under review

ஜி. நாகராஜன்

From Tamil Wiki
ஜி. நாகராஜன்
ஜி. நாகராஜன்
ஜி.நாகராஜன் சுந்தர ராமசாமி
ஜி.நாகராஜன் சி மோகன்
ஜி.நாகராஜன்
ஜி.நாகராஜன்

ஜி. நாகராஜன் (செப்டம்பர் 1, 1929 – பிப்ரவரி 19, 1981) தமிழ் எழுத்தாளர். நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். பாலியல் தொழிலாளர்கள், குற்றவாளிகள் ஆகியோரின் அடித்தள உலகை சித்தரிப்பவை இவருடைய எழுத்துக்கள். மனிதாபிமானநோக்கோ விமர்சனப்பார்வையோ இல்லாமல் அங்கதப்பார்வையுடன் அவ்வுலகை உருவாக்கிக் காட்டுபவை. கட்டற்ற வாழ்க்கைமுறை கொண்டவர் என்பதனாலும் ஒரு தீவிரமான ஆளுமைப்பிம்பம் இவருக்கு உள்ளது

பிறப்பு, கல்வி

ஜி.நாகராஜன். சி.மோகன்

ஜி. நாகராஜன், செப்டெம்பர் 1, 1929 அன்று வழக்கறிஞராக பணியாற்றிய ஜி.கணேசையரின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவதாக மதுரையில் பிறந்தார். சிறு வயதில் தாயை இழந்த நாகராஜன் ஆரம்ப வருடங்களில் மதுரையில் தாய் வழிப்பாட்டி வீட்டிலும் பின்னர் திருமங்கலத்தில் தாய்மாமன் வீட்டிலும் வளர்ந்தார். இடையில் தந்தையார் அவரைத் தம்மிடம் அழைத்துக் கொண்டு பாடங்களைத் தாமே சொல்லிக் கொடுத்தார். எட்டு ஒன்பதாம் வகுப்புகளை திருமங்கலம் நாடார் உயர்நிலைப் பள்ளியில் தாய்மாமா வீட்டில் தங்கிப் படித்தார். மறுபடியும் பழனி சென்று 10,11-ம் வகுப்புகளை எம்.ஹெச். பள்ளியில் படித்தார். இவர் வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாகவே இருந்திருக்கிறார். கல்லூரிப் படிப்பை மதுரையில் மதுரைக் கல்லூரியில் மேற்கொண்டார். அப்போது கணிதத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்று சி.வி. ராமனிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். மதுரைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படித்துத் தேர்ச்சி பெற்றார்.

அரசியல்

ஜி. நாகராஜன் முதலில் காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்டுத் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன் ஜி.நாகராஜனின் சிந்தனையில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியவர். சரஸ்வதி ஆசிரியர் வ.விஜயபாஸ்கரனுடன் தொடர்ச்சியாக கடிதத்தொடர்பில் இருந்தார். கம்யூனிஸ்டுத் தலைவர்கள் பாலதண்டாயுதம், ஆர்.கே.கண்ணன் ஆகியோரையும் சந்தித்து உரையாடிவந்தார். ஜி.நாகராஜன் மற்ற எழுத்தாளர்களைப் போல கம்யூனிஸ்டுக் கட்சியின் மனிதாபிமான இலட்சியவாதக் கொள்கைகளாலோ, அரசியல்போராட்டங்களாலோ கவரப்பட்டு கட்சிக்குள் சென்றவர் அல்ல. கம்யூனிஸ்ட் தத்துவ அடிப்படையை முறையாக கற்று அதன் மீதான நம்பிக்கையில் கட்சியில் சேர்ந்தார். அக்காலகட்டத்தில் கட்சி சித்தாந்தங்களை முழுமையாக வாசித்தறிந்தவர் என்னும் இடம் அவருக்கு இருந்தது.

