இலக்கியச் சிந்தனை
இலக்கியச் சிந்தனை அமைப்பு 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஈடுபாடுள்ள ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இதனைத் தொடங்கினர். இலக்கியச் சிந்தனை, தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குகிறது. ஆண்டின் சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர், ஆண்டு விழாவில் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார். ஆண்டின் சிறந்த நூல்களுக்கும் பரிசளிக்கப்படுகிறது.
நோக்கம்
பிப்ரவரி 28, 1970-ல், சென்னையில் இலக்கியச் சிந்தனை அமைப்பு தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து இவ்வமைப்பைத் தொடங்கினர். வாசகர்களிடையே சிறந்த இலக்கியப் படைப்புகளைப் பற்றிய கவனம் ஏற்படுத்துவதும், எழுத்தாளர்களை ஊக்குவிப்பதுமே இலக்கியச் சிந்தனை அமைப்பின் முக்கிய நோக்கம்.
செயல்பாடுகள்
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகப் பல்வேறு செயல்பாடுகளை இலக்கியச் சிந்தனை முன்னெடுக்கிறது.
சிறந்த சிறுகதைகள் தேர்வு
மாதந்தோறும் தமிழ் இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளிலிருந்து சிறந்த சிறுகதை ஒன்று, இலக்கியவாதி ஒருவரால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சிறுகதைகளில் இருந்து, சிறந்த சிறுகதை ஒன்று நடுவரால் தேர்தெடுக்கப்பட்டு, ஆண்டின் சிறந்த சிறுகதையாக அறிவிக்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும், சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தச் சிறுகதையை எழுதிய எழுத்தாளருக்கு, அவ்வாண்டின் இலக்கியச் சிந்தனைப் பரிசு வழங்கப்படுகிறது. அவ்வாண்டின் சிறந்த பனிரண்டு சிறுகதைகளும்தொகுக்கப்பட்டு, விழாவில் நூலாக வெளியிடப்படுகிறது. அத்தொகுப்பில், சிறந்த சிறுகதையைத் தேர்வு செய்தவரின் ஆய்வுக் கட்டுரையும் இடம் பெறுகிறது.
முதல் நான்கு தொகுப்புகளை இலக்கியச் சிந்தனை அமைப்பே நூல்களாக வெளியிட்டது. ஐந்தாம் ஆண்டிலிருந்து வானதி பதிப்பகம் மூலம் இந்நூல்கள் வெளியாகின்றன.
சிறந்த நூல்கள் தேர்வு
சிறுகதைகளைப் போலவே, 1976-ம் ஆண்டு முதல் சிறந்த நூல் ஒன்றையும் தேர்ந்தெடுத்து அதற்கும் இலக்கியச் சிந்தனைப் பரிசு வழங்கப்படுகிறது அந்த ஆண்டில் வெளியான நூல்களில் இருந்து சிறந்த ஒன்று தேர்நெதெடுக்கப்பட்டு, அதற்கு இலக்கியச் சிந்தனைப் பரிசு ஆண்டு விழாவில் வழங்கப்படுகிறது.
இலக்கிய விமர்சனம்
1987 முதல், குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் படைப்புகளை விரிவாகத் திறனாய்வு செய்து எழுதப்படும் நூல்களுக்கு, ஆண்டுதோறும் இலக்கியச் சிந்தனை பரிசு வழங்கப்படுகிறது. அந்த நூலும் ஆண்டு விழாவில் வெளியிடப்படுகிறது.
வாழ்நாள் சாதனையாளர் விருது
தமிழுக்குப் பெருமை சேர்த்த இலக்கிய ஆளுமைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பிக்கிறது இலக்கியச் சிந்தனை. இந்த விருதை முதலில் பெற்றவர் ஜெயகாந்தன்.
மாற்றங்கள்
கோவிட் நோய்த் தோற்று காலத்திற்குப் பின் இலக்கியச் சிந்தனைகளின் செயல்பாடுகளில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மாதம் ஒரு சிறுகதை என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காரணம், சில மாதங்களில் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்படுமளவிற்குச் சிறுகதைகள் வெளிவராததும், ஒன்றிற்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் ஒரே மாதத்தில் வெளியாவதும்தான். ஆனால், ஆண்டிற்கு 12 சிறுகதைகள் தேர்வு என்பதில் மாற்றமில்லை.
கோவிட் சூழல்களால் மாதந்திரக் கூட்டங்களைச் சரிவர நடத்த இயலவில்லை என்றாலும் ஆண்டு விழா தொடர்ந்து நடைபெறுகிறது.
இலக்கியச் சிந்தனையின் பொன்விழா
இலக்கியச் சிந்தனையின் பொன்விழா (ஐம்பதாம் ஆண்டு விழா), ஏப்ரல் 14, 2021 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.
உசாத்துணை
- இலக்கியச் சிந்தனையின் பொன்விழா
- இலக்கியச் சிந்தனையின் பொன்விழா
- அமுதசுரபி இதழ் கட்டுரை, 2021
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
30-Jan-2023, 05:42:54 IST