under review

சு. கிருஷ்ணமூர்த்தி

From Tamil Wiki
நன்றி:சொல்வனம்

சு. கிருஷ்ணமூர்த்தி (நவம்பர் 11,1929 - செப்டம்பர் 7, 2014) மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். வங்காளத்திலிருந்து இருந்து தமிழிலும், தமிழிலிருந்து வங்க மொழியிலும் இலக்கியங்களை மொழியாக்கம் செய்தார். 'நீலகண்டப் பறவையைத் தேடி', உள்ளிட்ட 36 வங்க இலக்கியங்களைத் தமிழிலும் திருக்குறள், பாரதியார் கவிதைகள், இந்திரா பார்த்தசாரதியின் 'குருதிப்புனல்' உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை வங்க மொழியிலும் அறிமுகம் செய்தார். மொழியாக்கத்திற்கான சாகித்ய அகாதெமி பரிசு பெற்றார். சரத் சந்திரர், பிரேம்சந்த் போன்ற இந்திய இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் எழுதினார்.

பிறப்பு, கல்வி

சு. கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள அன்னவாசலில் நவம்பர் 11, 1929-ல் பிறந்தார். பள்ளிப்படிப்பை புதுக்கோட்டையில் முடித்தார். மன்னர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். நாக்பூர் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சமஸ்கிருதம், ஹிந்தி, ஜெர்மன் மொழிகளை முறையாகப் பயின்று தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

சு.கிருஷ்ணமூர்த்தி மணமானவர். மகள் உஷா பஞ்சாபகேசன்; மகன்கள் ராதாகிருஷ்ணன், சீனிவாசன். சீனிவாசன் 1971-ல் மூளைநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

மத்திய அரசின் தணிக்கைத் துறையில் பணிபுரிந்தார். 1955-ல் பணியிடமாற்றத்தால் கொல்கத்தா சென்றார். 1984 வரை கொல்கத்தாவிலும் பின்பு டெல்லியிலும் பணி புரிந்து 1987-ல் ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சு. கிருஷ்ணமூர்த்தி தமிழில் கலைமகள், தீபம், கணையாழி போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதி இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். அவரது சிறுகதைகள் நன்றிக்கு ஒரு விலை, மனிதம் என இரு தொகுப்புகளாக வெளிவந்தன. அவர் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகள் 'The Peasant and other stories' , 'Modern Aesop Fables' என்ற இரு தொகுதிகளாக வெளிவந்தன.

வங்காளத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான காஜி நஜ்ருல் இஸ்லாமின் வாழ்க்கை வரலாற்றை 'நஜ்ருல் என்றொரு மானிடன்' என்ற நூலாக எழுதினார். சரத் சந்திர சட்டோபாத்யாய, பிரேம்சந்த், ஈஷ்வர் சந்திர வித்யாசாகர் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளைத் தமிழில் எழுதியுள்ளார். நஜ்ருல் இஸ்லாம் நூலுக்காக இலக்கியச் சிந்தனை விருது பெற்றார்.

தன் வரலாறு

சு.கிருஷ்ணமூர்த்தி 'நான் கடந்துவந்த பாதை' என்ற பெயரில் தன் வாழ்க்கையை நூலாக எழுதினார். அந்த காலகட்டத்தில் மொழியாக்கம் ஆதாயமில்லாத, புறக்கணிக்கப்பட்ட துறையாகப் பார்க்கப்பட்டபோதும், இலக்கியங்களின் மேல் இருந்த ஆர்வத்தால், தான் மொழியாக்கங்களில் ஈடுபட்டதையும், அப்பணியில் தன்னை முழுதளித்ததைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

மொழியாக்கப் பணிகள்

சு. கிருஷ்ணமூர்த்தி கல்கத்தாவில் பணி செய்தபோது வங்க இலக்கியத்தின்மேல் உள்ள ஆர்வத்தால் அம்மொழியைக் கற்று 'வங்க சாகித்ய ரத்னா’ பட்டம் பெற்றார். தாகூர், சரத் சந்திரர் ஆகியோர் உறுப்பினராக இருந்த ‘ரவிவாசர்’ என்ற வங்க இலக்கிய அமைப்பின் உறுப்பினராக இருந்து அதன் செயற்குழு உறுப்பினராகிய வங்காளி அல்லாத ஒரே நபர் கிருஷ்ணமூர்த்தி.