கணிதத்தில் தீவிரமான ஆர்வமும், தனித்திறமையும் கொண்டிருந்த ஜி.நாகராஜனை மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் கணிதத்தில் உயர்கல்விக்காக அமெரிக்காவுக்கு நிதியுதவியுடன் அனுப்ப எண்ணம் கொண்டிருந்தது. அவர் அன்று கணிதத்தில் ஒரு வளரும் மேதையாகவே கருதப்பட்டார். ஆனால் ஜி.நாகராஜன் கம்யூனிஸ்டுக் கட்சியில் ஆற்றிய அரசியல் செயல்பாடுகள் காரணமாக அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தால் ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். மதுரையில் இருந்து திருநெல்வேலி வந்து நா. வானமாமலைநடத்தி வந்த தனியார் கல்லூரி (Tutorial college) ஒன்றில் ஆசிரியராகச் சேர்ந்தார். தொ.மு.சி. ரகுநாதன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி போன்றவர்களோடு இக்காலத்தில் தொடர்பு ஏற்பட்டது. ஜி.நாகராஜன் நவீன இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கியது இக்காலகட்டத்தில்தான்.

1955-ல் ஜி.நாகராஜன் திருநெல்வேலி நகர கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணி ஏற்றார். கம்யூனிஸ்டுக் கட்சி நடத்திய சில போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார்.கம்யூனிஸ்டுக் கட்சியில் உருவான பிரிவும், அதன் விளைவாக தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதும் கம்யூனிஸ்டுக் கொள்கைகள் மேல் அவநம்பிக்கை கொள்ளச் செய்தன. முன்னரே நிகலாய் புகாரின் விசாரித்து தண்டிக்கப்பட்ட மாஸ்கோ விசாரணைகள் பற்றி ஆர்தர் கோஸ்லர் எழுதிய Darkness at Noon, ஆர்தர் கோஸ்லரும் ஸ்டீபன் ஸ்பெண்டரும் பிறரும் இணைந்து எழுதியThe God that Failed ஆகிய நூல்களை வாசித்த ஜி.நாகராஜன் அவற்றை சுந்தர ராமசாமி போன்றவர்களுக்கு பரிந்துரைத்ததுடன் தன்னுடைய அரசியல் ஐயங்களையும் பதிவுசெய்திருந்தார்.

1956-ல் ரஷ்யாவில் நிகிதா குருஷேவ் பதவிக்கு வந்து ஜோசப் ஸ்டாலின் காலகட்டத்து படுகொலைகள் அரசுமுறை அறிவிப்புகளாக உறுதிசெய்யப்பட்டபோது ஜி.நாகராஜன் கொண்டிருந்த ஐயங்கள் உறுதிப்பட்டன. சுந்தர ராமசாமி உள்ளிட்ட எழுத்தாளர்கள் கட்சியில் இருந்து உளம்விலகத் தொடங்கினர். செக்கோஸ்லேவாகிய அரசியல்தலைவர் மிலான் ஜிலாஸ் ஸ்டாலினின் அடக்குமுறை ஆட்சிமேல் முன்வைத்த விமர்சனங்களையும் ஜி.நாகராஜன் அக்காலங்களில் வாசித்து சுருக்கமாக மொழியாக்கமும் செய்திருக்கிறார்.

ஜி.நாகராஜன் பலபடிகளாக நீண்ட விவாதங்களுக்குப்பின் கம்யூனிசக் கொள்கைமேல் நீண்ட ஒரு விமர்சன்க்குறிப்பை கட்சித் தலைமைக்கு அனுப்பிவிட்டு கட்சியிலிருந்து விலகிக்கொண்டார். ஜி.நாகராஜன் பிறகு ஒருபோதும் கம்யூனிஸ்டுக் கொள்கைகள் மேல் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர் நூலில் கம்யூனிஸ்டுக் கட்சியையும், அதன் கொள்கைகளையும் அங்கதத்துடனேயே பதிவுசெய்திருக்கிறார்.

