under review

நரசய்யா

From Tamil Wiki
நரசய்யா

நரசய்யா (காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா) (பிறப்பு: 1932) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். கடல், கப்பல் பயணம் சார்ந்த தன்வரலாற்று நூலான கடலோடி நூலின் ஆசிரியர். சிறுகதைகள், வரலாறு, கடல் வணிகம் சார்ந்த நூல்கள் எழுதினார்.

நரசைய்யா

வாழ்க்கைக் குறிப்பு

நரசய்யா ஒரிசாவில் ராமலிங்கத்திற்கு மகனாக 1932-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள். தாய்மொழி தெலுங்கு. தந்தை வழி பூர்வீகம் மதுரை. தந்தை கல்வித்துறை அதிகாரி. எழுத்தாளர் சிட்டி இவரின் மாமா. தொடக்கக் கல்வியைத் தமிழ்நாட்டில் பயின்றார். தந்தையின் பணியிட மாறுதலுக்கேற்ப பல்வேறு பள்ளிகளில் பயின்றார். எஸ்.எஸ்.எல்.ஸி-யை லால்குடியில் நிறைவு செய்தார். 1949-ல் பூனா லோனாவாலாவிலுள்ள ஐ.என்.எஸ் சிவாஜியில் நான்கு ஆண்டுகள் கப்பற் பொறியியலில் பயிற்சி பெற்றார். ஐ.என்.எஸ் ராணாவில் ஒரு வருடம் பயிற்சியில் இருந்தார். அதன்பின் ஐ.என்.அஸ் விக்ராந்திற்காக ஒரு வருடம் அயர்லாந்தில் இருந்தார். சென்னையில் வசிக்கிறார்.

நரசய்யா

கப்பல் பணி

இந்தியக் கடற்படையில் சேர்ந்து கடற்படைக் கப்பல்களில் பத்தாண்டுகள் பணியாற்றினார். 1963-ல் கடற்படையில் இருந்து விலகிய பின் இரண்டு ஆண்டுகள் வணிகக் கப்பல்களில் பணியாற்றினார். 1965-ல் விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினார். இக்காலத்தில் இவர் வங்கதேச விடுதலைப்போரிலும் பங்கு கொண்டார். 1991-ல் ஓய்வு பெற்றார்.

இந்திய துறைமுகச் சங்கத்தின் ஆலோசகராக இருந்தார். நரசய்யா உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994-ம் ஆண்டு கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம் பெற்றார். 1996 -ம் ஆண்டுவரை இவர் இத்திட்டத்தில் பணியாற்றினார்.

நரசய்யா

இலக்கிய வாழ்க்கை

நரசய்யா 1964 முதல் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். நரசய்யாவின் சிறுகதைகள், மூன்று தொகுதிகளாக வெளிவந்தன. தி இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து புத்தக மதிப்புரைகள் எழுதி வருகிறார். முத்தையாவுடன் இணைந்து சென்னை துறைமுகத்தின் வரலாறை எழுதினார். காலனியாதிக்க காலம், கடல், கப்பல் தொடர்பான வரலாறு சார்ந்த ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். கடல் சார்ந்த அவரின் அனுபவங்களை 'கடலோடி', 'கடல்வழி வணிகம்' ஆகிய இரு நூல்களாக எழுதினார். கடலோடி நூலை ஐக்கிய மாநில காங்கிரஸ் நூலகம் வெளியிட்டது. விகடனில் 'மாயமான்' என்ற தொடர்கதை எழுதினார்

விருதுகள்

  • இரண்டாம் சிறுகதைத் தொகுதி திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருதைப் பெற்றது.
  • தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது.
  • நரசய்யாவின் நான்கு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு.

நூல்கள் பட்டியல்

  • கடலோடி (1972, 2004)
  • நரசய்யா சிறுகதைகள் (1997)
  • கடல்வழி வணிகம் (2005)
  • தீர்க்க ரேகைகள் (2003)
  • சொல்லொணாப்பேறு (2004)
  • ஆலவாய் (2009)
  • மதராசபட்டினம் (2006)
  • துறைமுக வெற்றிச் சாதனை (2007)
  • கடலோடியின் கம்போடியா நினைவுகள் (2009)
  • செம்புலப் பெயனீர் (2011)
  • வாழ்க நீ எம்மான் (2019)

உசாத்துணை


✅Finalised Page