கிருஷ்ணமூர்த்தி வங்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகப்படுத்துவதற்காக 36 நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். தாகூர், சரத்சந்திரர், விபூதிபூஷண் பந்தோபாத்யாய, மஹாஸ்வேதா தேவி போன்ற வங்க எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’ ('நா ஹன்யதே’ ) சரத்சந்திரரின் 'தேவதாஸ்' உள்ளிட்ட பல வங்க நாவல்களையும் சிறுகதைகளையும் மொழியாக்கம் செய்தார். மஹாஸ்வேதா தேவியின் ஞானபீட விருது பெற்ற 'ஹஸார் சௌராசி கி மா' நாவலை '1084-ன் அம்மா' என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார். ஜயா மித்ராவின் சிறை அனுபவங்களைக் கூறும் வங்க நூலின் 'கொல்லப்படுகிறது' என்ற மொழியாக்கத்துக்காக நல்லி திசை எட்டும் அமைப்பின் முதல் மொழியாக்க விருதை 2004-ல் பெற்றார்.

கிருஷ்ணமூர்த்தி அதீன் பந்தோபாத்யாயவின் 'நீல்கண்ட பாக்கீர் கோஞ்சே' நூலின் மொழியாக்கத்தில் Blue Jay என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பறவைக்கு, பாற்குருவி என்ற தமிழ்ப் பெயரை உபயோகிக்காமல் அதன் நீலத்தைச் சுட்டிக்காட்ட 'நீலகண்ட பறவையைத் தேடி' என்ற பெயரையே தேர்வு செய்தார். இயற்கை வர்ணனை மிகுந்த அந்த நாவலில் வந்த, தமிழ் நிலப்பரப்பில் காணப்படாத தாவர வகைகளை பிலானியிலுள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்லூரி நூலகத்தில் ஹிந்தி அகராதி, கலைக்களஞ்சியங்களின் துணை கொண்டு அறிந்து மொழியாக்கம் செய்தார்.

சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.

ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் நூல் உட்பட ஆங்கிலத்திலிருந்து ஐந்து நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தார்.

திருக்குறளை வங்க மொழியில் மொழியாக்கம் செய்தார். ஆதவன் சிறுகதைகள், தமிழ்ப் பழமொழிகள், கு. சின்னப்ப பாரதியின் இரு நாவல்கள் தி.ஜானகிராமன் சிறுகதைகள் உட்பட பல தமிழ்இலக்கியங்களை வங்காளத்தில் அறிமுகப்படுத்தினார். இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலின் மொழியக்கத்திற்காக ( 'ரக்த போன்யா' ) சாகித்ய அகாதெமி பரிசும், வங்காள சாகித்திய சம்மேளனப் பரிசும் பெற்றார். 'உன்மேஷ்' என்ற வங்க இலக்கியக் காலாண்டிதழின் தமிழ்ச் சிறுகதை சிறப்பிதழில் கிருஷ்ணமூர்த்தி மொழியாக்கம் செய்த 16 தமிழ்ச் சிறுகதைகள் இடம்பெற்றன.

ஜவேர் சந்த் மேகாணியின் குஜராத்தி நாவலை ஹிந்தி மூலம் தமிழில் 'சோரட் உனது பெருகும் வெள்ளம்' என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார்.

அமைப்புப் பணிகள்

கொல்கத்தாவின் பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், செயலாளராகவும் பங்காற்றினார். சங்கத்தின் பாரதி நூற்றாண்டு விழாவில் தலைமை உரையாற்றிய முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் உரையை வங்காளத்தில் மொழியாக்கம் செய்தார்.

இலக்கிய இடம்

சு. கிருஷ்ணமூர்த்தி பாரதி, த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, அ.கி.கோபாலன், ஆர் ஷண்முகசுந்தரம் போன்ற முன்னோடி மொழிபெயர்ப்பாளர்களின் வரிசையில் வங்க இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்.

"பொதுவாக மொழியாக்கங்களுக்கு இருக்கும் அன்னியத்தன்மை சற்றும் இல்லாமல் அதேசமயம் மிக நுணுக்கமாக மொழிபெயர்ப்புசெய்யப்பட்டவை சு.கிருஷ்ணமூர்த்தியின் நூல்கள். நீலகண்டப்பறவையைத் தேடி போன்ற நாவல்கள் தமிழிலேயே மிகச்சிறந்த நடையில் எழுதப்பட்ட மூலநூல்கள் என்ற எண்ணத்தை உருவாக்குபவை. நிலக்காட்சி விவரணைகளில் உள்ள சரியான தகவல்களைத் தேடி அளிப்பதற்கும், பண்பாட்டுநுட்பங்களை சரியானபடி விளக்குவதிலும் எப்போதும் பெரும் கவனம் எடுத்துக்கொள்பவர் சு. கிருஷ்ணமூர்த்தி" என்றும் "உண்மையான வாழ்நாள்சாதனை, தமிழ்க்கொடை என்பது இத்தகைய சலிப்பில்லாத நீடித்த பங்களிப்புகள்தான். அவரது பங்களிப்பு அழியாதது, தலைமுறைகள்தோறும் நீடிப்பது" என்றும் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