தனிவாழ்க்கை

நெல்லையில் இருந்த காலகட்டங்களில் ஜி.நாகராஜன் கம்யூனிஸ்டு கொள்கைமேல் கொண்ட ஐயங்களால் அலைக்கழிப்புற்றதாகவும், மதுப்பழக்கத்துக்கு ஆளானதாகவும், அக்காலகட்டங்களில் நெல்லையில் இருந்த பாலியல் தொழிலாளர்களின் உலகுக்குள் அவருக்கு தொடர்பு உருவாகியது என்றும் சுந்தர ராமசாமி ஜி.நாகராஜன் பற்றி எழுதிய நினைவோடை நூலில் குறிப்பிடுகிறார். புகழ்பெற்ற குறத்தி முடுக்கு நாவலில் வரும் குறத்தி முடுக்கு என்னும் பாலியல்தெரு நெல்லையிலுள்ளதுதான். இக்காலகட்டங்களில் ஒரு பாலியல்தொழிலாளர் பெண்ணை மணம்புரிய முயன்றதாகவும் அது நிகழவில்லை என்றும் ஜி.நாகராஜன் பற்றி க்ரியா வெளியிட்ட ' நாளை மற்றுமொரு நாளே’ நூலில் எழுதப்பட்டிருக்கும் ஜி.நாகராஜனின் வாழ்க்கைக்குறிப்பு (சுந்தர ராமசாமி எழுதியதாக இருக்கலாம். அக்குறிப்பில் பெயர் இல்லை) கூறுகிறது. குறத்தி முடுக்கின் கதையும் ஏறத்தாழ அதுவே.

கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து விலகியபின் ஜி.நாகராஜன் மீண்டும் மதுரைக்குத் திரும்பி அங்கே வெற்றி தனிப்பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியரானார். கணிதப் பாடம் எடுப்பதில் புகழ் பெற்றிருந்தார். அவர் பாடம் எடுக்கிறார் என்று திரை அரங்குகளில் விளம்பரம் செய்யப்பட்டது என்று சுந்தர ராமசாமி பதிவுசெய்கிறார்.

1959-ல் ஜி.நாகராஜன் ஆனந்தியை மணந்தார். குடிப்பழக்கத்தால் ஆனந்தியை ஜி.நாகராஜன் கொடுமைசெய்ததாகவும், ஆனந்தி ஒரு மகளிர் விடுதியில் அடைக்கலம் தேடியதாகவும் நாளை மற்றுமொரு நாளே நாவலின் பின்குறிப்பு கூறுகிறது. 'இவருடைய ஊதாரித்தனமும் குரூரமும் எந்தப் பெண் ஜென்மத்தாலும் தாங்கக்கூடியவை அல்ல’ என்று அக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. திருமணமான நான்காம் மாதமே மர்மம் எஞ்சும் ஒரு தீ விபத்தில் ஆனந்தி இறந்து போனார். 1962-ல் ஜி.நாகராஜன் நாகலட்சுமி என்ற பள்ளி ஆசிரியையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆனந்தி என்று ஒரு மகளும் கண்ணன் என்று ஒரு மகனும் உண்டு. இத்திருமணம் முடிந்த சில மாதங்களில் ராணுவத்தில் சேர்ந்தார். இவருடைய கம்யூனிச கட்சி உறவு வெளிப்படவே ராணுவத்திலிருந்து திரும்பினார். ஜி.நாகராஜன் குறைவான காலமே குடும்பத்துடன் இருந்தார். பின்னர் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் அதிக தொடர்பு இருக்கவில்லை.

மதுரை வாழ்க்கையில் ஜி.நாகராஜன் பல அடித்தள மக்களோடு பழகினார். குடிப்பழக்கமும் கஞ்சா பழக்கமும் ஏற்பட்டது. எந்த வேலையிலும் அவரால் நிலைக்க முடியவில்லை. ஊர் ஊராக சுற்றத் தொடங்கினார். நண்பர்களை தேடிச்சென்று அவர்களிடம் பணம் பெற்று குடித்து வாழ்வதை வழக்கமாக்கிக் கொண்டார். ஆ. மாதவன், நீல பத்மநாபன், சுந்தர ராமசாமி, நா.வானமாமலை, அசோகமித்திரன், மதுரை பேராசிரியர் பாலசுந்தரம், க்ரியா ராமகிருஷ்ணன், ஐராவதம், திலீப் குமார் என அவர் நாடிச்சென்ற எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் பலர் அவருடனான அவர்களின் அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளனர்.

