under review

ஜி. சுப்பிரமணிய ஐயர்

From Tamil Wiki
The Hindu

ஜி. சுப்பிரமணிய ஐயர் ( ஜனவரி 19 ,1855 - ஏப்ரல் 18, 1916) பத்திரிகையாளர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி. தி ஹிந்து, சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார். தமிழின் முதல் நாளிதழான சுதேசமித்திரன் மூலம் தமிழ் நாட்டு மக்களுக்கு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வுக்கு வழி வகுத்தார். சுப்பிரமணிய ஐயர் 1885-ம் ஆண்டில் பம்பாயில் இடம்பெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதலாவது மாநாட்டில் அம்மாநாட்டின் முதலாவது தீர்மானத்தைக் கொண்டு வந்தார். பாரதி, வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மதிப்பைப் பெற்றவர். சமுகத்தில் பெண்களுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் இழைக்கபட்ட அநீதிகளுக்கு எதிராகப் போராடினார்.

பிறப்பு,கல்வி

ஜி. சுப்பிரமணிய ஐயர் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் ஜனவரி 19 ,1855 அன்று கணபதி ஐயர்-தர்மாம்பாள் தம்பதியருக்குப் பிறந்தார். கணபதி ஐயர் திருவையாறு முன்சீப் கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தார். சுப்பிரமணிய ஐயருக்கு உடன் பிறந்தவர்கள் சகோதரர்கள் ஆறு பேர், சகோதரி ஒருவர். ஆரம்பக் கல்வியைத் திருவையாற்றிலும், உயர் கல்வியைத் தஞ்சாவூரிலும் படித்து 1869-ம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தேறினார். 1871-ல் எஃப்.ஏ (இடைநிலை) தேர்வில் தேறினார். சென்னை திருவல்லிக்கேணியில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்த இலக்கியக் கழகத்தில் சேர்ந்து, அங்கிருந்த சில அறிஞர்களின் தொடர்பை பெற்றார்.

தனி வாழ்க்கை

ஜி.சுப்பிரமணிய ஐயர் சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சியை முடித்தபின் பச்சையப்பன் கல்லூரி உட்பட சில பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின் 'தி ஆரியன் ஸ்கூல்' எனும் பள்ளியை நிறுவி நடத்தினார். சுப்பிரமணிய ஐயர் ஸ்காட்லாந்து மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது முடும்பை வீரராகவாச்சாரியாரின் அறிமுகம் கிடைத்தது. சுப்பிரமணிய ஐயரின் அரசியல் வாழ்வுக்கு வீரராகவாச்சாரியாரின் நட்பு பெருமளவில் உதவியது.

ஜி. சுப்பிரமணிய ஐயர் மீனாட்சியம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் சிவப்ரியாம்பாள், விஸ்வநாதன், கமலாம்பாள், ஞானாம்பாள்.

அரசியல்

காங்கிரஸ் கட்சி தொடங்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்த கல்கத்தா கூட்டத்தில் பங்கேற்ற 72 அறிஞர்களில் ஜி. சுப்பிரமணிய ஐயரும் ஒருவர். 1885-ம் ஆண்டில் பம்பாயில் நடந்த இந்திய காங்கிரசின் முதலாவது மாநாட்டில் முதலாவது தீர்மானமாக இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சியைப் பற்றி விசாரணை நடத்துவது குறித்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்தப் பெருமை குறித்து 'காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம்' நூலில் எழுதிய பாரதியார் "தமிழ்நாடு தவமுடையது. ஏனெனில் காங்கிரஸ் மகாசபையின் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றும் பெருமை தமிழ்நாட்டுத் தலைவராகிய 'சுதேசமித்திரன்' ஜி. சுப்பிரமணிய ஐயருக்கே கிடைத்தது" என்று குறிப்பிடுகிறார்.

காங்கிரஸ் கட்சி மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இருபிரிவுகளாகப் பிரிந்தபோது தொடக்கத்தில் மிதவாதிகளின் ஆதரவாளராக இருந்த சுப்பிரமணிய ஐயர் தீவிரவாதிகளின் தரப்பை ஆதரித்தார். இதை வரவேற்று ஜனவரி 10, 1907-ல் இந்தியா இதழில் பாரதி எழுதியிருக்கிறார். விபின் சந்திர பால், கோபால கிருஷ்ண கோகலே, ஏ.ஓ. ஹியூம் போன்ற தலைவர்களின் அபிமானத்தைப் பெற்றவர் சுப்பிரமணிய ஐயர். அரசியல் கூட்டங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த முதல் தலைவர். தொடர்ந்து அரசியல் களத்தில் இருந்தாலும், அவரது சீர்திருத்தக் கொள்கைகளை விரும்பாத சென்னை பிரமுகர்கள் அவருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்ததை தனது 'ஜி.சுப்பிரமணிய ஐயர்: புதிய விழிப்பின் முன்னோடி' என்ற நூலில் குறிப்பிடுகிறார் பெ.சு. மணி.