"இவரைப்போன்ற ஆளுமைகளை மிக அபூர்வ மானவர்கள். வாழும் வாழ்வை பொருள்பொதிந்ததாக அமைத்துக்கொள்ளும் ஈடுபாடு கொண்டவர்களுக்கு மட்டுமே இப்படிபட்ட வளர்ச்சி சாத்தியம். தன் சொந்த வாழ்வில் பல இழப்புகளைச் சந்தித்தபோதும், அதைப்பற்றிய எவ்விதமான புலம்பலும் இன்றி, இலக்கிய முயற்சிகள் வழியாக அவற்றையெல்லாம் கடந்து தன் ஆளுமையை நிறுவிக் கொண்டிருக்கிறார் சு. கிருஷ்ணமூர்த்தி. இதுவே அவர் வாழ்க்கையின் செய்தி" என்று பாவண்ணன் குறிப்பிடுகிறார்.

"நீலகண்டப் பறவையைத் தேடி என்ற மொழிபெயர்ப்புத்தான் கிருஷ்ணமூர்த்தியின் பெயரைத் தமிழ் நாட்டில் பலரும் அறிய வைத்தது எனலாம். இந்தியத் தாவரங்களின் ஹிந்தி அகராதியில் விளக்கங்களும் மற்ற மொழிப் பெயர்களும் தேடி பெரு முயற்சி எடுத்து நான்கு மாதங்களில் செய்த மொழியாக்கம் அது. கிருஷ்ணமூர்த்தியின் ஒவ்வொரு மொழிபெயர்ப்பு முயற்சியிலும் இத்தகைய உழைப்பைக் காண முடியும்" என்று அம்பை குறிப்பிடுகிறார்.

விருதுகள்/பரிசுகள்

  • மொழியாக்கத்துக்கான சாகித்ய அக்காதெமி விருது (1991)
  • இலக்கியச் சிந்தனை விருது (1985, 1991, 1997)
  • ரவீந்தர் நினைவுப் பரிசு( நஜ்ருல் என்ற மானிடன் நூலுக்காக)
  • கொல்கத்தா சரத் சமிதி சரத் ஆய்வுப் பரிசு( கதைச் சிற்பி சரத்சந்திரர்)
  • நிகில் பாரத் வங்க சாகித்ய சம்மேளனத்தின் மொழியக்கப் பரிசு(1996, ரக்தபோன்யா)
  • வங்காள சாகித்ய அக்காதெமியின் லீலா ராய் ஸ்மாரக் விருது
  • நல்லி திசை எட்டும் மொழியாக்கத்திற்கான விருது (2004)
  • திருப்பூர் தமிழ்ழ்சங்கப் பரிசு ( 2005, வங்காளத்தின் அக்னியுகம்)
  • நல்லி திசை எட்டும் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆண்டு 2012)
  • வாழ்நாள் சாதனையாளர் விருது(கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் 2012)

மறைவு

சு. கிருஷ்ணமூர்த்தி செப்டம்பர் 7, 2014 அன்று சென்னையில் காலமானார்.