ஜி.நாகராஜன் பற்றிய விரிவான ஆளுமை வரைவை சுந்தர ராமசாமியின் 'நினைவோடை' நூல் அளிக்கிறது. ஜி.நாகராஜனை சுந்தர ராமசாமி 1956-ல் நெல்லையில் சந்திக்கும்போது அவர் உடற்பயிற்சியால் இறுகிய உடலும் தன்னம்பிக்கை நிறைந்த வசீகரமான பாவனைகளும் கொண்டிருந்தார் என்று ஜி.நாகராஜனின் 'கண்டதும் கேட்டதும்' சிறுகதை தொகுதிக்கு சுந்தர ராமசாமி எழுதிய முன்னுரைக் குறிப்பில் சொல்கிறார். நகைச்சுவையாகவும் விரிவான தகவலறிவுடனும் பேசுவதில் வல்லவர். அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி நூலகம், சென்னை பிரிட்டிஷ் நூலகம் போன்றவற்றில் மட்டும் கிடைக்கும் நூல்களை விரிவாக குறிப்புகள் எடுத்துக்கொண்டு ஆழ்ந்து படிக்கும் வழக்கம் அவருக்கு இருந்தது. பின்னாளில் குடியால் உடல் மெலிந்து, உணவு உண்ணமுடியாமல், ஒரு லட்டு வாங்கி அதன் சில விள்ளல்களை மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்ந்த ஜி.நாகராஜனின் சித்திரமும் அவரால் அளிக்கப்பட்டுள்ளது.

ஜி.நாகராஜனை நன்கறிந்து பதிவு செய்த இன்னொருவர் விமர்சகர் சி. மோகன். "என் 17-ஆவது வயதில் ஜி. நாகராஜனை ஓர் லட்சிய ஆண்மகன் தோற்றத்தில் நான் அறிந்திருக்கிறேன். உடற்கட்டும் வனப்பும் மிடுக்கும் கூடிய பேரழகன். அப்போது நான் மாணவன். அவர் கணித ஆசிரியர். தூய வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, நடுவிரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே சதா கனலும் சார்மினார் சிகரெட், சில வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் அவருடைய கடைசி சில ஆண்டுகளில் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. உடல் நலிந்து, கசங்கிய அழுக்கு வேட்டி ஜிப்பாவோடும், கடைசி நாட்களில் கைகளில் சொறியோடும் அவர் அலைந்து திரிந்த காலம்’"என்று சி.மோகன் பதிவுசெய்கிறார்.

இறுதி நாட்கள்

ஜி.நாகராஜனின் இறுதிக் காலகட்டத்தில் அவர் முன்பு பணியாற்றிய வெற்றி தனிப்பயிற்சி கல்லூரி' முதல்வர் அவர் தங்க கல்லூரி விடுதியில் சிறு அறை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அவர் பணத்திற்காக மதுரையில் ஒரு வங்கி ஊழியரைச் சந்திக்க சென்று கொண்டிருந்தபோது சி.மோகன் அவரைச் சந்தித்தார். சி.மோகன் இவ்வாறு பதிவுசெய்கிறார்

"நாகராஜன் தன்னை மருத்துவமனையில் சேர்க்கும்படி நண்பர் சிவராமகிருஷ்ணனிடமும் என்னிடமும் கூறினார். சிவராமகிருஷ்ணன் தனக்குத் தெரிந்த மருத்துவர் மூலம் அரசு பொது மருத்துவமனையில் அவரைச் சேர்க்க ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார். மறுநாள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துப் போகவிருப்பதைத் தெரிவிப்பதற்காக அதற்கு முதல் நாள் இரவு அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று நானும் சிவராமகிருஷ்ணனும் வெகுநேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம்.

