under review

திலீப் குமார்

From Tamil Wiki
நன்றி:வாசகசாலை

திலீப் குமார் (பிறப்பு: பிப்ரவரி 11, 1951) தமிழ் எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர். நகர வாழ்வின் இடர்களையும், எளிய நடுத்தர வர்க்க மக்களின் சமூக, பொருளாதார சூழல், அவர்கள் சந்திக்கும் புறக்கணிப்பு, அவை ஏற்படுத்தும் உள, உறவுநிலை மாற்றங்களையும் விவேகத்துடனும், அங்கதத்துடனும் நுட்பமாகக் காட்சிப்படுத்துபவை திலீப் குமாரின் படைப்புகள். திறனாய்வாளராக அவர் தொகுத்து உருவாக்கிய தமிழின் சிறந்த சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுப்புகள் தமிழ் நவீன இலக்கியத்திற்கு இந்திய அளவில் ஒரு விரிந்த தளத்தை ஏற்படுத்தின. திலீப் குமார் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் நவீன தமிழ் இலக்கியம் குறித்து உரைகளும், விரிவுரைகளும் ஆற்றியுள்ளார்.

பிறப்பு,கல்வி

திலீப் குமார் பிப்ரவரி 11, 1951-ல் சென்னையில் தாமோதர் பிரேம்ஜி-வசந்த பிரபா இணையருக்கு மூன்றாவதாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் அக்கா, அண்ணன், இரு தம்பிகள். குஜராத்தின் கச் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்து தமிழ்நாட்டில் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் திலீப்குமார். தனியார் ஆரம்பப்பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு வரை பயின்றார். நான்காம் வகுப்பிலிருந்து கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் படித்தார். தந்தை இறந்ததும் குடும்பத்தின் வறுமை காரணமாக எட்டாம் வகுப்புடன் படிப்பு நின்றது. 1966 முதல் 1979 வரை பல கடைகளில் வேலை செய்தார். தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழிகளை சுயமாகக் கற்றார்.

தனி வாழ்க்கை

திலீப் குமார் 1982-ல் அம்பிகாவை மணந்தார். மகன் அஸ்வத்தாமா ஜெர்மனியில் உயிர்மருத்துவப் பொறியாளராகப் (Biomedical Engineer) பணி புரிகிறார். திலீப் குமார் 1979-ல் க்ரியா ராமகிருஷ்ணனின் அழைப்பின் பேரில் 'க்ரியா' பதிப்பகத்தில் பணியில் சேர சென்னைக்கு இடம் பெயர்ந்தார். 1979 முதல் 1990 வரை க்ரியா பதிப்பகத்தில் பணி புரிந்தார். 1990 முதல் 2016 வரை இலக்கிய புத்தகக் கடையை நடத்தியபடியே தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார்.

திலீப் குமார் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் தேர்வு ரசனைகளை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தரமான நூல்களைப் பரிந்துரைத்தும் விற்பனை செய்தும் வந்தார். அவரது புத்தகக்கடை இலக்கியவாதிகளும், ஆர்வலர்களும் கூடும் மையமாக விளங்கியது. அமெரிக்கன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் தமிழ் மொழித் துறை ஆகியவற்றிற்கும் தமிழ் நூல்களை விற்பனை செய்தார்.

அமைப்புப் பணிகள்

  • கதா அறக்கட்டளை மூலம் கன்னட, வங்க மொழிச் சிறுகதைகளை தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்க்கும் திட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.
  • க்ராஸ்வோர்ட் மொழிபெயர்ப்பு விருதுக்கான நடுவர் குழுவிலும் பலமுறை இடம்பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

திலீப் குமார் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது இந்திய சீனப் போரை மையமாக்கி 'அசம்பாவிதம்' என்னும் சிறுகதையை மாணவர் மலருக்காக எழுதினார். சிறுவயதிலிருந்தே வாசிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். கடைகளில் வேலை செய்தபடியே தன் வாசிப்பைத் தொடர்ந்தார். ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் இருவரின் எழுத்துக்களாலும் கவரப்பட்டார். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரது கதைகள் ஏற்படுத்திய பாதிப்பும் தன் அனுபவ உலகத்திற்கும் இவர்கள் படைப்பில் பிரதிபலித்த உலகத்துக்கும் இருந்த மிகப் பெரிய ஒற்றுமையும் தன்னை எழுதத் தூண்டியதாகக் குறிப்பிடுகிறார்.