ஜி. சுப்பிரமணிய ஐயர் எழுதிய தமிழ்க் கட்டுரைகளைச் சேகரித்து ‘குமரி மலர்’ மாத இதழில் ஏ.கே. செட்டியார் வெளியிட்டார்.

இதழியல்

ஹிந்து பத்திரிகை தொடக்கம்

1878-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக சர். டி.முத்துசாமி ஐயரை நியமித்த போது ஆங்கிலேய ஆதரவுப் பத்திரிகைகள் ஏளனமாக எழுதின. இதனைக் கண்டித்து எழுதத் தங்களுக்கென்று ஒரு பத்திரிகை தேவை என்பதை உணர்ந்து ஜி.சுப்பிரமணிய ஐயரும் அவரது நண்பர்கள் எம்.வீரராகவாச்சாரியார், டி.டி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், டி. கேசவ ராவ் பந்த் மற்றும் என். சுப்பாராவ் பந்துலு ஆகியோர் நன்கொடை சேர்த்து 80 பிரதிகள் அச்சிட்டு செப்டம்பர் 20, 1878 அன்று 'ஹிந்து' பத்திரிகையை வெளியிட்டனர். 'இந்து' பத்திரிகை ஜார்ஜ் டவுனில் மிண்ட் தெருவில் ஸ்ரீநிதி அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு ஒவ்வொரு புதன்கிழமையும் மாலையில் எட்டு பக்கங்கள் நாலணா விலையில் வெளியிடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

'ஹிந்து' பத்திரிகை மக்களின் அபிப்பிராயங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தது.. இந்தப் பத்திரிகை தொடங்கியதின் நோக்கத்தைப் பற்றி இவர்கள் எழுதிய ஆங்கிலப் பகுதி: "......The principles that we propose to be guided by are simply those of fairness and justice. It will always be our aim to promote harmony and union among our fellow countrymen and to interpret correctly the feelings of the natives and to create mutual confidence between the governed and the governors".

1881-ன் செங்கல்பட்டு கலவர வழக்கு , 1884-ன் காங்கிரஸ் தலைவராக இருந்த சி.விஜயராகவாச்சாரியார் தொடர்பான சேலம் கலவர வழக்கு ஆகிய இரு வழக்குகளில் சென்னை கவர்னருக்கு எதிராக கடுமையான வாதங்களை முன்வைத்தது ஹிந்து பத்திரிகை. 1897-ல் திலகரின் கைதை எதிர்த்து தலையங்கம் வெளியானது.1880-ல் பத்திரிகை அலுவலகம் மைலாப்பூருக்குக் மாறியது. 1883 முதல் வாரம் மும்முறையாக வெளிவந்தது. பிறகு டிசம்பர் 3, 1883 முதல் இந்து பத்திரிகை மவுண்ட் சாலைக்குத் தனது சொந்த அச்சகமான 'தி நேஷனல் பிரஸ்'க்கு மாறியது.

நண்பர்கள் தொழில் நிமித்தமாக பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 1898-ல் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஜி.சுப்ரமணிய ஐயர் இந்து பத்திரிகையைத் தனது நண்பர் கஸ்தூரி ஐயங்கார் குடும்பத்துக்கு விற்றுவிட்டார்.

சுதேசமித்திரன்

ஜி. சுப்பிரமணிய ஐயர், அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஆங்கில இதழ்களைப் போலத் தமிழிலும் இதழ் ஒன்றைக் கொண்டு வர எண்ணினார். தமிழக மக்களுக்கு விடுதலைப் போராட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1882-ல் சுதேசமித்திரன் பத்திரிகையை வார இதழாகத் தொடங்கினார். 1889 முதல் சுதேசமித்திரன் நாள் இதழாக மலர்ந்தது. தமிழில் வெளிவந்த முதல் அரசியல் நாளிதழ் சுதேசமித்திரன். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழாசிரியராக இருந்த பாரதியின் அறிவுக் கூர்மையையும், எழுத்தாற்றலையும் கண்டு அவரை சுதேசமித்திரனுக்கு அழைத்து வந்து உதவி ஆசிரியராக்கினார். குருமலை சுந்தரம் பிள்ளையும் சுதேசமித்திரனின் உதவி ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர்.