மறுநாள் காலை, பிப்ரவரி 18, 1981 அன்று அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, எல்லாப் பரிசோதனைகளும் முடிந்து வார்டில் சேர்த்துவிட்டு மதியம் 2 மணி போல் பிரிந்தபோது, கஞ்சா ஏதும் மருத்துவமனையில் உபயோகிக்க வேண்டாம். வெளியில் அனுப்பும்படி ஆகிவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டேன். தன்னிடம் சிறு பொட்டலம் இருப்பதாகவும், கழிவறையில் வைத்து ரகசியமாக உபயோகித்துக் கொள்வதாகவும் கூறினார். 'சாயந்திரம் வரும்போது போட்டுக் கொண்டு வந்து தருகிறேன் இரவில் கழிவறையில் உபயோகித்துக் கொள்ளுங்கள்' என்றதும் என்னிடம் அதைக் கொடுத்து விட்டார்.

மீண்டும் சாயந்திரம் 5 மணி போல் சிவராமகிருஷ்ணனும் நானும் அவரைப் போய்ப் பார்த்தோம். அன்று அவர் பேசிய பேச்சுக்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் பதிவு செய்யக் கூடுமென நம்புகிறேன். நான் சிகரெட்டில் கஞ்சாவைப் போட்டுக்கொண்டு போயிருக்கவில்லை. 'போடத் தெரியவில்லை. இரவில் கழிவறை போய் போட்டுக் கொள்ளுங்கள்' என்று கொடுத்தேன். பேசிக் கொண்டிருந்தபோது கழிவறை போக வேண்டுமென்றார். எழுந்து நடக்க வெகுவாக சிரமப்பட்டார். சிவராமகிருஷ்ணனும் நானும் கைத்தாங்கலாக அழைத்துப் போனோம். அவரால் உட்காரக்கூட முடியவில்லை. தாள முடியாத அவஸ்தை. கழிவிரக்க வசப்பட்டவராக, 'கடவுளே, உன்னிடம் என்னைச் சீக்கிரம் அழைத்துக்கொள்' என்று வாய் விட்டு கதறி அழுதார். அன்று இரவு அவரைத் தொடர்ந்து பராமரிப்பது குறித்து பல வழிமுறைகளை யோசித்தோம்.

மறுநாள் காலை ஃப்ளாஸ்க்கில் காபியோடு போனபோது, அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்தோம். ஆனார் அவர் இறந்துவிட்டிருந்தார். உபயோகிக்கப்படாமலேயே அந்தப் பொட்டலம் ஜிப்பாவில் இருந்தது. என் குற்ற உணர்வுகளில் ஒன்றாக பயன்படுத்தப்படாத அந்தப் பொட்டலம் நிலைத்துவிட்டிருந்தது."

மறைவு

பிப்ரவரி 19, 1981-ல் ஜி.நாகராஜன் மறைந்தார்

இலக்கிய வாழ்க்கை

ஜி. நாகராஜன் நெல்லையில் இருக்கும்போதே சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய முதல் கதையான `அணுயுகம்’ ஜூன் 8, 1957 அன்று `ஜனசக்தி' வார மலரில் வெளியானது. ஜனசக்தி', `சாந்தி', `சரஸ்வதி' போன்ற இடதுசாரி இதழ்களில் ஜி.நாகராஜன் தொடர்ந்து எழுதினார்.

1960-ல் மதுரையில் இருக்கையில் அவர் எழுதிய குறத்தி முடுக்கு என்னும் நாவலை 1963-ல் தனது 'பித்தன் பட்டறை' வெளியீட்டகம் மூலம் வெளியிட்டார். அவருடைய 'கண்டதும் கேட்டதும்' என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை 'பித்தன் பட்டறை' மூலம் 1971-ம் ஆண்டில் வெளியிட்டார். பல்வேறு பகுதிகளாக வெவ்வேறு ஊர்களில் எழுதி கைவிடப்பட்டிருந்த கைப்பிரதிகளை திரட்டி நாளை மற்றுமொரு நாளே என்னும் நாவலை 1974-ல் வெளியிட்டார். ஆங்கிலத்தில் சில கட்டுரைகளையும், "With fate conspire" என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்காக எழுதியிருக்கிறார். தீரன் மார்க்ஸ் என்னும் தலைப்பில் ஒரு புனைவுகலந்த கட்டுரைநூலை அவர் எழுதி அதை சுந்தர ராமசாமி வாசித்திருக்கிறார். அது கார்ல் மார்க்ஸ் பற்றிய நூல் அல்ல, ஒரு விவசாயியைப் பற்றியது என்று அவர் கூறியிருக்கிறார்