திலீப் குமாரின் முதல் சிறுகதை ஜெயகாந்தனின் 'ஞானரதம்' இதழில் வெளிவந்தது. தொடர்ந்து 'வம்பு', 'தீர்வு' இரு சிறுகதைகள் கணையாழியில் வெளிவந்தன. 'தீர்வு' 1977-க்கான இலக்கியச் சிந்தனை பரிசைப் பெற்றது. அவரது பல கதைகள் தமிழ்நாட்டுக்கு வியாபார நிமித்தமாக புலம் பெயர்ந்து வந்த மத்திய தர குஜராத்திகள், மராத்தியர் வாழ்க்கையைச் சித்தரித்தவை. நகரவாழ்வின் இடர்களும், எளிய மனிதர்களின் வாழ்வும் அவரது பெரும்பாலான கதைகளின் பேசுபொருள்கள். 'மூங்கில் குருத்து', 'கடவு' என்ற இரு சிறுகதைத் தொகுதிகள் க்ரியா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டன. 'மூங்கில் குருத்து' சிறுகதை விட்டல் ராவ் தொகுத்த 'இந்த நூற்றாண்டு சிறுகதைகள்' தொகுப்பில் இடம்பெறுகிறது. பெங்களூருவில் உள்ள “சங்கம் ஹவுஸ்” அறக்கட்டளையின் சார்பில், ஆகஸ்ட் 2011-ல் தரங்கம்பட்டியில் நடத்தப்பட்ட எழுத்தாளர் முகாமில் (Tranquebar Project) பங்கேற்றபோது எழுதப்பட்ட குறுநாவல் ‘ரமாவும் உமாவும்’.

தீம்தரிகிட இதழில் வெளிவந்த திலீப்குமாரின் 'ஒரு குமாஸ்தாவின் கதை' பத்மா நாராயணனின் ஆங்கில மொழியாக்கத்தில் ப்ளூம்ஸ்பர்க் நிறுவனம் படைப்பிலக்கிய மாணவர்களுக்காக வெளியிட்ட பாடநூலில் (Art and Craft of Asian Stories: A Writer's Guide and Anthology) தொகுக்கப்பட்ட 24 ஆசியக் கதைகளில் ஒன்றாக இடம்பெற்றது. Caravan இதழிலும் வெளிவந்தது[1]. பல்வேறு இந்திய மொழிகளிலும் பிரெஞ்சு மொழியிலும் வெளியானது. 'அக்கிரகாரத்தில் பூனை[2]' சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு The Leeds University Journal--ல் 2005--ல் வெளிவந்தது.

திலீப் குமாரின் 'கடவு' சிறுகதைத்தொகுப்பு மார்த்தா ஆன் செல்பி (Martha Ann Selby) யால் 'Cat in the Agraharam and other stories' என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டு நார்த்வெஸ்டேர்ன் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. 2021-க்கான கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் மொழியாக்கத்திற்கான விருதைப் பெற்றது. திலீப் குமாரின் சிறுகதைகள் மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது, வங்காளம், குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

திலீப் குமார் தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்து கலிஃபோர்னியா, சிக்காகோ, ஹார்வார்ட் (Harvard),ரட்கர்ஸ்(Rutgers), டெக்ஸாஸ் மற்றும் யேல்(Yale) பல்கலைக்கழகங்களிலும் ஃப்ரான்சில் உள்ள INALCO (National Institute of Oriental Languages and Civilizations, Paris) ஆய்வு நிறுவனத்திலும் உரையாற்றிருக்கிறார். பெர்க்லி பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையில் மூன்று மாத காலம் தமிழ்த் துறை மாணவர்களுக்கு நவீன இலக்கிய அறிமுகப் பாடம் நடத்தியுள்ளார்.

மொழிபெயர்ப்பு

உதயன் வாஜ்பாயின் பதினாறு ஹிந்தி கவிதைகளை திலீப்குமார் தமிழில் மொழியாக்கம் செய்தார். யுனிசெப்(UNICEF), FAO போன்ற சர்வதேச அமைப்புகளுக்காக மருத்துவம், சுகாதாரம் சார்ந்த மொழியாக்கங்கள் செய்தார்.

