under review

கு. சின்னப்ப பாரதி

From Tamil Wiki
எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி
கு. சின்னப்ப பாரதி (படம் நன்றி: இந்து தமிழ் திசை)
கு. சின்னப்ப பாரதி - கி. ராஜநாராயணன் (படம் நன்றி: முனைவர் மு. இளங்கோவன் தளம்)
கு. சின்னப்ப பாரதி நூல்கள்
கு. சின்னப்ப பாரதி நூல்கள்

கு. சின்னப்ப பாரதி (சின்னப்பன்; கு.சி.பா.) (மே 2, 1935-ஜூன் 13, 2022) கவிஞர். எழுத்தாளர். அரசியல்வாதி. தொழிற்சங்கவாதி. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். இடதுசாரிக் கொள்கைகளைத் தனது படைப்புகளில் முன் வைத்தார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

கு. சின்னப்ப பாரதி, நாமக்கல்லில் உள்ள பொன்னேரிப்பட்டியில் குப்பண்ணக் கவுண்டர்-பெருமாயி இணையருக்குப் பிறந்தார். உள்ளூர் திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். உயர்நிலைப் பள்ளிக் கல்வியை பரமத்தி வேலூரில் உள்ள கந்தசாமிக் கண்டர் உயர்நிலைப் பள்ளியில் கற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். டெல்லிப் பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பாடப்பிரிவில் சேர்ந்தார். பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி அப்படிப்பைக் கைவிட்டு நாமக்கல் திரும்பினார்.

தனி வாழ்க்கை

கு. சின்னப்பபாரதி விவசாயத் தொழிலை மேற்கொண்டார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். மனைவி செல்லம்மா. மகள்கள் பாரதி, கல்பனா.

இலக்கிய வாழ்க்கை

கு. சின்னப்ப பாரதி பள்ளியில் படிக்கும்போது திராவிடக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார். நண்பர் மூலம் மார்க்சிய சித்தாந்த அறிமுகம் ஏற்பட்டது. பொதுவுடைமை இயக்க நூல்கள் அறிமுகமாகின. மேலைநாட்டுப் புரட்சிகளையும், மார்க்சியத்தையும் அறிந்து கொண்டார். பாரதியின் கவிதைகளும், மு.வ. வின் எழுத்துக்களும் இவரைக் கவர்ந்தன. பாரதி மீது கொண்ட பற்றால் சின்னப்ப பாரதி என்ற பெயரில் எழுதினார்.

நில உடைமை எப்போ? என்னும் தலைப்பிலான முதல் கவிதை, 1955-ல் வெளிவந்தது. கவிஞர் தமிழ் ஒளி இக்கவிதையைப் பாராட்டினார். ஜனசக்தியில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளியாகின. அவை தொகுக்கப்பட்டு நில உடைமை எப்போ? என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்தன. முதல் சிறுகதை தெய்வமாய் நின்றான். ஒட்டர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கிணற்றோரம் என்னும் படைப்பைத் தந்தார். தொடர்ந்து சமூக உயர்வை அடிப்படையாக வைத்துப் பல நாவல்களை எழுதினார். கொல்லிமலையில் வாழும் மக்களின் சிரமங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புதினம் சங்கம். பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் தமிழ் புதினமாக இது கருதப்படுகிறது.

கு. சின்னப்பபாரதியின் சுரங்கம் நாவல், நிலக்கரிச் சுரங்கத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். மேற்கு வங்காளம் அசன்சாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் பல மாதங்கள் தங்கி கள ஆய்வு செய்து இந்நாவலை எழுதினார்.