மறுவருகை

ஜி.நாகராஜன் முறையாகவும் சீராகவும் எதையும் எழுதவில்லை, அவருடைய வாழ்க்கைமுறை அதற்கு உகந்ததாக இல்லை. ஏராளமான கைப்பிரதிகளை வெவ்வேறு இடங்களில் தொலைத்துச் சென்றிருக்கிறார். அதில் பிறருடைய கைப்பிரதிகளும் அடக்கம். அவருடைய படைப்புகள் முறையாக வாசகர்களைச் சென்றடையவுமில்லை. ஆகவே எண்பதுகளில் முழுக்க மறக்கப்பட்டவராகவே இருந்தார். 1982-ல் சி.மோகன் முயற்சியில் க்ரியா பதிப்பகம் ஜி.நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளே என்னும் நாவலை அழகிய பதிப்பாக, சுந்தர ராமசாமி எழுதியதாகக் கருதப்பட்ட ஒரு வாழ்க்கைக்குறிப்புடன் வெளியிட்டது. மிகக்கூர்மையான மொழியில் சொல்லப்பட்ட ஜி.நாகராஜன் பற்றிய அந்த வாழ்க்கைக்குறிப்பு ஜி.நாகராஜனுக்கு வசீகரமான ஓர் ஆளுமைச்சித்திரத்தை அளித்தது. சிற்றிதழ்சார்ந்த வாசகர்கள் நடுவே அவர் புகழ்பெற்றார். தொடர்ந்து அவருடைய குறத்தி முடுக்கு நாவலும், சிறுகதைகளும் மறுபிரசுரம் ஆயின. அன்றுமுதல் இன்றுவரை ஜி.நாகராஜன் தமிழிலக்கியத்தில் தொடர்ந்து பேசப்பட்டுவரும் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராக நீடிக்கிறார்

ஜி.நாகராஜன் பற்றிய எழுத்துக்கள்

புனைவுகள்

தமிழ்ச்சிறுகதைகளில் ஜி.நாகராஜன் வெவ்வேறு வகையில் பதிவாகியிருக்கிறார்

 • விரல்- அசோகமித்திரன்
 • ஐந்து ரூபாயும் அழுக்குச்சட்டைக்காரரும்- திலீப் குமார்
 • மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன் கோணங்கி
வாழ்க்கை வரலாறுகள்
 • ஜி.நாகராஜன் - சி.மோகன் - இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை
 • ஜி.நாகராஜன் சுந்தர ராமசாமி - நினைவோடை வரிசை

இலக்கிய இடம்

தமிழில் யதார்த்தவாத இலக்கியம் எழுதப்பட்ட காலம் முதல் அடித்தள மக்கள் வாழும் உலகமும் குற்றவாளிகளின் நிழலுலகமும் எழுதப்படுகின்றன. புதுமைப்பித்தன் எழுதிய பொன்னகரம் என்னும் கதை தொடக்ககால உதாரணம். அடித்தள உலகை மனிதாபிமானக் கோணத்துடனோ அல்லது ஒழுக்கப்பார்வையுடனோ சித்தரிப்பதே தமிழிலக்கியத்தின் வழக்கம். ஜி.நாகராஜன் கதைகள் ஆசிரியரின் பரிவோ விமர்சனமோ இல்லாதவை. சுருக்கமான கூரிய மொழியில், நிகழ்வுகளை மட்டுமே சொல்லி நிறுத்திவிடும் கூறுமுறையில் அவ்வாழ்க்கையை முன்வைப்பவை.