விமர்சனம்

எழுத்தாளர் மெளனி மீதான முதல் முக்கிய விமரிசனம் இலக்கிய சிந்தனை அமைப்புக்காக திலீப் குமாரால் எழுதப்பட்டு 'அன்னம் விடுதூது' இதழில் அச்சாகி பிறகு ‘மெளனியுடன் கொஞ்ச தூரம்[3]’ என்ற பெயரில் நூலாக வானதி பதிப்பகம் வெளியீடாக 1992-ல் வெளியானது.

தொகுப்பு நூல்கள்

திலீப்குமார் 1999-ல் 'Contemporary Tamil Short Fiction' என்ற பெயரில் கி. ராஜநாராயணன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், அம்பை, வண்ணதாசன், ஜி. நாகராஜன் உள்ளிட்ட சமகால எழுத்தாளர்களின் சிறுகதைகளை ஆங்கில மொழியாக்கத்திற்காகத் தேர்ந்தெடுத்து, (மொழியாக்கம்: வசந்தா சூர்யா) தொகுத்து வெளியிட்டார். 2004-ல் அத்தொகுப்பு 'A Place To Live' என்ற பெயரில் பெங்குவின் பதிப்பாக வெளிவந்தது.

1913 முதல் 2000 வரை பல்வேறு அழகியல் மற்றும் கருத்து நிலைகளைப் பிரதிபலித்த முன்னோடி எழுத்தாளர்களின் எண்பத்தியெட்டு(88) சிறுகதைகளை மொழிபெயர்ப்பிற்காகத் தேர்வு செய்து (மொழியாக்கம்: சுபஶ்ரீ கிருஷ்ணஸ்வாமி) தொகுத்தார். வ.வே. சுப்ரமணிய ஐயர், பாரதி போன்றவர்களுக்கு முன்பே எழுதிய அம்மணி அம்மாள், விசாலாட்சி அம்மாள், செல்வக்கேசவராய முதலியார் ஆகியோரின் சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றன. 'The Tamil Story Through the times, through the tides' என்ற பெயரில் வெளிவந்தது. இத்தொகுப்பிற்காக சுபஶ்ரீ கிருஷ்ணஸ்வாமி சாகித்ய அகாதெமியின் மொழியாக்கத்திற்கான விருதை 2018-ல் பெற்றார்.

பார்க்க: இத்தொகுப்பு குறித்த திலீப் குமாரின் தமிழ்ஹிந்து நேர்காணல்[4]

திரை, நாடக வடிவங்கள்
  • கடவு தொகுதியில் இடம்பெற்ற 'நிகழ மறுத்த அற்புதம்' சிறுகதை ஞாநியால் 'இனி திருமதி.ஜேம்ஸ் என்ன செய்யவேண்டும்' என ஒற்றை ரீல் இயக்கத்தின்கீழ் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
  • 'ஒரு குமாஸ்தாவின் கதை' அருண் கார்த்திக்கால் ‘நசீர்’[5] என்ற பெயரில் திரைப்படமாகப்பட்டது. ராட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த ஆசியத் திரைப்படத்திற்கான பரிசையும் (Best Asian Film Award at the Rotterdam Intl Film Festival ) ரஷ்ய சர்வதேச திரைப்பட விழாவில் ஆண்ட்ரேய் தர்க்கோவ்ஸ்கி பரிசையும் பெற்றது[6] (the most prestigious Grand Prix - Andrei Tarakovsky Intl Film Award in Russia).
  • கடிதம், கண்ணாடி ஆகிய இரு சிறுகதைகளும் குறும் படங்களாக வெளிவந்தன. கடிதம் சிறுகதையில் வரும் வயோதிகரின் பாத்திரத்தில் நடிகர் சாருஹாசன் நடித்தார்.
  • திலீப் குமாரின் இரு சிறுகதைகள் அ. ராமசாமியால்[7] 'நிகழ மறந்த அற்புதம்', 'ஜேம்ஸும் திருமதி ஜேம்ஸும்' என்ற பெயரில் நாடக வடிவம் பெற்றன.