இவரது நாவல்களில் சில சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, வங்காளம், மராத்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, டேனிஷ், சிங்களம், உஷ்பேக் உள்ளிட்ட 13 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

இதழியல்

கு. சின்னப்ப பாரதி, கே.முத்தையாவுடன் இணைந்து செம்மலர் இதழின் உருவாக்கத்தில் பங்களித்தார். இரண்டு ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பல கட்டுரைகளை, விமர்சனங்களை அதில் எழுதினார். இலக்கிய நண்பர்கள், ஆர்வலர்கள் பலரையும் அதில் எழுத வைத்தார். இதழை முன்னணி இலக்கியச் சிற்றிதழாக்கினார்.

ஆங்கிலத்தில் ILA quarterly (Indian Literature and Art-quarterly) என்கிற காலாண்டு இலக்கிய இதழை நடத்தினார்.

கு. சின்னப்ப பாரதி (படம் நன்றி: தினமணி)

அரசியல்

கு. சின்னப்ப பாரதிக்கு, கல்லூரிக் காலகட்டத்தில் பொதுவுடைமைக் கட்சியின் மாணவர் இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்பட்டது. மாணவர் அமைப்பை வலுப்படுத்த பல கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை அமைப்பில் சேர்த்தார். 1957-ல், மாஸ்கோவில் நடந்த சர்வதேச இளைஞர் மாநாட்டில், தமிழக மாணவர் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். 1960-ல், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முழு நேர உறுப்பினரானார். கிராமப் பகுதிகளுக்கும் மலைப்பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் பொதுவுடைமை இயக்கத்தைப் பரப்பினார்.

கு. சின்னப்ப பாரதி, பொதுவுடைமைக் கட்சியின் நாமக்கல் மாவட்ட நகரச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். சேலத்தில் கரும்பு விவசாயிகள் சங்கம், ஆலைப்பாட்டாளிகள் சங்கம் அமையக் காரணமானார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கத்திற்கு உழைத்தவர்களுள் கு. சின்னப்பபாரதியும் ஒருவர்.

இந்தியாவின் பல பகுதிகளுக்கும், சீனா, இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள இடதுசாரி எழுத்தாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டார்.

திரை வாழ்க்கை

கு. சின்னப்ப பாரதி, பாதை தெரியுது பார் திரைப்படத்திற்கான மூலதனத்தை நாமக்கல்லில் திரட்டிக் கொடுத்ததுடன் தானும் அப்பட்டத்திற்கு முதலீடு செய்தார். மலையாளத்தில் உருவான பொய்முகங்கள் படத்தின் உருவாக்கத்திற்கும் நிதி மூலதனம் அளித்தார். ஜனசக்தி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பெரும் பணத்தை முதலீடு செய்து இழப்புக்கு உள்ளானார்.

விருதுகள்

  • இலங்கை முற்போக்கு வட்டம் வழங்கிய விருது
  • தில்லி தமிழ்ச்சங்க விருது
  • கோவை உலகத் தமிழ் பண்பாட்டு மையம் வழங்கிய பொற்கிழி விருது
  • இலக்கியச் சிந்தனை விருது (சங்கம் நாவலுக்காக-1986)
  • மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கிய ‘பாரதி’ விருது (2018)
  • தமிழக அரசின் இலக்கிய மாமணி விருது (2021)
’இந்திய இலக்கியத்திற்கு கு. சின்னப்ப பாரதியின் பங்களிப்பு.’ நூல்

திறனாய்வு நூல்கள்

கு. சின்னப்பபாரதி நாவல் பற்றிய திறனாய்வு நூல் Chinnappa Bharathi Novels-A Critical study என்ற தலைப்பில் வெளியானது. தமிழிலும் கு. சின்னப்பபாரதியின் படைப்புலகம் என்ற நூல் வெளியானது. இந்திய இலக்கியத்துக்கு கு.சின்னப்ப பாரதியின் பங்களிப்பு என்ற தொகுப்பு நூலில், எழுத்தாளர்கள் பொன்னீலன், சௌரி, கே. முத்தையா, காஸ்யபன், கு. பாரதிமோகன், சு. கிருஷ்ணமூர்த்தி, முனைவர் ப. பாலசுப்பிரமணியம், கவிஞர் மீரா, அருணன், பா.செயப்பிரகாசம், இரா. நல்லக்கண்ணு, சிகரம் ச. செந்தில்நாதன், செல்லம்மாள் சின்னப்ப பாரதி, சு. சமுத்திரம், மேலாண்மை பொன்னுச்சாமி, த. ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்ட 46 பேர் தங்கள் கருத்துக்களை கட்டுரைகளாகத் தந்துள்ளனர்.

