மார்த்தா ஆன் செல்பி
To read the article in English: Martha Ann Selby.
மார்த்தா ஆன் செல்பி ( Martha Ann Selby) அமெரிக்க ஆசியவியல் - இந்தியவியல் ஆய்வாளர். சங்கப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். ஹார்வார்ட் தமிழ் இருக்கையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
கல்வி
செல்பி 1994-ல் சிகாகோ பல்கலையில் (University of Chicago) தமிழ்- சம்ஸ்கிருத ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலை, டல்லாஸ் தெற்கு மெதடிஸ்ட் பல்கலை (Southern Methodist University in Dallas) மற்றும் கொலம்பியா பல்கலைகளில் ஆசிரியராக பணியாற்றினார். 1999-ல் டெக்ஸாஸ் பல்கலையில் ஆய்வுத்துறையில் பணியாற்றினார். மானுடவியலுக்கான அமெரிக்க தேசிய நிதிக்கொடைகள் பெற்றவர் (National Endowment for the Humanities, the American Council of Learned Societies, American Institute of Indian Studies) 2005-2006 ஆண்டுக்கான ஜான் சைமன் கன்னிங்ஹாம் நினைவு அறக்கட்டளையின் ஆய்வாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கல்விப்பணிகள்
ஆஸ்டின் நகரில் டெக்சாஸ் பல்கலையில் தெற்காசியவியல் ஆய்வுகள் துறைத்தலைவியாக பணியாற்றுகிறார். செப்டெம்பர் 1,2022 முதல் ஹார்வார்ட் பல்கலையின் சங்க இலக்கிய ஆய்வு இருக்கையின் பேராசிரியராகப் பணியாற்றவிருக்கிறார்.
மார்த்தா சம்ஸ்கிருதம், பிராகிருதம் மற்றும் தமிழ் பண்டைய இலக்கியங்களில் ஆய்வு செய்து வருகிறார். பெண்கள், குழந்தை பிறப்பு மற்றும் மரணம் பற்றி பண்டைய இலக்கியங்களிலும் மருத்துவநூல்களிலும் பேசப்பட்டிருக்கும் செய்திகள் மேல் குறிப்பாக ஆர்வம் கொண்டவர். ராட்கிளிஃப் கல்விநிறுவனத்தில் (Radcliffe Institute) பணியாற்றும்போது தமிழ் சங்கப்பாடல்களில் ஆர்வம் கொண்டு ஐங்குறுநூறு அகத்துறை பாடல்களை மொழியாக்கம் செய்தார்.
மார்த்தா தமிழ் நவீன இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர். திலீப் குமார் கதைகளை ஆங்கிலத்தில் Cat in the Agraharam and other stories என்னும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.
இலக்கிய இடம்
மார்த்தா ஆன் செல்பி தமிழ் ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர் என்னும் வகைகளில் தமிழை உலக அரங்கில் ஆய்வாளர்களுக்கு வாசகர்களுக்கும் கொண்டுசெல்வதில் முதன்மைப் பங்களிப்பாற்றுபவர்.
மார்த்தா ஐங்குறுநூறில் உள்ள கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து Tamil Love Poetry என்னும் தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். இந்நூல் மார்த்தாவின் முதன்மைச் சாதனை. ஐங்குறுநூறின் மிகையான சுருக்கம் மொழியாக்கத்திற்கு பெரும் அறைகூவல் விடுப்பது. மார்த்தாவின் ஆங்கில மொழி நவீனக் கவிதைகளுக்குரிய செறிவும் இடைவெளிகள் விட்டு பேசும் தன்மையும் கொண்டது. இதன் விளைவாக இம்மொழியாக்கக் கவிதைகள் பழமையின் அழகு மிகுந்த நவீனக் கவிதைகளாக தோன்றுகின்றன.
’சங்கக்கவிதைகள் முதல் நவீன கால இலக்கியம் வரை விரிவான அறிமுகம் உடைய தமிழறிஞர் மார்த்தா ஆன் செல்பி’ என்று ஆய்வாளரும் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் மதிப்பிட்டிருக்கிறார்.
நூல்கள்
- Grow Long, Blessed Night: Love Poems from Classical India
- Tamil Geographies: Cultural Constructions of Space and Place in South India. (Co-editor)
- The Circle of Six Seasons: A Selection from Old Tamil, Pakrit and Sanskrit Poetry
- Sanskrit Gynecologies: The Semiotics of Gender and Femininity in Sanskrit Medical Texts
- Tamil Love Poetry The Five Hundred Short Poems of the Ainkurunuru
- Cat in the Agraharam and other stories
உசாத்துணை
- Martha Selby, University of Texas Austin, Department of Asian Studies
- Congratulations to Martha Ann Selby on Prestigious Book Award!, UT Austin South Asia Institute, Jan 2014
- Martha Ann Selby, Society of Fellows and Heyman Center for the Humanities, Columbia University
- அமேசான் மார்த்தா ஆன் செல்பி நூல்கள்
- Harvard Radcliff Institue - Fellowship/Fellows - Martha Ann Selby
- மார்த்தா ஆன் செல்பி திலீப்குமார்
- தினபூமி மார்த்தா ஆன் செல்பி
- மார்த்தா ஆன் செல்பி ஹார்வார்ட் பேராசிரியர் தமிழ் இந்து
- சங்கப் பாடல்கள் முதல் சமகாலத் தமிழ் இலக்கியம் வரை புலமை கொண்டவர் மார்த்தா ஆன் செல்பி | RAVIKUMAR MP, youtube.com
- ஹார்வர்டு தமிழ் இருக்கைக்குப் பேராசிரியர் தேர்வு, arasiyaltoday.com April 2022
- ஹார்வர்டு தமிழ் இருக்கைக்குப் பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டார், tamilvanakkam.com, April 2022
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:52 IST