இலக்கிய இடம்

திலீப்குமாரின் கதைகளில் பல தமிழ் நாட்டில் வியாபாரத்திற்காகப் புலம் பெயர்ந்து வாழும் மத்திய தர குஜராத்திகள், மராத்தியரின் வாழ்க்கை, வறுமை, முதுமை, சமூக, உளவியல் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, 'இடம்–பெயர்ந்த’ ஒரு சமூகத்தின் மதிப்பீடுகள், நம்பிக்கைகள், பதற்றங்கள், நெருக்கடிகள், ஏமாற்றங்களைப் பிரதிபலிக்கின்றன. அதே சமயம் குஜராத்திகளின் வாழ்வியலோடு மட்டும் சுருங்கி விடாமல் அதற்கப்பாலும் மிக விரிவான ஒரு தளத்தில் மானிடம் முழுமைக்குமாய் பொருள்படுகின்றன. வாழ்வின் அபத்தத்தையும், மனிதனின் கையறுநிலையையும் உயர்ந்த அங்கதத்துடன் முன்வைப்பவை. அவரது படைப்புலகம் வாழ்க்கை நெருக்கடிகள் சார்ந்த புகார்களாக -ல்லாமல் அவை மனிதர்களுக்குள் ஏற்படுத்துகிற உறவுநிலை மாற்றங்களை ஆராய்கிறது.

அசோகமித்திரன் "திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையான பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே, இவ்வளவு சிறப்பு அடையக்கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவரது எழுத்து உற்சாகம் தவிர்த்தது அல்ல." என்று குறிப்பிடுகிறார்.

"உயரிய அங்கதம் கையறுநிலைகளில் எழும் சிரிப்பு. இயலாமையின் புன்னகை. கைவிடப்பட்டவனின் கடைசிச் சிரிப்பு. திலீப் குமாரின் பல கதைகளில் அந்த புன்னகையை நாம் காண்கிறோம். அதுவே அவரை தமிழில் ஒரு முக்கியமான படைப்பாளியாக நிலைநாட்டுகிறது." என்று ஜெயமோகன் மதிப்பிடுகிறார். மௌனியின் மீதான முதல் முக்கிய இலக்கிய விமரிசனமாக 'மெளனியுடன் கொஞ்ச தூரம்' நூலை வகைப்படுத்தும் ஜெயமோகன் "நமது விமரிசன மரபில் மிக மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரையை நான் காண்கிறேன்[8]" எனக் குறிப்பிடுகிறார்.

திலீப் குமாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத் தொகுப்புகள் தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றைக் கூறுவதோடு நூறாண்டு தமிழ் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தையும், பரிணாம வளர்ச்சியையும், மாறிவந்துள்ள மதிப்பீடுகளையும் அக்கறைகளையும், முக்கியமாக தமிழின் காத்திரமான நவீன இலக்கிய மரபையும் முன் வைக்கின்றன. "சென்ற நூற்றாண்டில் தமிழ் வாழ்க்கை அடைந்த சலனங்கள், பார்த்த மாறுதல்கள், தாக்கத்துக்குள்ளான இயக்கங்கள் அனைத்தையும் பிரதிபலிப்பதால் ‘தி தமிழ் ஸ்டோரி’ முன்னுதாரணமில்லாத ஆவணமாகிறது" என்று ஷங்கர்ராமசுப்ரமணியன் மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • இலக்கியச் சிந்தனை பரிசு (1977)
  • பாஷா பாரதி
  • ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் 'சாரல்'
  • விளக்கு விருது(2010)
  • சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பிற்கான விருது 'The Tamil Story : through the times; through the tides' (தொகுப்பு, பதிப்பாசிரியர்)
  • பரீக்ஷா ஞாநி நினைவு விருது (2020)

நூல்கள் பட்டியல்

சிறுகதைத் தொகுப்பு
  • மூங்கில் குருத்து (1985)
  • கடவு
குறுநாவல்
  • ரமாவும் உமாவும் (2011& 2017)
கட்டுரை
  • மெளனியுடன் கொஞ்ச தூரம்(1992)
மொழிபெயர்ப்பு
  • 'வாக்' சிறுகதைகள் (1997 கதா அறக்கட்டளை)
தொகுப்பு நூல்கள்
  • வெங்கட் சாமிநாதன் : வாதங்களும் விவாதங்களும் (2010)
  • நாகலிங்க மரம் - சூடாமணி சிறுகதைகள் (2010)
  • Contemporary Tamil Short Fiction (1999) Reprinted as A place to live (2004, Penguin)
  • The Tamil Story Through the times, through the tides (2016, Westland)
மொழிபெயர்க்கப்பட்டவை
  • Cat in the Agraharam and Other stories translated by Dr.Martha Selby (Northwestern University press 2020)

உசாத்துணை

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page