நினைவு அறக்கட்டளை

இலக்கியச் செயல்பாட்டாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் கு. சின்னப்ப பாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை சின்னப்பபாரதியின் நண்பர்களால் ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கணினித் தமிழ் இலக்கியம், சிற்றிதழ்கள், இணைய இதழ்கள், சமூகசேவை, நாடகம், இதழியல் போன்ற துறைகளில், சிறந்த படைப்பாளிகள் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

கு. சின்னப்ப பாரதி, பிற்காலத்தில் அறக்கட்டளையின் நிதி முழுவதையும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்திடம் ஒப்படைத்து, அந்த அமைப்பே இவ்விருதுகளை வழங்கும் படி செய்தார்.

மறைவு

கு. சின்னப்பபாரதி வயது மூப்பால், ஜூன் 13, 2022 அன்று, தனது 88-ம் வயதில் காலமானார்.

இலக்கிய இடம்

கு. சின்னப்பபாரதி, கே. முத்தையா, தொ.மு.சி. ரகுநாதன், டி. செல்வராஜ் வரிசையில் இடதுசாரிக் கொள்கை சார்ந்த முற்போக்கு எழுத்தாளராகச் செயல்பட்டார் . சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் அவல வாழ்க்கையை, தொழிலாளர்களின் பிரச்சனைகளை, அவர்களது உரிமைகளைப் பேசுபவையாக இவரது நாவல்கள் அமைந்தன. இவரது படைப்புகள் பொதுவுடைமை இயக்கம் சார்ந்த பல கருத்துக்களைப் பிரதிபலிப்பவையாகவும், மார்க்சிய சித்தாந்தக் கூறுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளன. இலக்கிய விமர்சகர்களால் யதார்த்தவாதம் சார்ந்த பிரச்சார எழுத்துக்களாக இவை மதிப்பிடப்படுகின்றன.

“கு.சின்னப்ப பாரதி முற்போக்கு இலக்கியத்தின் முகமாக சென்ற தலைமுறையில் அறியப்பட்டவர். சின்னப்ப பாரதியின் தாகம் நாவல் க.நா.சுப்ரமணியம், வெங்கட் சாமிநாதன் ஆகியோரால் கலையம்சம் கூடிய படைப்பாக அடையாளம் காட்டப்பட்டது.” என்று ஜெயமோகன், கு.சின்னப்ப பாரதிக்கான அஞ்சலிக் குறிப்பில் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • நில உடைமை எப்போ?
  • கு. சின்னப்பபாரதி கவிதைகள்
குறுங்காவியம்
  • கிணற்றோரம்
சிறுகதைத் தொகுப்புகள்
  • தெய்வமாய் நின்றான்
  • கௌரவம்
  • சொல்லும் செயலும்
  • மடாதிபதியா மண்ணாதிபதியா?
  • நீதி குட்டிக் கதைகள்
  • சேவலும் மண்புழுவும்
  • கடவுள் இருக்கும் இடம்
சுயசரிதை
  • என் பணியும் போராட்டமும்
நாவல்கள்
  • அவள் எத்தனை குழந்தைகளுக்குத் தாயானாலும்
  • தாகம்
  • சங்கம்
  • சர்க்கரை
  • பவளாயி
  • சுரங்கம்
  • தலைமுறை மாற்றம்
  • பாலை நில ரோஜா

உசாத்துணை


✅Finalised Page