசைப் பேரரசி' என்றும் அழைக்கப்பட்டார். தன் சமகால மூத்தவர்களான அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், முசிறி சுப்ரமணிய அய்யர், செம்மங்குடி சீனிவாச ஐயர், ஜி.என். பாலசுப்ரமணியம், மதுரை மணி ஐயர் ஆகியோருக்கு இணையாக கர்நாடக சங்கீதத்தில் தனக்கான ரசிகர்களின் திரளை உருவாக்கினார்.
உசாத்துணை
- D.K.Pattammal - Gem of tamilnadu
- டி.கே. பட்டம்மாள் - திஇந்துதமிழ்திசை
- டி.கே.பட்டம்மாள் - படங்கள்
- டி.கே.பட்டம்மாள் - கமகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jan-2026, 18:59:14 IST