படைப்புகள்

மொழியாக்கங்கள்
வங்காளத்திலிருந்து தமிழில்
  • சிப்பியின் வயிற்றில் முத்து (போதிசத்வ மைத்ரேய)
  • சிதைந்த கூடு முதலிய கதைகள்: ரவீந்திரநாத் தாகூர்)
  • ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள் (ரவீந்திரநாத் தாகூர்)
  • ரவீந்திர சங்கீத் (ரவீந்திரரின் 100 வங்கப் பாடல்களின் தமிழாக்கம்)
  • கவிதையியல் கதைகள் (ரவீந்திரநாத் தாகூர்)
  • மார்க்சியப் பார்வையில் ரவீந்திரநாத் தாகூர் (அருண் சௌத்ரி)
  • சிதைந்த கூட்டின் சிறகுகள் -ராய் குமார் மகோபாத்யாய
  • கொல்லப்படுகிறது(ஜெயா மித்ரா)
  • கொல்லப்படுவதில்லை (மைத்ரேயி தேவி)
  • நீலகண்ட பறவையைத் தேடி (அதீன் பந்த்யோபாத்யாய )
  • ஷோடசி (நாடகம்- சரத் சந்திரர்)
  • திருமணமாகதவன் (சரத் சந்திரர்)
  • அனுராதா (சரத் சந்திரர்)
  • தேவதாஸ் – சரத் சந்திரர்
  • கவி வந்தயகட்டி காயியின் வாழ்வும் சாவும் (மஹாஸ்வேதா தேவி)
  • காட்டில் உரிமை(மஹாஸ்வேதா தேவி)
  • 1084-ன் அம்மா (மஹாஸ்வேதா தேவி)
  • வங்க சிறுகதைகள்
  • வங்காளிக் கதைகள் -தொகுதி 1
  • வங்காளிக் கதைகள் -தொகுதி 2
  • தன் வெளிப்பாடு (சுநீல் கங்கோபாத்யாய)
  • கறையான் - (சீர்ஷேந்து முக்கோபாத்யாய)
  • ஆனந்திபாயி மற்றும் பிற கதைகள் (பரசுராம்)
  • சந்திரமலை (விபூதிபூஷண் பந்தோபாத்யாய)
  • புரட்சிக் காலம்(பிரபுல்ல ராய்)
  • மதுபூர் வெகுதூரம் (அஸ்ஸாமியக் கதைத்தொகுப்பு-சீல்பத்ர)
  • இருட்டு வேளை (சுசித்ரா பட்டாச்சர்யா)
  • கலை(அன்னதா சங்கர் ராய்)
  • நாடு கடத்தப்பட்டவனின் தன்வரலாறு(உபேந்திரநாத் பந்தோபாத்யாய)
  • ரித்விக் கட்டக் இந்திய சினிமாவின் மேகம் கவிழ்ந்த தாரகை
  • பங்கிம் சந்திரரின் கட்டுரைகள் (பங்கிம் சந்திரர், தொகுப்பு: அமிர்த சூதன் பட்டாச்சார்ய)
  • மணி மகேஷ்(உமா பிரசாத் முகோபாத்யாய)
  • கவியரசரின் திக்விஜயம் (ஜ்யோதிஷ் சந்திர கோஷ்)
  • அமுதத்தின் புதல்வி(கமல்தாஸ்)
  • சாம்பன்(சமரேஷ் பாசு(கால்கூட்))
ஹிந்தியிலிருந்து தமிழில்
  • சோரட், உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி மூலம் :ஜவேர்சந்த் மேகாணி ஹிந்தி மொழியாக்கம்: மோஹன்லால் பட் )
  • பொன்னிழல்
தமிழிலிருந்து வங்காளத்தில்
  • நூபுர்கதா(சிலப்பதிகாரம்)
ஆங்கிலத்திலிருந்து தமிழில்
  • நேரு: கொள்கையும் நடைமுறையும் (Nehru: Ideology and practice by E.M.S. Namboothiripad)
  • இந்தியன் ஆவது எப்படி(Becoming Indian: The Unfinished Revolution of Culture and Identity-Pavan.K.Verma )
தமிழிலிருந்து ஆங்கிலம்
  • Silappathikaram (இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம்)
தமிழிலிருந்து வங்காளத்துக்கு
  • திருக்குறள்
  • ஆதவன் சிறுகதைகள்
  • தாகம்(சின்னப்ப பாரதி)
  • சங்கம் (சின்னப்ப பாரதி)
  • சுரங்கம் (சின்னப்ப பாரதி)
  • தமிழ்நாட்டு நகைச்சுவைக் கதைகள்
  • அப்பாவின் சிநேகிதர் (அசோகமித்திரன்)
சிறுகதைகள்
  • நன்றிக்கு ஒரு விலை
  • மனிதம்
  • கன்னியர் ஐவர்
  • The Peasant and other stories
  • Modern Aesop Fables
  • பிரளயம்(குறுநாவல்)
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
  • வங்கக்கவி மைக்கேல் மதுசூதன் தத்தா
  • கருணைக்கடலில் புரட்சிக்கனல் – ஈஷ்வர சந்திர வித்யாசாகர்
  • கதைச் சிற்பி சரத்சந்திரர்
  • பேனா வீரர் பிரேம்சந்த்
  • விடுதலை வேள்வியில் வங்காள வீரர்கள்-வங்காளத்தின் அக்னியுகம்
  • புதிய காற்று-ஒப்பிலக்கியப் பார்வைகள்
  • சரத் சந்திரரின் நகைச்சுவை விருந்து-மேலும் சில வங்க நாவலாசிரியர்களின் நகைச்சுவைகள்

உசாத்துணை

இணைப்புகள்

தாகூர் என்னும் மாமேதை-சு.கிருஷ்ணமூர்த்தி, பதிவுகள்


✅Finalised Page