1893-ல், வாரம் இருமுறை இதழாக சுதேசமித்திரன் வெளிவந்தது. 1897-ல், வாரம் மும்முறையானது. 1899-ல், நாளிதழானது. மக்களிடையே அரசியல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அரசியல், சமூகம், தேசியம் சார்ந்து பல செய்திகளை வெளியிட்டது.மக்களிடையே அரசியல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சுதேசமித்திரன் இதழின் முக்கிய நோக்கமாக இருந்தது. இதழின் நோக்கம் பற்றி, ஜி. சுப்பிரமணிய ஐயர் இவ்வாறு குறிப்பிட்டார்: ”சுதேசமித்திரன், ஹிந்து பத்திரிகையுடன் சேர்ந்து தனது வாழ்க்கையை ஆரம்பித்தது. அப்பத்திரிகையின் நோக்கத்தையே இதுவும் நோக்கமாகக் கொண்டது. அதாவது பத்திரிகைகள் அதிகம் இல்லாத காலத்தில் தேசத்திற்குச் செய்தியைப் பரப்பி அறிவைப் பெருக்கியும், படித்தவர்களுடையவும் சாமான்ய ஜனங்களுடையவும் அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி அதை உருவாக்கியும் , ஜனங்களுக்கு வழிகாட்டியும் தேச சேவை செய்வதே இந்தப் பொது உத்தேசமாகும்.”

'சுதேசமித்திரன்' எழுத்துக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மிக கடுமையான விமரிசனங்களைத் தாங்கி வந்தது அதன் காரணமாக அரசாங்கத்தின் கெடுபிடிகளும் அதிகமாகி சுப்பிரமணிய ஐயர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் உடல்நிலையைப் பாதித்தது. 1915-ல் சுதேசமித்திரனை கஸ்தூரிரங்க ஐயங்காரின் மருமகன் ஏ.ரங்கசாமி ஐயங்காரிடம் ஒப்படைத்தார்.

சமூகப் பணிகள்

ஜி. சுப்பிரமணிய ஐயர் அக்காலத்தில் நிலவிய ஜாதி, மத வேற்றுமைகளை எதிர்த்து சீர்திருத்தக் கொள்கையுடன் இயங்கினார். திருவல்லிக்கேணியில் தொடங்கிய பள்ளியில் முஸ்லிம், தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு பயிற்றுவித்தார். ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகளின் இந்து மத வெறுப்பையும் சாடினார்.

ஜி.சுப்பிரமணிய ஐயர் சமூக சீர்திருத்தங்களில் தீவிர கவனம் செலுத்தினார். பால்ய விவாகத்தை தடை செய்தல், விதவைத் திருமணம், தேவதாசி முறை ஒழிப்பு, சாதி ஒற்றுமை இவைகளில் அவர் ஆர்வம் காட்டினார். திருமண வயதை அதிகரிக்கவும், விதவைத் திருமணங்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்கள் சமுதாயத்தில் சரிசமமான இடத்தைப் பெறுவதற்கும், குழந்தை திருமணங்களைத் தடை செய்யவும் பாடுபட்டார்.

13 வயதில் கணவனை இழந்த தன் மகள் சிவப்பிரியாம்பாளுக்கு பம்பாயில் 1889-ல் காங்கிரஸ் மகாநாடு நடந்த போது அந்தக் காலத்திலேயே கைம்பெண் மறுமணம் செய்து வைத்தார். பாரதியின் 'சந்திரிகையின் கதை' எனும் புதினத்தில் இந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எத்தனை கொடூரக் குற்றம் செய்தாலும் பிராமணர்களுக்குத் தண்டனை விதிக்கப்படாது’ என்று திருவிதாங்கூர் தலைமைச் செயலாளர் சட்டம் கொண்டுவந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தார். ‘கொடூர மூடபக்தி’ என்று அதை விமர்சித்தார்.

இறப்பு

ஜி. சுப்பிரமணிய ஐயருக்கு தொழுநோய் ஏற்பட்டு உடலில் கொப்புளங்கள் தோன்றி புண்ணாகி மிகவும் துன்பப்பட்டார். இது அவரது பொதுத் தொண்டினை மிகவும் பாதித்ததால் மனம் வருந்தினார். மகாத்மா காந்தி இவர் இருக்குமிடம் வந்து கண்டு ஆறுதல் கூறிச் சென்றார். சுப்பிரமணிய ஐயர் ஏப்ரல் 18, 1916 அன்று காலமானார்.

உசாத்துணை


✅Finalised Page