ஜி.நாகராஜன் அடித்தள மக்களின் குற்றவாழ்க்கையை விந்தையானதாகவோ திரிபுநிலையாகவோ பார்க்கவில்லை. அது மானுட வாழ்க்கையின் ஒரு சாத்தியக்கூறு என்றும், அதிலும் மனிதனின் அடிப்படை இயல்பே வெளிப்படுகிறது என்றும் கருதினார். மனிதனின் குணங்கள் உச்சகட்ட அழுத்ததுடன் பரிசீலிக்கப்படும் களம் என்பதனால் மனிதனைப் புரிந்துகொள்ள உகந்தது அந்த உலகுதான் என எண்ணினார். அவர் தன் நாவல்களின் முகப்பில் கூறும் வரிகளில் அந்தப்பார்வை வெளிப்படுகிறது . 'மனிதனைப் பற்றி பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் 'மனிதன் மகத்தான சல்லிப்பயல் ' என்றுதான் சொல்வேன்’ என்னும் அவருடைய வரியும் நாளை மற்றுமொரு நாளே நாவலின் முகப்பு வரியாகவரும் 'நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக் கூடிய சின்னத்தனங்கள் , நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல் ,விரும்பியிருந்தால் பெற்றிருக்கக் கூடிய நோய்கள் ,பட்டுக் கொண்டிருந்தால் அடைந்திருக்கக் கூடிய அவமானம் இவையே அவன் வாழ்க்கை ' எனும் வரிகள் அதற்குச் சான்று.

"முத்தாய்ப்பு வைத்து முடிவு சொல்ல ஆசிரியர் காட்டும் தயக்கம் – அல்லது பரிபூர்ண விலகம் – கலைப்பூர்வமானது. வாழ்க்கையின் பரப்பையும் விசித்திரங்களையும் சிக்கல்களையும் அனுபவப்பூர்வமாக மனத்தில் ஏற்றுக்கொண்டுவிட்ட கலைஞனின் பொறுப்புணர்ச்சி அது’ என்று சுந்தர ராமசாமி ஜி.நாகராஜன் பற்றிச் சொல்கிறார்.

'ஜி.நாகராஜன் -நவீனத்துவ ஒழுக்கத்தின் குரல்' என்னும் நீண்ட விமர்சன ஆய்வில் ஜி.நாகராஜன் தமிழில் அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதிய முதல் படைப்பாளி அல்ல என்றும், அவர் சித்தரித்தது விபச்சாரிகளை அல்ல, அவர் விழைந்த விபச்சாரிகளையே என்றும் சொல்லும் ஜெயமோகன் ’நமது நவீனத்துவப் படைப்பாளிகளில் கரிய அங்கதம் கச்சிதமான வடிவம் ஆகியவற்றின் மூலம் முக்கியத்துவம் பெறும் படைப்பாளி அவர்.’ என்று மதிப்பிடுகிறார் 'அவர் ஒழுக்கமின்மை அல்லது அறமின்மையின் உலகை உருவாக்கியவர் அல்ல. அவர் உருவாக்கியது நவீனத்துவத்தின் ஒழுக்கம் அல்லது அறமே’ என்கிறார்.

நூல்கள்

குறத்தி முடுக்கு', 'நாளை மற்றும் ஒரு நாளே' ஆகிய இரண்டு குறுநாவல்களும் 17 சிறுகதைகளுமே எழுதியுள்ளார். அதே போல ஆங்கிலத்தில் கட்டுரைகளும், ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்.

நாவல்கள்
சிறுகதைகள்
 • எங்கள் ஊர்
 • டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
 • யாரோ முட்டாள் சொன்ன கதை
 • தீராக் குறை
 • சம்பாத்தியம்
 • பூர்வாசிரமம்
 • அக்கினிப் பிரவேசம்
 • நான் புரிந்த நற்செயல்கள்
 • கிழவனின் வருகை
 • பூவும் சந்தனமும்
 • ஜீரம்
 • போலியும் அசலும்
 • துக்க விசாரனை
 • மனிதன்
 • இலட்சியம்
 • ஓடிய கால்கள்
 • நிமிஷக் கதைகள்
 • பச்சைக் குதிரை
ஆங்கிலம்
 • With fate conspire (included in ஜி. நாகராஜன் ஆக்கங்கள் நூல், published in Nagercoil, 2007)
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

ஆங்கிலம், பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகள்

 • Tomorrow is one more day - 2018 (Penguin Publisher)
 • Le vagabond et son ombre: G. Nagarajan - 2020 (Institut français de Pondichéry)

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:29 IST