under review

சுதந்திரச் சங்கு

From Tamil Wiki
சங்கு 1931

சுதந்திரச் சங்கு (1930) தமிழில் வெளிவந்த தேசிய இயக்க இதழ். சங்கு கணேசன் சங்கு சுப்பிரமணியன் ஆகியோர் இதை நடத்தினார்கள். இந்திய தேசியக் காங்கிரஸின் கொள்கைகளையும் காந்தியின் கருத்துக்களையும் பரப்பும் நோக்கம் கொண்டது

வெளியீடு

சுதந்திரச் சங்கு இதழை முதலில் துண்டுப் பிரசுரமாக ஜனவரி 26, 1930-ல் சங்கு கணேசன் வெளியிட்டார். சங்கு சுப்ரமணியம் ஆசிரியராக இருந்தார். முதல் துண்டுப் பிரசுரம் "சுதந்திர தினம்" என்னும் பெயரில் வெளிவந்தது. ஜனவரி 2, 1930-ல் காங்கிரஸ் செயற்குழு ஜனவரி 26-ம் நாளை இந்தியச் சுதந்திர தினமாகக் கொண்டாட அறிவித்தது. காங்கிரசின் இந்த முடிவை விளக்கவே சுதந்திர தினம் எனும் துண்டுப் பிரசுரம் வெளி வந்தது.

இந்த துண்டுப்பிரசுரத்திற்கு கிடைத்த ஆதரவால் சங்கு கணேசன் இதை வார இதழாக மாற்றினார். 1930 ஜனவரி முதல் வாரம் மும்முறை செய்திநாளிதழ் போல வெளிவர தொடங்கியது. விலை காலணா. தமிழ்ப் பத்திரிக்கை உலகில் முதன் முதலில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானது சங்கு இதழ்தான் என்று சொல்லப்படுகிறது.

வரலாறு

சுதந்திர சங்கில் ஜூன் 3, 1933-ல் "அஞ்ஞாதவாசம்" எனும் தலைப்பில் ஒரு தலையங்கம் வெளியானது. "அஞ்ஞாதவாசம்" என்றால் தலைமறைவு வாழ்க்கை என்று பொருள். இத்துடன் இதழ் நிறுத்தப்பட்டது. சங்கு சுப்ரமணியம் சிறை சென்றார்.

1932-ல் 'சுதந்திரச் சங்கு' மீண்டும் தோன்றியது. "தமிழ்த் தொண்டுதான் சங்குக்கு மூச்சு" என்று அறிவித்து மாதம் இருமுறை இதழாக வெளிவந்தது. தி. ஜ. ரங்கநாதன் இதன் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 24 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழின் விலை ஓரணா. மணிக்கொடியின் தாக்கத்தால் இம்முறை இதழின் உள்ளடக்கத்தில் நிறைய மாறுதல்களைச் செய்திருந்தார் சங்கு சுப்பிரமணியன். சிறுகதை, கவிதை, இலக்கியக் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். ஆனாலும் 28 இதழ்களுக்குப் பின்பு 1934-ல் மீண்டும் நாட்டு விடுதலைக்குச் சுதந்திர சங்கு பாடுபடும் என்ற அறிவிப்போடு இதழ் நிறுத்தப்பட்டது.

உள்ளடக்கம்

சுதந்திரப்போராட்டச் செய்திகள், சமூகப் பிரச்னைகள் பற்றிய கட்டுரைகள் 'சங்கு' வில் இடம் பெற்றிருந்தன. வ.ராமசாமி ஐயங்கார், ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், சிட்டி ஆகியோர் இதில் தொடர்ந்து எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தன் எழுதிய கதைகள் சிலவும் இதில் இடம் பெற்றுள்ளன.

இரண்டாவது காலகட்டத்தில் வெளிவந்த சுதந்திர சங்கு இதழில் 65 கதைகள், 150 கட்டுரைகள், 25 கவிதைகள் வெளியாகியுள்ளன. மணிக்கொடி இதழுக்கு இணையாக சுதந்திர சங்கும் சிறுகதை வளர்ச்சிக்கு உதவியது. மணிக்கொடியில் கதை எழுதுவதற்கு முன்பே கு.ப.ரா. சுதந்திர சங்கில் எழுதினார். கு.ப.ராஜகோபாலனின் நூர் உன்னிசா என்ற கதை சுதந்திர சங்கில்தான் வெளிவந்தது.

சங்கு சுப்பிரமணியம்தான் சி.சு. செல்லப்பாவை சிறுகதை ஆசிரியராக்கினார். 'அன்றைய இளம் படைப்பாளியான நான் அனுப்பிய முதல் சிறுகதையைப் படித்துவிட்டு சங்கு சுப்பிரமணியம் எழுதிய தபால் கார்டு வரிகள் இதோ:-

இளம் தோழ,

தங்கள் கதை கிடைத்தது.

புதிய கை என்று தெரிகிறது. எழுதி எழுதிக் கிழித்து எறியுங்கள். தங்கள் கதையைத் திருத்தி வெளியிடுகிறேன்

சங்கு சுப்பிரமணியம்.

என்று சங்கு சுப்ரமணியம் எழுதியிருந்தார். அடுத்த என் கதையை அவர் ஒரு எழுத்துகூடத் திருத்தாமல் வெளியிட்டார். நான் சிறுகதாசிரியன் ஆனேன். இப்படி இன்னும் வேறு யாராருக்கு அவர் செய்திருக்கிறாரோ, எனக்குத் தெரியாது. என் அஞ்சலி அவருக்கு என்றைக்கும்’

என்று சி.சு.செல்லப்பா குறிப்பிடுகிறார்(இலக்கியச் சுவை) பாரதிதாசன், சுத்தானந்த பாரதியார், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை முதலியோர் சுதந்திர சங்கில் தொடர்ந்து எழுதியிருக்கின்றனர்.

உசாத்துணை


✅Finalised Page