under review

யாப்பு

From Tamil Wiki

யாப்பு என்பது தொல்காப்பியம் குறிப்பிடும் இலக்கண வகைகளுள் ஒன்று. செய்யுள் இயற்றப் பயன்படும் இலக்கண வகையே யாப்பு. தொல்காப்பியர், செய்யுளியலில், 34 வகைச் செய்யுள் உறுப்புகளில் ஒன்றாக யாப்பினைக் குறிப்பிட்டுள்ளார். பின்னர் வந்த இலக்கண நூலகள், யாப்பு என்ற வடிவத்தைத் தனி இலக்கண நூல்களாகச் செய்தன.

யாப்பு - விளக்கம்

எலும்பு, தசை, நரம்பு முதலியவற்றால் கட்டப் பெற்றது ‘யாக்கை’ அல்லது ‘உடல்’ என்று அழைக்கப்படுவது போல, எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலியவற்றால் இயற்றப்பட்ட செய்யுள், ‘யாப்பு’ என அழைக்கப்படுகிறது.

யாப்பின் இலக்கணம்

யாப்பின் இலக்கணம் குறித்துத் தொல்காப்பியர்,

எழுத்து முதலா ஈண்டிய அடியிற்
குறித்த பொருளை முடிய நாட்டல்
யாப்பென மொழிப யாப்பறி புலவர்”

- என்று குறிப்பிட்டுள்ளார்.

யாப்பின் வகைகள்

யாப்பின் வகைகள் குறித்துத் தொல்காப்பியம்,

பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பே ரெல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தென்மனார் புலவர்”

- என்று குறிப்பிட்டுள்ளது.

செய்யுளியலின் 34 வகை உறுப்புகள்

தொல்காப்பியர், செய்யுளியலில், இரண்டு பிரிவுகளில், 34 வகைச் செய்யுள் உறுப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் ஒன்று யாப்பு.

முதல் பிரிவு

முதல் பிரிவில், செய்யுளுக்கு அடிப்படையான உறுப்புகளும், செய்யுளின் பொருள் புலப்பாட்டுக்கு உதவும் உறுப்புகளும் என 26 உறுப்புகள் இடம் பெற்றுள்ளன.

அவை,

  • மாத்திரை
  • எழுத்து
  • அசை
  • சீர்
  • அடி
  • யாப்பு
  • மரபு
  • தூக்கு
  • தொடை
  • நோக்கு
  • பா
  • அளவியல்
  • திணை
  • கைகோள்
  • கண்டோர்
  • கேட்போர்
  • இடம்
  • காலம்
  • பயன்
  • மெய்ப்பாடு
  • எச்சம்
  • முன்னம்
  • பொருள்
  • துறை
  • மாட்டு
  • வண்ணம்
இரண்டாவது பிரிவு

இரண்டாவது பிரிவு, ‘வனப்பு’ என அழைக்கப்படுகிறது. பல உறுப்புகள் ஒன்று சேர்ந்து உருவாகும் செய்யுள் அழகே வனப்பு. இது எட்டு வகைப்படும்.

அவை,

  • அம்மை
  • அழகு
  • தொன்மை
  • தோல்
  • விருந்து
  • இயைபு
  • புலன்
  • இழைபு

யாப்பின் உறுப்புகள்

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய ஆறும் யாப்பின் அடிப்படை உறுப்புகள்.

எழுத்து

எழுதப்படுவது எழுத்து.

அசை

அசை என்பது ஓர் எழுத்து, தனித்தோ அல்லது இணைந்தோ ஒலிப்பது ஆகும். அந்த அசை, நேரசை, நிரையசை என இரு வகைப்படும்.

சீர்

அசைகள் பல சேர்ந்து அமைவது சீர்.

தளை

சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது தளை.

அடி

இரண்டு அல்லது பல சீர்கள் சேர்ந்து அமைவது அடி.

தொடை

செய்யுள் அடிகளில் ஓசை இன்பமும் பொருள் சிறப்பும் ஏற்படும் வண்ணம் எழுத்துக்களையும் சீர்களையும் அமைப்பது தொடை.

யாப்பு உறுப்புகளின் பெயர்க் காரணம்

யாப்பு உறுப்புகளின் பெயர்க் காரணம் பற்றி யாப்பருங்கலக்காரிகை,

எழுதப் படுதலின் எழுத்தே அவ்வெழுத்து
அசைத்திசை கோடலின் அசையே அசையியைந்து
சீர்கொள நிற்றலிற் சீரே சீரிரண்டு
தட்டு நிற்றிலின் தளையே அத்தளை
அடுத்து நடத்தலின் அடியே அடியிரண்டு
தொடுத்தல் முதலாயின தொடையே அத்தொடை
பாவி நடத்தலிற் பாவே பாவொத்து
இனமா நடத்தலின் இனமெனப் படுமே!”

- என்று குறிப்பிட்டுள்ளது.

உசாத்துணை


✅Finalised Page